Saturday, March 5, 2016

எம்ஜிஆர் 100 | 15 - நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்!

Return to frontpage

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்


M.G.R. பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். என்றாலும் அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை என்று கூறப்படுவது உண்டு. ஆனால், முதல்வராக இருந்தபோது நிர்வாகத்தில் எவ்வளவோ சிக்கலான விவகாரங்களுக்கும் உணர்வுபூர்வமான பிரச்சினைகளுக்கும் தனக்கே உரிய மதிநுட்பத்தோடு காதும் காதும் வைத்தது போல கச்சிதமாக தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.

காவிரிப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கோரி டெல்லியில் விவசாயிகள் இரண்டு நாட்கள் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகாவுக்கும் தமிழகத்துக் கும் காவிரிப் பிரச்சினை இன்று நேற்றல்ல; காலம் காலமாக இருந்து வரும் ஒன்று.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சையில் குறுவை பயிரிடும்போதுதான் வழக்கமாக காவிரி தண்ணீர் பிரச்சினை தலைதூக்கும். ‘குறுவை’ பெயருக்கேற்றபடி குறுகிய காலப் பயிர். எம்.ஜி.ஆர். முதல்வராக இருக்கும்போதும் தண்ணீர் இல்லாமல் குறுவை கருகும் அபாயம் ஏற்பட்டது. அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன் எம்.ஜி.ஆர். உடனடியாக பேச முடியாத நிலை.

அந்த நேரத்தில் கர்நாடகாவில் கல்வி அமைச் சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆருக்கு நெருங் கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பு கொண்டவர். ஒரு நாள் காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூ ருக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். புறப்பட்டார். அவரு டன் இரண்டு அதிகாரிகள் மட்டுமே சென்றனர். பெங்களூர் சென்ற எம்.ஜி.ஆர்., கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.

எம்.ஜி.ஆரின் திடீர் வருகையும் தன்னை வரச் சொல்வதன் காரணமும் புரியாமல் பரபரப்புடன் பெங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ரகுபதி, எம்.ஜி.ஆரை வரவேற்றார். தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் செல்லச் சொல்லிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.

ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்தாரே தவிர, விவரம் எதுவும் சொல்லவில்லை. அது காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்து சிற்றுண்டி பரிமாறினார். எம்.ஜி.ஆர். சாப்பிட்டு முடித்தார். சாப்பாட்டின்போதும் சரி, சாப்பிட்டு முடித்த பிறகும் சரி, அருகே வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எம்.ஜி.ஆர். குடிக்கவே இல்லை. ‘ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை? வேண்டாமா?’ என்று ரகுபதியின் தாய் கேட்டார்.

அதை எம்.ஜி.ஆர். பிடித்துக் கொண்டார். ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம் நான் எப்படி தண்ணீர் குடிப்பது?’’ என்று கேட்டார். ரகுபதிக்கு பொறி தட்டியது. எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்ததுடன் காரியத்தில் இறங்கினார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சர். அவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்த ரகுபதி உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த ராம கிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றனர்.

அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது, கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது ஆகியவை குறித்து சிறிது நேரத்தில் விவாதிக்கப்பட்டு தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.

உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராம கிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். பார்த்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், இந்த சந்திப்பின் நோக்கமே வேறு. சத்தமே இல்லாமல், தமிழகத்தின் கடைமடைப் பகுதிக்கு காவிரி தண்ணீரை எம்.ஜி.ஆர். கொண்டு வந்து விட்டார்.

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், வியாபாரி, ஊழியர், அதிகாரிகள், விஐபிக்கள் என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு. இந்த பிரிவினரில் சதவீதம் மாறலாமே தவிர, எல்லாத் தரப்பிலும் ரசிகர்களை எம்.ஜி.ஆர். பெற்றிருந்தார். அந்த விஐபிக்களில் ஒருவர் கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ். தன்னை எம்.ஜி.ஆர். ரசிகர் என்று பகிரங்கமாக அறிவித்தவர் அவர். எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’ படத்தில் இடம் பெற்ற

‘ஒன்றும் அறியாத பெண்ணோ...’

பாடல் காட்சி கர்நாடக மாநிலம் ‘கூர்க்’கில் உள்ள குண்டுராவுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில்தான் படமாக்கப்பட்டது. குண்டுராவிடமும் ஒருமுறை எம்.ஜி.ஆரே பேசி விளம்பரமே இல்லாமல் காவிரியில் தண்ணீர் விடச் செய்தார் .

எம்.ஜி.ஆர். நடித்த ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் பல காட்சிகள் கர்நாடகா மாநிலம் பெங்களூர், மைசூர் ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டன. படத்தில்

‘இதுதான் முதல் ராத்திரி... அன்புக் காதலி என்னை ஆதரி...’

என்ற இனிமையான டூயட் இடம்பெறும். எம்.ஜி.ஆரை பார்த்து நாயகி பாடுவார்...

‘அடிமை இந்த சுந்தரி.... என்னை வென்றவன் ராஜதந்திரி...’

படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர், விஐபி என்று பல தளங்களிலும் எம்.ஜி.ஆருக்கு ரசிகர்கள் உண்டு.

1975-ம் ஆண்டு வெளியான தமிழ் படங்களில் மிகப் பெரிய வெற்றி பெற்ற படம் எம்.ஜி.ஆர். நடித்த ‘இதயக்கனி’. சென்னையில் நடந்த இதன் வெற்றி விழாவில் என்.டி.ராமராவ், சவுந்தரா கைலாசம், பாலச்சந்தர், முக்தா சீனிவாசன், சவுகார் ஜானகி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘மற்ற நடிகர்களின் பல படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். படங்கள் மூலம் அரசுக்கு அதிக வரி கிடைக்கிறது. இதன் மூலம் அரசாங்கத்தின் நண்பராக எம்.ஜி.ஆர் விளங்குகிறார்’’ என்று விழாவில் முக்தா சீனிவாசன் பாராட்டிப் பேசினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024