Tuesday, April 23, 2019

புதிதாய்ப் பிறக்க வைக்கும் வாசிப்பு!

By கிருங்கை சேதுபதி | Published on : 23rd April 2019 01:53 AM |

ஊர்கள்தோறும் நடைபெறும் புத்தகத் திருவிழாக்களில் வந்து பார்க்கிறவர்களும் வாங்கிச் செல்பவர்களும் எண்ணிக்கையில் மிகுந்து வருகிறார்கள்.

அதனால், பலரது இல்லங்களின் வரவேற்பறைகளில், காட்சி மாடங்களில், விலையுயர்ந்த பொம்மைகள், கலைப் பொருள்கள் இருக்கிற இடங்களில் புத்தகங்கள் இருப்பதைப் பார்க்க முடிகிறது. பெரிது பெரிதாய், அழகழகாய்த் தெரிகிற மாதிரி அடுக்கி வைப்பதில் நேர்த்தி தெரிகிறது.
முகநூல் பக்கங்களில்கூட, தத்தம் இல்ல நூலகங்களைப் படமெடுத்து இடுகையிடுவதும், தாம் வாங்கிய நூல்களின் பட்டியலை, அந்த நூல்களின் முகப்புப் படங்களை இணைத்துக்கொள்வதும் மிகுந்து வருகிறது. புத்தகங்களைப் பரிசளிக்கிற பழக்கமும் அண்மைக்காலமாய் வளர்ந்துவரத் தொடங்கியிருக்கிறது.

இது நல்ல விஷயம்தான் என்றாலும், வாங்கிய நூல்களை அனைவரும் வாசிக்கிறார்களா? என்ற கேள்விக்கு ஆம் என்ற பதிலை உடனே பெற முடியவில்லை. வாசிப்பதற்காக வாங்கினாலும்கூட, வாங்குவதற்கு முன்னால் இருக்கிற வாசிப்பு ஆர்வம் வாங்கிய பிறகு வருவதில்லை. நம்மிடம்தானே இருக்கிறது. எப்பொழுது வேண்டுமானாலும் எடுத்துப் படிக்கலாம் என்று வைத்துவிட்டு மறந்தே விடுகிறோம். அதற்குள் இன்னும் பல புத்தகங்கள் வந்து சேர்ந்து விடுகின்றன.

நேரமின்மை ஒரு முக்கியக் காரணம் போலத் தோன்றினாலும், அதன்பால் உள்ள ஆர்வமின்மைதான் அதிமுக்கியக் காரணம். அது தாமதம் என்கிற பெயரோடு விருந்தினராய் வந்து, சோம்பல் என்கிற நிரந்தர உறுப்பினராய் நம்முடன் தங்கி விடுகிறது. பின்னர் நம்மையே ஆட்கொண்டும் விடுகிறது. இதனால், நாளுக்கு நாள் வாசிப்பின் மீதான ஆர்வம் படிப்படியாகக் குறைந்து மறைந்து விடுவதையும் பார்க்க முடிகிறது.

வாசிப்பு என்பது என்ன? சொற்களின் ஊடே பயணம் செய்து உண்மையை உள்வாங்கிக் கொண்டு அதனை மனக்கண் முன் நிறுத்தியும் செலுத்தியும் பார்க்கிற கலைநுட்பம். தொடர்ந்து, உணர்வின் நுண்ணிய பாகங்களை நன்னெறிப்படுத்தும் திண்ணிய நெஞ்சத்தை ஆக்கவல்ல கலைப்பாடு ஆகும்.
அதற்கு மாற்றாக, காட்சி ஊடகங்களின் முன் அமர்ந்து அசைவுறு படங்களின் துணை கொண்டு அவற்றைக் கண்டும் கேட்டும் அமைதி கொள்கிறபோது, புறத்துறுப்புகளான புலன்களோடு அந்தச் செயல்பாடு முடிந்துவிடுகிறது. அகத்துறுப்பான மனத்தைத் தூண்டிச் சிந்திக்கச் செய்வதைக் குறைத்து விடுகிறது.

எடுத்துக்காட்டாகச் செய்தித்தாளைச் சொல்லலாம். செய்திகளைப் பத்திரிகைகளின் வாயிலாகப் படித்துப் புரிந்துகொள்வதற்கும் காட்சி ஊடகங்களின் வாயிலாகப் பார்த்துத் தெரிந்துகொள்வதற்கும் நுண்ணிய வேறுபாடுகள் இருக்கின்றன அல்லவா? சொற்களில் கட்டமைக்கப் பெறும் காட்சிகளும், காட்சி ஊடகங்களில் சித்தரிக்கப்படும் நிகழ்வுகளும் நேர்கோட்டில் அமைவதில்லை. அதன் மொழி வேறு. இதன் உரு வேறு. இரண்டும் வேண்டும். ஆனால், ஒன்றை ஒன்று மென்று தின்றுவிட அனுமதிக்கலாகாது.

உணவு உடலுக்கு நல்லது. அது வாய்வழி பெறுவது. செவிவழி பெறுகிற உணவும் இருக்கிறது. அது மனதுக்கு நல்லது. இவ்விரண்டுக்கும் அப்பால், கண்வழி உண்ணும் உணவாகக் கலைவடிவங்கள் இருக்கின்றன. அவற்றினுள்ளும், எழுத்துக்கலை இருக்கிறதே, அது ஒப்பற்ற உயர்கலை. அதனால்தான், எழுதுகிறவன் கலைஞர்களில் சிறப்பானவன் என்று நான் கண்டுகொண்டேன். பிகாúஸாவின் ஓவியங்களைவிடவும், பீதோவனின் இசைக்கோலங்களைவிடவும், ஹ்யூகோவின் ஒரு வாக்கியம், கதேயின் ஒரு கடைச்சொல், உலக மக்களை எல்லாம் ஆட்டிப் படைத்துவிடும். இசை கேட்டாரை மட்டுமே பிணிக்கும். இலக்கியம் கேளாதாரும் விரும்ப காலகாலத்துக்கும் நிலைக்கும் என்கிறார் ஜெயகாந்தன்.
ஒரு புத்தகத்தைத் திறந்து படிக்கும்போது, அதனை எழுதிய ஆன்மா தன் இதயம் திறந்து மொழிகிற குரலை மனம் கேட்கும்; அதன் சொற்படிமங்களில் இருந்து எழுந்துலவும் பாத்திரப் படைப்பின் இயக்கத்தை மனக் கண் பார்க்கும்; அதன் சரி தவறுகளைச் சிந்தித்து, மனத்தின் உட்குரல் சொல்லும்; மெல்ல மெல்ல, எழுத்துருக்கள் மறைந்து அதன் சிந்தனைக் கீற்றுகள் படிந்து வாசிப்பவரின் உள்ளத் திண்மைக்கு உரமேற்றும்; அது மனசாட்சியைத் தூண்டி மலர்த்தும்; அதற்கு வலிமை சேர்க்கும்; தனிமனித மனசாட்சி வலிமையுற்றுச் சமுதாய மனசாட்சியை மேலுறுத்தும்போது, நிகழும் மாற்றங்கள் ஆக்கபூர்வமானவை.

அதைத்தான் உலக இலக்கியங்கள் மொழி எல்லைகள் கடந்து ஆற்றிவருகின்றன. லியோ டால்ஸ்டாயின் கதையும், மாப்பஸானின் ஆக்கமும், விக்டர் ஹ்யூகோவின் படைப்பும், திருவள்ளுவரின், கம்பரின், கவிதைகளும் அந்தந்த மொழிகளுக்கு மட்டுமே சொந்தமாகிவிடுமா என்ன?
சித்தர்கள் செய்யும் கூடு விட்டுக் கூடு பாயும் கலையை, இந்த வாசிப்பனுபவம் கைகூடச் செய்துவிடும். அதற்கு, எழுதுவது ஒரு தவம் என்றால், அதனை வாசிப்பது பெருந்தவம். எடுத்து வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் அந்தக் கணம் புதிதாய்ப் பிறக்கிறது; வாசிப்போரையும் பிறப்பிக்கச் செய்கிறது.

ஒரு நல்ல புத்தகத்தின் உள்நுழைந்து வெளிவரும் உள்ளம், வேறொரு உலகத்தில் பயணம் செய்து அதில் வாழ்ந்து அனுபவித்து மீள வருகிறது என்பதைத் தேர்ந்த வாசகர்கள் தாமே அறிவர்.

ஒற்றைப் பிரதியை உருவாக்கும் எழுத்தாளனின் ஆக்கம், அச்சேற்றப்படும் ஒவ்வொரு பிரதியின்போதும் புதிதாய்ப் பிறக்கிறது. வாசிப்பவர்களின் மனங்களில் புகுந்து மறுபிறவி எடுக்கிறது. வாசிப்புள்ளம் நேசிப்புள்ளமாக மாறும்போது, ஒரு படைப்பு அமரத்துவம் எய்துகிறது. அதுவும் வாழ்கிறது. வாசிப்பவரையும் வாழ்விக்கிறது. எழுதியவனும் நிரந்தரமாகிறான்.
இந்த அரிய கலை அனுபவத்தை, வருந்தலைமுறையினர் முறையாகப் பெறுகிறார்களா என்பது ஐயப்பாடாக இருக்கிறது. பள்ளிப் பாடங்களுள் மூழ்கி வெளிவருவதற்கே காலப்பற்றாக்குறை இருப்பதாகச் சொல்லப்படுவது நம்புதற்குரியதில்லை. மிச்சப்பொழுதுகளைக் காவுகொள்ளும் பிற சாதனங்களுக்கு ஒதுக்கப்பெறும் கால ஒதுக்கீட்டில் நல்ல புத்தகங்களின் வாசிப்புக்கும் நேரம் ஒதுக்கலாமே!
ஒவ்வொரு முறையும் புதிதாய் வாங்கும் புத்தகங்களை உடனே படிக்க முடியாவிட்டால், அதற்கெனக் கூடுதல் நேரம் ஒதுக்கி, செல்லிடப்பேசி முதலான தொடர்பு ஊடக இயக்கங்களை அணைத்துவிட்டு, புத்தகங்களுள் மூழ்கி வெளிவருவதும் உண்டு.

இல்லங்கள்தோறும் நூலகங்களை ஏற்படுத்தியதுபோல, வாசிப்புக்கென இடத்தையும் நேரத்தையும் ஒதுக்கிச் செயல்படலாம். வாரந்தோறும் கூட்டுப் பிரார்த்தனைபோல, கூட்டு வாசிப்பு நிகழ்த்தலாம். ஒருவருக்கு ஒரு நூல் எனப் பிரித்துப் படித்து முடித்துச் சேர்ந்து அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.
சொல்வது எளிது; செய்வது கடினமன்று. தொடக்கத்து ஆர்வம் நாளுக்கு நாள் வளரவேண்டுமேயல்லாது, சென்று தேய்ந்து இறுதல் கூடாது. அதற்கு, சுவையான உணவுகளைத் தேர்ந்து உண்பதுபோல, நலம் பயக்கும் நூல்களைத் தேர்வு செய்து வாசிப்பிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு நல்ல நண்பர்கள் துணைக் கொள்ளல் இனிது. வாசிப்புக்குரிய இதழ்களை, புத்தகங்களை முறைப்படுத்திக் கொண்டால், இந்தப் பணி எளிதில் கைகூடும். அவசரமாகப் படிக்க வேண்டியது, நிதானமாகப் படிக்க வேண்டியது, எப்போதும் படித்துப் பயன்கொள்ள வேண்டியது, படித்து முடித்து விடுக்க வேண்டியது என்று வகைப்படுத்திக் கொள்வது ஒருமுறை.
மற்றொன்று, நொறுக்குத் தீனிபோல, மேலோட்டமான வாசிப்புக்குரியனவற்றை முதலிலும், பசிக்கு உதவுகிற அன்னத்தைப்போல், பயன்படும் நூல்களை எப்பொழுதும், ருசிக்குத் துணைசெய்யும் புத்தகங்களை இடையிடையிலும் வாசித்துப் பழகி வைத்துக் கொள்ளலாம்.
வாசிப்பு, படிப்பாகி, படிப்பு கற்றலில் கொண்டுபோய் சேர்க்கும்; அது அற்றங்காக்கும் கருவியாம் அறிவைச் செறிவு செய்யும். எல்லாம் சரி ஏது நேரம் என்கிறீர்களா? இது இன்றைக்குரிய கேள்வி அல்ல; பண்டைக்காலத்திலேயே எழுப்பப்பெற்று பதிலும் தரப்பட்டிருக்கிறது. கல்வி கரையில கற்பவர் நாட்சிலமெல்ல நினைக்கின் பிணி பல என்கிறது நாலடியார். நாளும் நாளும் வந்து குவியும் நூல்களும், வாங்கிச் சேர்க்கும் புத்தகங்களும் மொத்தமாய் அழுத்தும்போது, படிப்பே சுமையாகிவிடுகிறதல்லவா? அதைச் சுலபமாக்கிக் கொள்ளவும் சுகமாக்கிப் பயனுறவும் அந்த நூலே ஒரு பாடலைத் தருகிறது.கலகலவெனக் கூவி ஒலிக்கும் ஆரவாரமிக்க புறவுலகப் போக்குகளை விஸ்தரிக்கும் உலக நூல்களைப் படிப்பதை விடவும், உளம் தடுமாறவிடாமல் உறுதிப் பயன் நல்கும் உயர் அறிவு நூல்களைத் தேடிக் கற்பது நல்லது என்பதை அக்கால நடையில் சொல்லிச் செல்கிறது.
அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லாது
உலக நூல் ஓதுவது எல்லாம்- கலகல
கூஉம் துணை அல்லால் கொண்டு தடுமாற்றம்
போஒம் துணை அறிவார் இல்.
பொழுதுபோக்கு எனும் பெயரில், உயிரனைய பொழுதுகளை அற்பமாய்க் கழித்துவிடாமல், அற்புத அனுபவத்தைத் தருகிற மெய்ம்மை நூல்களைத் தேடிக் கற்பது உயிர் வளர்க்கும் என்று, எத்தனையோ பணிகளுக்கு மத்தியில் இந்தக் கட்டுரையைப் படித்து முடித்த உங்களுக்குச் சொல்லியா காட்ட வேண்டும்?

கட்டுரையாளர்:
பேராசிரியர்.



இன்று உலக புத்தக விழிப்புணர்வு தினம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024