Thursday, April 2, 2020


மூன்றாம் நிலைக்கு மாறுமோ..? அபாய கட்டத்தை நோக்கி தமிழகம்

Updated : ஏப் 02, 2020 01:50 | Added : ஏப் 02, 2020 01:26 |

சென்னை: நேற்று ஒரே நாளில், 'கொரோனா' வைரஸ் பாதிப்பு, 110 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதால், பாதிப்பின் மூன்றாம் கட்டத்திற்கு தமிழகம் மாறுமோ என்ற, அச்சம் எழுந்துள்ளது. அபாய கட்டத்தை நோக்கி, தமிழகம் நகரும் நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டது முதல், தமிழக விமான நிலையங்களில், வெளிநாட்டினர் கண்காணிக்கும் பணி துவங்கியது. அதன்படி, ஜன., முதல் மார்ச், 22ம் தேதி வரை, 2.9 லட்சம் பேர், வெளிநாடுகளில் இருந்து, தமிழகத்திற்கு வந்துள்ளனர். வெளிநாட்டு பயணியர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி:


இந்நிலையில், தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா நாட்டில் இருந்து வந்த சிலர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், சுற்றுப் பயணம் மேற்கொண்டனர். ஈரோடு பகுதி சுற்றுப் பயணத்தின் போது, தாய்லாந்து நாட்டினருக்கு, கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதேபோல், இந்தோனேஷியா நாட்டினர், சேலத்தில் சுற்றுப்பயணத்தில் இருந்தபோது, அவர்களுக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அந்த குழுவினர், டில்லியில் நடந்த, மத ரீதியான மாநாட்டில் பங்கேற்றது தெரிய வந்தது. அந்த மாநாட்டில், தமிழகத்தில் இருந்து, 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற, அதிர்ச்சி தகவல் வெளியானது. மேலும், அவர்கள், ரயிலில் பயணம் மேற்கொண்டதும் தெரிய வந்தது.

அந்த மாநாட்டில் பங்கேற்றவர்களை, போலீசார் உதவியுடன், சுகாதாரத் துறையினர் தேடி கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி, சிகிச்சை அளித்து வருகின்றனர். அதன் அடிப்படையில், நேற்று முன்தினம் வரை, மாநாட்டில் பங்கேற்ற, 80 பேர் உட்பட, 124 பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே, இந்த மாநாட்டில் பங்கேற்ற அனைவரும், தாமாகவே முன்வந்து, தகவல் அளிக்க வேண்டும் என, சுகாதாரத் துறை வேண்டுகோள் விடுத்திருந்தது. அந்த வேண்டுகோளை ஏற்று, 500க்கும் மேற்பட்டோர், தாமாக சிகிச்சைக்கு முன்வந்துள்ளனர்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை செயலர், பீலா ராஜேஷ் கூறியதாவது: அரசின் கோரிக்கையை ஏற்று, தாமாக சிகிச்சைக்கு முன்வந்தவர்களுக்கு நன்றி. இந்த மாநாட்டில் பங்கேற்ற, 1,103 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சையில் உள்ளனர். அவர்களில், 658 பேரிடம், பரிசோதனை செய்யப்பட்டுள்ளது; மற்றவர்களிடம், பரிசோதனை செய்யப்பட உள்ளது.

பாதிப்பு:

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 74 ஆயிரத்து, 330 பேர், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 81 பேர், அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 4,070 பேர், தொடர் கண்காணிப்பு முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். அரசு மருத்துவமனைகளில், 995 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை, 2,726 பேருக்கு, நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில், டில்லி மாநாட்டில் பங்கேற்ற, 110 பேருக்கு, நேற்று கொரோனா வைரஸ் இருப்பது, உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 234 ஆக உயர்ந்துள்ளது.

மாநாட்டில் பங்கேற்றவர்களில், இதுவரை, 190 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்ற, மற்றவர்களும் தாமாக முன்வந்தால், அவர்களுக்கும், அவரது வீட்டில் உள்ளவர்களுக்கும், சமூகத்திற்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், டில்லி மாநாட்டில் பங்கேற்ற, 500க்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் வரை, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், பொது மக்களுடன் சமுதாய தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள், தற்போது தான் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இதனால், தமிழகத்தில், இரண்டாம் கட்டத்தில் உள்ள, தொற்று பரவல், மூன்றாம் கட்டமான, சமுதாய தொற்றாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, வட மாநிலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் நடு ரோட்டில் நின்றபடி மூச்சு விட முடியாமல் தவிப்பதைக் கண்டு, டாக்டர்கள், நர்சுகள், ஸ்ட்ரெச்சர் எடுத்து வர மருத்துவமனைக்கு ஓடும்படியான, வீடியோ காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மருத்துவமனை ஒன்றில், நோயாளி இருக்கையில் கூட அமர முடியாமல், தரையில் விழுந்து, சுவாசிக்க முடியாமல் திணறும் காட்சி; மூச்சுத்திணறல் ஏற்பட்டு நடக்க முடியாமல், சாலையோரம் முடங்கிக் கிடந்தவரை, '108' ஆம்புலன்சில் ஊழியர்கள் ஏற்றிச் செல்லும் காட்சி; கடும் இருமல் மற்றும் மூச்சுத் திணறலால் தவித்தவரை, பொதுமக்கள் ஆட்டோவில் ஏற்றி, சிகிச்சைக்கு அனுப்பி வைக்கும் காட்சிகள் என, பதைபதைக்கும் வகையில், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்ற காட்சிகளால், இந்நிலை, தமிழகத்திற்கு வந்து விடுமோ என்ற அச்சம், பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மாவட்டங்கள் / பாதிப்பு எண்ணிக்கை


சென்னை - 29
திருநெல்வேலி - 29
ஈரோடு - 21
நாமக்கல் - 18
சேலம் - 6
மதுரை - 15
கன்னியாகுமரி - 5
கோவை - 33
விழுப்புரம் - 3
வேலுார் - 1
ராணிப்பேட்டை - 1
விருதுநகர் - 1
திருவண்ணாமலை - 2
திருப்பூர் - 1
திருச்சி -1
துாத்துக்குடி - 3
தஞ்சாவூர் - 1
கரூர் - 2
காஞ்சிபுரம் - 3
செங்கல்பட்டு - 8
தேனி - 20
திண்டுக்கல் - 17
திருப்பத்துார் - 7
சிவகங்கை - 5
திருவாரூர் - 2

மொத்தம் - 234

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024