பல்கலைக் குளறுபடிகள்
By அ. அறிவுநம்பி
வெளிநாடு ஒன்றில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு. அதில் கலந்துகொண்ட பலநாட்டுப் பேராளர்களும் அவரவர் முகவரி அட்டைகளைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். அப்படி என்னுடைய முகவரி அட்டையைப் பெற்றுக் கொண்ட மேலைநாட்டுப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் இந்தியாவிற்கு வந்தார்.
புதுவையில் என்னுடைய அறைக்கு அவர் வந்து இருவருமாகப் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, சில கடிதங்களை அஞ்சல்காரர் தந்து சென்றார். அந்த உறைகளைப் பிரித்தபோது அவற்றில் இரண்டு வெவ்வேறு பல்கலைக்கழகத்திலிருந்து அனுப்பப்பட்ட காசோலைகள் இணைக்கப்பட்டிருந்தன. அதனுடைய வடிவம், வண்ணம் இரண்டையும் பார்த்த அந்தப் பேராசிரியர் இரண்டு காசோலைகளையும் கையிலெடுத்தார்.
"ஆமாம், ஒன்றில் ஐநூறு ரூபாய் எனவும் மற்றொன்றில் ஆயிரம் ரூபாய் எனவும் எழுதப்பட்டுள்ளதே.. வெவ்வேறு பணிகளுக்கான சன்மானமா அந்தத்தொகை' என்று கேட்டார். இல்லையில்லை இரண்டுமே முனைவர்பட்ட (பிஎச்.டி.) ஆய்வேடுகளை மதிப்பிட்டமைக்கான மதிப்பூதியம் என்றபோது அவர் வியப்புற்றார்.
அதெப்படி ஒரே பணிக்கு இரண்டு விதமான மதிப்புத்தொகை இருக்க முடியும் என்ற அவரின் கேள்வி அடர்த்தியானது. அமைதியாகப் பதில்கூற ஆரம்பித்து ஒரு பல்கலைக்கழகம் ஐநூறு ரூபாய் என்பதை ஆயிரம் ரூபாய் என மாற்றிவிட்டது. இன்னொரு பல்கலைக்கழகம் இன்னும் தொகையை உயர்த்தவில்லை என்றேன்.
"ஓ! ஒன்று, தனியார் பல்கலைக்கழகம் மற்றது அரசுசார் பல்கலைக்கழகம் அப்படித்தானே?' என்ற அவரை, அவசரமாக இடைமறித்து, "இரண்டுமே ஒரே அரசின் கீழுள்ள பல்கலைக்கழகங்கள் தான்' என்றபோது அவருக்குக் கோபமே வந்துவிட்டது.
"ஒரே மாதிரியான ஆய்வு நூல்; ஒரே முறையிலான மதிப்பீடு; ஒரே டாக்டர் பட்டம். இப்படியிருக்கும் போது ஒரே அரசாங்கம் எப்படி இரண்டுவிதமாக மதிப்பீட்டுத் தொகையை வழங்குகிறது' என்ற அவரது வாதத்திற்குச் சட்டென்று விடை தர இயலவில்லை. ஒரே பணிக்கு ஒரே அளவிலான மதிப்பூதியம் வழங்குவதுதானே அரசின் பணியாயிருக்க முடியும் என்ற அவருடைய கருத்து மெத்தச் சரிதான்.
மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பூதியத்தை வழங்க அரசு ஓர் அரசாணையைப் பிறப்பித்தால் போதும். அவ்வாறான முடிவுகளை அரசு எடுக்காததால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதனதன் போக்கில் செயல்படுகின்றன. இப்படிப்பட்ட குளறுபடிகள் ஆய்வுப் படிப்பில் இன்னும் உண்டு.
ஆய்வேட்டை ஆய்வாளர்கள் பல்கலைக்கழகங்களில் ஒப்படைத்தபிறகு, அந்த ஆய்வேடுகள் பல்வேறு பேராசிரியர்களுக்கு மதிப்பீட்டுக்காக அனுப்பப்பெறும். இதிலும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படவில்லை. சான்றாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முன்பெல்லாம் ஒப்படைக்கப்பெற்ற மூன்று ஆய்வேடுகளும் வெளியூர்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுக்கு மட்டுமே அனுப்பப்பெறும்.
இந்த நடைமுறை இப்பொழுதும் புதுவைப் பல்கலைக்கழகத்தில் உள்ளது. ஆனால், மதுரை உள்பட தமிழகப் பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆய்வேடுகள் மட்டுமே புறநிலைத் தேர்வாளர்களுக்கு மதிப்பீட்டிற்காக அனுப்பப்பெறுகின்றன. மூன்றாவது ஆய்வேடு ஆய்வுநெறியாளருக்கே மதிப்பீட்டுக்காக அனுப்பப்படுகின்றது.
ஆய்வேட்டின் உருவாக்கத்திற்கு மேற்பார்வையாளராக இருக்கும் அவரே மதிப்பிடுவது சரிதானா என்பது கல்வியாளர் பலரின் ஐயப்பாடு. அவருடைய வழிகாட்டலில் உருவான ஆய்வேட்டில் குறைகள் இருப்பின் அதனை மதிப்பீட்டறிக்கையில் அவரால் தர இயலாது. பிழைகள் உள்ள ஆய்வேட்டைச் சமர்ப்பிக்க அவர் எப்படி இசைவு தந்து, ஆய்வேட்டில் கையெழுத்திட்டிருக்க முடியும்?
எனவே, மூன்று மதிப்பீடுகளில் ஒன்று நிச்சயமாகச் சாதகமான மதிப்பீடாகிவிடுவதை இம்முறைமை மறைமுகமாக உண்டாக்கிவிடுகிறது. இதனைத் தவிர்க்க, மூன்று ஆய்வுநூல்களும் புறநிலை வல்லுநர்களுக்கே அனுப்பப்பெறுவதில் என்ன சிக்கல் என்பது புரியாத புதிர். இப்படிச் செய்வதால் மதிப்பீட்டுத் தொகையிலும் மாறுபாடுகள் ஏற்பட வாய்ப்பில்லை.
மூன்றாவதாக, பொதுவாய்மொழித் தேர்வு நடத்தப் பெறுவதிலும் குளறுபடிகள் உள்ளன. ஆய்வேட்டை மதிப்பீடு செய்த வெளியூர்ப் பேராசிரியர்களில் ஒருவரை இந்தப் பொது வாய்மொழித் தேர்வுக்கு அழைப்பதே சரியானது, முறையானது.
ஏனெனில் பக்கம் பக்கமாகப் படித்து ஆய்வேட்டின் நிறை குறைகளை அலசி மதிப்பீட்டறிக்கையை உருவாக்கிய அவர்களால் வாய்மொழித் தேர்வில் வினாக்களை முன்வைக்கவும் தேர்வை நடத்தவும் இயல்பாக இயலும்.
அழகப்பா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், புதுவைப் பல்கலைக்கழகம், காந்தி கிராமப் பல்கலைக்கழகம், அவிநாசிலிங்கம் பல்கலைக்கழகம் போன்றவை இதனை நடைமுறையாகக் கொண்டுள்ளன.
ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் போன்றவற்றில் வேறு நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆய்வேட்டை மதிப்பிடாத நான்காம் நபர் வாய்மொழித் தேர்வினை நடத்த அழைக்கப்படுவார். அவர் மதிப்பீட்டறிக்கை எதுவும் தர வேண்டியதில்லை. வாய்மொழித் தேர்வை மட்டும் நடத்துவார்.
ஏற்கெனவே மதிப்பீடு செய்திராத நான்காம் தேர்வாளரை அழைக்கும்போது அவர் ஆய்வேட்டைப் படிக்கக் கால நேரம் கூடுதலாகும். ஏற்கெனவே மதிப்பீட்டாளராக இருந்தவரை அழைக்கும்போது காலவிரையம் ஏற்படாது.
மதிப்பீடு செய்பவர் ஒருவர், வாய்மொழித் தேர்வை நடத்துபவர் (மதிப்பீடு செய்யாத) வேறொருவர் என்ற நிலைப்பாடு சரியானதா என்பது கல்வியாளர்கள் முன்நிறுத்தப்படும் கனமான வினா ஆகும். இன்னொரு வியப்பினைத்தரும் நடைமுறையையும் இங்கே பதிவு செய்வது சரியானதாக அமையும்.
ஆய்வு மேற்கொண்ட ஆய்வாளர், அவரை வழிநடத்திய பேராசிரியர் இருவரையும் புறநிலைத் தேர்வாளர் அறிந்து கொள்ளக்கூடாது எனக் கருதிய பல்கலைக்கழகங்கள் ஆய்வேட்டின் மேலட்டையிலும், முகப்புப் பக்கத்திலும் ஆய்வாளரின் பதிவு எண்ணை மட்டுமே குறிக்கவேண்டும் எனக் கட்டளை பிறப்பித்துள்ளது. ஆய்வாளர் நன்றியுரையையும் இணைக்கக்கூடாது. இது மந்தனம் (ரகசியம்) காக்கப்படவேண்டும் என்ற நோக்கத்திற்காம்.
குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் குறிப்பிட்ட துறையில் இருக்கும் பேராசிரியர்களை வெளியூர்ப் பேராசிரியர்களுக்கு எப்படித் தெரியாமல் போகும்?
இதிலே இன்னொரு பகுதியையும் எடுத்துக்கூற வேண்டும். ஆய்வு நெறியாளர்தான் மதிப்பீடு செய்வதற்காக வெவ்வேறு நிறுவனப் பேராசிரியர்களின் பட்டியலையே தன் பல்கலைக்கழகத்திற்கு வழங்குகிறார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்றவற்றில் வெளியூர்ப் பேராசிரியர்கள் தம் மதிப்பீட்டறிக்கையை ஆய்வு நெறியாளருக்கும் அனுப்ப வேண்டும்.
இங்கே ரகசியம் காக்கப்பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை; தேவையும் இல்லை. இங்கே அமையும் வேடிக்கை ஒன்றைக் கவனிக்கலாம். ஆய்வாளரின் பெயர் ஆய்வேட்டின் அட்டை, முகப்புப் பக்கம் போன்றவற்றில் இடம்பெறக் கூடாது என்பதை வலியுறுத்தும் பல்கலைக்கழகங்கள் சறுக்கலைச் சந்திக்கும் இடம் ஒன்று உண்டு.
பல்கலைக்கழகங்களில் ஆய்வேட்டை ஒப்படைக்கும் ஆய்வாளர்கள் இதழ்கள், ஆய்வுத் தொகுப்புப் போன்றவற்றில் வெளியிட்டுள்ள தம் கட்டுரைகளில் இரண்டைக் கண்டிப்பாக ஆய்வேட்டின் பிற்பகுதியில் இணைக்க வேண்டுமென்பது கட்டாய விதி. எனவே, அந்த ஆய்வாளர்களின் கட்டுரைகள் அவரவர்களின் பெயர்களுடனே ஆய்வேட்டில் இணைக்கப்பெற்றிருக்கும்.
மேலட்டையில் பெயரைப் பொறிக்க முடியாத ஆய்வாளர்களின் பெயர்கள் அவர்கள் இணைத்துள்ள கட்டுரைகளில் அப்படியே முனைமுறியாமல் ஒளிரக் காணலாம். "எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்ற பழமொழிக்கு இந்தக் குறிப்புகளைச் சான்றாக்கலாம்.
இரண்டாவதாக, மதிப்பீட்டறிக்கையை உருவாக்கும் தேர்வாளர்கள் இன்னாருக்குப் பட்டம் வழங்கலாம் என அந்த ஆய்வாளரின் பெயரை எழுதிப் பரிந்துரை செய்வதே சரியானது, உகப்பானது. அதை விடுத்து, இந்த எண்ணுக்குப் பட்டம் வழங்கலாமென மதிப்பீட்டறிக்கையில் எழுதும் போது ஒரு மாதிரியாக இருப்பதாக மதிப்பீட்டாளர்கள் பலரும் தங்கள் மனக்குறையை வெளிப்படுத்தியுள்ளனர்.
பல்கலைக்கழகங்களில் ஒரே அமைப்பிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் இது போன்ற குளறுபடிகள் நிகழ்கின்றன. ஆய்வுப் படிப்பில் இவை எப்போது சரிசெய்யப்படும் என்பதே ஓர் ஆய்வாகிவிட்டது என்பதே உண்மை.
மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான மதிப்பூதியத்தை வழங்க அரசு ஓர் அரசாணையை பிறப்பித்தால் போதும். அவ்வாறான முடிவுகளை அரசு எடுக்காததால் ஒவ்வொரு பல்கலைக்கழகமும் அதனதன் போக்கில் செயல்படுகின்றன.