வளர்ந்த நாடு என்பது எத்தனை ஏழைகள் கார் வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததில்லை. எத்தனை பணக்காரர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்ததே. கடந்த ஜனவரி மாதம் மட்டும் இந்தியாவில் 2.18 லட்சம் கார்கள் விற்பனையாகியிருக்கின்றன. இது வளர்ச்சிதானா?
மொத்த பெட்ரோலியப் பயன்பாட்டில் போக்குவரத்துக்காக மட்டும் 60 சதவீதம் செலவிடுகிறது மனித இனம். இதில் சொந்த கார், இரு சக்கர வாகனங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவது 40 சதவீதம். உலகிலேயே அதிகம் நுகரும் நாடு என்றாலும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தினமும் 41.6 மில்லியன் லிட்டர் பெட்ரோல் மிச்சப்படுவதாகச் சொல்கிறது அமெரிக்கா. ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தனிப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த கார்களுக்குக் கூடுதல் வரி உண்டு. கடுமையான கட்டுப்பாடுகளும் உண்டு.
இந்தியாவில் 1995-ல் இருந்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதைவிடப் பல மடங்கு தனிப் போக்குவரத்தும் அதிகரித்திருப்பதே ஆபத்து!
பொதுப் போக்குவரத்துக்கு நாம் மாறுவதன் மூலம், ஆண்டுதோறும் 3.7 கோடி மெட்ரிக் டன் கரியமில வாயு உமிழ்வைக் கட்டுப்படுத்தலாம். மேலும், பஸ்ஸுக்கோ, ரயிலுக்கோ செல்பவர்களுக்கு சிறிது தூரமேனும் நடக்கும் நிர்ப்பந்தம் இயல்பாகவே ஏற்படுகிறது. நடக்கிறார்கள். பொதுச் சமூகத்துடன் உரையாடுகிறார்கள். தனிப்பட்ட வாகனங்கள் ஒரு வகையில் நம்மைத் தனித் தீவாக்கிவிடுகின்றன.
இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவதில் பல சவுகரியங்கள் உண்டு என்றாலும், அதிக எண்ணிக்கையில் விபத்துகள் நிகழ்வதற்கும் இவைதான் காரணம். சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளில் 25 சதவீதத்துக்கும் மேல் இரு சக்கர வாகனங்களால் நிகழ்பவைதான். காரைவிட பஸ், ரயில் போன்ற வாகனங்கள் பாதுகாப்பானவை என்று வெக்ஸென் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. காருடன் ஒப்பிட்டால், விபத்தில் இறக்கும் வாய்ப்பு ரயில் பயணத்தில் 9 மடங்கு குறைவு என்று அது குறிப்பிடுகிறது. பொதுப் போக்குவரத்து மட்டும் இல்லையென்றால், தினம் சாலைப் பயணத்தில் ஏற்படும் தாமதம் மேலும், 27 சதவீதம் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டியிருக்கிறது அமெரிக்க பொதுப் போக்குவரத்துச் சங்கம்.
போக்குவரத்து நெரிசலையும், ஒற்றை இலக்க, இரட்டை இலக்க முறையை 15 நாட்களுக்கு அமல்படுத்தியது டெல்லி அரசு. குறிப்பிட்ட இந்த 15 நாட்களில் காற்றில் பி.எம். 2.5 என்று அழைக்கப்படும் துகள்கள் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாக ஆற்றல் மற்றும் வளங்கள் நிறுவனம் (TERI) தெரிவித்திருக்கிறது. பொதுப் போக்குவரத்து அதிகரித்தால் சூழலில் என்ன மாற்றம் நடக்கும் என்பதற்கான சமீபத்திய உதாரணங்களில் ஒன்று இது. நாட்டிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களில் ஒன்று தமிழகத் தலைநகரம் சென்னை. தமிழகம் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறது?
No comments:
Post a Comment