Saturday, December 30, 2017

விடைபெறும் 2017: கவனம் ஈர்த்த நட்சத்திரங்கள்

Published : 29 Dec 2017 10:42 IST

க. நாகப்பன்




தமிழ் சினிமா ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் திரையுலகுக்குப் புது நம்பிக்கையைக் கொண்டுவருகிறது; புது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. ஓராண்டில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 1,000-க்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்தாலும் அதில் மிகச் சிலரே தங்கள் நடிப்பின் மூலம் மக்கள் அபிமானத்தைப் பெறுகிறார்கள். அதன்படி இந்த ஆண்டில் கவனம் ஈர்த்த திரை முகங்கள்.


விஜய் சேதுபதி


இந்த ஆண்டில் தெறிக்கவிட்ட மாஸ் நடிகர் விஜய் சேதுபதிதான். ‘விக்ரம் வேதா’ படத்தில் வடையைக் கையில் வைத்துக்கொண்டு கெத்தாகக் காவல் நிலையத்துக்குள் நுழையும் அந்த மாஸ் சீன் அவருக்கு மிகச் சரியாக எடுபட்டது. ரவுடிக்கான உடல் மொழியுடன் கம்பீரம் காட்டியது, உணர்வுபூர்வமான தருணங்களில் நெக்குருகியது, துரோகம் உணர்ந்து பழிதீர்த்தது என அழுத்தம் மிகுந்த கதாபாத்திர வார்ப்பில் விஜய் சேதுபதி மிளிர்ந்தார்.


கார்த்தி

வழக்கமான போலீஸ் ஹீரோவுக்கான அம்சங்களைத் தவிர்த்துவிட்டு, உண்மையான போலீஸ் அதிகாரியின் இயல்பை, குணநலனைப் பிரதிபலித்திருந்த விதத்தில் கச்சித நடிப்பை வழங்கி நல்ல முன்மாதிரியாகத் திகழ்ந்தார் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் தீரன் திருமாறன் ஐ.பி.எஸ்ஸாக நம்பவைத்த கார்த்தி.


விஜய்

‘மெர்சல்’ படத்தில் மேஜிக் நிபுணர், மருத்துவர், கிராமத்து இளைஞர் என மூன்று கதாபாத்திரங்களுக்கும் தேவையான வித்தியாசங்களை விரும்பி ஏற்றிருந்தார் விஜய். தோற்றம், நடிப்பு, ஆக்ஷன், வசன உச்சரிப்பு என அனைத்து அம்சங்களிலும் ரசிகர்களுக்குத் தேவையான நிறைவைக் கொடுத்தார்.


சத்யராஜ்

‘பாகுபலி 2’ -ல் கட்டப்பா கதாபாத்திரத்தில் சத்யராஜ் எல்லையற்ற பரிமாணங்களில் அசத்தினார். பிரபாஸுடன் கள்ளம் கபடமில்லாமல் பழகுவது, ராஜாமாதாவின் கட்டளைக்குப் பணிவது, ‘தவறு செய்துவிட்டாய் சிவகாமி’ எனச் சுட்டிக்காட்டுவது, பாகுபலியைக் கொன்ற பிறகும் அன்பைப் பொழிவது எனத் தனக்கான காட்சிகள் அத்தனையிலும் முத்திரை பதித்தார்.


ராஜ்கிரண்

ராஜ்கிரணைக் கிட்டத்தட்ட எல்லாக் கதாபாத்திரங்களிலும் பார்த்தாகிவிட்டது. இன்னும் என்னிடம் வியக்கத்தக்க விஷயங்கள் இருக்கின்றன என்று ‘ப.பாண்டி’யில் ரசிக்கவைத்தார். முன்னாள் காதலியை நினைத்து உருகி, அவரைத் தேடிச் செல்லும் பயணத்தில் மாறா அன்பில் திளைக்கும் கதாபாத்திரமாகவே தெரிந்தார்.


நயன்தாரா

நாயக பிம்பத்தைத் தூக்கி நிறுத்தும் சாகச அம்சம் அதிகமில்லாத ‘அறம்’ படத்தில் கதாபாத்திரத்துக்கான நடிப்பை மட்டும் தந்தார். சிறுமியை மீட்கப் போராடும்போது பெற்றோரின் உணர்வைத் தூண்டிவிடக் கூடாது என்பதற்காகத் தன் உணர்வைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் நயன்தாரா சிறுமி மீட்கப்பட்ட பிறகு உடைந்து அழும் அந்த ஒற்றை அழுகையால் பார்வையாளர்களை உலுக்கினார் மக்களின் ஆட்சியர் மதிவதனியாக களத்தில் நின்ற நயன்தாரா.


ஆன்ட்ரியா

தரமணி படம் முழுக்க ஆர்ப்பாட்டமில்லாத அழகான நடிப்பைக் கொடுத்தார் ஆன்ட்ரியா. தவறான கண்ணோட்டத்துடன் தன்னை அணுகும் மனிதர்களை அவர் எதிர்கொண்ட விதத்தில் பாராட்டை அள்ளினார். அம்மா, காதலி, ஐ.டி.யில் வேலை பார்க்கும் பெண் போன்ற எல்லாப் பரிமாணங்களிலும் சுயசார்போடும் சுயமரியாதையோடும் அதே நேரத்தில் கனிவோடும் உயர்ந்து நின்றார்.


அதிதி பாலன்

‘அருவி’ படத்தில் நம்ப முடியாத அளவுக்கு பிரமிக்க வைத்தார் அதிதி பாலன். குதூகலம், துயரம், ரவுத்திரம் என எதுவாக இருந்தாலும் தண்ணி பட்ட பாடு என்று எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டார். ஒரே பெண்ணைச் சுற்றி நடக்கும் கதையில் ஒட்டுமொத்த வலியையும் வலிமையையும் உணர்த்திய அதிதியின் நடிப்பில் இயல்பும் எளிமையும் இறுதிவரை இழையோடியது.


அனுஷ்கா

‘பாகுபலி 2’ படத்தில் ரம்யாகிருஷ்ணன் கதாபாத்திரம் சரிவைச் சந்தித்தது என்றால் அனுஷ்கா கதாபாத்திரம் உயர்ந்து நின்றது. ‘கைதியாக வரமாட்டேன்’ என நாயகனிடம் சுயமரியாதையுடன் பேசுவது, ஒரு வரம் கேட்பது போல, பரிசு வேண்டும் எனக் கணவனை அரியாசனத்தில் அமரச் சொல்வது, கசப்பான அனுபவங்களையும் பக்குவமாக எதிர்கொள்வது, எல்லோரும் அஞ்சும் ரம்யாகிருஷ்ணனிடம் எதிர்த்து அறம் பேசுவது எனப் படம் முழுக்க ஜொலித்தார் அனுஷ்கா.


அருண் விஜய்

அருண் விஜய் சினிமாவுக்கு வந்து 22 வருடங்களைக் கடந்துவிட்டார். ‘குற்றம் 23’ அவர் நடித்த 20-வது படம். போலீஸ் அதிகாரிக்கான தோரணை, கம்பீரப் பார்வை, நிதானமான அணுகுமுறை எனத் தான் ஒரு ‘ஹீரோ மெட்டீரியல்’ என்பதை ‘குற்றம் 23’ படத்தில் வெளிப்படுத்திய நிதானமான நடிப்பின் மூலம் உரக்கச் சொன்னார்.


சந்தீப் கிஷன்

‘அக்கட தேச’த்தில் அறிமுகமாகி ‘யாருடா மகேஷ்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இடம்பெயர்ந்தவர் சந்தீப் கிஷன். ‘மாநகரம்’ படத்தில் நகரத்து இளைஞனின் மனவோட்டத்தை அப்படியே பிரதிபலித்தார். இன்றைய தன்னம்பிக்கை இளைஞனுக்கான பக்கா ‘கேரக்டர் ஸ்கெட்ச்’. காதலி ரெஜினாவின் அலட்சியத்தைத் தாங்கும் பக்குவம், தவறைத் தட்டிக் கேட்கும்போது வெளிப்படும் கோப முகம் என அசல் நடிப்புக்கான களம் என்பதை உணர்ந்து ‘மாநகரம்’ படத்தில் சந்தீப் ஈர்த்தார்.


ராமதாஸ்

‘மாநகரம்’, ‘மரகத நாணயம்’ ஆகிய இரு படங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார் ராமதாஸ். ‘மாநகரம்’ படத்தில் நானும் ரவுடிதான் என நிரூபிப்பதற்காக அவர் எடுத்த முயற்சிகள் சொதப்பலில் முடிந்தாலும் அவர் கொடுத்த பில்டப்புகள் வெடித்துச் சிரிக்க வைத்தன. ‘மரகத நாணயம்’ படத்தில் சிறு கடத்தல்காரனாகவும், இறந்த பிறகு ஆவி புகுந்த கூடாகவும் இரட்டை வேடங்களில் பிரமாதப்படுத்தினார்.


ராஜகுமாரன்

சாந்தமே நிரம்பிய ஒரு ஜோக்கர் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு ‘கடுகு’ படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தின் மூலம் அர்த்தமுள்ள விடையைத் தந்தார் ராஜகுமாரன். வசனம் பேசுவதிலும் உச்சரிப்பிலும் கொஞ்சம் நிதானமும் தயக்கமும் இருந்ததே என்று யோசித்தால், அதுவே ராஜகுமாரனின் வெகுளித்தனமான கதாபாத்திரத்துக்கான இயல்பான மொழியாக உருப்பெற்று அவரது நடிப்பை ஈர்த்தது.


எம்.எஸ்.பாஸ்கர்

ஒரு கலைஞனுக்கான மிகப் பெரிய சவால், தனக்கான இலக்கை அடையும்வரை காத்திருப்பதே. அந்தக் காத்திருப்பு கைவரப்பெற்றதால் ‘8 தோட்டாக்கள்’ படத்தில் மைல் கல்லைத் தொட்டிருக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். சமூகத்தால், குடும்பத்தால் ஒதுக்கப்படும் ஒரு முதிய ஆணின் வலியை, சோதனையை, வேதனையை, ஆவேசத்துடன் அபாரமாக வெளிப்படுத்தினார்.

பிரசன்னா

கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதில் பிரசன்னா இந்த ஆண்டு பிரகாசித்திருக்கிறார். ‘ப.பாண்டி’யில் அப்பாவின் வம்புகளால் தர்மசங்கடப்பட்ட பிரசன்னா, ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் எவ்வளவு மோசமான சூழலில் இருந்தாலும் கொஞ்சம் சிரிங்க பாஸ் என்று சிம்ஹாவைக் கடுப்பேற்றுவது, அடி வாங்கிக்கொண்டிருந்தபோதும் புன்னகையுடன் மிரட்டுவது என பலே நடிப்பை வழங்கினார்.


அமலாபால்

குறும்புப் பெண், அன்பான மனைவி, கூடா நட்பில் சிக்கித் தவிக்கும் அபலைப் பெண், சொல்ல முடியாமல் மருகி நிற்கும் கையறு நிலை, சந்தர்ப்பத்தைச் சமாளிக்கும் திறன் என ‘மைனா’வுக்குப் பிறகு ‘திருட்டுப்பயலே 2’ படத்தில் தனக்குக் கிடைத்திருக்கும் வலுவான கதாபாத்திரத்தில் பொருந்தி நடித்த அமலாபால், பார்வையாளர்களை அட போட வைத்தார்.


விதார்த்

கதாபாத்திரத்தின் இயல்பான வாழ்க்கை முறைக்கும் கதைக்களத்துக்கும் முக்கியத்துவம் தரும் நம்பிக்கைக்குரிய விதத்தில் தடம் பதித்தார் விதார்த். ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘குரங்கு பொம்மை’ படங்கள் அதற்கு சாட்சிகள். வணிக சினிமாவின் கட்டுப்பாடுகள் குறித்து கவலைப்படாமல் மக்களில் ஒருவராகத் தனித்து நின்று, இயல்பு மீறா நடிப்பால் ரசிக்க வைக்கிறார்.


எஸ்.ஜே.சூர்யா

‘ஸ்பைடர்’ படத்தில் பார்த்ததும் பயப்படுகிற மாதிரியான மிரட்டலான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதும், பிணத்தின் அருகில் நின்று அழும் நபர்களைப் பார்த்துச் சிரிக்கும் குரூரமான பாத்திரத்தில் குறை வைக்காமல் நடித்தார் எஸ்.ஜே.சூர்யா. அவரின் பாத்திரப் படைப்பு விமர்சனத்துக்குட்பட்டதாக இருந்தாலும் நாயகன் மகேஷ்பாபுவைத் தாண்டியும் இவரது நடிப்பு பேசப்பட்டது.


பகத் ஃபாசில்

சினிமாவில் நடிகர்கள் சிலர் பக்கம் பக்கமாக வசனம் பேசி, தொண்டை வறள கருத்துச் சொல்லி ஸ்கோர் செய்வார்கள். ஆனால், அதெல்லாம் தேவையே இல்லை. எல்லாவற்றையும் அப்படியே தூக்கிச் சாப்பிடுவேன். நான் நடிகன்டா என்று விழிமொழியில் வியப்பை ஏற்படுத்தினார் ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்த பகத் ஃபாசில். ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் தந்திர நடிப்புக்கு பகத் பளிச் உதாரணம்.


கவனம் பெறத் தவறியவர்கள்

போதிய களமும் கதாபாத்திரமும் அமைந்தும் கவனம் பெறத் தவறியவர்களின் பட்டியலில், விஜய் ஆண்டனி – ‘எமன்’, ‘அண்ணாதுரை’, ஜீவா – ‘சங்கிலி புங்கிலி கதவ தொற’, விக்ரம் பிரபு – ‘சத்ரியன்’, ‘நெருப்புடா’, சிம்பு – ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’, அதர்வா - ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’, ஜி.வி.பிரகாஷ் - ‘புரூஸ்லி’.


அசத்திய மேலும் சிலர்!

> நகைச்சுவை, காதல், குறும்புதான் தன் பலம் என நினைத்த சிவகார்த்திகேயன், ‘வேலைக்காரன்’ மூலம் தன் பாதையை தீர்மானித்திருக்கிறார். நீளமான வசனங்களை அசாதாரணமான திருத்தத்துடன் உச்சரித்து, பொறுப்புள்ள இளைஞனை கண்முன் நிறுத்தினார்.

> ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோ வைபவைவிட நடிப்பில் கவனம் ஈர்த்தார் விவேக் பிரசன்னா. அண்ணனின் நண்பனைக் காதலிக்கத் தொடங்கி, அந்த அவஸ்தையை அழகாகக் கடத்தி பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்தில் பாஸ்மார்க் வாங்கினார் இந்துஜா.

> இறந்துபோன பிறகு ரவுடியின் ஆவி உடலுக்குள் புகுந்துகொள்வதால் அதற்கேற்ப உடல்மொழியை மாற்றி சிறப்பாக நடித்தார் ‘மரகத நாணயம்’ நிக்கி கல்ராணி.

> அறிமுகப் படத்தில் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பைத் தந்து, தோற்றாலும் ஜெயித்தாலும் ‘மீசைய முறுக்கு’ எனச் சொல்லி இளைஞர்களைச் சுண்டி இழுத்தார் ‘ஹிப் ஹாப்’ ஆதி.

> வாய் நிறையச் சிரித்தே கொடூரக் கொலை புரிந்து அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தினார் ‘குரங்கு பொம்மை’ இளங்கோ குமரவேல்.

> ‘நீ என்னை கொல்லப் போறதானே’ என்று வெகுளியும் வேதனையும் நிரம்ப உருக்கமான ஒரு கதையைச் சொல்லி உயிர் பலிக்கு சம்மதித்த ‘குரங்கு பொம்மை’ பாரதிராஜாவின் நடிப்பில் அப்படியொரு நம்பகம்.

> ‘அறம்’ படத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையைக் கண்டு பதைபதைக்கும் பெற்றோர் கதாபாத்திரத்தில் ராமச்சந்திரன் துரைராஜும் சுனுலட்சுமியும் மனதைக் கரைத்தனர்.

> இமிடேட் செய்வது, நகைச்சுவை என்ற பெயரில் அதீத உணர்வுகளை வெளிப்படுத்துவது என எந்த ரிப்பீட்டும் இல்லாமல் ‘பண்டிகை’ படத்தில் உயிரைப் பணயம் வைத்துச் சண்டையிடும் குத்துச்சண்டை வீரராக கிருஷ்ணா பொருத்தமாக நடித்தார்.

‘நெடுஞ்சாலை’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக வந்த ஷிவதா ‘அதே கண்கள்' படத்தில் இரு விதமான பரிமாணங்களில் அதகளம் செய்தார்.

> ‘கருப்பன்’ படத்தில் அன்பின் அடர்த்தியிலும் கணவருடனான அந்நியோன்யத்திலும் ரசிக்கவைத்தார் தான்யா ரவிச்சந்திரன்.

> ‘நானும் மதுரைக்காரன்தான்டா’ என்று சத்தம் போடுவது, பஸ் ஏறி அடுத்த ஊருக்குச் சென்று வில்லன்களைப் புரட்டி எடுப்பது என்று வழக்கமான பாணியில் இருந்து விலகி, பாத்திரம் உணர்ந்து நடித்த ‘துப்பறிவாளன்’ விஷால் திரும்பியும் விரும்பியும் பார்க்கவைத்தார்.

> ‘வேலைக்காரன்’ படத்தில் மகனின் கனவு நனவாக உறுதுணை புரியும் அப்பாவாக, ‘பாம்பு சட்டை’ படத்தில் சாக்கடை அள்ளும் தொழிலாளியாக, ‘மாநகரம்’ படத்தில் திசை தெரியாமல் திணறும் ஆட்டோ ஓட்டுநராக என யதார்த்த நடிப்பில் முத்திரை பதித்தார் சார்லி.

> ‘இறுதிச்சுற்று’ படத்துக்குப் பிறகு அசால்ட் நடிப்புக்குப் பெயர் போனவராகத் திகழும் மாதவன் ‘விக்ரம் வேதா’வில் நேர்த்தியான நடிப்பால் ஈர்த்தார்.

> தமிழ் சினிமாவின் சித்தரிப்பில் பாலியல் தொழிலாளி எப்படி இருப்பார் என்று இதுவரை ஆகிவந்திருக்கும் கட்டமைப்பைத் தனது நடிப்பின் மூலம் ‘சிவப்பு எனக்குப் பிடிக்கும்’ படத்தில் உடைத்தெறிந்தார் சாண்ட்ரா எமி.

இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்...

By அருணன் கபிலன் | Published on : 29th December 2017 01:26 AM | 


 உலகில் எல்லா உயிரினங்களும் போராடியே வாழ்கின்றன. அவற்றின் போராட்டங்களில் முதன்மையானது உணவுக்காகத்தான். கானக வாழ்க்கையில் மற்ற உயிர்கள் தங்களுக்கான உணவை இயல்பாகவே பெற்றுவிடுகின்றன. ஆனால் மனிதர்களுடனான சமூக வாழ்வில் அவை உழைத்தோ, தேடியோதான் பெற முடிகிறது. மற்ற விலங்குகளுக்கு உணவு எளிதாகக் கிடைத்து விடுவதைப்போல மனிதர்களுக்குக் கிடைப்பதில்லை. ஒருநாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் மிகக்குறைவே. 

நகர வாழ்வில் மனிதர்கள் படும்பாடு அதிகம். அதிலும் உணவுக்காக அவர்கள் கையேந்தி நிற்பது கொடுமையிலும் கொடுமை. பச்சிளம் குழந்தைகளைக் கையிலேந்தி நிற்கிற தாய்மார்களிலிருந்து தொடங்கி சிறுவர்கள், பெண் பிள்ளைகள், முதிய வயதுடைய ஆண்களும் பெண்களும் உணவுக்காக பிச்சைபெற நிற்கிறார்கள்.


இந்தியாவில் 6 இலட்சத்து 30 ஆயிரம் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள் என்றும், தற்போது 3 இலட்சத்து 72 ஆயிரமாக அவர்கள் குறைந்திருக்கிறார்கள் என்றும், பிச்சை எடுப்பவர்களில் பெரும்பாலானவர்கள், வீடுகளில் இருந்து விரட்டப்பட்டவர்கள் என்றும் ஓர் ஆய்வு முடிவு கூறுகிறது. இதில் 5,000 பேர் பட்டதாரிகள் என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.
பிச்சையெடுப்பதை ஒரு குற்றமாகக் கருதித் தண்டனை வழங்கும் நடைமுறைகளும் இந்தியாவில் உண்டு. அண்மையில் ஹைதராபாத் நகரத்தில் பிச்சையெடுப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த நகரத்தில் மட்டும் சுமார் 6,000 பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.


இல்லாதவர்கள் கேட்கிற நிலைக்குப் பிச்சை என்று பெயர்; அது தர்மக் கணக்கில் சேரும். ஆனாலும் பிச்சையை இது ஆதரிப்பதாகக் கொள்ளுதல் கூடாது. ஈ என இரப்பது இழிவானதுதான் என்றாலும் ஈய மாட்டேன் என்று மறுப்பது அதனினும் இழிநிலைதானே என்று கேட்கிறது சங்கப்பாடல்.


பிச்சைக்கு முதற்காரணம் பசி என்றாலும் அதனுடைய மறுகாரணம் சோம்பல்தான். ''சோம்பேறியாக இருப்பது குற்றந்தான். பிச்சைக்கு வருவோரில் பலர் மிகவும் கெட்ட சோம்பேறிகள் என்பதும் உண்மைதான். ஆனால் பிச்சையென்று கேட்பவனுக்கு ஒரு பிடி அரிசி போடுவதே மேன்மை. வைது துரத்துதல் கீழ்மை. இதில் சந்தேகமில்லை'' என்று பாரதியார் பிச்சையை எதிர்ப்பதைவிடவும், அதை ஒழிப்பதையே முன்மொழிகிறார்.
அவர் வேறு ஒரு பிச்சையைக் குறித்தும் பேசுகிறார். ''பிச்சைக்காரன் மட்டும்தானா சோம்பேறி? பணம் வைத்துக் கொண்டு வயிறு நிறையத் தின்று தின்று யாதொரு தொழிலும் செய்யாமல் தூங்குவோரை நாம் சீர்திருத்திவிட்டு அதன் பிறகு ஏழைச் சோம்பேறிகளைச் சீர்திருத்தப் போவது விசேஷம். பொறாமையும் தன் வயிற்றை நிரப்பிப் பிற வயிற்றைக் கவனியாதிருத்தலும், திருட்டும் கொள்ளையும் அதிகாரமுடையவர்களும் பணக்காரர்களும் அதிகமாகச் செய்கிறார்கள். ஏழைகள் செய்யும் அநியாயம் குறைவு. செல்வர் செய்யும் அநியாயம் அதிகம்'' என்று சினந்து சீறுகிறார் பாரதியார்.


அவர் உறுதியாகக் குறிப்பிடுவது, ''ஏழைகளே இல்லாமல் செய்வது உசிதம். ஒரு வயிற்று ஜீவனத்துக்கு வழியில்லாமல் யாருமே இருக்கலாகாது. அறிவுடையவர்கள் இப்போது பெரும்பாலும் அந்த அறிவை ஏழைகளை நசுக்குவதிலும் கொள்ளையிடுவதிலும் உபயோகப்படுத்துகிறார்கள். ஏழைகளுக்கு முன்னைக் காட்டிலும் அதிகத் துன்பம் ஏற்பட்டு இருக்கினவேயன்றி ஏழைகளின் கஷ்டம் குறையவில்லை'' என்று கவலை கொள்கிறார்.
பொருள் இருப்பவர்களைச் செல்வர்கள் என்றும் அது இல்லாதவரை ஏழைகள் என்றும் பிச்சைக்காரர்கள் என்றும் கருதும் இந்தச் சமூகத்தில் இல்லாதவர்கள் உருவாவதற்குக் காரணம் இருப்பவர்களே எனக் குறிப்பிடும் பாரதியார் அதற்குப் பழைய ஏற்பாட்டில் ஆதியாகமத்தில் இருந்து ஒரு கதையையும் சான்றாகக் காட்டுகிறார்.


ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிறந்த மூத்த குமாரனாகிய காயீன், தனது தம்பியாகிய ஆபேலை விரோதத்தின் காரணமாகக் கொன்றுவிட்டான். அப்போது கடவுள் காயீனை நோக்கி, 'உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே?' என்று கேட்டபோது காயீன் சொன்ன பதில் நம்மை இன்றைய சூழலில் நிறுத்திப் பார்க்கிறது. காயீன் கடவுளைப் பார்த்துத் திருப்பிக் கேட்டான்: 'அவனைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் என்ன அவனுக்குக் காவலாளியா?'


''உலகத்து செல்வர் ஸகல ஜனங்களுக்கும் பொதுவாகிய பூமியைத் தங்களுக்குள்ளே பங்கெடுத்துக் கொண்டு பெரும்பகுதியார் சோறின்றி மாளும்படி விடுகிறார்கள். ஏழைகளைக் காப்பாற்ற வேண்டாமா? என்று கேட்டால் அவர்களுடைய கர்மத்தினால் அவர்கள் ஏழ்மையாக இருக்கிறார்கள். அதற்கு நாங்களா பொறுப்பு? என்று கேட்கிறார்கள். நாங்களென்ன ஏழைகளுக்குக் காவலாளிகளா என்று கேட்கிறார்கள்'' என்று குறிப்பிடும் பாரதியார் மேற்சொன்ன காயீனின் பதிலோடு இதனை இணைத்துக் காட்டுகிறார்.


ஒரு மனிதனின் அதிக உடைமை மற்றொருவனிடமிருந்து திருடியது என்னும் பொருளில்தான் ப்ரூதோம் என்னும் பிரெஞ்சு ஞானி 'உடைமையாவது களவு' என்று குத்திக்காட்டுகிறார்.
தமிழ் இலக்கணம் பிறரிடம் ஒன்றைக் கேட்டுப் பெறுவதை ஈ, தா, கொடு என்னும் மூன்று சொற்களால் குறிப்பிடுகிறது. இந்த மூன்று சொற்களையும் நாம் பயன்படுத்துகிற நிலை வேறாக இருந்தாலும் அவை இன்றைய சமூகச் சூழலில் உள்ள நவீனப் பிச்சையைக் குறிப்பது வியப்பு.


ஈ என்று இரந்து கேட்டுப் பெறுவதும், தா என்று உரிமையோடு எடுத்துக் கொள்வதும், கொடு என்று அதிகாரத்தைக் காட்டிப் பறித்துக் கொள்வதும்- ஆகப் பிச்சையின் வேறு நிலைகள்தானே? ஊழலையும் இலஞ்சத்தையும்தான் அச்சொற்கள் மறைமுகமாகக் குறிப்பிடுகின்றனவோ என்ற ஐயமும் தோன்றுகிறது. இந்தப் பிச்சை, தர்மம் என்பதற்கு எதிரான அதர்மமாக இன்றைக்கு உருவெடுத்திருக்கிறது எனலாம்.


திருவள்ளுவர் கடவுளையே பழிக்கும் விதமாக 'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின்' என்று குறிப்பிடுவது எந்தப் பிச்சையை என்பதைச் சிந்திக்க வேண்டியுள்ளது. பசிக்காக இரப்பவர்களைப் பார்த்து அவர் சினந்திருக்க மாட்டார். பொருள்வெறி கொண்டு கடமையைச் செய்வதற்காகக் கையூட்டை எதிர்பார்க்கும் கயமையைக் கண்டு பொங்கித்தான் 'இப்படி இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின்' என்று குறிப்பிட்டு, படைத்தவனையே நொந்து, 'பரந்து கெடுக உலகியற்றியான்' என்று சபிக்கிறார் போலும். அந்தப் பிச்சை ஒழியுமா?
மெரினா, எலியட்ஸ் கடற்கரைகளில்... புத்தாண்டு கொண்டாட்டம்! நாளை இரவு போக்குவரத்து மாற்றம்

Updated : டிச 30, 2017 01:08 | Added : டிச 30, 2017 01:07

நாளை மறுநாள், 2018ம் ஆண்டு பிறக்கிறது. சென்னை, மெரினா மற்றும் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரைகளில், நாளை இரவே, புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட துவங்கிவிடும்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி, மெரினா மற்றும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை பகுதியில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 டிச.,31ம் தேதி இரவு, 9:00 மணியில் இருந்து, சாலை தடுப்புகள் அமைத்து, கடற்கரை உட்புற சாலையில் வாகனங்கள் நுழையாமல் தடை செய்யப்படும்

 மெரினா கடற்கரை உட்புறச்சாலையில் உள்ள வாகனங்கள், இரவு, 9:00 மணிக்கு மேல், கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் வெளியேற்றப்படும்

 காமராஜர் சாலையில், காந்தி சிலை - போர் நினைவு சின்னம் வரை, டிச.,31ம் தேதி, இரவு, 9:00 மணியில் இருந்து, 2:00 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது

 லாயிட்ஸ், பெசன்ட் சாலை, அயோத்தி நகர், சுங்குவார் தெரு, பாரதி சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை சந்திப்புகளில் தடுப்பு அமைத்து, வாகனங்கள், காமராஜர் சாலைக்குள் நுழையதாவாறு செய்யப்படும்

 ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை மற்றும் வாலாஜா சந்திப்பில் இருந்து போர் நினைவு சின்னம் நோக்கி செல்லும் வாகனங்கள், இரவு, 9:00 மணி முதல், கொடிமர சாலை வழியாக திருப்பிவிடப்படும்

 டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை, பாரதி சாலை, வாலாஜா சாலை, ஆடம்ஸ் சாலை, கொடிமரத்து சாலை, போர் நினைவு சின்னம் வழியாக செல்லும் வாகனங்கள், இரவு, 9:00 மணிக்கு மேல், காமராஜர் சாலையில் செல்ல அனுமதி கிடையாது

 அடையாறு காந்தி சாலை நோக்கி செல்லும் வாகனங்கள், கச்சேரி சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை சந்திப்பில் இருந்து, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மியூசிக் அகாடமி வழியாக அண்ணா சாலை செல்லலாம்

 காரணீஸ்வரர் சாலையில் செல்லும் வாகனங்கள், காமராஜர் சாலை நோக்கி செல்ல அனுமதிக்காமல், சாந்தோம் நெடுஞ் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படும்

 எந்த வாகனங்களும், லுாப் சாலை வழியாக காமராஜர் சாலை செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. சீனிவாசப்புரம் சந்திப்பு வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்படும்

 பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள, 6வது அவென்யுவில், டிச.,31, இரவு, 9:00 மணி முதல் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது

 பெசன்ட் நகர், 6வது அவென்யு இணைப்பு சாலைகளான, 5வது அவென்யூ, 3 மற்றும் 4வது பிரதான சாலை, 16வது குறுக்குத் தெரு பகுதிகள் தடுக்கப்படும்... காந்தி சாலை, 7வது அவென்யு சந்திப்பில் இருந்து, வேளாங் கண்ணி சர்ச் செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

வாகனங்களை எங்கே நிறுத்துவது?


ராணி மேரி கல்லுாரி வளாகம், சுவாமி சிவானந்தா சாலையில் ஒருபுறம், சேப்பாக்கம் ரயில்வே நிறுத்துமிடம், லாயிட்ஸ் சாலை, ரயில்வே நிறுத்துமிடம், டாக்டர் பெசன்ட் சாலையில் ஒரு புறம்... லாயிட்ஸ் சாலை, பெசன்ட் நகர், 4வது அவென்யு, பெசன்ட் நகர், 3 மற்றும், 4 வது பிரதான சாலை, பெசன்ட் நகர், 2 - 5 அவென்யு சாலைகளின் ஒருபுறம் வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம்.

- நமது நிருபர் -
எம்.ஜி.ஆர்., போல் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்: ரஜினி

சென்னை: ''பணம், புகழ், பதவியை விட, எம்.ஜி.ஆரை போல் நல்ல குணத்தோடு வாழ்ந்து, மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்,'' என, நடிகர் ரஜினி கூறியுள்ளார்.



சென்னையில், தன் ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, நேற்று நான்காவது நாளாக, கோவை, திருப்பூர், வேலுார் மாவட்ட ரசிகர்களை சந்தித்தார்.

ரசிகர்கள் மத்தியில், ரஜினி பேசியதாவது: இன்னும், இரண்டு நாளில் நல்ல விஷயம் நடக்க வேண்டும் என, ரசிகர்களாகிய உங்களுக்கு, நான் வாழ்த்து கூறுகிறேன். கோவை, எனக்கு மிகவும் முக்கியமான ஊர்.

என் குரு, சச்சிதானந்தர், மேட்டுப்பாளையத்தில் பிறந்தவர்.அவர் தான், எனக்கு மந்திர உபதேசம் செய்தார்.

அவர் சொல்லி தான், பாபா படம் எடுத்தேன். சச்சிதானந்தரின் குரு, அவரை அமெரிக்காவுக்கு அனுப்பி, ஆன்மிகத்தை பரப்பு என்றார்.இன்று, பல நாடுகளில் சச்சிதானந்தரின் ஆசிரமங்கள், ஆன்மிகத்தையும், யோகாவையும் கற்றுத் தருகின்றன. சச்சிதானந்தர் இறக்கும் போது, நான் தான் கடைசியாக, அவரை பார்த்தேன். அந்த பாக்கியம், எனக்கு கிடைத்த பெருமை. அதேபோல், தயானந்த சரஸ்வதியும், எனக்கு ஒருகுரு.

கோவை விமான நிலையம் வரும்போது, ஒரு சம்பவம், அப்போது, அண்ணாமலை படம் வெளியான நேரம்; குடும்ப நண்பர் ஒருவரின் திருமணத்திற்காக, நான் விமானத்தில் கோவை சென்றிருந்தேன்.உடன் சிவாஜியும் இருந்தார். விமான நிலையம் சென்றதும், ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து, 'வாழ்க' கோஷமிட்டனர். சிவாஜி உடன் இருக்கும்போது, எனக்கு சங்கடமாக இருந்தது.

ஆனால், சிவாஜி, என்னை தட்டிக் கொடுத்து, 'எங்கடா நழுவுற... வா முன்னாடி வா...

இது, .உன் காலம்; நன்றாக உழை; நல்ல படங்களை கொடு... என் காலம் போய் விட்டது' என்றார்.என் காரை முதலில் வரவழைத்து, என்னை அனுப்பி வைத்தார். நடிப்பை தாண்டி, நல்ல குணங்களை கொண்டவர், சிவாஜி.பணம், புகழால் மதிப்பு தான் வரும்; மரியாதை வராது. நல்ல குணாதிசயங்களை கொண்டதால் தான், எம்ஜிஆர்., இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்

நாம் அனைவரும், நல்ல குணாதிசயங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சில ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கோவை விமானநிலையம் சென்றபோது, என்னை சிலர் தடுத்து, 'இப்போது வெளியே வர வேண்டாம்; ஒரு நடிகர் வந்திருக்கிறார்.'அவரை பார்க்க, ஆயிரக்கணக் கான ரசிகர்கள் கூடியுள்ளனர். அவர் போன பின், நீங்கள் வரலாம்' என்றனர்.

அப்போது தான் சிவாஜி கூறியது, ஞாபகம் வந்தது. அந்தந்த காலத்தில் அனைத்தும் மாறும். மாற்றம் வருவதை, யாராலும் தடுக்க முடியாது. சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் மாற்றத்தை கொண்டு வரும். காலம் தான் அனைத்தையும் தீர்மானிக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, ரஜினியிடம், 'தி.மு.க., உள்ளிட்ட திராவிட கட்சிகளை எதிர்த்து போட்டி இடுவீர்களா?' என, பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். பதில் கூற, ரஜினி மறுத்து விட்டார்.
ராஜபாளையம் வணிகவரி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை : துப்புரவு ஊழியரிடம் ரூ. 25 ஆயிரம் பறிமுதல்

Added : டிச 30, 2017 05:26

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 


துப்புரவு ஊழியரிடமிருந்து ரூ. 25 ஆயிரம் பணமும், அலுவலகத்திலிருந்து முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராஜபாளையம் டி.பி. மில்ஸ் ரோட்டில் வணிக வரித்துறை அலுவலகம் உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் முதல் 1 கோடி வரை வரவு செலவு செய்யும் சிறு, குறு நிறுவனங்களின் கணக்குகள் கீழ் தளத்தில் இயங்கும் அலுவலகத்திலும், ரூ. ஒரு கோடிக்கு மேல் வரவு செலவு செய்யும் பெரு நிறுவனங்களின் கணக்குகள் மாடியில் உள்ள அலுவலகத்திலும் தாக்கல் செய்யப் படுவது வழக்கம்.


வணிக நிறுவனங்கள், ஆண்டுக்கணக்கை டிசம்பர் 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை. செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தால், தாமத பதிவு என்ற பெயரில் ரூ. 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதனால் நேற்று பல்வேறு நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கணக்குகளை சமர்ப்பிக்க வந்துள்ளனர். இதை பயன்படுத்திக் கொண்ட வரித்துறை அலுவலர்கள், பதிவு செய்து கொடுக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.


துப்புரவு ஊழியரிடம் ரூ.25 ஆயிரம் பறிமுதல்


இது குறித்து விருதுநகர் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் டி.எஸ்.பி சீனிவாச பெருமாள் தலைமையில்அதிகாரிகள் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட துணை ஆய்வு குழுவினர் வணிக வரித்துறை அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில் துப்புரவு பணியாளர் செந்தில்நாதன் என்பவரிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 25 ஆயிரம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாகவும், மேல் விசாரணை நடைபெறும் எனவும் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த திடீர் சோதனையை அடுத்து கணக்குகள் பதிவு செய்யும் பணிகள் நிறுத்தப் பட்டன. கணக்குகளை தாக்கல் செய்ய வந்தவர்களிடம், செவ்வாய்க்கிழமையும் அபராதமின்றி தாக்கல் செய்யலாம் எனக்கூறி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர்.
திருமலையில் கூட்ட நெரிசல் : பக்தர்கள் 10 பேர் காயம்

Added : டிச 30, 2017 04:24

திருப்பதி: திருமலையில், தரிசன வரிசையில் ஏற்பட்ட கூட்ட நெரிச்சலில் சிக்கி, பக்தர்கள், 10 பேர் காயமடைந்தனர். ஆந்திர மாநிலம், திருமலையில், வைகுண்ட ஏகாதசி அன்று ஏழுமலையானை காண, இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் அனைவரும், புதன் நள்ளிரவு முதல், காத்திருப்பு அறைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்குள், வைகுண்டம், 1 மற்றும், 2ல் உள்ள, 64 காத்திருப்பு அறைகளும் நிறைந்து, நாராயணகிரி தோட்டத்தில், தரிசன வரிசையில் காத்திருக்க துவங்கினர். பக்தர்களின் வசதிக்காக, திருமலையை சுற்றி, 6 கி.மீ தொலைவிற்கு, வரிசை ஏற்படுத்தப்பட்டது.


பக்தர்கள், 32 மணிநேரத்திற்கு பின், நேற்று காலை, 8:00 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.


தரிசன வரிசை நகர துவங்கிய பின், பக்தர்கள் முண்டியத்துச் செல்ல முயன்றதால், வெளிவட்ட சுற்றுச் சாலையில் ஏற்படுத்தப்பட்ட தரிசன வரிசையில், நேற்று காலை, 11:30 மணியளவில், கூட்ட நெரிசல் காரணமாக ஏற்பட்ட தள்ளுமுள்ளில் சிக்கி, 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


அவர்கள் அனைவரும், சிகிச்சைக்காக, அருகில் உள்ள, அஸ்வினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பொங்கல் சிறப்பு பஸ்கள் அடுத்த வாரம் அறிவிப்பு

Added : டிச 30, 2017 04:46

சென்னை: 'பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் சிறப்பு பஸ்கள் குறித்து, அடுத்த வாரம் அறிவிக்கப்படும்' என, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகைக்கு, இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்கு செல்ல, சிறப்பு பஸ், ரயில்களில் முன்பதிவு செய்ய, பயணியர் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகங்களில் இருந்து இயக்கப்படும், சிறப்பு பஸ்களுக்கான அறிவிப்பு, அடுத்த வாரத்தில் வெளியிடப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினர்.


இது குறித்து அவர்கள் கூறியதாவது:


பொங்கல் பண்டிகை, ஜன., 14ல் கொண்டாடப்படுகிறது.இதற்காக, வரும், 11 முதல், 14ம் தேதி வரை, மாவட்ட தலைநகரங்களில் இருந்து வெளியூர் செல்லவும், 16 முதல், 19ம் தேதி வரை, மாவட்ட தலைநகரங்களுக்கும், சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து, வழக்கமாக இயக்கப்படும், 2,275 பஸ்களுடன், மூன்று நாட்களுக்கும் சேர்த்து கூடுதலாக, 5,000 பஸ்கள் இயக்கப்படும்.


ஜன., 8 முதல், சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்படும். சென்னையில், பண்டிகை கால போக்குவரத்து நெரிசலை குறைக்க, அண்ணா நகர் மேற்கு, பூந்தமல்லி, கோயம்பேடு, சைதாப்பேட்டை, தாம்பரம் சானடோரியம் ஆகிய இடங்களில், சிறப்பு பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை, ஜன., 4 அல்லது 5ல், போக்குவரத்து துறை அமைச்சர் வெளியிடுவார்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


'லீவு'க்கு தடை


பண்டிகை நாட்களில், பஸ் சேவை பாதிக்காமல் இருக்க, ஓட்டுனர், நடத்துனர்கள், ஜன., 10 முதல், 17 வரை, விடுப்பு எடுக்காமல் பணிக்கு வர வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

NEWS TODAY 2.5.2024