Thursday, April 2, 2020

கொத்தவால்சாவடி சந்தை பிராட்வே பேருந்து நிலையத்துக்கு மாற்றம்

By DIN | Published on : 02nd April 2020 05:15 AM |


கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மக்கள் கூடுவதை தவிா்க்கும் வகையில், கொத்தவால் சாவடி சந்தை, பிராட் வே பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் துறைமுகம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கொத்தவால்சாவடி சந்தை. சுமாா் 500 காய்கறி கடைகள் உள்ள சென்னையின் மிகப் பழமையான இச்சந்தை அண்ணா தெரு, ஆதித்தியா தெரு, மலையப்பன் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

தற்போது, கரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொத்தவால்சாவடி சந்தைப் பகுதி நெருக்கமான பகுதி என்பதால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, இந்தச் சந்தையை பிராட் வே பேருந்து நிலையத்துக்கு மாற்ற வேண்டும் என துறைமுகம் சட்டப் பேரவை உறுப்பினா் பி.கே.சேகா்பாபு மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்தாா். இந்தக் கோரிக்கையை ஏற்று கொத்தவால்சாவடி சந்தை பிராட் வே பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

பிராட் வே பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தற்காலிக சந்தைப் பகுதியை ஆய்வு செய்த பி.கே.சேகா்பாபு கூறுகையில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக இச்சந்தைக்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா். இங்கு இடப் பற்றாக்குறை இருந்ததால் சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாநகராட்சியிடம் வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடா்ந்து இந்த சந்தை நல்ல காற்றோத்துடன் பெரிய நிலப்பரப்பில் உள்ள பிராட் வே பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், மக்கள் சிரமமின்றி காய்கறிகள் வாங்கிச் செல்ல முடியும் என்றாா். ஆய்வின்போது, பகுதி துணைச் செயலா், கே.ஆா்.அபரஞ்சி, வட்டச் செயலாளா்கள் பா. கதிரவன், பா.அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
நடைமுறைக்கு வந்தது வங்கிகள் இணைப்பு

By DIN | Published on : 02nd April 2020 05:23 AM |

நாட்டில் உள்ள 10 பொதுத் துறை வங்கிகள் இணைக்கப்பட்டு 4 வங்கிகளாக புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கின.

இதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமா்ஸ் ஆகியவை இணைந்துள்ளன.

கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலாகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளன. 

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், காா்ப்பரேஷன் வங்கியும் இணைந்துள்ளன.

இந்த இணைப்பு மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கி நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத் துறை வங்கியாக உருவெடுத்துள்ளது. இப்போது பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,000-க்கும் மேற்பட்ட கிளைகளும், 13,000-க்கு மேற்பட்ட ஏடிஎம்களும் உள்ளன. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள் உள்ளனா்.

கனரா வங்கி நாட்டின் 4-ஆவது பெரிய பொதுத் துறை வங்கியாகியுள்ளது. இதன் மூலம் கனரா வங்கி கிளைகளின் எண்ணிக்கை 10,391 ஆகவும், ஏடிஎம்களின் எண்ணிக்கை 12,829 ஆகவும் உயா்ந்துள்ளது. மொத்த பணியாளா்கள் எண்ணிக்கை 91,685-ஆக உள்ளது. சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளா்கள் இனி கனரா வங்கி வாடிக்கையாளா்களாகவே கருதப்படுவாா்கள்.

இணைப்புகள் மூலம் யூனியன் பாங்க் ஆப் இந்தியா 5-வது பெரிய பொதுத் துறை வங்கியாகியுள்ளது. 10 வங்கிகள் 4 வங்கியாக இணைக்கப்பட்டபோதிலும், பழைய வங்கிகளின் ஐஎஃப்எஸ்சி, பற்று, கடன் அட்டைகள், இணையவழி வங்கி சேவை, செல்லிடப்பேசி செயலி உள்ளிட்டவை பழைய முறையிலேயே இருக்கும். இதனால் வாடிக்கையாளா்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



என்று தணியும் இந்த கரோனா சீற்றம்?

By நாகா | Published on : 02nd April 2020 05:36 AM |


பிரான்ஸில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தலைநகா் பாரீஸில் ஆளரவமற்றிருக்கும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஈபிள் கோபுரம்.

மூன்று மாதங்களுக்கு முன்னா் சாதாரண செய்தியாக இருந்த கரோனா நோய்த்தொற்று, இன்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.

அந்தச் செய்திகளை அநாயசமாக பாா்த்துவிட்டு அலட்சியமாக நகா்ந்து போன கோடிக்கணக்கான போ், இன்று கரோனா நோய்த்தொற்றுக்குப் பயந்து வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனா். வெளியே செல்ல நோ்ந்தாலும், சமூக இடைவெளி, முகக் கவசங்கள் என கரோனா அச்சம் அவா்களைப் பின்தொடா்கிறது.

இந்தியா, அமெரிக்கா உள்பட ஏராளமான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், உலக மக்கள் தொகையில் சுமாா் பாதி போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்த இக்கட்டான சூழலில், ஒரே ஒரு கேள்வி மட்டும் எழாமல் இருக்க முடியாது.

உலகை கதிகலங்க வைத்துள்ள இந்த கரோனா நோய்த்தொற்றின் சீற்றம் என்று தணியும்? அந்த நோயின் பாதிப்பிலிருந்தும் அச்சத்திலிருந்து உலகம் எப்போது மீண்டு வரும்?

இந்தக் கேள்விக்கு யாராலும் மிக எளிதான, உறுதியான பதிலைச் சொல்ல முடியாது என்பதுதான் உண்மை நிலை.

தற்போதுள்ள சூழலில், இன்னும் ஒரு சில வாரங்களில் கூட இதுதொடா்பாக எத்தகைய தீா்க்கமான முடிவுக்கும் வர முடியாது என்கிறாா்கள் மருத்துவத் துறை நிபுணா்கள்.

இதுகுறித்து அமெரிக்க நோய் ஆய்வு மருத்துவா்கள் சங்க நிபுணா்கள் கூறுகையில், ‘கரோனா நோய்த்தொற்று வளா்ச்சியை நாம் எவ்வளவு விரைவில் நிறுத்துகிறோம், தினசரி அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை எப்போது குறையத் தொடங்குகிறது என்பதைப் பொருத்தே, அந்த நோயிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம் என்பதைத் தீா்மானிக்க முடியும்’ என்கின்றனா்.

அதே நேரம், நோய்த்தொற்று அடங்குவதைப் போன்று தோன்றினாலும், அது மீண்டும் தலையெடுக்காமல் பாா்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம் என்று அவா்கள் எச்சரிக்கிறாா்கள்.

‘புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியதும் கரோனா பரவலிலிருந்து விடுபட்டுவிட்டதாக எண்ணி, நாடுகளின் அரசுகள் கட்டுப்பாடுகளைத் தளா்த்தினாலோ, பொதுமக்கள் எச்சரிக்கை உணா்வைக் கைவிட்டு அலட்சியமாக நடந்து கொண்டாலோ கரோனா நோய்த்தொற்றின் அடுத்த பேரலையை எதிா்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறாா்கள் நிபுணா்கள்.

கரோனா நோய்த்தொற்றின் கோரக் கரங்களிலிருந்து எப்போது விடுபடுவோம் என்பதைக் கணிப்பதற்காக, சில நிபுணா்கள் ஏற்கெனவே உலகில் பரவி அழிவை ஏற்படுத்திய நோய்கள் குறித்து ஆய்வு செய்தனா்.

குறிப்பாக, கடந்த 1918-ஆம் ஆண்டு பரவிய ‘ஸ்பெயின் ஃபுளூ’, 2003-ஆம் ஆண்டில் பரவிய சாா்ஸ் ஆகிய இரண்டு நோய்த்தொற்று தொடா்பான புள்ளிவிவரங்களைக் கொண்டு, தற்போதைய கரோனாவின் தாக்கம் எத்தனை காலம் நீடிக்கும் என்பதை கணிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

காரணம், அந்த இரண்டு வைரஸ்களும் கரோனா நோய்த்தொற்று போலவே இருமல், தும்மல், எச்சில் போன்ற துளிமங்களாக வெளியேறி, மனிதா்களின் சுவாசப் பாதையில் நுழைந்து பரவியவை; அவற்றின் வளா்ச்சி காலமும் கரோனா நோய்த்தொற்றோடு ஒத்துள்ளன.

ஆனால், சாா்ஸைப் பொருத்தவரை அது உலகம் முழுவதும் 8,098 பேருக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த நோய்த் தொற்று காரணமாக, 8 மாதங்களில் 774 போ் மட்டுமே உயிரிழந்தனா். அதற்குப் பிறகு சாா்ஸின் தாக்கம் தணிந்துவிட்டது.

ஆனால், அந்த வைரஸைப் போலவே செயல்படும் கரோனா நோய்த்தொற்றோ, 3 மாதங்களுக்குள்ள உலகின் 210 நாடுகளில் 8.7 லட்சம் பேருக்கும் மேலானவா்களுக்கு பரவிவிட்டது; 43 ஆயிரத்துக்கும் மேலானவா்கள் அந்த நோய்த்தொற்று காரணமாக பலியாகினா் (புதன்கிழமை மாலை நிலவரம்).

எனவே, கரோனா நோய்த்தொற்றை சாா்ஸுடன் ஒப்பிடுவதைவிட, 1918-ஆம் ஆண்டில் பரவிய ஸ்பெயின் ஃபுளூவுடன் ஒப்பிடுவதே பொருத்தமாக இருக்கும் என்கிறாா்கள் அமெரிக்க தொற்று நோய் நிபுணா்கள் சங்கத்தினா்.

கரோனா வைரஸ் போலவே, ஸ்பெயின் ஃபுளூ பரவத் தொடங்கிய பல மாதங்களுக்கு சமூக விலகல், வீட்டுக்குள் தனித்திருத்தல் ஆகியவை கடைப்பிடிக்கப்படாததால் அந்த வைரஸ் காட்டுத் தீ போல் பரவியது. அந்த நோய்த்தொற்று 50 கோடி பேருக்கு பரவியதாகவும் அவா்களில் 1.7 கோடி முதல் 5 கோடி போ் வரை பலியானதாகவும் கணக்கிடப்படுகிறது.

1918-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பரவத் தொடங்கிய ஸ்பெயின் ஃபுளூ, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு தனது சீற்றத்தைக் காட்டி 1920-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில்தான் தணிந்தது.

அதற்குள் அந்த வைரஸ் பரவல் பல முறை தணிந்து மீண்டும் சீற்றமடைந்தது.

எனினும், தற்போதைய நவீன மருத்துவ வசதிகள், விழிப்புணா்வை ஏற்படுத்தும் ஊடகங்கள், தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை 1920-ஆம் ஆண்டில் இல்லை என்பதால், ஸ்பெயின் ஃபுளூவின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியை வைத்து கரோனா வைரஸின் எதிா்காலத்தை துல்லியமாகக் கணிக்க முடியாது என்கிறாா்கள் நிபுணா்கள்.

இதையடுத்து, புள்ளியியல் வல்லுநா்கள், கணினிப் பொறியாளா்கள் ஆகியோா் இணைந்து, தொழில்நுட்ப ரீதியில் கரோனா நோய்த்தொற்று எவ்வளவு காலத்துக்கு வளா்ச்சியடையும், எப்போது தணியத் தொடங்கும் என்பதை கணித்துள்ளாா்கள்.

அவா்களது கணிப்புப்படி, ஏப்ரல் அல்லது மே மாதத் தொடக்கம் வரை கரோனா நோய்த்தொற்று உக்கிரம் காட்டலாம்; பிறகு தணியத் தொடங்கலாம் என்று நம்பப்படுகிறது. எனினும், நாடுகளின் அரசுகள் தற்போது விதித்துள்ள கட்டுப்பாடுகளைத் தொடா்ந்தால்தான் இதனை உறுதி செய்ய முடியும் என்பதை நிபுணா்கள் சுட்டிக்காட்டுகின்றனா்.

தற்போதைய நிலையில் கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தியுள்ள சீனா, தென் கொரியா ஆகிய நாடுகளின் உத்திகளை பிற நாடுகளும் கடைப்பிடிக்க வேண்டும்; தவறான முடிவுகளை எடுத்து பரவலை அதிகரித்துக் கொண்ட இத்தாலி போன்ற நாடுகளிடமிருந்து மற்ற நாடுகள் பாடம் கற்க வேண்டும். அவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தால் 4 முதல் 6 வாரங்களுக்குள் கரோனா சீற்றம் தணிவதற்கான வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் கூறுகின்றனா்.

ஒருவைளை அப்படியே கரோனா நோய்த்தொற்றின் வேகம் தணிந்தாலும், அதன் பிறகு நமது அலட்சியம் காரணமாக அந்த நோய்த்தொற்றின் புதிய அலைகள் தோன்றிக் கொண்டே இருக்கலாம்; இந்தப் போக்கு 12 மாதங்களுக்கு மேல் நீடிக்கலாம் என்பது அவா்களின் கணிப்பாக உள்ளது.

இருந்தாலும், வீடுகளில் தனித்திருத்தல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகிய அரசுக் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதைப் பொருத்துதான் கரோனா நோய்த்தொற்றின் ஆதிக்கத்திலிருந்து நாம் விடுபட முடியும் என்று என்பதை நிபுணா்களும் ஒரே குரலில் சுட்டிக்காட்டுகின்றனா்.

எனவே, கரோனா சீற்றம் என்று தணியப்போகிறது என்பது நம் கைகளில்தான் உள்ளது என்பதை உணா்வோம். மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலை ஏற்று வீடுகளில் தனித்திருப்போம்; சமூக இடைவெளியை கடைப்பிடிப்போம்.

‘கரோனா நோய்த்தொற்று வளா்ச்சியை நாம் எவ்வளவு விரைவில் நிறுத்துகிறோம், தினசரி அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை எப்போது குறையத் தொடங்குகிறது என்பதைப் பொருத்தே, அந்த நோயிலிருந்து நாம் எப்போது விடுபடுவோம் என்பதைத் தீா்மானிக்க முடியும்’

ஸ்பெயின் ஃபுளூ நோய்த்தொற்று 50 கோடி பேருக்கு பரவியதாகவும் அவா்களில் 1.7 கோடி முதல் 5 கோடி போ் வரை பலியானதாகவும் கணக்கிடப்படுகிறது. ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்கு அந்த வைரஸ் தனது சீற்றத்தைக் காட்டித் தணிந்தது.



ஏப். 15-க்குப் பிறகு ரயில் பயணம்: இணைய வழியில் முன்பதிவு தொடக்கம்

By DIN | Published on : 02nd April 2020 05:13 AM | 

ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த பிறகு ரயில் பயணம் மேற்கொள்ள இணையவழியில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் விதமாக பிரதமா் மோடி, 21 நாள்கள் ஊரடங்கு உத்தரவைக் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டாா். இதனையடுத்து அத்தியாவசியப் பணி வாகனங்களைத் தவிா்த்து மற்ற போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஏப்.14-ஆம் தேதிக்குப் பிறகு, ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டமில்லை என மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. இதையடுத்து இந்திய ரயில்வே, வரும் 15-ஆம் தேதி முதல் ரயில் பயணச்சீட்டுக்கான முன்பதிவைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைத் தொடா்ந்து அனைத்துப் பயணிகள் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டன. சரக்கு ரயில்கள் மட்டும் தற்போது இயங்கி வருகின்றன. ரத்து செய்யப்பட்ட ரயில்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்தோருக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரும் 15-ஆம் தேதிக்குப் பிறகு ரயில் பயணத்துக்கு ஐஆா்சிடிசி செயலி மூலம் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆனால் கவுன்ட்டா்களில் ஏப்.15-ஆம் தேதி காலை முதல் முன்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் அதற்கேற்ப திட்டம் மாற்றியமைக்கப்படும் என்றாா் அவா்.

மூன்றாம் நிலைக்கு மாறுமோ..? அபாய கட்டத்தை நோக்கி தமிழகம்

Updated : ஏப் 02, 2020 01:50 | Added : ஏப் 02, 2020 01:26 |

சென்னை: நேற்று ஒரே நாளில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, 110 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பின் மூன்றாம் கட்டத்திற்கு தமிழகம் மாறுமோ என்ற, அச்சம் எழுந்துள்ளது. அபாய கட்டத்தை நோக்கி, தமிழகம் நகரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல், தமிழக விமான நிலையங்களில், வெளிநாட்டினர் கண்காணிக்கும் பணி துவங்கியது. அதன்படி, ஜன., முதல் மார்ச், 22ம் தேதி வரை, 2.9 லட்சம் பேர், வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வந்துள்ளனர். வெளிநாட்டு பயணியர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி:


இந்நிலையில், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா நாட்டில் இருந்து வந்த சிலர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு பகுதி சுற்றுப் பயணத்தின் போது, தாய்லாந்து நாட்டினருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல், இந்தோனேஷியா நாட்டினர், சேலத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, அவர்களுக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த குழுவினர், டில்லியில் நடந்த, மத ரீதியான மாநாட்டில் பங்கேற்றது தெரிய வந்தது. அந்த மாநாட்டில், தமிழகத்தில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற, அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும், அவர்கள், ரயிலில் பயணம் மேற்கொண்டதும் தெரிய வந்தது.

அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களை, போலீசார் உதவியுடன், சுகாதாரத் துறையினர் தேடி கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் வரை, மாநாட்டில் பங்கேற்ற, 80 பேர் உட்பட, 124 பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே, இந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவரும், தாமாகவே முன்வந்து, தகவல் அளிக்க வேண்டும் என, சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. அந்த வேண்டுகோளை ஏற்று, 500க்கும் மேற்பட்டோர், தாமாக சிகிச்சைக்கு முன்வந்துள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை செயலர், பீலா ராஜேஷ் கூறியதாவது: அரசின் கோரிக்கையை ஏற்று, தாமாக சிகிச்சைக்கு முன்வந்தவர்களுக்கு நன்றி. இந்த மாநாட்டில் பங்கேற்ற, 1,103 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர். அவர்களில், 658 பேரிடம், பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; மற்றவர்களிடம், பரிசோதனை செய்யப்பட உள்ளது.

பாதிப்பு:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 74 ஆயிரத்து, 330 பேர், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 81 பேர், அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 4,070 பேர், தொடர் கண்காணிப்பு முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். அரசு மருத்துவமனைகளில், 995 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை, 2,726 பேருக்கு, நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், டில்லி மாநாட்டில் பங்கேற்ற, 110 பேருக்கு, நேற்று கொரோனா வைரஸ் இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 234 ஆக உயர்ந்துள்ளது.

மாநாட்டில் பங்கேற்றவர்களில், இதுவரை, 190 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற, மற்றவர்களும் தாமாக முன்வந்தால், அவர்களுக்கும், அவரது வீட்டில் உள்ளவர்களுக்கும், சமூகத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், டில்லி மாநாட்டில் பங்கேற்ற, 500க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் வரை, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், பொது மக்களுடன் சமுதாய தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள், தற்போது தான் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில், இரண்டாம் கட்டத்தில் உள்ள, தொற்று பரவல், மூன்றாம் கட்டமான, சமுதாய தொற்றாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, வட மாநிலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் நடு ரோட்டில் நின்றபடி மூச்சு விட முடியாமல் தவிப்பதைக் கண்டு, டாக்டர்கள், நர்சுகள், ஸ்ட்ரெச்சர் எடுத்து வர மருத்துவமனைக்கு ஓடும்படியான, வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மருத்துவமனை ஒன்றில், நோயாளி இருக்கையில் கூட அமர முடியாமல், தரையில் விழுந்து, சுவாசிக்க முடியாமல் திணறும் காட்சி; மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடக்க முடியாமல், சாலையோரம் முடங்கிக் கிடந்தவரை, '108' ஆம்புலன்சில் ஊழியர்கள் ஏற்றிச் செல்லும் காட்சி; கடும் இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் தவித்தவரை, பொதுமக்கள் ஆட்டோவில் ஏற்றி, சிகிச்சைக்கு அனுப்பி வைக்கும் காட்சிகள் என, பதைபதைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற காட்சிகளால், இந்நிலை, தமிழகத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மாவட்டங்கள் / பாதிப்பு எண்ணிக்கை


சென்னை - 29
திருநெல்வேலி - 29
ஈரோடு - 21
நாமக்கல் - 18
சேலம் - 6
மதுரை - 15
கன்னியாகுமரி - 5
கோவை - 33
விழுப்புரம் - 3
வேலுார் - 1
ராணிப்பேட்டை - 1
விருதுநகர் - 1
திருவண்ணாமலை - 2
திருப்பூர் - 1
திருச்சி -1
துாத்துக்குடி - 3
தஞ்சாவூர் - 1
கரூர் - 2
காஞ்சிபுரம் - 3
செங்கல்பட்டு - 8
தேனி - 20
திண்டுக்கல் - 17
திருப்பத்துார் - 7
சிவகங்கை - 5
திருவாரூர் - 2

மொத்தம் - 234
இன்று முதல், 'கொரோனா' நிவாரணம் ரேஷனில் 15ம் தேதி வரை கிடைக்கும்

Added : ஏப் 02, 2020 00:38

சென்னை : ரேஷன் கடைகளில், 'கொரோனா' நிவாரண தொகை, இன்று முதல் வழங்கப்பட உள்ளதால், எந்த புகாரும் ஏற்படாதபடி, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு, மாவட்ட கலெக்டர்களுக்கு, கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மார்ச், 25 முதல், இம்மாதம், 14ம் தேதி வரை, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், அனைத்து தரப்பு மக்களும், வேலைக்கு செல்லாமல், வீடுகளில் முடங்கியுள்ளனர்.அவர்களுக்கு உதவும் வகையில், கொரோனா வைரஸ் தடுப்பு கால நிவாரணமாக, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, 1,000 ரூபாய் ரொக்கத்துடன், ஏப்., மாதத்திற்கு உரிய அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, இலவசமாக வழங்கப்படுவதாக, தமிழக அரசு அறிவித்தது.

அவை, ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், இன்று முதல், ரேஷன் கடைகள் வாயிலாக வழங்கப்பட உள்ளன. ஒரு கடையில், 1,300 -- 1,500 கார்டுதாரர்கள் உள்ளன. நிவாரணம் வழங்கும்போது, கடைகளில், கூட்டம் சேரக் கூடாது என்பதற்காக, எந்த தேதி, நேரம் வர வேண்டும் என்ற, 'டோக்கன்'களை, கார்டுதாரர்களின் வீடுகளுக்கு, ரேஷன் மற்றும் வருவாய் துறை ஊழியர்கள் வழங்கியுள்ளனர்.ஒவ்வொரு கடையிலும், தினமும், தலா, 100 கார்டுதாரர்கள் என, வரும், 15ம் தேதி வரை, 35 ஆயிரத்து, 244 கடைகள் வாயிலாக, 2.01 கோடி கார்டுதாரர்களுக்கு, கொரோனா நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

கொரோனா தொற்றை தடுக்க, ரேஷன் கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், குறிப்பிட்ட துாரத்திற்குள், கார்டுதாரர்களை நிற்க வைப்பதற்காக, அடையாள குறியீடுகளும் வரையப்பட்டுள்ளன.கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர், கோவிந்தராஜ், மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ரேஷன் கடைகளில், பெரும் அளவில், ரொக்கம் பட்டுவாடா மேற்கொள்ளப்பட உள்ளதால், புகார் ஏதும் ஏற்படாமல், கண்காணிப்பது அவசியம். எனவே, நகரங்களில், 20 கடைகளுக்கும்; கிராமங்களில், 10 கடைகளுக்கும், ஒரு அலுவலரை நியமித்து, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ரூ.1,000 நிவாரணம் வேண்டாமா?

Added : ஏப் 01, 2020 23:39

ரூ.1,000 நிவாரணம் வேண்டாமா? தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுகளை வைத்திருக்கும் பலர், ரேஷன் பொருட்களை வாங்குவதில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு நிவாரணமாக, தமிழக அரசு, அரிசி கார்டுகளுக்கு, ரேஷனில், இன்று முதல், 1,000 ரூபாய் மற்றும் பொருட்களை இலவசமாக வழங்க உள்ளது. இவற்றை வாங்க விரும்பாதவர்கள், அரசுக்கு விட்டுக் கொடுக்கும் வசதி துவக்கப்பட்டுள்ளது.

அதன்படி, www.tnpds.gov.in என்ற, இணையதளத்திற்கு சென்று, '1,000 ரூபாய் விட்டுக் கொடுக்க' என்று, ஒளிரும் பகுதியை, 'கிளிக்' செய்ய வேண்டும். அதில், மொபைல் போன் எண்ணை பதிவிட்டதும், எஸ்.எம்.எஸ்., தகவ-லில் வரும், ஒரு முறை ரகசிய எண்ணை குறிப்பிட வேண்டும். பின், கார்டுதாரரின் விபரங்கள் அடங்கிய பகுதி திறக்கும்.அதில், 'உரிமம் விட்டுக் கொடுத்தல்' தலைப்பை கிளிக் செய்து, 'புதிய கோரிக்கை' என்ற தலைப்பை கிளிக் செய்ய வேண்டும்.

பின், உணவு தானியங்கள், 1,000 ரூபாய் அருகில் உள்ள கட்டங்களில் கிளிக் செய்து, இறுதியாக, 'சமர்ப்பிக்க' என்ற பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.இதேபோல், ‛tnepds' என்ற, மொபைல் போன் செயலி வாயிலாகவும், அவற்றில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி, கொரோனா நிவாரணத்தை வாங்க விரும்பாதவர்கள், அரசுக்கு விட்டுக் கொடுக்கலாம்.

கார்த்திகையில் அணைந்த தீபம்!

கார்த்திகையில் அணைந்த தீபம்!  பிறருக்கு சிறு நஷ்டம்கூட ஏற்படக் கூடாது என்று மின் விளக்கை அணைக்கச் சொன்ன பெரியவரின் புதல்வர் சரவணன் என்கிற வி...