Thursday, February 12, 2026

நிறுத்தம் தேடும் நகரம் !


நிறுத்தம் தேடும் நகரம் !

30 அடி சாலைகளிலும், முட்டுச் சந்துகளிலும் கார்களை நிறுத்திவிடுவதால், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள்கூட உள்ளே நுழைய முடியாத அவலநிலை ஏற்படுகிறது.


 
 


Updated on:
12 பிப்ரவரி 2026, 5:30 am


தற்போது ஒரு கார் வாங்குவது என்பது பலருக்கும் எளிய காரியமாகிவிட்டது. ஆனால், வாங்கிய காரை பாதுகாப்பாக நிறுத்துவதற்கு இடம் தேடுவதுதான் இமாலயப் பிரயத்தனமாக உள்ளது. நகரமயமாக்கலின் வேகத்தில் சாலைகள் சுருங்கி வரும் வேளையில், வாகனங்களின் எண்ணிக்கை மட்டும் பெருகிக்கொண்டே போவது ஒரு முரண்பாடான சூழலை உருவாக்கியுள்ளது.

இன்று பெரும்பாலான தெருக்களின் இரு பக்கங்களிலும் கார்கள் அணிவகுத்து நிற்பதை நாம் காண்கிறோம். இது மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. குறிப்பாக 30 அடி சாலைகளிலும், முட்டுச் சந்துகளிலும் கார்களை நிறுத்திவிடுவதால், அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள்கூட உள்ளே நுழைய முடியாத அவலநிலை ஏற்படுகிறது. தீயணைப்பு வாகனங்கள் போன்ற பெரிய ஊர்திகள் ஒரு நெருக்கடி காலத்தில் உள்ளே நுழைய முற்படும்போது, இந்தச் சாலை ஆக்கிரமிப்புகள் உயிரிழப்புகளுக்கு காரணமாகிவிடுகின்றன. நகரத்தின் ஒவ்வோர் அங்குலமும் விலையுயர்ந்ததாக மாறிவிட்ட சூழலில், சாலையைத் தனது சொந்தச் சொத்தாகக் கருதும் மனப்பான்மை மக்களிடையே வேரூன்றி வருவது கவலைக்குரியது.

அந்தந்தத் தெருவில் குடியிருப்பவர்கள் தங்கள் வீட்டின் முன் நிறுத்துவதில் ஒரு நியாயம் இருக்கலாம். ஆனால், வேறு எங்கோ குடியிருப்பவர்களும், வாடகை வாகனங்கள் ஓட்டுபவர்களும் தங்களுக்கு வசதியான ஒரு தெருவை வம்படியாகப் பிடித்துக் கொள்கிறார்கள். சிலர் மாதக்கணக்கில் தங்கள் வாகனங்களை அங்கேயே தூசி படிய விட்டுச் செல்கிறார்கள்.

20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வாகன நிறுத்தத்துக்கான போதிய வசதிகள் இல்லாமல் கட்டப்பட்டன. அப்போது, கார் என்பது ஆடம்பரப் பொருளாக இருந்ததே அதற்குக் காரணம். ஆனால், இன்று கார் என்பது அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. அந்தப் பழைய குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வேறு வழியின்றி சாலைகளையும் பொதுத் தெருக்களையும் நாடுகிறார்கள்.

"இங்கே வாகனம் நிறுத்த அனுமதி இல்லை' என்று வீட்டு உரிமையாளர்கள் பலகை வைப்பது சட்டப்படி செல்லாது என்ற விதியைப் பயன்படுத்தி, மற்றவர்களின் வாசலிலேயே வாகனத்தை நிறுத்திவிட்டுச் செல்பவர்கள் ஏராளம். இதனால், வீட்டின் உரிமையாளர் தன் சொந்த வாகனத்தையே வெளியே எடுக்க முடியாமல் தவிக்கிறார்.

வாகன நிறுத்தத்தை பிரச்னையை மையமாக வைத்து வெளிவந்த திரைப்படம்கூட இங்குள்ள தீவிரத்தை உணர்த்துகிறது. மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண விஷயமாக தோன்றலாம். ஆனால், தினமும் இதே பிரச்னையைச் சந்திக்கும் ஒருவருக்கு இது பெரும் கோபத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

உணவகங்கள், மருந்தகங்கள் மற்றும் சிறு கடைகள் அமைந்துள்ள சாலைகளில் போதிய நிறுத்த வசதி இல்லாததால், வாடிக்கையாளர்கள் சாலையிலேயே வாகனங்களை நிறுத்துகின்றனர். குறிப்பாக, உணவகங்களில் சாப்பிடுவதற்கு அதிக நேரம் எடுக்கும் என்பதால், அங்கு வரும் வாகனங்கள் நீண்ட நேரம் சாலையை அடைத்துக் கொள்கின்றன. 30 அடி

அகலச் சாலைகளில் உணவகங்களைத் திறக்க அனுமதிக்கும் போது, வாகன நிறுத்த வசதி இருப்பதை அரசு கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்.

மேலைநாடுகளில் வாகன நிறுத்தம் குறித்த விதிகள் எவ்வளவு கடுமையானவை என்பதை லண்டன் சென்றிருந்தபோது நேரில் உணர முடிந்தது. ஒருமுறை அங்குள்ள ஓர் உணவகத்தில் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். கார் நிறுத்துமிடத்தில் இரண்டு மணி நேரத்துக்கு மட்டும் கட்டணம் செலுத்திவிட்டு வந்திருந்தோம். பேச்சு சுவாரஸ்யத்திலும், உணவின் ருசியிலும் நேரம் போனதே தெரியவில்லை. திடீரென கடிகாரத்தைப் பார்த்த என் மகன் பதறிப்போனான். இன்னும் சில நிமிஷங்களில் நாங்கள் ஒதுக்கிய நேரம் முடிவடைய இருந்தது. அடுத்த நிமிஷம், பாதி சாப்பாட்டிலேயே அவன் எழுந்துவிட்டான்.

கார் நிறுத்தியிருந்த இடம் அரை கி.மீ. தொலைவில் இருந்தது. நடுங்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச் சென்று, பார்க்கிங் இயந்திரத்தில் மேலும் ஒரு மணி நேரத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு மூச்சிரைக்கத் திரும்பி வந்தான். ஒரு நிமிஷம் தாமதமானாலும் அபராதம் மிகப் பெரிய தொகையாக இருக்கும், சட்டத்தை மீறுவது அங்கு சாத்தியமே இல்லை. நம் ஊரில் இது போன்ற சூழலில் "யார் பார்க்கப் போகிறார்கள்?' என்று அலட்சியமாக இருக்கும் மனநிலைதான் விபத்துகளுக்கும் நெரிசலுக்கும் வித்திடுகிறது.

லண்டனில் ஒரு வாகன ஓட்டி ஆண்டுக்கு சராசரியாக 67 மணி நேரத்தை வாகன நிறுத்துமிடத்தை தேடுவதற்கே செலவிடுகிறார். ஒரு வணிக வளாகத்துக்கோ அல்லது கேளிக்கை விடுதிக்கோ செல்லும் முன்பே, அங்கு வாகன நிறுத்தும் வசதி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னரே மக்கள் கிளம்புகிறார்கள். அங்கு 'யெல்லோ லைன்' விதிகள் உண்டு. ஒற்றை மஞ்சள் கோடு இடப்பட்ட சாலைகளில், குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த அனுமதி உண்டு; அந்த நேரங்கள் குறித்த விவரங்கள் அருகில் உள்ள அறிவிப்புப் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இரட்டை மஞ்சள் கோடுகள் உள்ள பகுதிகளில் எந்த நேரத்திலும் வாகனங்களை நிறுத்தவோ அல்லது நிறுத்திவைக்கவோ அனுமதி இல்லை. மேலும், நடைபாதையிலிருந்து சாலைக்கு இறங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சரிவான பகுதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டவை. இத்தகைய சரிவான பகுதிகளில் வாகனங்களை நிறுத்துவது கடுமையான விதிமீறலாகக் கருதப்பட்டு, அதற்குக் கடும் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

நமது ஊரில் அபராதம் விதிக்கப்பட்டால் அதைச் செலுத்தாமல் தவிர்க்கவே பலரும் முயல்கிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் 14 நாள்களுக்குள் அபராதத்தைச் செலுத்தினால் 50% தள்ளுபடி போன்ற நடைமுறைகள் மூலம் மக்களைச் சட்டத்துக்கு உட்படுத்த தூண்டுகிறார்கள். இதன் மூலம் சட்டத்தின் மீதான பயமும் மரியாதையும் ஒருசேர வளர்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சொந்தமாக வாகன நிறுத்துமிடம் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்குவதற்கான உரிமம் வழங்கப்படும் என்ற சட்டத்தைக் கொண்டுவருவது குறித்து அரசு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். இது தொடக்கத்தில் சற்றே கடினமான நடைமுறையாகத் தோன்றினாலும், வருங்காலத் தலைமுறை நெரிசலற்ற சாலைகளில் பயணிப்பதை உறுதி செய்ய இத்தகைய கடுமையான சட்டங்கள் மட்டுமே சரியான தீர்வாக அமையும்.

மேலும், இன்றைய நெருக்கடியைத் தவிர்க்க, நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியால், கைப்பேசி செயலிகள் வழியாக நகரில் எந்தெந்த இடங்களில் வாகன நிறுத்தங்கள் காலியாக உள்ளன என்பதை மக்கள் முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வசதியை அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

சுற்றுலாத் தலங்களிலும், கோயில்களிலும் வாகனங்களை நிறுத்துவது பெரும் சவாலாக உள்ளது. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோயிலுக்கு மிக அருகே இறங்க விரும்புகிறார்கள். ஆனால், அங்கிருக்கும் கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் அது முடிவதில்லை. எனவே, பெரிய கோயில்களின் நான்கு வாயில்களிலும் பல்லடுக்கு வாகன நிறுத்தங்களை உருவாக்கி, அங்கிருந்து பேட்டரி கார்கள் மூலம் மக்களை அழைத்துச் செல்லும் முறையை அமல்படுத்தலாம்.

முன்பெல்லாம் உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றே அத்தியாவசியத் தேவைகளாகக் கருதப்பட்டன. இன்று நம் வாகனத்துக்கான இடமும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. சிலர் தங்கள் வீட்டின் காலி மனைகளை வாகன நிறுத்தத்துக்காக வாடகைக்கு விடுகின்றனர். இது ஒரு பக்கம் தீர்வாக இருந்தாலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இது சாத்தியமில்லை. குறிப்பாக, நடுத்தர வர்க்கத்தினர் ஏற்கெனவே காருக்கான தவணைத் தொகையை செலுத்திக் கொண்டிருக்கும் நிலையில், வாகன நிறுத்துமிடத்துக்கும் தனியாக பணம் செலவழிப்பது பெரிய சுமையாகத் தெரிகிறது.

அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களைக் கொடுப்பதைவிட, ஐந்து தெருவுக்கு பொது பல்லடுக்கு வாகன நிறுத்தங்களை அமைத்துத் தருவோம் என்று உறுதியளிக்க வேண்டும். தெருக்கள் என்பது மக்கள் நடப்பதற்கும், போக்குவரத்துக்கும் மட்டுமே அன்றி கார்களை நிறுத்தி வைப்பதற்கான நிரந்தர இடங்கள் அல்ல. அரசு முறையான உள்கட்டமைப்பைச் செய்து கொடுத்து, மக்களும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் தராத வகையில் செயல்பட்டால் மட்டுமே நம் நகரங்கள் நெரிசலில் இருந்து தப்பிக்கும்.

கார் வாங்கும் போது காட்டும் ஆர்வத்தை, அதைச் சரியாகப் பராமரிப்பதிலும் நிறுத்துவதிலும் நாம் காட்ட வேண்டும். நம்முடைய வசதி மற்றவர்களின் உரிமைகளைப் பறிப்பதாக இருக்கக் கூடாது. ஏனெனில், நாம் வாங்கும் கார் நம் செல்வாக்கின் அடையாளம் என்றால், அதை அடுத்தவருக்கு இடையூறின்றி நிறுத்துவதே நம் நாகரிகத்தின் அடையாளம்!

கட்டுரையாளர்:

No comments:

Post a Comment

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection

Married Persons Cannot Enter Into Live-In Relationship Without Obtaining Divorce: Allahabad HC Refuses Protection  Sparsh Upadhyay 28 Mar 20...