Saturday, March 5, 2016

இனி மக்கள்தான் எஜமானர்கள்



DAILY THANT HI

தமிழகத்தின் 15–வது சட்டசபையை உருவாக்குவதற்கான தேர்தல் தேதி மே 16 என்றும், ஓட்டு எண்ணிக்கை 19–ந் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதே தேதிதான் கேரளாவுக்கும், புதுச்சேரிக்கும் தேர்தல் தேதியாகும். தமிழகத்தில் முதல் சட்டசபை 1952–ம் ஆண்டு முதல் 1957 வரையிலும், 2–வது சட்டசபை 1957 முதல் 1962 வரையிலும், 3–வது சட்டசபை 1962 முதல் 1967 வரையிலும் இயங்கியது. இந்த மூன்று சட்டசபைகளிலும் காங்கிரஸ் கட்சிதான் பெரும்பான்மையாக இருந்து ஆட்சியை அமைத்தது. 4–வது சட்டசபை தேர்தல் 1967–ம் ஆண்டு நடந்தது, இதில் மறைந்த அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைத்தது. இடையில் அவர் மறைந்தவுடன் கருணாநிதி முதல்–அமைச்சரானார். ஆனால், இந்த சட்டமன்றம் 5 ஆண்டுகள் முழுமையாக இயங்காமல், அவர்களாலேயே 1971–ல் கலைக்கப்பட்டது. மீண்டும் 5–வது சட்டசபை 1971 முதல் 1976 வரை தி.மு.க.வில் பெரும்பான்மையோடு இயங்கியது. நெருக்கடிநிலை பிரகடன நேரத்தில் அந்த சட்டசபையும் கலைக்கப்பட்டது. அடுத்து 1977–ம் ஆண்டு நடந்த 6–வது சட்டசபை தேர்தலில் மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையிலான அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. 1980–ம் ஆண்டு அவர் ஆட்சி கலைக்கப்பட்டது.

7–வது சட்டசபை தேர்தல் 1980–ல் நடந்து 1984 வரை அ.தி.மு.க.வின் பெரும்பான்மையோடு இயங்கியது. 1985–ம் ஆண்டில் எம்.ஜி.ஆர். உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சைப்பெற்று வந்தநேரத்திலே 8–வது சட்டசபைக்கான தேர்தல் நடந்தது. அந்த தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றிபெற்று, 1987–ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைந்தவுடன், 1988 தொடக்கத்தில் கலைந்தது. 1989–ம் ஆண்டு 9–வது சட்டசபைக்கான தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று 1991–ம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்தது. 1991–ம் ஆண்டு அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. மீண்டும் 10–வது சட்டசபைக்கான தேர்தல் 1991–ம் ஆண்டு நடந்து அதில் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. இந்த சட்டமன்றம் முழுமையாக 5 ஆண்டுகள் இயங்கியது. 1996–ம் ஆண்டில் 11–வது சட்டசபைக்கான தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று 2001–ம் ஆண்டுவரை பதவியில் இருந்தது. மீண்டும் 2001–ம் ஆண்டு நடந்த 12–வது சட்டசபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.

அடுத்து 2006–ம் ஆண்டில் 13–வது சட்டசபைக்கான தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க. வெற்றிபெற்று 2011 வரை கருணாநிதி தலைமையில் ஆட்சி அமைத்தது. மீண்டும் 2011–ம் ஆண்டு 14–வது சட்டபைக்கான தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்று ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்தது. 15–வது சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நேற்று முதல் தேர்தல் நடத்தைவிதிகள் அமலுக்கு வந்துவிட்டன. புதிய திட்டங்கள் அறிவிக்கப்படவோ, செயல்படுத்தப்படுவோ கூடாது. தற்போது அனைத்து கட்சிகளின் பார்வையும் மே 16–ந் தேதியை நோக்கித்தான் இருக்கிறது. எல்லா அரசியல் கட்சிகளுக்கும் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள 5 கோடியே 80 லட்சம் வாக்காளர்கள்தான் எஜமானர்கள். தமிழ்நாட்டில் 162 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக இருக்கிறது. இதுபோல, இளைஞர்களின் ஓட்டும் கணிசமாக இருக்கிறது. பொதுவாக ஆண்களின் ஓட்டு பரவலாக பிரிவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், பெண்களின் ஓட்டும், இளைஞர் சமுதாயத்தின் ஓட்டும் பெரும்பாலும் ஒருபக்கமாக சாயும் என்பதால், இவர்களை குறிவைத்தே தேர்தல் அறிக்கைகளும் பிரசாரங்களும் இருக்கும். பிரசாரங்களில் அனல் பறக்கட்டும். ஆனால், தனிப்பட்ட தாக்குதல்களைக்கொண்ட ஆக்ரோஷங்கள் வேண்டாம், மாணவர்களின் தேர்வு நேரம் என்பதால், அவர்களுக்கு இடைஞ்சல் செய்யும் வகையில் ஆர்ப்பாட்ட பிரசாரம் வேண்டாம் என்பதே அரசியல் கட்சிகளுக்கு பொதுமக்கள் விடுக்கும் வேண்டுகோளாகும். இந்த தேர்தலில் நாங்கள்தான் ஆட்சி அமைக்கப்போகிறோம் என்று எல்லா அணிகளும் சொல்கிறார்கள். ஆனால், யார் ஆட்சி அமைத்தாலும், அது புதிய வரலாறு, புதிய சாதனையாகத்தான் இருக்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024