புதுடெல்லி,
தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டியில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தில் கோவை வேளாண் பல்கலைக்கழக பஸ் எரிக்கப்பட்டதில் 3 மாணவிகள் கருகி பலியானார்கள். இந்த வழக்கில் முனியப்பன், நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அதனை சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும் என மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மறுசீராய்வு மனுக்கள் மீது 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்கும் என்ற உத்தரவின் அடிப்படையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு வக்கீல் யோகேஷ் கன்னா ஆஜரானார். குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல்கள் நாகேஸ்வர ராவ், மற்றும் சுசில் குமார் ஆகியோர், இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது அல்ல. அந்த பகுதியில் கலவரம் ஏற்பட்டபோது அதன் காரணமாக எதிர்பாராதவிதமாக நடைபெற்றதாகும். எனவே மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஆயுள் தண்டனை என்பது எத்தனை ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பது பற்றியும், இவர்களின் கருணை மனுக்கள் நிலுவையில் இருந்துவரும் நிலையில் தண்டனையை குறைத்தால் அது குற்றவாளிகளுக்கு இரட்டை சலுகைகள் வழங்கியதுபோல் இருக்கும் என்பது குறித்தும் நீங்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றனர். இந்த வழக்கின் விசாரணை 11–ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment