Monday, February 23, 2026

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!



இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

மாணவர்கள் தம் கல்வித் திறனைச் சோதித்துக் கொள்ளும் தேர்வைப்போல மக்கள் தங்களைத் தாங்களே தேர்ந்து கொள்ளும் முறையே தேர்தல்.





Updated on:
23 பிப்ரவரி 2026, 3:19 am


ஜனநாயக நட்டின் மிகப்பெரிய திருவிழா தேர்தல்தான். நாடே சேர்ந்து கொண்டாடிக் களிக்கும் பெருவிழா. பாமரர்களுக்கும் தங்கள் உரிமையை உணர்த்துவதற்குக் கிடைத்த நல்வாய்ப்பு தேர்தல்.

மன்னராட்சிக் கொடுமைகளிலிருந்து மக்கள் தங்களைத் தாங்களே காத்து ஆண்டுகொள்ளக் கண்டடைந்த அனைவருக்குமான பெருநுழைவாயில் தேர்தல்.

தேர்ச்சி இல்லாத ஆட்சி தீங்கிழைக்கும். இதற்கு சாட்சி பாண்டிய நெடுஞ்செழியனின் ஆட்சி. அதனால்தான் கோவலன் கொலைக்களப்பட நேர்ந்தது. எனவே வெகுண்ட கண்ணகி, தேரா மன்னா' என்று இகழ்ந்து சீறி மதுரையை எரித்தாள்.

மாணவர்கள் தம் கல்வித் திறனைச் சோதித்துக் கொள்ளும் தேர்வைப்போல மக்கள் தங்களைத் தாங்களே தேர்ந்து கொள்ளும் முறையே தேர்தல்.

ஆட்சி செய்யப்போகும் அமைச்சர்கள் யாவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்களுள் ஒருவரே. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆட்சி சிறப்புக்குரியதாக இருந்தால் அப்பெருமையாவும் மக்களையே சேர்வதைப்போல், ஆட்சி குற்றமுடையதாயின் அப்பழியையும் மக்கள்தான் ஏற்க வேண்டும். ஏனென்றால், அந்த ஆட்சியைத் தேர்ந்தெடுத்தவர்கள் மக்களே; தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் மக்களுள் ஒருவரே.

அரச மரபுகளின்படியும்கூட வாரிசு என்பதற்காக ஒருவரை அரசராக அத்தனை எளிதாய்ப் பட்டம் சூட்டிவிட முடியாது. அரசவைப் பிரதிநிதிகளின் ஒருமனதான ஆதரவை மட்டுமின்றி, குடிமக்களின் மனதைக் கொள்ளை கொண்ட கோமகனாகவும் அறிவுடையோனாகவும் இளவரசர் திகழ வேண்டும்.

ஒருகுடியில் பிறந்த பலருள்ளும், 'மூத்தவனை முதனிலைப்படுத்தாமல் அவர்களுள் அறிவுடையோன் எவனோ அவன் வழியிலேயே அரசு சிறப்படையும் என்று மன்னனைத் தேரும் முறை குறித்துச் சங்க இலக்கியம் காட்டுகிறது. இது அக்காலத்துத் தேர்தல் உத்தி.

"வாழ்வியல் புரியாது. சாதாரண மனிதனுக்குள்ள உலகறிவும் தனக்கில்லை என்ற மன அழுத்தத்தினாலேயே மனைவி, குழந்தையையும், அரண்மனை சுகபோக வாழ்வினையும், காத்திருந்த மணிமகுடத்தையும் ஒருசேரத் துறந்து சித்தார்த்தர் நள்ளிரவில் காட்டுக்குப் போக நேர்ந்தது.

நான்கு பிள்ளைகளில் முதல்வனான இராமனுக்கு முடிசூட்டத் தசரதர் நேரடியாகவே அறிவிப்புச் செய்தார் என்பார் வால்மீகி. ஆனால், தமிழ் மரபில் கம்பர் அதை ஜனநாயகப்படுத்துகிறார். அமைச்சர் நிறைந்த அவையிலே அவர்களின் ஒருமனதான முடிவோடுதான் இராமனுக்குப் பட்டம் தீர்மானிக்கப்படுகிறது. இது மக்களாட்சியின் மாண்பு. இந்தத் தேர்தல் உத்தியை மயில்முறை குலத்துரிமை' என்று நுட்பப்படுத்துவது ஆய்வுக்குரியது.

"எல்லாரும் இந்நாட்டின் மன்னர்கள் என்பதுதான் ஜனநாயகத்தின் வெற்றி. அந்த மன்னர்களுக்குத் தொண்டாற்ற வேண்டித்தான் பிரதிநிதிகளாகத் தங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி மன்னர்களுள் ஒருவரான வேட்பாளர் தனக்கு வாக்களிக்கும்படி வேண்டுகிறார்.

அந்நியப் பிடியில் அடிமைப்பட்டிருந்த அவலநிலை மாறி விடுதலைக்குப் பின்னர் ஒரு ஜனநாயக நாடு இத்தனை உயர்ந்திருக்கிறது என்றால், அது மக்களாட்சியின் வெற்றியேயாகும். வளரும் நாடுகளில் பிரச்னைகளும் சிக்கல்களும் பலவீனங்களும் மலிந்திருப்பது இயல்பு. கட்டற்ற சுதந்திரத்தின் வெளிப்பாடு இவை. கடுமையான சட்ட திட்டங்களைப் பயன்படுத்தாமல் மாண்புகளை மட்டுமே முன்னிறுத்தி உலக நலனை வளர்த்தெடுக்கும் பாங்கு மக்களாட்சிக்கே உண்டு. அதிலும் பழம் பெருமைமிக்க நமது பாரத தேசத்தின் தனிச் சிறப்பு. மக்களாட்சிக்கும் மன்னராட்சிக்கும் சில ஒற்றுமை-வேற்றுமைகள் உண்டு. போர்களும் வெற்றிக்களிப்பும் அதிகார போகமும்தான் மன்னருக்கான பெருமையென சக்கரவர்த்திகள் கருதினர். புத்தர் முதலான உத்தமர்களால் அசோகனைப் போன்ற போர்வெறி மன்னர்கள் திருந்தினர்.

அரசவாழ்வை விடவும் உயர்ந்தது பொதுவாழ்வு. இவ்வுண்மையை இலக்கியங்களின்வழி எடுத்தியம்பும் திணைக்குப் பொதுவியல் எனப் பெயர். அதிகார வெறியிலோ, ஆடம்பர போகங்களிலோ ஆட்சியாளர்கள் மூழ்காமல் இருக்க அறங்கூறு அவையம், ஐம்பெருங்குழு, எண்பேராயம் உள்ளிட்ட அமைப்புகள் இருந்தன. மக்கள் நலனை, இயற்கைப் பேணலை, இலக்கிய வாழ்வை உணர்த்துவதற்குப் புலவர் பெருமக்கள் குழுவும் இருந்தது. மக்களோடு மக்களாய் இருந்து அறவழி காட்டிய வள்ளுவர். போன்ற தூய ஞானியர் இருந்தனர் என்பதையும் வரலாற்றின் வழியாக அறிகிறோம்.

அரசனைச் சுற்றிலும் புகழ்பாடும் கூட்டத்தை விடவும் குறைகாட்டும் கூட்டமும் பிழைகட்டும் குழுவும் இருந்தது. இடிப்பார்' என்று இவர்களை அறிமுகப்படுத்துகிறார் திருவள்ளுவர். அந்தப் பணியை இந்தக்காலத்தில் இதழ்கள் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன.

அதிகாரம் பரவலாக்கப்படுதலும் உரிமைகள் பொதுமைப்படுத்தப்படுதலும்தான் மக்களாட்சியின் மகத்தான வெற்றி. அதை அத்தனை எளிதில் அடைந்துவிட முடியாது. கடும் போராட்டங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் இடையில்தான் நிறைவேற்ற இயலும். அதுவரையிலும் இலக்கை நோக்கிப் பயணம் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும். அந்த இடையறாத பயணத்தின் மைல்கல்லாக அமைவதே தேர்தல்.

பழங்காலந்தொட்டு அரசியலும் ஆட்சிமுறைகளும் உலகம் முழுவதும் தேர்தலையே அடிப்படையாகக் கொண்டிருந்திருக்கின்றன. ஏதென்ஸ் நகரில் வயது வந்தவர்கள் யாவரும், சட்டப்பேரவையில் சென்று வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். அவர்கள் வாக்களித்தலின் மதிப்பை நன்கு அறிந்திருந்தனர்; அடிமைகளுக்கும் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களுக்கும் வாக்குரிமை மறுக்கப்பட்டிருந்தது.

ஞானபீடம் ஜெயகாந்தனிடம் ஒருமுறை நேர்காணலில், நீங்கள் தேர்தலில் வென்று அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்வீர்கள்? என்று வினவியபோது, அவர், 'மன்றத்தை மரத்தடியில் கூட்டுவேன் என்றார். கிரேக்க நாட்டில் அந்தக் காலத்தில் சட்டப்பேரவை 'நைஸ்' என்னும் மலையடிவாரத்தில் அதிகாலையில் வெட்டவெளிகளில் கூடும். இன்றுபோலக் கட்டடத்துக்குள் கூடும் வழக்கம் அந்தக் காலத்தில் இல்லை. நம்முடைய பழைமையான ஊராட்சி மன்றக் கூட்டங்களும்கூட வெட்டவெளியிலும் ஆலமரத்தடிகளிலும்தான் நிகழ்ந்திருக்கின்றன. ஜனநாயகப் பொதுமையை இயற்கையாய் நிலைநாட்டும் இந்த மரபு, இன்றும் பல ஊர்களில் தொடர்கிறது.

மனித சமுதாயத்தில் அரசுகளின் தோற்றமே மகிழ்ச்சியைத் தரக்கூடியதல்ல. நல்லதைக் கருவாகத் தாங்கி அரசுகள் தோன்றவில்லை. நிலப் பிரபுத்துவமும் - தனியுடைமையும், உழைப்பும் - கூலியும் என்ற சமுதாய நெறிமுறை தோன்றிய பிறகு, உடைமைக்காரர்கள் தங்களுக்குப் பாதுகாப்பாக அரசைத் தோற்றுவித்து, அதிகாரங்களை வழங்கினர். அரசுகள் தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை மக்களாட்சியிலும் கூட அரசுகள் உடைமை வர்க்கத்தைப் பாதுகாப்பதாகவே இயங்கி வருகின்றன. பின், காலப்போக்கில் அரசே ஓர் அசுர அமைப்பாகிவிட்டது. அரசுக்கு நிலம், கஜானா, படை என்றெல்லாம் அமைந்துவிட்டன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நாம் மக்களாட்சி முறையைத் தேர்ந்தெடுத்தோம்.

ஆனால், மன்னராட்சியின் இந்த குணங்கள் மாறாமல் மக்களாட்சியிலும் ஒட்டிக் கொண்டன. ஆனால், இவற்றின் தாக்கங்களால் கொடுங்கோன்மை அரசுகள் பெரும்பாலும் தோன்றவில்லை. இந்தியாவிலும், அதிலும் தமிழகத்திலும், தென்கிழக்கு ஆசியாவிலும், சீனாவிலும் நல்ல அரசுகள் இருந்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டு அரசுகளில் பல அரசுகள் மக்கள் நல அரசுகளாகவே திகழ்ந்தன. அதனாலேயே அரசை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்த வரலாறு தமிழக வரலாற்றில் இல்லை என்பார் தவத் திரு குன்றக்குடி அடிகளார்.

ஐந்தாண்டு கால ஆட்சியைத் தங்கள் அதிகாரத்துக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்று எதேச்சதிகாரம் செய்வோரும் உண்டு. மாறாக, மக்களுக்குத் தொண்டு செய்யக் கிடைத்த பெரும்பேறு என்று தங்களின் உடைமைகளை மட்டுமின்றி உயிரையே துறந்தவர்களையும் நம் நாடு கண்டிருக்கிறது.

பழங்குடி மக்கள் வசித்த ஒரு தீவில் இரண்டு நண்பர்கள் வழிதவறிச் சிக்கிக் கொண்டார்கள். அந்த மக்களிடையே ஒரு வழக்கமுண்டு. தங்கள் தீவுக்குப் புதிதாக வருகிறவர்களை ஐந்தாண்டுகளுக்கு அரசராக அறிவித்து விடுவார்கள். இந்த நண்பர்களில் ஒருவரை முதலாவதாக அரசராக்கி விட்டார்கள். அங்கு மற்றொரு வழக்கமும் உண்டு. அதாவது ஐந்து ஆண்டுகள் முடிந்தவுடன் அருகிலே இருக்கும் மற்றொரு தீவில் அந்த அரசரை விட்டு விடுவார்கள். அங்குள்ள கொடிய விலங்குகள் பலவும் அவரைக் கொன்று விடும். இதைத் தெரிந்து கொள்ளும் இந்தத் திடீர் அரசர்கள், 'நம் ஆயுள் காலம் ஐந்தாண்டுகள்தானே என்று தங்கள் விருப்பம்போல ஆட்சிசெய்து குடி, கும்மாளக் கேளிக்கைகளில் மூழ்கித் திளைத்து முடிவில் அத்தீவில் சென்று இறப்பர்.

இரண்டு நண்பர்களில் முதலாமானவரும் அப்படியே இருந்து முடிவில் அத்தீவுக்குப் போகிறபோது தன்னுடைய நண்பனி டம், நீயும் அடுத்த ஐந்து ஆண்டுகள் களிப்போடு வாழ்ந்து முடித்துக்கொள் என்று வாழ்த்திச் சென்றார். இவரும் ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தார். என்னென்னவோ புதிய திட்டங்கள் அந்தத் தீவில் தென்பட்டன. தீவே முழுமையாக மாறிவிட்டது. ஐந்தாண்டுகள் முடிகிறபோது அத்தீவுவாசிகள் மற்றைய மன்னரைப் போல இவர் இல்லாமல் இத்தீவுக்கு நிறைய நன்மைகளைச் செய்திருக்கிறாரே என்று வருத்தப்பட்டனர். ஆனால், என்ன செய்ய? தீவின் ஒழுங்குக்குக்கட்டுப்பட்டாக வேண்டுமே. ஆட்ட பாட்டங்களோடு அடுத்த தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கே சென்ற தீவுவாசிகளுக்கு பேரதிர்ச்சி. கொடிய விலங்குகள் நிறைந்திருந்த அந்தப் பகுதி இப்போது மாடமாளிகைகள், கூட கோபுரங்களோடு ஒரு புதிய நகராகத் திகழ்ந்தது. அரசர் சிரித்தார். ஐந்து ஆண்டுகளில் இதுவரை செய்த பணிகளிலேயே இதுதான் தலைசிறந்த பணி. நான் உங்களுக்காக ஒரு புதிய நகரத்தை உருவாக்கியிருக்கிறேன். இனிமேல் நான் மரணிக்கத் தயார். நீங்கள் விரும்பியவாறு செய்யுங்கள்' என்று பணிந்து நின்றார். அத்தீவுவாசிகள் என்ன செய்திருப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்; நம் தேர்தல் திருவிழாவும் கூட அப்படிப்பட்டதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter



No comments:

Post a Comment

ICC nets 20 medical students for exam malpractice

LAST MONTH STORY ICC nets 20 medical students for exam malpractice The Hans India Update: 2026-04-29 07:58 IST Vijayawada: The high-tech sur...