வாட்ஸ்-அப்பில் பயனாளர்களுக்குப் புதிய வசதி!
By DIN | Published on : 04th April 2019 01:04 AM
வாட்ஸ்-அப் குழுவில் இணைவதற்குப் புதிய வசதிகளை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பயனாளர் விரும்பினால் மட்டுமே, வாட்ஸ்-அப் குழுவில் அவரை இணைக்க முடியும்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இணையவழி பிரசாரங்கள் பெரும் அளவில் நடந்து வருகின்றன. முக்கியமாக சமூக வலைதளங்கள் மூலம் பிரசாரங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வாட்ஸ்-அப் சமூக வலைதளத்துக்கான கட்டுப்பாடுகளை அந்நிறுவனம் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக, வாட்ஸ்-அப்பின் உரிமையாளரான முகநூல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பல நபர்களை ஒரு குழுவில் இணைத்து, அவர்களுடன் உரையாடல் நடத்த வாட்ஸ்-அப் வழிவகை செய்கிறது. தற்போது வரை, அந்தக் குழுவில் யாரை வேண்டுமானாலும், அவரின் அனுமதி இன்றி இணைத்துக்கொள்ள முடியும். ஆனால், தற்போது பயனாளர்களின் தன்மறைப்பு நிலையை அதிகரிக்க நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட வாட்ஸ்-அப் குழுவில், தன்னை யார் இணைக்க முடியும் என்பது தொடர்பான தகவல்களைப் பயனாளர் முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்மூலம், பயனாளர் விரும்பினால் மட்டுமே குறிப்பிட்ட குழுவில் இணைய முடியும்.
இந்தப் புதிய வசதி புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இன்னும் சில தினங்களில் இந்தப் புதிய வசதி உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும். இந்த வசதியைப் பெற, வாட்ஸ்-அப்பில் அதற்குரிய மாற்றங்களைப் பயனாளர்கள் செய்துகொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment