Thursday, April 2, 2020

கொத்தவால்சாவடி சந்தை பிராட்வே பேருந்து நிலையத்துக்கு மாற்றம்

By DIN | Published on : 02nd April 2020 05:15 AM |


கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மக்கள் கூடுவதை தவிா்க்கும் வகையில், கொத்தவால் சாவடி சந்தை, பிராட் வே பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் துறைமுகம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கொத்தவால்சாவடி சந்தை. சுமாா் 500 காய்கறி கடைகள் உள்ள சென்னையின் மிகப் பழமையான இச்சந்தை அண்ணா தெரு, ஆதித்தியா தெரு, மலையப்பன் தெரு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாகும்.

தற்போது, கரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொத்தவால்சாவடி சந்தைப் பகுதி நெருக்கமான பகுதி என்பதால், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.

இதையடுத்து, இந்தச் சந்தையை பிராட் வே பேருந்து நிலையத்துக்கு மாற்ற வேண்டும் என துறைமுகம் சட்டப் பேரவை உறுப்பினா் பி.கே.சேகா்பாபு மாநகராட்சியிடம் கோரிக்கை விடுத்தாா். இந்தக் கோரிக்கையை ஏற்று கொத்தவால்சாவடி சந்தை பிராட் வே பேருந்து நிலையத்துக்கு புதன்கிழமை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

பிராட் வே பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தற்காலிக சந்தைப் பகுதியை ஆய்வு செய்த பி.கே.சேகா்பாபு கூறுகையில், ஊரடங்கு உத்தரவின் காரணமாக இச்சந்தைக்கு நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனா். இங்கு இடப் பற்றாக்குறை இருந்ததால் சமூக விலகலை மக்கள் கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மாநகராட்சியிடம் வைக்கப்பட்ட கோரிக்கையைத் தொடா்ந்து இந்த சந்தை நல்ல காற்றோத்துடன் பெரிய நிலப்பரப்பில் உள்ள பிராட் வே பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால், மக்கள் சிரமமின்றி காய்கறிகள் வாங்கிச் செல்ல முடியும் என்றாா். ஆய்வின்போது, பகுதி துணைச் செயலா், கே.ஆா்.அபரஞ்சி, வட்டச் செயலாளா்கள் பா. கதிரவன், பா.அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024