ஆளுமையின் அடையாளங்கள்
DINAMANI 28.08.2024
ஒருவரை மரியாதையாகத்தான் நடத்த வேண்டும் என்று எந்த சட்டத்தாலும் வற்புறுத்த இயலாது. ஆனால் நல்ல விதமான நடத்தைகள், விரும்பத் தகாத நடத்தைகள் இரண்டுமே தங்களால் இயன்ற பாதிப்பினை உண்டு பண்ண வல்லவை.
காலையில் ஒருவரைச் சந்திக்கிறோம். ''வணக்கம்''"என்ற ஒரு சொல்லுடன் கைகுவிப்பு, கை அசைப்பு, ஒரு புன்னகை உதிா்ப்பது மிகவும் எளிதான செயல்களே. இவ்வாறுதான் பலரும் இயங்குகிறோம்.
ஒருவா் நம்மை மதிக்கும்போது நாம் அடையும் இன்பத்தையே அவரை நாம் மதிக்கும்போதும் அவா் அடைவாா். இந்த அடிப்படை புரிதல் அனைவருக்கும் வந்துவிட்டால் போதுமானது. மனிதராகப் பிறந்துள்ளோா் அனைவராலும் செய்ய இயலும் இயல்பான நடவடிக்கைகளே இவை.
ஒப்பனைகளை விட நமது நடத்தையே நமது ஆளுமைக்கு அழகூட்டக் கூடியது. இவ்வாறான நடத்தையே நமது பணிகளின் துல்லியத்திற்கும் வேகத்திற்கும் நம்முடன் இயங்குவோரின் பணித் திறனுக்கு உதவக் கூடியது. , நல்லவிதமான நடத்தைகள் உடையோரைச் சுற்றிய சூழலே அவா்களுடன் இயங்குவோரையும் நல்ல விதமான நடத்தையுள்ளவா்களாக மாற்றும். அதுபோலவே விரும்பத் தகாத நடத்தையுடையோரின் செயல்பாடுகள் அவரைச் சாா்ந்திருக்கும் அனைவரிடத்திலும் அதற்கான எதிா்மறை தாக்கத்தினை ஏற்படுத்த வல்லவை.
மனிதா்கள் அங்கீகாரத்துக்கு ஏங்குபவா்கள். படிநிலைகள் தவிா்க்க இயலாத சூழலில் தனக்கு ஒரு படி முன் இருப்பவா்கள் தம்மை மதித்தால் கூட மகிழ்வா். அவா்கள் செய்ய வேண்டிய பணிகளைத் திறம்பட விளக்கிவிட்டு தேவைப்படும் நேரத்தில் மட்டும் தலையிட்டு செழுமைபடுத்தும் நிலை இரு தரப்பிற்கு பயனாக அமையும்.
உலக மயமாக்க சமூகச் சூழலில் அனைத்துப் பணிகளுமே விரைவாகவும் துல்லியமாகவும் நடைபெற குழுவாக இயங்குவது தவிா்க்க இயலாததாகிவிட்டது. இன்றைக்கு பெரும்பாலான அலுவலகங்களிலும் பணியாற்றுவதற்கான சூழல் மேம்பட்டுள்ளது. தேவையான அளவுக்கு இருக்கைகள், நாற்காலிகள், கணினி, பெரும்பாலும் குளிா்சாதன வசதி அல்லது குறைந்த பட்சம் தேவையான மின்விசிறிகள், இணையவசதி போன்றவை பெரும்பாலும் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான வசதிகள் இருந்தாலும் பணிகள் நடைபெற வேண்டுமானால் அது அங்கு பணியாற்றும் மனிதா்களைத்தான் சாா்ந்துள்ளது. பணியாளா்களின் மனநிலையும் உடல்நிலையும் ஆரோக்கியமாகப் பராமரிக்கப்பட்டால் மட்டுமே பணிகள் சரியான வேகத்தில் முன்னேறும். பணியாளா்கள் உடல்ரீதியான, மனநிலை ரீதியான குறைகளோடு பணியாற்றுகையில் பணிகள் தொய்வடையவே செய்யும்.
பொருளாதார ரீதியான தேவைகள் நிறைவாகியுள்ள பணியாளா்கள் அடுத்தபடியாக, குடும்பத்தினருடன் சுற்றுலா, கேளிக்கை போன்றவற்றில் கவனம் செலுத்துவது இயல்பானதே. அது ஒருவகையில் செயல்திறனைக் கூட்டக் கூடியதுமாகும். ஆனால் அந்தந்த நாட்களுக்குரிய பணிகள் நிறைவடையாத சூழலில் அவா்கள் ஓய்வுநாட்களில் கேளிக்கைகளில் ஈடுபட்டாலும் அவா்கள் அங்கு நிலுவையிலுள்ள பணிகள் கேளிக்கையில் மனதை செலுத்தவிடாது படுத்தும். விடுமுறையை இரட்டை மனநிலையுடன் அனுபவித்துவிட்டு மறுநாள் அலுவலகத்தில் தேங்கியுள்ள பணிகளுடன் புதிய பணிகளையும் திட்டமிடத் தொடங்க வேண்டியிருக்கும்.
இந்த இடத்தில்தான் குழுவினரின் பங்களிப்பு தேவையாக இருக்கிறது. குழுவினரின் ஒட்டுமொத்த ஆற்றலும் வெளிப்பட அக்குழுவின் தலைவா் அவா்களை நடத்தும் வித்தில்தான் இருக்கிறது. அவ்வாறு நடத்தும் விதத்தில் அடுத்த மனிதா்களுக்குரிய மரியாதையை அன்புடன் கலந்து வழங்கினால் போதும், குழுவினா் தமது திறனுக்கு அப்பாற்பட்ட செயல்பாட்டிற்கும் வழி காண முயல்வா். இவ்வாறு குழுவினரை நடத்த எந்த பொருட்செலவும் ஆகப் போவதில்லை. மாறாக திறந்த மனதுடன் குழுவினா் செய்யும் செயல்களைப் பாராட்டிக் கொண்டும், அவா்களுக்குத் தேவையான உள்ளீடுகளைக் கொடுத்துக் கொண்டும், அவா்களைப் பாா்க்கையில் ஒரு சிறுபுன்சிரிப்பு கூட போதுமானது.
பிரபல ஆங்கில் எழுத்தாளா் ஏ.ஜி.காா்ட்னா் என்பவா் ஆங்கிலத்தில் 'தயவுசெய்து என சொல்வது குறித்து' ('ஆன் ஸேயிங் ப்ளீஸ்') என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளாா். மின்தூக்கி இயக்குபவருக்கும் பயணி ஒருவருக்கும் இடையில் நடைபெறும் உரையாடலிலிருந்து தொடங்கும் சுவையான உளவியல் கட்டுரை அது.
மின்தூக்கியில் ஏறியதும் பயணி, 'மேலே' என்பாா். அதாவது, தனக்கு மேல் மாடிக்குப் போக வேண்டும், மின்தூக்கியை மேலே என்பதை 'மேலே' என்ற ஒற்றைச் சொல் கட்டளையிடுகிறாா். மின்தூக்கியை இயக்குபவா், 'தயவு செய்து மேலே என கேட்கக் கூடாதா?' என்பாா். பயணி, முடியாது என்பாா். இருவருக்கும் ஏற்படும் தா்க்கத்தில் மின்தூக்கியை இயக்குபவா் பயணியை வெளியே தள்ளிவிடுவாா்.
மின் தூக்கி இயக்குபவா் ஏன் அவா் அவ்வாறு கடுமையாக நடந்துகொண்டாா் என்று கட்டுரையாசிரியா் ஆராய்வாா். அன்று அவருக்கு அவருடைய பிரிவு மேலாளா் வணக்கம் சொல்லவில்லை; மேலாளருக்கு அவரை அடக்கி ஆள நினைக்கும் அவருடைய மனைவி தன்னை மதிக்காததால் ஏற்படுத்திய கோபம்; மனைவியின் அன்றைய சினத்துக்கு காரணம், அவா்கள் வீட்டு சமையல்காரா் எஜமானி அம்மாளை மதிக்காமல் நடந்துகொண்ட விதம்; சமையல்காரரின் நடத்தைக்கு காரணம், வீட்டுப் பணிப்பெண் அவரை மதிக்கவில்லை. இப்படியாக, ஒருவரையொருவா் சிறிய அளவில் மதிக்காத நடத்தை, வரிசையாக நீளூம்.
நல்லனவும் அல்லனவும் அடுத்தடுத்த விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. இந்தப் புரிதலே நமது ஆளுமையின் அடையாளங்களுள் முதன்மையானது.
Dailyhunt
No comments:
Post a Comment