Wednesday, March 2, 2016

வாகனங்களுக்கு வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் ஏப்ரல் 1–ந் தேதி முதல் அமல்




புதுடெல்லி, 

இந்தியா முழுவதும் சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதற்கு வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம் ஆகும். எனவே வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்த மத்திய அரசு அரசாணைப்படி போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஏற்கனவே பள்ளி வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்ற நடைமுறை உள்ளது. தற்போது லாரி, வேன் உள்பட கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், 9 இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் அனைத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

கடந்த 1–10–2015–க்கு பிறகு பதிவு செய்யப்படும் வாகனங்களில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே வேக கட்டுப்பாட்டு கருவியை பொருத்தி இருக்கின்றன. அதே சமயம் அதற்கு முந்தைய பழைய வாகனங்களிலும் 6 மாதம் அவகாசம் வழங்கி மார்ச் 31–ந் தேதிக்குள் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து ஏப்ரல் 1–ந் தேதி முதல் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.

மத்திய அரசின் உத்தரவால் விபத்துகள் குறையும் என்றும், தற்போது வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024