Wednesday, June 8, 2016

ரகளை அமைச்சர்... ராஜினாமா செய்த பெண் டிஎஸ்பி... கையைப் பிசையும் கர்நாடக அரசு!

vikatan news
ர்நாடகாவையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. டி.எஸ்.பி., அனுபமா ஷெனாயின் ராஜினாமா விவகாரம். கூடவே இன்று அனுபமா ஷெனாய் தன் முகநூல் பக்கத்தில்,  " நான் ராஜினாமா செய்து விட்டேன். நீ எப்ப ராஜினாமா செய்ய போகிறாய்?"  என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேஷ்வர் நாயக்கிற்கு பகிரங்க சவால் விட்டிருப்பதால்,  பரபரப்பு இன்னும் அதிகமாக பற்றிக்கொண்டுள்ளது. 

கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம் ஹடல்கி டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்தவர் அனுபமா ஷெனாய். இவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு ஹடல்கி டி.எஸ்.பி.,யாக பதவியேற்றார். இப்பகுதியில் போலி மதுபான  கடைகளும், அங்கீகாரம் இல்லாத பார்களும் ஏராளமாக இருந்தன. இதனையடுத்து பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுபானக்  கடைகளை அதிரடியாக இழுத்து மூடி பரபரப்பை உண்டாக்கினார்.

இதுவிர  பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நேர்மையாகவும், திறம்படவும் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சமூக விரோதக் கும்பல்களின் அடாவடிகளை ஒழித்துக் கட்டி, நிழல் உலகத்தினருக்கு கிலியை ஏற்படுத்தினார். 

அமைச்சர் தலையீடு
இந்நிலையில் கடந்த ஜனவரியில், பொதுமக்கள் திரண்டு வந்து டி.எஸ்.பி. அனுபமாவை நேரில் சந்தித்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார்கள். அந்த மனுவில் , ‘‘ஹடல்கி நகர் பகுதியில், பொதுமக்கள் குடியிருப்புக்கு அருகே லோக்கல் காங்கிரஸ் பிரமுகர் ரவீந்தரருக்கு சொந்தமான பார் இருக்கிறது. இந்த பாரில் தினந்தோறும் குடித்து விட்டு குடிமகன்கள் பெரும் சத்தம் போடுகிறார்கள். இதனால் குழந்தைகள் படிக்க முடியவில்லை. அத்தோடு திடீர் திடீரென,எங்களின் வீடுகள் மீது கற்களால் தாக்குகிறார்கள். அதனால் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மேலும், எங்களின் வீட்டில் இருக்கும் பெண்களின் கையைப்  பிடித்து இழுத்து பாலியல் தொல்லைக் கொடுக்கிறார்கள். இதனால் நாங்கள் அச்சத்தின் பிடியில் தத்தளிக்கிறோம். குடிமகன்களின்  தொடரும் இந்தத் தொல்லைகளால் சமூக அமைதி சீரழிந்துவிட்டது. எனவே மதுபான பார் கடையை  அகற்ற வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
பொதுமக்களின் கண்ணீர் கோரிக்கையைடுத்து உடனடியாகக் களத்தில் இறங்கினார் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய். பிரச்னைக்குரிய பார் இயங்கும் ஹடல்கி நகர் சென்று, அதிரடியாக பாரை இழுத்து மூடினார். அதற்கு லோக்கல் காங்கிரஸ் பிரமுகரான ரவீந்தர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். உடனே அவர்,தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பரமேஷ்வர் நாயக்கை சந்தித்து முறையிட்டார். விசயத்தை கேள்விப்பட்டு கொதித்த அமைச்சர்,  ரவீந்தர் முன்பே, டி.எஸ்.பி. அனுபமா ஷெனாய்க்கு  போன் செய்திருக்கிறார். 

அனுபமா போனில் அமைச்சரின் அழைப்பு ரிங் வந்து கொண்டிருக்கும் போதே, தன் துறையை சார்ந்த உயர் அதிகாரியின் போன் அழைப்பும் வர, 10 நிமிடங்களுக்கு அமைச்சரின் அழைப்பை  வெயிட்டிங்கில் போட்டு விட்டு தன் துறை அதிகாரியிடம் பேசி இருக்கிறார்.  துறை அதிகாரியிடம் பேசி முடித்த பிறகு அமைச்சரின் அழைப்பை 'அட்டன்' செய்திருக்கிறார். இதனால் வெய்ட்டிங்கில் இருந்த அமைச்சர் பரமேஷ்வர் நாயக், கோபத்தில் சினிமா வில்லன் பாணியில் கடுமையாக மிரட்டியிருக்கிறார். 

ஆனால், அதற்கு அனுபமா சற்றும் பணிந்து போகாமல், " நான் செய்தது சரிதான். மக்கள் பணி செய்வதற்காகத்தான் இந்த துறைக்கு வந்தேன். உங்களால் என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள் பார்க்கலாம்" என்று  சொல்லி,போன் இணைப்பைத் துண்டித்து இருக்கிறார். இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற அமைச்சர் பரமேஷ்வர் நாயக், அனுபமாவை 'டிரான்ஸ்பர்' செய்ய உத்தரவிட்டார். கர்நாடக காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது இந்த விவகாரம்.

அமைச்சரின் அடாவடித் தனத்திற்கு பொதுமக்களிடம் கடும் கண்டனம் எழுந்தது. உடனே அதில் மாநில அரசு தலையிட்டு, அனுபமாவின் இடமாற்றத்தை ரத்து செய்தது.  அதையடுத்து தொடர்ந்து ஆளும் அரசியல் கட்சியினரால் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய்க்கு டார்ச்சர் வந்து கொண்டே இருந்தது. 

ராஜினாமா

இந்நிலையில் 10 நாட்களுக்கு முன்பு, அம்பேத்கர் பவன் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிக்கு செல்ல முடியாத அளவுக்கு, ரவீந்தர் தன் பாரை விரிவாக்கம் செய்திருக்கிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்கல் தலித் அமைப்புகள் அனுபமாவை சந்தித்து புகார் தெரிவித்து இருக்கிறார்கள். அதையடுத்து பார் உரிமையார் ரவீந்தரை அழைத்து, பாரை விரிவாக்கம் செய்ய கூடாது என்று உத்தரவிட்டுள்ளார் அனுபமா. ஆனார் ரவீந்தர் அந்த உத்தரவு நகலை கிழித்துப் போட்டு விட்டு, "விரிவாக்கம் செய்வேன். நீ செய்வதை செய்" என்று மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார். 

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனுபமா, கடந்த சனிக்கிழமை (4.6.2016) பாரின் உரிமையாளர் ரவீந்தர் மற்றும் இருவரை கைது செய்து பெல்லாரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். அப்போது அங்கு வந்த சிலர் அனுபமாவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அவரை அசிங்கமாகவும் ஆபாசமாகவும்  பேசியுள்ளனர். இதனால் மனம் வெறுத்த நிலையில், அனுபமா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 

இதுப்பற்றி மாவட்ட எஸ்.பி., சேத்தன், ‘‘அனுபமா ராஜினாமா கடிதம் கொடுத்திருக்கிறார். ஹடல்கியில் உள்ள அம்பேத்கார் பவனுக்கு செல்லும் சாலையில் உள்ள மதுக்கடையை, உரிமையாளர் ரவி விரிவுப்படுத்தி இருக்கிறார். அந்த பணி நடந்தால் அம்பேத்கார் பவனுக்கு செல்லும் சாலையின் அகலம் குறையும் என்று சில தலித் தலைவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து பாரின் உரிமையாளர் ரவியை அழைத்து, பாரின் விரிவாக்கத்தை நிறுத்துமாறு டி.எஸ்.பி., உத்தரவிட்டார். ஆனால் பார் உரிமையாளர் ரவி அதைக் கேட்கவில்லை. இதையடுத்து ரவி மற்றும் 2 பேரை முன்னெச்சரிக்கையாக கைது செய்திருக்கிறார். அதையடுத்து இந்த ராஜினாமா கடிதத்தை கொடுத்திருக்கிறார்’’ என்றார். 

காவல்துறை அதிகாரிகளை மாற்ற அமைச்சர்களுக்கு  அதிகாரம் இல்லை...

‘‘இந்த சம்பவத்தை அடுத்து கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மீது பல புகார்கள் குவிந்து வருகின்றன. போலீஸார் இடமாற்றத்தில் கடந்த ஒன்றரை வருடத்தில் 45 பரிந்துரைகளை காவல்துறைக்கு கொடுத்து கடும் நெருக்கடிகளை கொடுத்துள்ளார். டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய் இடமாற்ற உத்தரவுக்கும் இவர்தான் காரணம். பிறகு பல தரப்பினரும் எதிர்ப்பு  தெரிவித்ததால் ரத்து செய்யப்பட்டது. 2013 ஜூன் முதல் 2015 ஜனவரி வரை தனக்கு தேவைப்பட்ட காவல்துறை அதிகாரிகளை பெல்லாரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்திருக்கிறார். 

உதாரணமாக பெல்லாரி சிட்டி டி.எஸ்.பி., முருகநன்னவார் உள்ளிட்ட இரண்டு அதிகாரிகளை  அங்கேயே பதவியில் நீட்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று 2014 ஜூன், 10ம் தேதி  பெங்களூரு நிருபதுங்கா சாலையில் உள்ள தலைமை அலுவலக டி.ஜி.பி., ஐ.ஜி.,க்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பெங்களூரு சி.ஐ.டி., டி.எஸ்.பி.,ரவிசங்கர் நாயக்கை பெல்லாரி மாவட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்பது உட்பட பல பரிந்துரைகளை செய்து, தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இருக்கிறார். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்வதை காவல்துறை நிர்வாக வாரியம்தான் தீர்மானிக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட அதிகாரமில்லை.’’ என்கிறார் ஷிமோகாவை சேர்ந்த வழக்கறிஞர் வினோத்.  

முதல்வர் ரியாக்‌ஷன்


முதல்வர் சித்தராமையா, ‘‘அனுபமா ஷெனாய் சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் தனது கடமையை செய்யும்’’ என்று கூறி உள்ளார். 

'நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற முடியாத நிலை'

இதுபற்றி சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர், ‘‘கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு நேர்மையான அதிகாரிகள் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சித்தராமையா ஆட்சி காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமாகி விட்டது. இதனால் எதிர்காலத்தில் நேர்மையான அதிகாரிகளை பார்க்க முடியாத நிலை ஏற்படும். பாதிக்கப்பட்ட பெண் டி.எஸ்.பி., அனுபமா ஷெனாயை நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவருக்கு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினால் மட்டுமே மாநிலத்தில் அனுபமா ஷெனாய் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்படும். 

ஆனால் முதல்வர் சித்தராமையா நேர்மையான அதிகாரிகளைப் பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகத்  தெரியவில்லை. அனுபமா ஷெனாய் சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு பயந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, 'சட்டம் தனது கடமையை செய்யும்' என முதல்வர் சித்தராமையா தெரிவித்து இருப்பது பொறுப்பற்ற முறையில் பதில் அளிப்பதாக உள்ளது. இதனால் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது’’ என்று காட்டமாக கூறியுள்ளார்.


ஃபேஸ்புக்கில் சவால் விட்ட அனுபமா

இந்நிலையில் ராஜினாமா செய்த டி.எஸ்.பி., அனுபமா ஷெனாய் தன்னுடைய முகநூல் பக்கத்தில்,' நான் ராஜினாமா செய்து விட்டேன். மக்களுக்கு சேவை செய்வதாக சொல்லும் நீ எப்பொழுது ராஜினாமா செய்யப் போகிறாய்?' என்று கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சருக்கு கேள்வி எழுப்பி உள்ளது கர்நாடகம்  முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த  ஞாயிற்றுக்கிழமையன்றும், " முதல்வர் சித்தராமையா 'ரம் ராஜ்ஜியம்' நடத்திக்கொண்டிருப்பதாக அனுபமா தனது ஃபேஸ்புக் பதவில் குற்றம் சாட்டி இருந்தார்.
 அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகளுக்கு எதிராக தாம் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதற்காக தமக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அனுபமா குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் அவ்வாறு வழக்குப்பதிவு செய்தால் அது இன்னும் கூடுதலான அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திவிடும் என தயங்கிக்கொண்டிருக்கிறது கர்நாடக அரசு.  

என்று தீரும் காவல்துறையில் அரசியல் தலையீடு? 

-வீ.கே.ரமேஷ்

'டிஸ்லெக்‌ஸியா' மாணவர்கள்... ஆசிரியர்களின் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்?

'உங்க பொண்ணு/ பையன் எழுதுறதல அவளோ மிஸ்டேக் வருது... இதுக்கு மேல இவனுக்கு எப்படி சொல்லி கொடுக்கிறதுன்னே புரியல...!" என்று குறைபட்டுக் கொள்ளும் ஆசிரியர்களால் நொறுங்கிப்போவது பெற்றோர்களும் மாணவர்களும்தான்.
இதில் ஆசிரியர்களுடைய எண்ணங்கள், அணுகுமுறைதான் மாற வேண்டும்" என்கிறார் சேலத்தில் ஹெலிக்ஸ் ஓப்பன் ஸ்கூல் அண்ட் லேர்னிங் சென்டர் (Helikx Open School and Learning Centre) என்னும் பள்ளியை நடத்திவரும் செந்தில்குமார்.

'' சிறு வயதில் மெதுவாகக் கற்கும் பிரச்னை எனக்கே இருந்தது. பள்ளிப் பாடங்களை எழுதும்போது எக்கச்சக்கமான எழுத்துப் பிழை வரும். தொடர்ந்து அரை மணி நேரத்துக்கு உட்கார்ந்து படிக்க முடியாது. இந்த மாதிரி பல சிரமங்களுடன்தான் நான் வளர்ந்தேன். பத்தாம் வகுப்பில் எனக்கு 37 மார்க் போட்ட ஆசிரியரைத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். அந்த மார்க் எனக்கு கிடைக்காமல் போயிருந்தால், நான் என்ன ஆயிருப்பேன் என்று எனக்கே தெரியாது.
பிறகு கோவை பி.எஸ்.ஜி.யில் சோஷியல் ஒர்க் படித்தபோது, பள்ளிகளில் திரும்பத் திரும்ப ஃபெயில் ஆக்கப்படும் மாணவர்கள் மீது என் கவனம் குவிந்தது. 'ஏன் சில மாணவர்களுக்கு மட்டும் இப்படிப்பட்ட சிரமங்கள் ஏற்படுகின்றன, என்ன செய்தால் அவர்களை இந்தச் சிக்கல்களிலிருந்து காப்பாற்ற முடியும்?' என்று யோசிக்க ஆரம்பித்தேன். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் இருந்தபோதும், இது தொடர்பான அரசுக் கொள்கைகள் அனைத்தையும் எடுத்துப் பார்த்தேன்.
அரசுத் தரப்பில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் எல்லாமே சரியாகத்தான் இருந்தன. வழக்கம் போல அவற்றை செயல்படுத்துவத்தில்தான் பல விதமான பிரச்னைகள். இந்த விஷயத்தில் ஆசிரியர்களின் அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட வேண்டும். மெதுவாக கற்கும் மாணவர்கள் பற்றிய அறிவியல்பூர்வமான விஷயங்கள், பள்ளி ஆசிரியர்களுக்கு சொல்லித் தரப்பட வேண்டும். அடுத்த முக்கிய மாற்றம், பெற்றோர்களிடம் ஏற்பட வேண்டும். இது மாதிரி பிரச்னை உள்ள குழந்தைகளை எந்தக் காரணம் கொண்டும் வெறுத்து ஒதுக்கக் கூடாது.
 

ஒரு மாணவன் பள்ளியில் மெதுவாக கற்கும் பிரச்னையினால் பாதிக்கப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். இது பரம்பரைப் பழக்கமாக வரலாம். சிலர் பிறந்தபின் காலதாமதமாக பேசத் தொடங்கி இருக்கலாம் அல்லது நடக்கத் தொடங்கி இருக்கலாம். வீட்டிலோ, பள்ளியிலோ, கற்பிக்கும் சூழலிலோ ஏதாவது குறை இருந்தாலும் இது மாதிரியான பிரச்னை வரலாம்.
நமது பள்ளிகளில் ஐ.க்யூ ( IQ)  அடிப்படையில் குழந்தைகளைப் பிரிக்கிறார்கள். பொதுவாக, 75 - 89 வரை ஐ.க்யூ இருப்பவர்கள் 'ஸ்லோ லேனர்' என்று சொல்லப்படுகிற மெதுவாக கற்கும் குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், 90-க்கு மேலே, சராசரி கற்றல் திறன் கொண்டவர்கள் என்றாலும் இவர்களில் சிலருக்கு சரியாக படிக்க வராது. தப்பும் தவறுமாக எழுதுவார்கள். படித்ததை மறந்துவிடுவார்கள். இந்தக் குறைபாடு கொண்டவர்கள்தான்  'டிஸ்லெக்ஸியா' பிரச்னையினால் பாதிக்கப்பட்டவர்கள்.  

இந்த வகை மாணவர்களை அடித்துப் படிக்க வைப்பதைவிட, இவர்களுக்கு எப்படி சொல்லித் தரவேண்டும் என்பதை புரிந்துகொண்டு கற்றுக் கொடுத்தால் தீர்ந்தது பிரச்னை. எனவே, இது மாதிரியான பிரச்னை கொண்ட மாணவர்களுக்குக் கற்றுத் தருவதற்காக, நாங்கள் மாற்று முறை பயிற்சித் திட்டத்தை (Remedial teaching) பின்பற்றி வருகிறோம். 

உதாரணமாக, ஆங்கிலத்தில் 'cat' என்றால் 'கேட்' என்று நம்மில் பலரும் படிப்போம். ஆனால், டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட மாணவர்கள் இதனை 'காட்' என்று படிப்பார்கள். இவர்களுக்கு ஒலி அடிப்படையில் இந்த வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதன் மூலம் இந்தப் பிரச்னையைத் தீர்க்கலாம்.
தவிர, இது மாதிரி உள்ள குழந்தைகளை எப்போதும் படிக்கச் சொல்லி துன்புறுத்தக் கூடாது. படிப்பு தவிர, உடல் உழைப்புக்கு முக்கியத்துவம் தருகிற மாதிரி பல வேலைகளைக் கற்றுத் தரவேண்டும். நாங்கள் நடத்தும் பள்ளியில் மாணவர்களுக்கு விவசாயம் கற்றுத் தருகிறோம். வித்தியாசமாக படம் வரையக் கற்றுத் தருகிறோம். கம்ப்யூட்டரில் அனிமேஷன் படங்களை வரையவும் கற்றுத் தருகிறேன். இதன் மூலம் 10-வது படித்தபின் அவர்கள் வெறும் படிப்பை மட்டுமே நம்பி காலத்தை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்க மாட்டார்கள். 
 

மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்கென ஒரு பள்ளியை சேலத்தில் நாங்கள் நடத்துகிறோம். இது மாதிரியான மாணவர்களுக்கு கற்றுத் தரும் ஆசிரியர்கள்,  இந்த வகை மாணவர்களை எப்படி அணுக வேண்டும் என்பதை கற்றுத் தர ஈரோடு, திருப்பூர், கரூர், கோவை ஆகிய நகரங்களில் மையங்களை நடத்தி வருகிறோம். தமிழகத்தின் பல நகரங்களில் இது மாதிரியான பிரச்னை கொண்ட குழந்தைகள் நிறைய இருப்பதால், ஆசிரியர்கள் அனைவருக்குமே இந்த பயிற்சி அவசியம்.
மெதுவாக கற்பது ஒரு பிரச்னையே அல்ல. நோய் நாடி நோய் முதல் நாடி என்கிற விதத்தில் அணுகினால், இதனை எளிதாகத் தீர்க்கலாம். இதனால் குழந்தைகளை தேவை இல்லாமல் வாட்டி வதைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது'' என்றார் செந்தில்குமார்.
டிஸ்லெக்ஸியா பற்றிய போதுமான விழிப்பு உணர்வு நம் மக்களிடம் இல்லை . மூளை வளர்ச்சிக் குறைபாடுகளான ஆட்டிசம், டவுண் சிண்ட்ரோம் ஆகியவற்றுக்கும், நரம்புகளை அதிர்வலைகள் மூலம் செயல்படவைக்கும் செல்களான நியூரான்களின் செயல்திறன் குறைபாடான டிஸ்லெக்ஸியாவுக்கும் உள்ள வேறுபாட்டை, முதலில் பெற்றோர்களும்  ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
சரியாகப் படிக்கவில்லை என்பதற்காக குழந்தைகள் ஒதுக்கப்படும் நிலையை இனியாவது தவிர்ப்போம்!

பஸ் டிரைவர் ஓட்டம்: பயணிகள் தவிப்பு

DINAMALAR

திருமங்கலம்:திருநெல்வேலியிலிருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு தனியார் ஆம்னி பஸ் புறப்பட்டது. துாத்துக்குடி நடுவீர்பட்டி டிரைவர் கோமதிநாயகம், 42, பஸ்சை ஓட்டினார்.பஸ்சில், எட்டு பெண்கள், இரு குழந்தைகள், இன்ஜினியரிங் கவுன்சிலுக்கு செல்லும் மாணவர்கள் என, 32 பேர் இருந்தனர். கோவில்பட்டியில் ரோட்டோரம்,15 நிமிடங்கள் பஸ்சை நிறுத்திய டிரைவர், பஸ்சிலேயே மது அருந்தினார். அதிர்ச்சியுற்ற பயணிகள் டிரைவரிடம், 'பஸ்சை ஓட்டக் கூடாது' என்றனர்.

''பயப்படாதீங்க... சரக்கு அடிச்சா ஸ்டெடியா ஓட்டுவேன்,'' எனக் கூறி, டிரைவர் பஸ்சை ஓட்டியுள்ளார். தொடர்ந்து, பயணிகள் சத்தமிட, கிளீனரிடம் பஸ்சை ஓட்டும்படி டிரைவர் கூறியுள்ளார். பயந்த பயணிகள், தொடர்ந்து பஸ்சை நிறுத்த கோரி கூச்சல் போட்டுள்ளனர். பின், கோமதிநாயகம் ஓட்டியுள்ளார்.

இரவு, 11:00 மணிக்கு கப்பலுார் ரிங் ரோட்டில் சென்றபோது, எதிரே வந்த லாரி மீது பஸ் உரசியதில், கண்ணாடி உடைந்தது. பயணிகள் கோமதி நாயகத்திடம் வாக்குவாதம் செய்தனர்.

முழு போதையில் இருந்த அவர், எதிரே வந்த தங்கள் நிறுவன வேனை நிறுத்தி, அதில் ஏறி தப்பி விட்டார். கிளீனரும் தப்பிவிட, பயணிகள், திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, மாற்று பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு

பயணிகள் சென்றனர்.

Tuesday, June 7, 2016

அமெரிக்க பல்கலை.யில் இருந்து 25 இந்திய மாணவர்கள் வெளியேற்றம்!


நியூயார்க்: அமெரிக்காவிலுள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வரும் 25 இந்திய மாணவர்களை வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, கென்டக்கி மாகாணம், பவுலிங் கிரீன் நகரில் மேற்கு கென்டக்கி பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு கம்ப்யூட்டர் அறிவியல் பட்டப்படிப்பில், இந்தியாவைச் சேர்ந்த 60 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்த பல்கலைக்கழகத்தில் முதல் பருவ தேர்வுகள் நடைபெற்றது. இதில், இந்திய மாணவர்கள் 25 பேர் பல்கலைக் கழகத்தின் அனுமதி தரநிலைகளை எட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அந்த மாணவர்கள் 25 பேரையும் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த பல்கலைக்கழகத்தின் கம்ப்யூட்டர் அறிவியல் திட்டத்தின் தலைவர் ஜேம்ஸ் கேரி கூறுகையில், ''முதல் பருவ தேர்வில் இந்தியாவைச் சேர்ந்த 40 மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் அனுமதி தரநிலைகளை எட்டவில்லை. ஆனால், இந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழகம் உதவி செய்துள்ளது. இந்த மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் புரோகிராம்களை எழுத தெரியவில்லை. இது அமெரிக்க இளநிலை பட்டதாரிகளுக்கான படிப்பில் சேர அடிப்படை விதியாகும்.

இந்த மாணவர்கள் கம்ப்யூட்டர் புரோகிராம்களை எழுத தெரியாமல் சென்றால் எனது துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தும். எனவே, அவர்களை தொடர அனுமதி அளிக்க முடியாமல் இருக்கிறோம்'' என்றார்.

டாக்டரின் உயிரை பறித்த 'வழுக்கை'..! வினையாகிப் போன விளம்பரம்


மனிதனை அழகாக காட்டுவதில் தலைமுடிக்கு முக்கிய பங்கு உள்ளது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் பல்வேறு காரணங்களால் இளம் வயதிலேயே தலைமுடி கொட்டி வழுக்கை தலையுடன் வலம் வருபவர்கள் பலர் இருக்கிறார்கள். இத்தகையவர்களை குறி வைக்கும் சில அழகு நிலையங்கள் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து வழுக்கை தலைக்கு சொந்தகாரர்களை கவருகின்றன. இதனால் ஏமாந்தவர்கள் பலர். அதை வெளியில் சொல்ல முடியாமல் தவிப்பவர்களும் உண்டு. பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் சேர்ந்த வேலூர் மாவட்டம், ஆரணியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் சந்தோஷ்குமார், முடி வளர ஆசைப்பட்டு உயிரையே விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பை முடித்த சந்தோஷ்குமார், பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு தலையில் வழுக்கை விழ, எல்லோரைப் போல அவரும் மனம் வருந்தினார். அப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அழகு நிலையத்தின் விளம்பரத்தை அவர் பார்த்துள்ளார். அங்கு சென்று தன்னுடைய வருத்தத்தை சொல்ல.. 'இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு தலையில் முடியை நட்டி பழைய சந்தோஷ்குமாராக மாற்றி விடுகிறோம்' என்று அங்குள்ளவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதன்படி கடந்த மே மாதம் சந்தோஷ்குமார் அங்கு சென்றார்.

முடி நடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தலையில் ஊசி மூலம் முடிகளை நடும் போது வலியை பொறுத்துக் கொள்ள டாக்டர் ஹரிபிரசாத், சந்தோஷ்குமாருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். காலையிலிருந்து மாலை வரை முடி நடும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சையை டாக்டர் வினித் செய்துள்ளார். அப்போது, சந்தோஷ்குமாருக்கு தலைசுற்றல், மயக்கம் வந்துள்ளது. உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவர்கள் சந்தோஷ்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர். இதன்பிறகு நிலைமை மோசமானதும் வேலூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் சந்தோஷ்குமார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து சந்தோஷ்குமாரின் பெற்றோர், மகனுக்கு இறுதி சடங்கு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சந்தோஷ்குமாரின் குடும்பம் தரப்பில் யாரும் போலீசுக்கு புகார் கொடுக்கவில்லை. இதனால் அவரது உடல் பிரேத பரிசோதனையும் செய்யப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவத்துறை சார்பில் மருத்துவ கவுன்சிலுக்கு புகார் செய்யப்பட்டது. உடனடியாக களமிறங்கியது மருத்துவ கவுன்சில். இதுகுறித்து தமிழக மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் செந்தில் விசாரணை நடத்தி வருகிறார். சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

டாக்டர் செந்திலிடம் கேட்ட போது, "மயக்க மருந்து கொடுத்து விட்டு கடைசி வரை நோயாளியின் அருகில் இருக்காமல் சென்ற மயக்கவியல் டாக்டருக்கும், அறுவை சிகிச்சை தகுதி பெறும் முன்பே சிகிச்சை அளித்தது எப்படி? என்பது பற்றி டாக்டர் வினித்திடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பியூட்டி பார்லர் மற்றும் சலூன், முடிவெட்டவும், அழகு கலைக்காகவும் அனுமதி பெற்றுள்ளது. முடி நடும் சிகிச்சைக்கு அனுமதி பெறவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் அந்த பியூட்டி பார்லருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

மருத்துவத்துறை வட்டாரங்கள் கூறுகையில், "பண சம்பாதிக்கும் ஆசையில் மக்களின் உயிரோடு விளையாடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அழகு நிலையங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் முறைகேடாக நடக்கின்றன. முடி நடுவதற்காக 50 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை கட்டணமாக வசூலிக்கிறார்கள். அதை நம்பி பலர் ஏமாந்து செல்கிறார்கள். 40 வயதை கடந்த பெண்கள் முகத்தில் விழும் சுருக்கத்தை பார்த்து துடித்து போகிறார்கள். அதை போக்குவதற்காக ‘போட்டாக்ஸ்’ என்ற ஊசியை போட்டுக் கொள்ளும் சம்பவங்களும் நிகழ்கின்றன. சரியான மருத்துவ உபகரணங்கள், டாக்டர்கள் வசதி இல்லாமல் இந்த மாதிரி சிகிச்சை அளிப்பது குற்றமாகும். உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும். எனவே மக்கள் விழிப்பு உணர்வாக இருக்க வேண்டும். அழகுக்கு ஆசைப்பட்டு உயிரை இழப்பதை தவிர்க்க வேண்டும். இதுபோன்ற அழகு நிலையங்கள் குறித்து மருத்துவ கவுன்சிலிடம் புகார் கொடுக்கலாம்" என்றனர்.

எஸ்.மகேஷ்

தன்னை உயர்த்த அடுத்தவரை தாழ்த்தலாமா?

DINAMANI

By இரா. சோமசுந்தரம்

பிகார் மாநிலத்தில் இன்டர்மீடியட் தேர்வு முடிவுகளில் மாநில அளவில் தரவரிசையில் இடம்பெற்ற முதல் 14 மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி, உண்மையாகவே அந்த கேள்விகளுக்கு அவர்கள்தான் விடையளித்தார்களா என்பதைக் கண்டறிந்துள்ளது அம்மாநில கல்வித் துறை.
 இதற்குக் காரணம், அந்த மாணவ, மாணவிகளிடம் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டி கண்ட போது, அடிப்படையான கேள்விகளுக்கும்கூட அவர்கள் தப்பான பதில்களை அளித்ததாக ஒளிபரப்பாகி, பிகார் மாநிலத்தின் கல்வித்துறையை கேலிக்கு இடமாக்கியுள்ளது என்பதுதான். இருப்பினும், பிகார் மாநில கல்வித் துறை இவ்வளவு அவசர அவசரமாக, அவர்களுக்குத் தேர்வு நடத்தும் முடிவுக்கு வந்திருக்க வேண்டியதில்லை.
 தமிழ்நாட்டில் தரவரிசையில் இடம்பெற்ற மாணவர்களைக்கூட இவ்வாறு திடீரென கேமிரா முன்பாக நிறுத்திவைத்து, கேள்விகள் கேட்டால், அந்த மாணவ, மாணவியர் பதற்றமாகிவிடுவார்கள். அவர்களால் சரியாக பதில்சொல்ல முடியாது. 
 ஆங்கிலத்தில் 100 மதிப்பெண் வாங்கிய மாணவரிடம் ஒரு வடநாட்டு தொலைக்காட்சி நிறுவனம் நுனிநாக்கு ஆங்கிலத்தில் கேள்வி கேட்டால், அவரால் அந்தக் கேள்வியைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கும். 
 அந்தக் கேள்விக்கு ஆங்கிலத்திலேயே "பொளந்துகட்ட' வேண்டும் என்று அந்த தொலைக்காட்சி நிறுவனம் எதிர்பார்த்தால், அவ்வாறு நடக்கவில்லை என்பதற்காக அந்த மாணவரைத் தரம் தாழ்த்தினால், அதை நாம் அனுமதிப்போமா?
 தரவரிசையில் இடம்பெறும் மாணவர்கள் பலருக்கு விடையை மனப்பாடமாக எழுத மட்டுமே தெரியும். அவர்களிடம் பதிலைச் சொல்லும்படி சொன்னால் திணறிப் போவார்கள். கோர்வையாக எடுத்துவைக்கத் தெரியாது. 
 ஏனென்றால், அவர்களது பயிற்சி முழுதும், ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியான கேள்விக்கு ஒரே மாதிரியான விடைகளை எழுதிக்கொண்டே இருப்பதுதான். கேள்வியை கண்கள் பார்க்கும், விடையை கைகள் எழுதும். மூளைக்கு அங்கே வேலையே இல்லை. மதிப்பெண் பெறுவதற்காக விடைகளை எழுத மட்டுமே பயிற்சி தரப்படுகிறது. 
 பெங்களூருவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சுதா மூர்த்தி (இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி) ஒரு பள்ளியில் சிறுவர்களுக்காக தான் எழுதிய கதையை வாசித்தார். அப்போது ஒரு சிறுவன் எழுந்து, உங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்று கூறினான். ஆசிரியர்களின் மழுப்பல்களை மீறி, அந்தச் சிறுவனிடம் அவர், ஏன் அப்படிச் சொன்னாய்? என்று கேட்டார். 
 பேசியதில் அந்தச் சிறுவன் பள்ளி நாடகத்தில் ஏற்றஇறக்கத்துடன் பேசிப் பழகியிருந்ததை அறிந்துகொண்டு, "என் கதையைப் படிக்க முடியுமா?" என்று அந்தச் சிறுவனிடம் கேட்டார். சிறுவனும் கதையை வாசித்தான்; சுதா மூர்த்தியைவிட மிக அழகாக! "அப்போதுதான் எனக்குப் புரிந்தது. எழுத மட்டுமே எனக்குத் தெரியும்!' என்று கட்டுரையை முடிக்கிறார் சுதா மூர்த்தி.
 இன்றைய கல்விச் சூழலில் பல மாணவ, மாணவியருக்கு எழுத மட்டுமே தெரியும். அவர்களை குறுக்குக்கேள்வி கேட்டு, மடக்குவது எளிது. அதை புத்திசாலித்தனமான அராஜகம் அல்லது அறிவீனம் என்று எப்படியும் எடுத்துக்கொள்ளலாம். பிகாரில் குறை கூறப்பட்டுள்ள இந்த ஏழு மாணவ, மாணவியரும் ஒரே இடத்தில் தேர்வு எழுதியவர்கள் அல்லர். அவர்களும்கூட கேள்விக்கு, இயந்திரத்தனமாக, புரிதல் இல்லாமல் பதில் எழுதியவர்களாக இருக்கலாம்.
 ஒரு தொலைக்காட்சி நிறுவனம், ஒரு மாநிலத்தின் கல்வித் தரத்தை சோதிப்பதாக இருந்தால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாநிலத்திலும், மாவட்ட அளவிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் பட்டியலை எடுத்து, அந்த மாணவர்கள் இப்போது என்னவானார்கள்? அவர்கள் உயர் கல்வியில் தேர்ச்சி பெற முடிந்ததா? 
 அதே அறிவுத்திறத்துடன் கல்லூரிகளைவிட்டு வெளியேறி, பேரும் புகழும் மிக்கவர்களாக அறிவுலகில் இயங்குகிறார்களா என்பதை தேடிச் சென்று, மதிப்பீடு செய்வதுதான் சரியாக இருக்க முடியும். அதுதான் கல்வித் துறையின் பலவீனங்களை அம்பலப்படுத்துவதாக அமையும். அதைவிடுத்து, மாணவ - மாணவியரை கேள்வி கேட்டு, அவர்களை அறிவு இல்லாதவர்களாக சித்திரிப்பது முறையற்ற செயல்.
 காப்பியடித்தல், வினாத்தாள் முன்கூட்டியே வெளியாதல், வேறுநபர் தேர்வு எழுதுதல் எல்லாவற்றுக்கும் சாத்தியம் இருக்கிறது என்றாலும், இத்தகைய பேட்டி வெளியானவுடன், பிகார் மாநில கல்வித் துறை அதிகாரிகள் அந்த மாணவ, மாணவியர் படித்த பள்ளியில் அவர்களது காலாண்டு, அரையாண்டு விடைத்தாள்களை எடுத்துப் பார்த்து ஒப்பீடு செய்திருக்கலாம். அப்பள்ளியின் மற்ற மாணவர்களிடம் அவர் உண்மையாகவே வகுப்பறையில் சிறந்து விளங்கினாரா என்று விசாரித்திருக்கலாம். அதைவிடுத்து, மறுதேர்வு நடத்தியது தவறான முன்னுதாரணம். 
 நாடு முழுவதும் கற்பித்தல் முறை, மதிப்பிடும் முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்; ஒரு மாணவர் ஒரேயொரு தேர்வில் பெறும் மதிப்பெண் மட்டுமே அவருடைய கல்வித்திறனாக மதிக்கப்படும் நிலை மாற வேண்டும் என்பது உண்மை. 
 மேலும், ஒரு கல்வியாண்டில் இரு பருவம் அல்லது மூன்று பருவத் தேர்வுகளில் கிடைக்கும் மதிப்பெண்களின் சராசரியைக் கொண்டு மதிப்பிடவாகிலும் செய்யலாம். தற்போதைய கல்வி நடைமுறைகள் சரியில்லை என்பதற்காக, தரவரிசையில் இடம்பெறும் மாணவர்கள் புத்திசாலிகள் அல்ல என்பதை இப்படியெல்லாம் நிரூபிக்க வேண்டியதில்லை.
 கல்வித் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்துவது மட்டுமே ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தின் குறிக்கோளாக இருந்தால், பாராட்டலாம். டி.ஆர்.பி. ரேட்டிங்கை (தொலைக்காட்சி தரப் புள்ளியை) உயர்த்திக்கொள்வதற்காக இப்படியா?

எதிர்கால முதியவர்களுக்கு...


சுதந்திர இந்தியா சாதித்துள்ள எத்தனையோ விஷயங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று ஆயுள் நீட்டிப்பு ஆகும். 1960-களில் இந்தியரின் சராசரி ஆயுள்காலம் 42 ஆண்டுகளாக இருந்ததென்றும், அது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இப்போது சுமார் 66 ஆண்டுகளைத் தொட்டிருப்பதாகவும் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அறிக்கை தெரிவிக்கிறது.
மருத்துவ வசதிகளின் பெருக்கம், மருத்துவமனைகளின் பரவல், தீவிரத் தொற்று நோய் ஒழிப்பு இயக்கங்கள், ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகிய பல காரணிகளால் ஓர் இந்தியக் குடிமகனின் சராசரி ஆயுள் இந்த அளவுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
எல்லாம் சரி! நீட்டிக்கப்பட்டிருக்கும் அந்த ஆயுள் நிம்மதியான வாழ்வுக்கு வழிவகை செய்திருக்கிறதா என்றால், இல்லை என்பதே அதற்கான விடையாக இருக்கும்.
இரண்டில் ஒரு முதியவர் ஆதரவின்றி இருப்பதாகவும், மூன்றில் ஒரு முதியவர் வசைச் சொற்களுக்கு ஆளாவதாகவும், நான்கில் ஒரு முதியவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், அறுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கள் மகன்-மருமகள் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்களிடம் வசைச்சொல் கேட்பவர்களாகவும் இருப்பதாக இன்னோர் ஆய்வுத்தரவு எடுத்துக் கூறுகிறது.
கண்பார்வைக் கோளாறு, மூட்டுவலி இல்லாத முதியோரைப் பார்ப்பதே அரிது எனலாம். உழைக்கும் வலிமையின்றி, வருமானமும் வறண்டு போன நிலையில் இருக்கும் முதிய வயதினரை அவர்களது குடும்பத்தினர்களே சுமையாகக் கருதும் காலம் இது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முதியோர் இல்லங்கள் பெருகியிருப்பது ஒன்றே இன்றைய இந்தியக் குடும்பங்களில் முதியோர் பெறும் முக்கியத்துவத்தை உணர்த்தும்.
தமிழ்நாட்டில் கோயமுத்தூர் மாவட்டத்தில் மட்டும் 33 முதியோர் இல்லங்கள் இருக்கின்றன என்றால், நாடு முழுவதும் எத்தனை முதியோர் இல்லங்கள் இருக்கக் கூடும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
வருமானம் ஏதுமில்லாத முதியோர்கள் மட்டும்தான் புறக்கணிப்புக்கு ஆளாவதாகக் கூறிவிடவும் முடியாது. சொத்து சுகம், ஓய்வூதியம் போன்றவற்றைப் பெற்றிருக்கின்ற முதியோர்களும்கூட இத்தகைய புறக்கணிப்பிறகு ஆளாகின்றனர்.
ஓய்வூதியமும் சுமார் 30 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கே கிடைக்கிறது என்பது ஒருபுறமிருக்க, புதிய தலைமுறை மத்திய-மாநில அரசு ஊழியர்களுக்கு அந்தச் சலுகை நீட்டிக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பழைய ஓய்வூதியம் தொடர வேண்டுமென்ற கோரிக்கையே இப்போது அரசு ஊழியர்கள் முன்வைக்கும் முக்கியக் கோரிக்கையாகிவிட்டது. நிதிச்சுமையைக் காரணம் காட்டி ஓய்வூதியக் குறைப்பு அல்லது தவிர்ப்பு என்ற நிலைமையை நோக்கியே மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகளும் பயணிக்கின்றன.
நான் நீண்ட காலமாக வழிபடச் செல்லும் ஒரு கோயிலின் வாசலில் சுமார் 70 வயதுள்ள, படிப்பு வாசனை உள்ளவர்போல் தோற்றமுள்ள ஒரு பெண்மணி பிச்சை எடுப்பது வழக்கம். ஒவ்வொரு மாதத்தின் முதல் ஓரிரண்டு நாள்கள் மட்டும் பிச்சை எடுக்க அந்தப் பெண்மணி வருவதில்லை. ஏன் என்று விசாரித்ததில், கிடைத்த தகவல் அதிர வைத்தது.
உண்மையில் அந்தப் பெண்மணி ஓர் ஓய்வு பெற்ற ஆரம்பப் பள்ளி ஆசிரியை. அவருடைய ஒரே அருமை மகன், மாதத்தின் முதலிரண்டு நாள்கள் மட்டும் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாடு போட்டு, அவரது ஓய்வூதியப் பணத்தை முழுவதுமாக வாங்கிக்கொண்டு, பிறகு அந்தக் கோயிலின் வாசலில் மறுபடியும் பிச்சை எடுக்கச் சொல்லிக் கொண்டு வந்து விட்டுவிடுகிறானாம்.
இன்னொரு காட்சி, கோயமுத்தூரைச் சேர்ந்த 77 வயது முதியவர். இவர் ஓர் ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர். இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். அனைவரும் திருமணமானவர்கள். பெற்றெடுத்த செல்வங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்துவிட்ட திருப்தியுடன் தம்முடைய மனைவியுடன் தனியே வசித்து வந்தார் அந்த முதியவர்.
சில மாதங்களுக்கு முன்பு மனைவியும் காலமாகி விட்டார். முதுமையின் காரணமாகத் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள முடியாத நிலையில், தம்முடைய இரண்டு மகன்கள் மற்றும் மகளை அழைத்து, தன்னை அவர்களுடன் வைத்துக் கொள்ளும்படிக் கேட்டிருக்கிறார். இத்தனைக்கும் அவரது பராமரிப்புக்கு வேண்டிய பணம் அவரது ஓய்வூதியம் மூலமாகவே கிடைத்துவிடும்.
ஆனாலும், அவரை ஏற்க மறுத்த அவருடைய வாரிசுகள், அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேரும்படிக் கூறிவிட்டு அவரவர் வீடு திரும்பியிருக்கிறார்கள். மன உளைச்சலில் இருந்த அந்த முதியவர் சென்ற வாரம் தற்கொலை செய்து கொண்டார். ஓய்வூதியம் என்ற பாதுகாப்பு இருந்தும் மேற்படி பெண்மணிக்கும், முதியவருக்கும் உறவினரின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதே இங்கு அறிய வேண்டியது.
இவை எல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதுதான் என்றாலும், ஒவ்வொரு வீட்டிலும் வயது முதிர்ந்தவர்களை வேண்டாத பாரமாகக் கருதும் போக்கு முன்னெப்போதையும்விட அதிகரித்து வருகிறது என்பதே உண்மை. இதைத்தவிர, இன்னொரு உண்மையையும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இன்றைய இளம் பிராயத்தினர் அனைவரும் முதுமையை அடைந்தே தீர வேண்டும். இன்றைய முதியவர்களுக்கு நேர்வதைத்தான், இன்றைய இளைஞர்கள் தங்களது முதுமைப் பிராயத்தில் சந்திக்கவேண்டி இருக்கும்.
தங்களது எதிர்கால நலத்துக்காக அதாவது சுயநலத்துக்காகவேனும் தங்களைப் பெற்றவர்களைக் கைவிடாமல் இருக்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில், நீங்கள் உங்கள் பெற்றோருக்குச் செய்யும் எல்லாவற்றையும் உங்கள் வாரிசுகள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

எஸ். ஸ்ரீதுரை

வாழும் எண்ணம் பவித்திரமானது!

பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களிடம் நிருபர்கள் பொதுவாகக் கேட்கிற கேள்வி: நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்? நான் உயிரோடு, துடிப்பாக இருக்க விரும்புகிறேன்  என்று யாராவது சொல்லியிருப்பர்களா தெரியாது! சொன்னால், அது ஏனோதானோ பதிலாக இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. காரணம், அதில் அவர்களது அடுத்த  30, 40 ஆண்டு வாழ்க்கைச் சுருக்கமே, அணுகுமுறையே அடங்கிவிட வாய்ப்பிருக்கிறது.
ஐம்பது வயதில் கைநிறைய சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும்போதே பதவி உயர்வு உரிய நேரத்தில் வரவில்லை என்று காரணம் சொல்லி, வயதான பெற்றோரையும் குடும்பத்தையும் நிர்கதியில் விட்டுத் தற்கொலை செய்து கொள்ளும் ஆட்களைப் பார்க்கிறோம்.
ஆனால், இதற்கு முன்பு பெற்ற நான்கைந்து பதவி உயர்வால் எவ்வளவு மனநிறைவு, எவ்வளவு நாள் பெற்றோம், அது எத்தனை நாள் நீடித்தது என்று அவர்கள் ஒரு நொடி திரும்பிப் பார்ப்பதில்லை. அந்தப் பக்கம், பதவி உயர்வு பெற்று பழக்கப்படாத இடத்தில் விழிபிதுங்கி நொந்து நூலாகிக் கொண்டிருக்கும் தம் நண்பர்களையும் பார்ப்பதில்லை. சம்பளம் அதிகம், அதிகாரம் அதிகம், மற்றவர்களை உருட்ட, மிரட்ட வாய்ப்புகள் அதிகம்.. இதுதான் மனநிறைவுக்கும் முன்னால் நிற்கிறது.      
நவீன உலகில் மனஉளைச்சல், முறிவு ஆகியவை அதிகம் என்று சொல்லி நிறைய மருத்துவ, மனோதத்துவ மருந்து சொல்கிறார்கள். நானும் எனக்குத் தெரிந்த, ஆனால், கண்டிப்பாக வேலை செய்யும் ஒரு மருந்து சொல்கிறேன். இதற்கு ஆகும் செலவு வெறும் 10 ரூபாய் தான்.
உங்கள் வீட்டின் அருகில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கோ சென்னை கடற்கரைக்கோ "ரிடர்ன் பயணச்சீட்டு' ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து, வெறுமனே வண்டிக்கு உள்ளேயும் வெளியேயும் கூர்ந்து கவனியுங்கள்.
 பல்வேறு உடல்குறைகளையும் பொருள்படுத்தாமல் பர்பியும் சீப்பும் பெல்ட்டும் விற்பவர்கள், கூவம், அடையாறு போன்ற ஆறு, ஏரிக்கரைகளில் குப்பையோடும் பன்றிக் குட்டிகளோடும் வாழும் ஆயிரக்கணக்கான குடிசைவாசிகள், பிச்சைக்காரர்கள், உடல், மனநிலை குன்றியவர்கள், இடுப்பில் கைக் குழந்தை, கையைப் பிடித்துக் கொண்டு இன்னொன்று, தலையில் ஒட்டடைக் குச்சியுடன் பிரதி தினம் காலை முதல் மதியம் வரை தெருக்களில் விற்பனைக்கு இறங்கும் சாதனைப் பெண்மணிகள், ரெண்டு கிலோ, மூன்று கிலோ பொருள்களையே கனக்குது, நீதூக்கி வா என்று சொல்கிற நாகரிகத்தில் ஒரு சாணை பிடிக்கும் எந்திரத்தை இயல்பாக தோளில் நாய்க்குட்டி மாதிரி தூக்கிக் கொண்டு தெருத் தெருவாக அலையும் இஸ்லாமிய நண்பர், பன்னாட்டு நிறுவனத்தின் 15-ஆவது மாடியைக் கட்ட கல், மண் தூக்கும் சித்தாள்கள், கொத்தனார்கள் போன்ற இவர்களையெல்லாம் ஒரு தடவை பார்த்துவிட்டுத் திரும்பி வாருங்கள்.
நீங்கள் தற்கொலை எண்ணத்தை இத்தனைநாள் சுமந்ததற்காக உங்கள் மேல் நீங்களே காறித்துப்பிக் கொள்ளவில்லை என்றால் என்னைக் கேளுங்கள்.
இன்னொரு சம்பவமும் இணையத்தில் பேசப்பட்டது. சில  மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடுமையான வறட்சி. நகரத்தில் உள்ளவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள். வழக்கம்போல் கிராமவாசிகள் 200 அடி, 300 அடி கிணறெல்லாம் வற்றிப்போய் இரண்டு பிளாஸ்டிக் குடங்களுடன் பல மைல்கல் நடந்துவந்து ரயில் நிலையங்களில் தவம் கிடக்கிறார்களாம்.
ஏதாவது ரயில் வந்ததோ இல்லையோ அத்தனை பேரும் ரயில் பெட்டிகளின் கழிவறைக்குள் புகுந்து கிடைக்கிற சுத்த, அசுத்த நீர் எதுவாக இருந்தாலும் ரயில் நிற்கிற நான்கைந்து நிமிடங்களுக்குள் பிடித்துக் கொள்கிறார்களாம். குடிப்பது முதல் கை-கால் கழுவுவது வரை அவர்களுக்கு அதுதான் அன்றைக்கு.
மரணம் பிடரியைப் பிடித்து அழுத்தத்தான் செய்கிறது. ஆனால், வாழ வேண்டும் என்கிற வெறி அவர்களை உயிருடன் விட்டுவைத்திருக்கிறது. ஆக, உயிர்த் துடிப்புள்ள விஷயங்களையே பாருங்கள், கேளுங்கள், யோசியுங்கள்.
நல்ல பல விஷயங்களை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். நான் தனிமனிதன். நான் வேண்டுமானால் நம்பிக்கையுடன் வாழ்வேன். மற்றவர்கள் தற்கொலை செய்துகொள்வதை நான் எப்படி தடுப்பது என்ற கேள்வி உங்களுக்குள் வரலாம்.
வாழ வேண்டும் என்ற எண்ணம் பவித்திரமானது என்ற நினைப்பை உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் விதைத்தாலே போதுமானது.
விழுப்புரம் மாவட்டம் தனியார் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மூன்று பேர் அடிப்படை வசதி கல்லூரியில் இல்லை என்று சொல்லி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்களே. அதன்பின், நாடு முழுதும் கல்லூரி வசதிகள் எவ்வளவு அதிகரிக்கப்பட்டன?
 மாற்றாக, ஒரு செயல் வீரரின் சாகசம் பாருங்கள். திருவாரூர் மாவட்ட காளாச்சேரி மேற்கு கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆனந்த். நான்காண்டுகளுக்கு முன்பு வரை அவர் இருக்கிற 300 வீடுகளில் சிறுவர், முதியவர் என்று வயது வித்தியாசம் பாராமல் தற்கொலைகள் அதிகம். 10 ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட தற்கொலைகள்.
2009-இல் அவர் அந்த கிராமத்திற்கு அடியெடுத்த பிறகு நாடகம், விழிப்புணர்வு பிரசாரம், பேரணி, மக்கள் சந்திப்பு, குறைகேட்கும் நேரம் என்று செய்து நான்கு ஆண்டுகளில் ஒரு தற்கொலை இல்லாதது மட்டுமன்றி வாழ்க்கை, சிந்திக்கும் திறன் என்று கிராமத்தில் எல்லாவகையிலும் முன்னேற்றம்.
தனி மனிதர், வெறும் பள்ளி ஆசிரியரால் இது முடிந்தது என்பதை நினைத்துப் பார்க்க முடிகிறதா?
ஸ்ரீதர்சாமா

கோவை இ.எஸ்.ஐ., மருத்துவ கல்லூரியில் 100 எம்.பி.பி.எஸ்., இடங்களுக்கு அனுமதி



கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரியில், நடப்பு ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சிலான, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது. இதனால், அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 21 ஆகவும்; எம்.பி.பி.எஸ்., இடங்களின் எண்ணிக்கை, 2,760 ஆகவும் உயர்ந்துள்ளன.கோவையில், 520 கோடி ரூபாய் செலவில், இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரி அமைக்கப்பட்டது. இதை, ஜனவரியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிகளை நடத்த முடியாமல் திணறி வரும் மத்திய தொழிலாளர் நலத்துறை, கோவை மருத்துவக் கல்லுாரியை, தமிழக அரசிடம் ஒப்படைத்தது. இந்த கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி கோரி, தமிழக அரசு முறையாக விண்ணப்பித்தது.

ஆய்வு செய்த, எம்.சி.ஐ., பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அனுமதி தர மறுத்தது. குறைபாடுகள் சரி செய்யப்பட்ட நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், 100 எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த, எம்.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.

இது குறித்து, மருத்துவக் கல்வி இயக்குனர் விமலா கூறியதாவது:கோவை மருத்துவக் கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிப்பில், 100 மாணவர்களைச் சேர்க்க, எம்.சி.ஐ., அனுமதி அளித்து உள்ளது. இதில், 15 சதவீதம், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும்; 65 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கும்; 20 இடங்கள், இ.எஸ்.ஐ., தொழிலாளர் வாரிசுகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட கலந்தாய்வில் இந்த இடங்கள் சேர்க்கப்பட்டு, மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

21வது அரசு கல்லுாரி:தமிழகத்தில், கடந்த கல்வி ஆண்டில் அனுமதி பெற்ற, ஓமந்துாரார் அரசு மருத்துவக் கல்லுாரி உட்பட, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. கோவை, இ.எஸ்.ஐ., மருத்துவக் கல்லுாரிக்கு அனுமதி கிடைத்துள்ளதால், அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை, 21 ஆக உயர்கிறது.

ஏற்கனவே, 20 அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2,665 எம்.பி.பி.எஸ்., இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியில், 155 இடங்களில், ஐந்து இடங்களை இந்த ஆண்டு, எம்.சி.ஐ., குறைத்ததால் மொத்தம், 2,660 இடங்கள் உள்ளன. கோவை கல்லுாரியின், 100 இடங்களையும் சேர்த்தால், அரசு கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் எண்ணிக்கை, 2,760 ஆக உயர்ந்துள்ளது.- நமது நிருபர் -

பள்ளிக்கு வந்தால் ரூ.1,000 பரிசு அசத்தும் தலைமையாசிரியர்!

சங்கராபுரம்: அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தலைமையாசிரியர் ஒருவர், 1,000 ரூபாய் பரிசு வழங்கி அசத்தி வருகிறார்.
கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறந்தாச்சு. அருப்புக்கோட்டை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை கவலையளிக்கும் விதத்தில் உள்ளது. ஒரு மாணவிக்கு, இரு ஆசிரியர்கள் உள்ளனர். எல்லா வசதிகள் இருந்தும், அரசு பள்ளிகளை கண்டுகொள்வதில்லை என, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மாணவர் சேர்க்கைக்காக, ஆசிரியர்கள், கிராமம் கிராமமாக சென்று பரப்புரை செய்தும், பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இல்லை என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கொடியனுார் கிராமத்தில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மீது, சுற்றுவட்டார மக்களின் பார்வை திரும்பி உள்ளது. இந்த பள்ளியில், 1ம் வகுப்பு முதல், 5ம் வகுப்பு வரை உள்ளது. இதன் தலைமை ஆசிரியராக சுரேஷ் பணிபுரிகிறார்.
கோடை விடுமுறையின்போது, கிராமம் முழுவதும் வீதி வீதியாகச் சென்று, 'கொடியனுார் பள்ளியில் புதிதாக மாணவர்களை சேர்த்தால், ஒரு மாணவருக்கு, தலா,1,000 ரூபாய் பரிசாக வழங்கப்படும்' என, கிராம மக்களிடம், தலைமை ஆசிரியர் சுரேஷ் தெரிவித்தார்.
தலைமை ஆசிரியர் கூறியதை ஏற்றுக் கொண்ட பெற்றோர், கடந்த, 1ம் தேதியன்று, பள்ளி திறக்கப்பட்டதும், தங்கள் பிள்ளைகளை வெளியூர் பள்ளிகளுக்கு அனுப்பாமல், கொடியனுார் அரசுதொடக்கப் பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
பள்ளி திறந்த முதல், இரு நாட்களில் மட்டும், 10 மாணவர்கள் புதிதாக பள்ளியில் சேர்ந்துள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும், தான் அறிவித்தது போல, தன் சொந்த பணத்தில், தலா, 1,000 ரூபாயை சுரேஷ் வழங்கினார்.
இதனால், இப்பள்ளியில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை ஆர்வமுடன் சேர்க்கின்றனர். ஓட்டுக்காக, பணம் பட்டுவாடா செய்யும் அரசியல்வாதிகள் மத்தியில், எதிர்கால சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யப்படும், தலைமையாசிரியரின் இந்த முயற்சி பாராட்டுக்குரியது.

ஆஸ்திரேலிய இயக்குநரின் பாராட்டு

எம்ஜிஆர் 100 | 80 - ஆஸ்திரேலிய இயக்குநரின் பாராட்டு

‘நான் ஏன் பிறந்தேன்’ படப்பிடிப்பின்போது எம்.ஜி.ஆரை ஆஸ்திரேலிய தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜான் மெக்கலம் (வலது) சந்தித்தபோது எடுக்கப்பட்ட படம். அருகில் மணியன் உள்ளார்.

M.G.R. தான் நடிக்கும் படங்களின் கதை அமைப்பை ஒட்டி பாத்திரத்துக்கேற்ப, அதன் தேவைக்கேற்ப நடிப்பார். பெரும்பாலும் ஆக் ஷன் படங்களில் நடித்ததால், அவருடைய அற்புதமான நடிப்புத் திறன் பெரிதும் கவனிக்கப்படாமல் போனது.
எம்.ஜி.ஆர். தனக்கென்று நடிப்பில் தனிப் பாணியை உருவாக்கி முத்திரை பதித்தவர். மு.க.முத்து உட்பட பல நடிகர்கள் அவரது பாணியைப் பின்பற்றி நடித்தார்களே தவிர, அவர் யாருடைய பாணியையும் பின்பற்றியதில்லை. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் கோழையாகவும் வீரனாகவும் இரண்டு வேடங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருப்பார். அதில் ராமு என்ற பெயரில் கோழையாக வரும் பாத்திரத்தின் அறிமுகக் காட்சியில் இருந்து கடைசியில் அவருக்கு வீரம் வரும்வரை, முகத்தில் ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும். பயத்தின் வெளிப்பாடாக நெஞ்சுக்கு நேரே இரு கைகளையும் கோர்த்தபடி உடல் மொழியை வெளிப்படுத்தி இருப் பார்.
நம்பியாருக்கு பயந்து வீட்டைவிட்டு வெளியேறி ஓட்டலுக்கு எம்.ஜி.ஆர். சாப்பிட வருவார். இரண்டு இட்லி வாங்கி ஒரு விள்ளல் எடுத்து வாயில் போட்ட பின், சுற்றிலும் எல்லோரையும் பார்த்தபடி ஒரு அசட்டு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள். வெளி உலகில் பயமின்றி சுதந்திரமாக அவர் சாப்பிடும் முதல் இட்லி அது என்பதை அந்த சிரிப்பிலேயே உணர்த்தி இருப்பார்.
‘பெற்றால்தான் பிள்ளையா?’ படத்தில், தான் எடுத்து வளர்க்கும் குழந்தையிடம், ‘‘நீ வளர்ந்து பெரிய வனாகி விமானத்தில் வந்து இறங்கும் போது நான் கூட்டத்தில் நிற்பேன். என்னை கவனிக்காமல் போய்விடுவாய்’’ என்று எம்.ஜி.ஆர். பரிதாபமாக சொல்லும் காட்சி கண்கலங்க வைக்கும். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நகைச்சுவைக் காட்சிகளிலும் எம்.ஜி.ஆர். பிய்த்து உதறுவார். நகைச் சுவைப் படமான ‘சபாஷ் மாப்பிளே’ படத்தை பேரறிஞர் அண்ணா பார்த்து விட்டு, ‘‘சபாஷ் எம்.ஜி.ஆர்!’’ என்று பாராட்டினார். சண்டை, நடனக் காட்சி களில் கேட்கவே வேண்டாம். உடன் நடிப்பவர்களை ‘ஓவர் டேக்’ செய்யும் முனைப்பு எம்.ஜி.ஆரிடம் இருக்காது. கதைக்கேற்ப, அந்தந்தப் பாத்திரத்தின் தன்மைக்கேற்ப அளவோடு, மென்மை யாக, இயல்பான நடிப்பை வெளிப் படுத்துவார்.
இப்போதெல்லாம் ‘இயற்கையான நடிப்பு’ என்று பரவலாக பேசப்படுகிறது. அதை அந்தக் காலத்திலேயே செய்தவர் எம்.ஜி.ஆர்.! அவரது இயற்கையான நடிப்பு வெளிநாட்டவர்களையும் கவர்ந் தது. அதனால்தான் ஆஸ்திரேலியாவின் பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜான் மெக்கலம், ‘‘இயற்கையாக நடிக் கும் இந்திய நடிகர் எம்.ஜி.ஆர்.’’ என்று பாராட்டினார். சென்னை வந்தபோது எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசிய மெக்கலம், பின்னர் அவருடன் சேர்ந்து கூட்டாக படம் தயாரிக்கப் போவதாகவும் அறிவித்தார். பிறகு, அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கி அரசியலில் பிஸியானதால் அது நிறைவேறவில்லை.
‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற் காக, 1971-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதுக்கு எம்.ஜி.ஆர். தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சமயத்தில் ‘இதய வீணை’ படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென் றிருந்தார். காஷ்மீர் வானொலி அவரிடம் பேட்டி கண்டது. ‘பாரத்’ விருது பற்றிய கேள்விக்கு தனது வழக்கமான அடக் கத்தோடு எம்.ஜி.ஆர். பதிலளித்தார். ‘‘நான் இதை எதிர்பார்த்தவன் இல்லை. செய்தியை மனதில் பதிய வைத்துக் கொள்ளவே எனக்கு கொஞ்ச நேரம் பிடித்தது. இப்படி ஒரு பட்டம் எனக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்க்காமல் இருந்த காரணத்தால், இதை நம்பு வதற்கே சிறிது நேரம் ஆனது’’ என்றார்.
காஷ்மீர் வானொலிக்கு பேட்டியளிக் கும்போது, உருது மொழியிலேயே பதிலளித்தார். அதற்காக, அந்த மொழி சொற்களின் உச்சரிப்பைக் கேட்டுப் பயின்று உருதுவில் பதிலளித்து காஷ்மீர் மக்களை வியப்பில் ஆழ்த்தினார்.
கொல்கத்தாவில் நடந்த விழாவில் எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருதை அப்போதைய மேற்கு வங்க முதல்வரும் ‘தேசபந்து’ சி.ஆர்.தாஸின் பேரனுமான சித்தார்த்த சங்கர் ரே வழங்கினார்.
‘வணிக ரீதியிலான ‘ரிக் ஷாக்காரன்’ படத்தில் நடித்ததற்காக எம்.ஜி.ஆருக்கு எப்படி ‘பாரத்’ விருது கொடுக்கலாம்?’ என்று சர்ச்சை எழுந்தது. விருது வழங்கப்பட்டதற்காக சென்னை உட்லண்ட்ஸ் ஓட்டலில் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் எம்.ஜி.ஆருக்கு பாராட்டு விழா நடந்தபோது அவர் இதற்கு பதிலளித்தார்.
‘‘இந்த விருதுக்கு நான் தகுதியில்லை என்று கூறுபவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘பாரத்’ விருது 1971-ம் ஆண்டுக்கு மட்டும்தான். என் வாழ்க்கை முழுவதும் நான் இந்தியத் துணைக் கண்டத்தின் சிறந்த நடிகன் என்ற பொருளில் அல்ல. கலைக்கு ஒரு வரையறையை யாருமே நிர்ணயித்துவிட முடியாது. இதைப் புரிந்துகொண்டால் பொறாமைக்கும் அதிர்ச்சிக்கும் ஏமாற்றத்துக்கும் இடமே கிடையாது’’ என்று எம்.ஜி.ஆர். பேசினார்.
1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக இருந்த நேரத்தில் துப்பாக்கிச் சூட்டில் மாணவர் பலியானதால் அப்போது தனக்கு மத்திய அரசு அளித்த ‘பத்ம  ’ விருதை ஏற்க மறுத்ததாகவும் இப்போது அந்த நிலை இல்லை என்றும் எம்.ஜி.ஆர். தெரி வித்தார். மேலும், ‘நாடோடி மன்னன்’ படத்தை எகிப்து நாட்டு படவிழாவுக்காக வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டதன்பேரில் மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் ஆனால், கடைசி நேரத்தில் படம் தேர்வு செய்யப்படவில்லை என் றும் ‘‘நான் என்ன தவறு செய்தேன்?’’ எனவும் அந் தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆர். உருக்கமாகக் கேள்வி எழுப்பினார்.
அந்தப் பேச்சு பின்னர், ‘எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனம்’ என்ற பெயரில் அவர் குத்துவிளக்கு ஏற்றுவது போன்ற முகப்பு படத்துடன் ஒருமணி நேரம் ஓடக்கூடிய ஒலிநாடாவாக வெளிவந்தது.
திமுக அரசின் பரிந்துரையின் பேரில்தான் எம்.ஜி.ஆருக்கு ‘பாரத்’ விருது வழங்கப்பட்டதாக அதிமுகவை எம்.ஜி.ஆர். தொடங்கிய பிறகு, அரசியல்ரீதியில் விமர்சனங்கள் எழுந்தன. சர்ச்சைகள் தொடர்வதை விரும்பாத எம்.ஜி.ஆர்., விருதை திருப்பி அனுப்பினார்.
‘பாரத்’ விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் மட்டுமல்ல; அதைத் திருப்பிய முதல் நடிகரும் அவர்தான் என்று எம்.ஜி.ஆரின் பெயரை வரலாறு தன் பக்கங்களில் பொறித்துக் கொண்டது!
எம்.ஜி.ஆரின் இயற்கையான நடிப்பை பாராட்டி ஜான் மெக்கலம் கருத்து தெரிவித்த நாளிதழ் செய்தி.
நடித்த ‘ரிக்ஷாக்காரன்’ படம் வெளியானபோது, மக்களை கவரும் வகையில், அதுவரை இல்லாத புதுமையான விளம்பர உத்தி பயன்படுத்தப்பட்டது. படத்தின் விளம்பர நோட்டீஸ்கள் ஹெலிகாப்டரில் இருந்து வீசப்பட்டன.
Gulf News

Bihar man, 53, gets MBBS degree after 21 years

Dr Kapildeo Chaudhary was admitted to the MBBS course in 1995

Patna: A 53-year-old medical student in Bihar has finally got his Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS) degree after 21 years of constant struggle.

The degree was awarded to Dr Kapidldeo Chaudhary, a Dalit student, by the Darbhanga Medical College (DMC) on Monday.

He is the oldest student in the medical college having taken more than two decades to finish his course. He was admitted to the MBBS course in 1995.

“Yes, Dr Chaudhary has been awarded the degree after he cleared the paper concerned in supplementary examination this year and finished his MBBS course,” DMC principal Dr R.K. Sinha told journalists.

The award of the degree follows frequent suicide threats which he had made earlier this year, frustrated at his constant failures to clear the final year examination.

He hogged the headlines this February when sent many messages to the cell phone of his department head Dr B.K. Singh who heads the department of medicine.

“Sir, now I am 52. Please pass me. I want to become a doctor. I wanted to become a doctor and serve the nation. Therefore, I should be awarded pass marks in the paper. Otherwise, I will commit suicide”, he wrote in one of his messages.

His second message too served the suicide threats: “Good morning Sir … I have seen you for 21 years. No meeting now. Now you will see my dead body.” The messages were sent between January 31 and February 15 this year.

The authorities reacted promptly registering a complaint against Dr Chaudhary sensing trouble after the Rohith Vemula case in the Hyderabad University. As the matter reached the police, Dr Chaudhary gave an undertaking to the authorities concerned saying he will not end his life.

According to Dr Chaudhary, his prolonged poor health turned out to be the “spoiler”, not allowing him to concentrate on studies.

Saturday, June 4, 2016

First non-stop flight between Singapore and San Francisco launched

First non-stop flight between Singapore and San Francisco launched
The United Airlines flight takes between 15 hours and 30 minutes and 16 hours and 20 mins – shaving up to four hours off the travel time between the two cities.
Posted 03 Jun 2016 14:03
Updated 03 Jun 2016 23:23

CHANNELNEWSASIA

SINGAPORE: The first non-stop flight connecting Singapore and San Francisco – and currently the only non-stop service between Singapore and the United States – took off from Changi Airport on Friday morning (Jun 3).

The United Airlines flight, which uses the Boeing 787 Dreamliner, takes between 15 hours and 30 minutes and 16 hours and 20 mins – shaving up to four hours off the travel time between the two cities.

The flights depart from Changi Airport at 8.45am daily and arrive at San Francisco International Airport at 9.15am the same day (local time). The westbound flight will depart San Francisco at 11.25pm (local time) daily and arrive in Singapore at 6.45am two days later.

Marcel Fuchs, the airline’s Vice-President of Atlantic and Pacific Sales, said that with 3,500 US companies registered in Singapore, there is strong demand for the flight.

“Many of the customers this morning were from IT companies and were congratulating us on starting this new daily non-stop service," he said.

- CNA/cy

எம்ஜிஆர் 100 | 79 - தொண்டருக்கும் தொண்டர்!


சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். உணவு பரிமாறுகிறார்.

தொகுப்பு: ஸ்ரீதர் சுவாமிநாதன்

M.G.R.கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அன்றாடப் பணிகளில் அவருக்கு உதவி புரியவும் பாதுகாப்புக்கும் உதவியாளர்களும் பாதுகாவலர்களும் உண்டு. எம்.ஜி.ஆர். எள் என்றால் எண்ணெயாய் நிற்கும் ஆற்றல் மிக்கவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட பணியாளர்களின் தேவைகளை, குடும்பத்துக்கான உதவிகளை முழுமையாக கவனித்து உதவி செய்வதற்கென்று ஒருவர் உண்டு. அவர் எம்.ஜி.ஆர்.!

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஒரு முறை மாணவ, மாணவிகளின் கலாசார விழா. அதற்கு சிறப்பு விருந் தினராக எம்.ஜி.ஆரை அழைத்திருந்த னர். விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார். உடற்கூறுகள் பற்றி, தான் அறிந்து வைத்திருந்தவை குறித்து அருமையாக உரையாற்றினார். ‘இத்தனை பணிகளுக்கும் நடுவே, இதை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள இவருக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?’ என்று பேச்சைக் கேட்டவர்கள் வியந்தனர்.

‘‘மருத்துவப் படிப்பை முடித்து மருத்துவராக தொழில் செய்பவர்கள் சேவை மனப்பான்மையோடு குறிப்பாக, ஏழைகளுக்கும் கிராமப்புற மக்களுக்கும் பணியாற்ற வேண்டும்’’ என்று எம்.ஜி.ஆர். வேண்டுகோள் விடுத்து விட்டு, தனக்கே உரிய அடக்கத்தோடு சொன்னார்… ‘‘மருத்துவம் படிக்காத என்னை சிறப்பு விருந்தினராக ஏன் அழைத்தார்கள்? என்று தெரியவில்லை. ஒரு காரணம் மட்டும் புரிகிறது. என் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்புதான் அது. அந்த அன்புள்ளத்தோடு எதிர் காலத்தில் நீங்கள் சமூகத்துக்கு பணி யாற்ற வேண்டும்’’ என்று பலத்த கர கோஷத்துக்கிடையே பேசி முடித்தார்.

எம்.ஜி.ஆருக்கு நன்றி தெரிவித்து ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களை மாணவர்கள் அவருக்கு அளித்தனர். அதைப் பெற்றுக் கொண்டு படப்பிடிப் பில் கலந்து கொள்வதற்காக வாஹினி ஸ்டுடியோவுக்கு சென்றார். அங்கு, தன் காரில் இருந்த ஆப்பிள் கூடையை எடுத்து வரச் சொல்லி, படப்பிடிப்பு தளத்தில் இருந்த எல்லா பணியாளர்களுக்கும் பகிர்ந்து கொடுக்கச் செய்தார். மருத் துவக் கல்லூரி விழாவில் அன்பைப் பற்றி பேசிய எம்.ஜி.ஆருடைய அன்புள்ளத்தின் வெளிப்பாடு இது.

தென்ஆற்காடு மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் எம்.ஜி.ஆர். சென்றார். வழியில் பல இடங்களில் மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு, நிகழ்ச்சிக்கு தாமதமாகவே சென்றார். அவசரப் பணிகள் காரணமாக, குறித்த நேரத்துக்குள் அவர் சென்னை திரும்பி யாக வேண்டும். நிகழ்ச்சியை முடித் துக் கொண்டு காரில் ஏறிப் புறப்படும் முன் உதவியாளர்களைப் பார்த்து, ‘‘சாப்பிட்டீர்களா?’’ என்று கேட்டார். எல் லோரும் ஒரே குரலில் ‘‘சாப்பிட்டு விட்டோம்’’ என்றனர்.

காரின் சக்கரங்கள் சென்னையை நோக்கி சுழலத் தொடங்கின. நகரத் தைக் கடந்து சாலையில் கார் வேகமாகச் செல்கிறது. திடீரென, ‘‘காரை ஓரமாக நிறுத்து’’ என்று எம்.ஜி.ஆரின் குரல் கடுமையாக ஒலிக் கிறது. ‘ஏன்?’ என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்தாலும், எம்.ஜி.ஆர். சொன்னதைச் செய்தே பழக்கப் பட்ட உதவியாளர் கள் காரணம் கேட்க வில்லை. என்றாலும், அவரது குரலில் இருந்த கடுமை அவர்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தியது. சாலையோரமாக கார் நின்றது.

உதவியாளர்களைப் பார்த்து உரிமை கலந்த கோபத்தோடு, ‘‘உங்கள் வாடிய முகங்களைப் பார்த்தாலே நீங்கள் எல்லோரும் சாப்பிடவில்லை என்று தெரிகிறது. நான் விரைவில் சென்னை திரும்ப வேண்டும் என்பதற் காக, என்னிடம் சாப்பிட்டதாக சொல்லி யிருக்கிறீர்கள். ஏன் பொய் சொல்கிறீர் கள்?’’ என்று இரைந்தார். குட்டு வெளிப்பட்டதில் அந்த உண்மையான பணியாளர்கள் ஊமைகளாய் நின்றனர்.

அவர்களது நிலைமையை எம்.ஜி.ஆர். புரிந்து கொண்டார். அவரது குரலில் இருந்த தந்தையின் கண்டிப்பு, இப்போது தாயின் கருணையாய் சுரந்தது. ‘‘இந்த நிகழ்ச்சியை நடத்தியவர் கள் என்னை வரவேற்று உபசரிக்கும் ஆர்வத்தில் உங்களை கவனித்திருக்க முடியாது. நான் புறப்படத் தாமத மாகிவிடும் என்பதற் காக சாப்பிட்டுவிட்ட தாக நீங்கள் பொய் சொன்னால் எனக் குத் தெரியாதா? நான் சந்தேகப் பட்டுதான் அங்கிருந்தவர் களிடம் இட்லி களை பொட்டலங் களாக கட்டச்சொல்லி வாங்கி வந்தேன். மர நிழலில் போய் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’’ என்று சொல்லி, தான் கொண்டுவந்த பார்சலை எடுத்து உதவியாளர்களிடம் கொடுத்தார்.

நெகிழ்ந்துபோன உதவியாளர்கள், எம்.ஜி.ஆரிடம் இருந்து பார்சலை வாங்கிக் கொண்டு ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்து சாப்பிடத் தொடங் கினர். நெய் மணக்கும் காரமான மிளகாய்ப் பொடி தடவிய இட்லி அவர்களுக்கு அமிர்தமாய் இனித்தது. சீக்கிரம் புறப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இட்லிகளை விழுங் கியவர்களில் ஒருவருக்கு விக்கல். எம்.ஜி.ஆரிடம் இருந்து பார்சலை வாங்கிவந்த அவசரத்தில் தண் ணீரை எடுத்துவர அவர்கள் மறந்து விட்டனர்.

அப்போது, தண்ணீர் வைத்திருந்த ஜாடியையும் டம்ளர்களையும் ஏந்தியபடி இரு கரங்கள் நீள்கின்றன. உதவியாளர்கள் நிமிர்ந்து பார்த்தால், எம்.ஜி.ஆரேதான்! எல்லோருக்கும் டம்ளர்களில் பொறுமையாக தண்ணீரை ஊற்றி வைக்கிறார். அவரை உப சரிக்க லட்சோப லட்சம் பேர் காத்திருக்கும்போது, அந்த மாமனிதர் தங்களுக்கு பசியாற உணவு தந்து, தாகம் தீர்க்க தண்ணீரும் கொடுத்து பணி செய்வதைக் கண்ட உதவியாளர்களின் கண்கள் பனித்தன.

எம்.ஜி.ஆர். தலைவர் மட்டுமல்ல; தொண்டருக்கும் தொண்டர்!

- தொடரும்...

படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்


ஜூபிடர் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டுடியோவை எம்.ஜி.ஆர். வாங்கி அதற்கு தனது தாயாரின் பெயரை சூட்டி ‘சத்யா ஸ்டுடியோ’ ஆக்கினார். தான் உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய ஸ்டுடியோவில் தொழிலாளர்களை பங்குதாரர்களாக்கி, லாபத்தை அவர்களுக்கு பகிர்ந்து அளித்த முதலாளி… இல்லை, இல்லை, முதலாளி என்ற பெயரில் வாழ்ந்த தொழிலாளி எம்.ஜி.ஆர்.!

சூர்யா செய்தது சரியா?


ஓங்கி அறைஞ்சா ஒன்றரை டன் வெயிட்றா.. பார்க்கிறியா?’ என்று பப்ளிக்கிலும் நிரூபித்து விட்டார் சூர்யா. இதற்குக் காரணம், ஒரு பெண்மணி காரில் போட்ட சடர்ன் பிரேக். பெண்களுக்கு ஒரு பிரச்னை என்றால், சினிமாவில்தான் ஹீரோ பொங்கி எழுவார்கள். ஆனால் நிஜத்திலும் ஒரு ஹீரோ, பெண்ணுக்காகக் களம் இறங்கி, அநியாயத்தைத் தட்டிக் கேட்டதுதான் வெயிலைத் தாண்டியும் செம ஹாட்!

நடந்தது என்ன?

பாரிமுனையைச் சேர்ந்த பிரேம்குமார், ஜாலியாக அடையார் பாலத்துக்குக் கீழே தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற கார் ஒன்று திடீரென சடர்ன் பிரேக் அடிக்க, நிலைகுலைந்து போன பிரேம்குமார், தடாலென அந்த காரின் பின்புறம் இடித்துவிட... ‘தம்பி, ஒழுங்கா வண்டி ஓட்டமாட்டியா?’ என்று காரிலிருந்து இறங்கிய பெண்மணியும், ‘ஹலோ மேடம், நீங்க ஒழுங்கா பிரேக் போடுங்க!’ என்று பிரேம்குமாரும் நடுரோட்டில் வாக்குவாதம் செய்ய... பின்னால் செம டிராஃபிக்.

இந்த காருக்குப் பின்னால், சூர்யாவின் ஆடி A8. சண்டை முற்றிக் கொண்டே போக, ‘இனிமே சார்ஜ் எடுத்தாதான் சரியா வரும்’ என்று முடிவெடுத்து காரிலிருந்து இறங்கிய சூர்யா, ‘‘பொண்ணுங்ககிட்ட எப்படிப் பேசணும்னு தெரியாது’’ என்று பிரேம்குமாரின் கன்னத்தில் ‘சிங்கம்’ பாணியில் அறைவிட, ‘‘வாந்தி வர்ற அளவுக்கு ஓங்கி அடிச்சுட்டார் சூர்யா. என் உயிருக்குப் பாதுகாப்பு வேணும்!’’ என்று பாரிமுனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்து, இப்போது அதை வாபஸும் வாங்கி விட்டார்.

 இதற்கிடையில் காரில் சடர்ன் பிரேக் பிடித்த புஷ்பா கிருஷ்ணசாமி என்ற அந்தப் பெண்மணி, ட்விட்டரில் சூர்யாவுக்கு நன்றி தெரிவிக்க... பதிலுக்கு சூர்யாவும், ‘உங்கள் தைரியத்துக்குப் பாராட்டுகள்’ என்று மாறி மாறி நன்றி தெரிவித்துக் கொண்டிருக்க, ‘சூர்யா மனித உரிமையை மீறி சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு’ என்றும்... ‘அவர் பெண்களுக்காகச் செய்த இந்தச் செயல் சரியே’ என்றும் ‘Savedwoman’ என்ற பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கி நெட்டிசன்கள் பிஸியாகிவிட்டார்கள்.

கூலாக முடிய வேண்டிய பிரச்னை, வெயில் நேரம் என்பதாலோ என்னவோ செம ஹாட் ஆகிவிட்டது. ''இருந்தாலும் நடிகர் சூர்யா, அந்தப் பெண்ணுக்கு உதவும் நோக்கில் தட்டிக் கேட்டது சரிதான். ஆனால், பிரேம்குமாரைக் கை நீட்டி அடித்தது தவறு!'' என்கிறார் பிரபல மனநல நிபுணர், மருத்துவர் அபிலாஷா,  ‘‘வெயிலோ, மழையோ - நடுரோட்டில் ஏற்படும் எந்தப் பிரச்னையையும் ஈஸியாகக் கையாளலாம்!’' என்றும் சொல்கிறார் அவர். 


பெண்கள்/ஆண்கள் - வெளியே கிளம்பும்போதும், வாகனம் ஓட்டும்போதும் கவனிக்க வேண்டியவை என்னென்ன? 

1. முதலில் நாம் பொறுமை இழப்பது சிக்னல்களில்தான். சிக்னலில் நிற்கும்போது, ஆரஞ்சு விளக்கு எரியும் முன்பே ஆக்ஸிலரேட்டரை முறுக்குவதில் உற்சாகமாக இருக்கும் நாம், சிக்னலில் சிவப்பு விளக்கு எரிய ஆரம்பிக்கும்போது பிரேக் பிடிப்பதற்கு யோசிக்க மறுக்கிறோம். சட்டத்துக்குக் கட்டுப்படுவது ரெண்டாவது விஷயம் - முதலில் மனசாட்சிக்குக் கொஞ்சம் இடம் கொடுங்க பாஸ்!

2. கிளம்பும்போது, எப்போதுமே கால்மணி நேரம் அல்லது அரைமணி நேரம் முன்கூட்டியே கிளம்பிப் பாருங்களேன். ஆச்சரியமாக சிக்னலில் நின்றாலும், சிக்கலாக ஃபீல் செய்யமாட்டீர்கள். வெயில் காலத்தில் பொதுவாகவே எல்லோருக்கும் கோபமும், எரிச்சலும் இருக்கும். இந்த நேரத்தில் விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போகமாட்டார்கள்.

3. ‘நான் நல்லா ஓட்டுறேனா? ஏதாவது தப்பு இருக்கா?’ என்று உங்கள் டிரைவிங் ஸ்டைல் பற்றி, உறவினர்கள் அல்லது எக்ஸ்பெர்ட்டுகள் யாரிடமாவது மனம் திறந்து கேளுங்கள். இதிலெல்லாம் ஈகோ பார்க்காதீர்கள். 

4. எப்போதுமே கிளம்பும்போது பசியுடன் கிளம்பாதீர்கள். வெறும் வயிற்றுக்காரர்களுக்கு வெயில் நேரத்தில் டென்ஷன் வயிறைத் தாண்டி தலை உச்சிக்கு ஏறும். கூடவே, எப்போதும் ஒரு வாட்டர் பாட்டிலை வைத்திருங்கள். தண்ணீர் குடிக்கும்போது கோபம் தணியும் வாய்ப்பிருக்கிறது. யாராவது இடித்துவிட்டால், நம்மையும் மீறி வாக்குவாதம் முற்றும்போது நிறுத்திக் கொண்டு, 'இன்ஸூரன்ஸ்' கிளைம் செய்து கொள்ளலாம் என்கிற ரீதியில் பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டு வரப் பாருங்கள். 

5. எப்போ பார்த்தாலும் ஸ்ட்ரெஸ்ஸிலேயே இருக்காதீர்கள். ‘ச்சே... சீக்கிரம் போய் ஆகணுமே’ என்று கடுப்பாகாமல், என்ஜாய் பண்ணி டிரைவிங் செய்யுங்கள். ‘வாவ்... அதுக்குள்ள வந்துடுச்சா!’ என்று ஆச்சரியப்படுவீர்கள்.

6. பெரும்பான்மையான விபத்துகளுக்குக் காரணம் - கவனக்குறைவும், பொறுமையின்மையும்தான். ‘எப்படியாவது ஓவர்டேக் பண்ணிடணும்’ என்று அவசரப்படாதீர்கள். எப்போதும் இடது பக்கம் ஓவர்டேக் செய்யாதீர்கள். தேவையானால் மட்டும் ஹார்ன் அடியுங்கள்.

7. யாராவது உங்களை ஓவர்டேக் செய்தால், கோபப்படாதீர்கள். முக்கியமாக குழந்தைகளுடன் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. அவர்கள் முன்பு தேவையில்லாமல் சண்டை போடாதீர்கள். உங்களுடைய குழந்தையுடன் எதிர்காலம் முக்கியம்!

8. கிளம்பும்போது வாகனத்தைத் துடைப்பதோடு மட்டும் நிறுத்தாமல் - டயர் பிரஷர், பெட்ரோல், பிரேக் என்று எல்லாவற்றையும் செக் செய்துவிட்டுக் கிளம்புங்கள்.

9. எப்போதும் ரிஸர்விலேயே பைக்கை/காரை ஓட்டாதீர்கள். இது முக்கியமான நேரங்களில் டென்ஷனுக்கு வழிவகுக்கும். உங்களை நடுரோட்டில் வண்டி தள்ளவும் வைத்துவிடும்.

10. ஒருவர் விபத்தாகி விழுந்துவிட்டால்,  தாண்டிப் போகாமல் அவருக்கு மனிதாபிமானத்துடன் உதவுங்கள். பிரச்சனைகளை அப்புறம் டீல் செய்யலாம். 

(கொசுறு: போகும் பாதையை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டுக் கிளம்புங்கள். ‘தடால் தடால்’ என சடர்ன் பிரேக் போடாதீர்கள். திரும்பவும் கட்டுரையின் முதல் பாராவைப் படியுங்கள்!)

- தமிழ்
 

விஜயபாஸ்கருக்கு 'செக்' வைத்த கார்டன்! -வைரமுத்துவைத் தேடி வந்த வாரியப் பதவி

சட்டப் பேரவைத் தேர்தலில் தோற்றதில் இருந்து, சென்னை பக்கமே வராத புதுக்கோட்டை மா.செ வைரமுத்துவுக்கு வீட்டுவசதி வாரியத் தலைவர் பதவியைக் கொடுத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. 'அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான முதல் அதிரடி இது' என்கின்றனர் புதுக்கோட்டை அ.தி.மு.கவினர். 

அ.தி.மு.க அரசின் அமைச்சரவை பதவியேற்றதும், ‘வாரியத் தலைவர் பதவி யாருக்குக் கிடைக்கப் போகிறது?’ என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. நேற்று முதலமைச்சரின் கூடுதல் செயலாளராக ஜெயஸ்ரீ முரளிதரன் உள்ளிட்ட சில அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். ஆனால், சம்பந்தமே இல்லாமல் வீட்டு வசதி வாரியத்திற்கு மட்டும், திருமயம் தொகுதியில் தோற்ற வைரமுத்துவை நியமித்தது அ.தி.மு.கவினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வேறு எந்த வாரியத்திற்கும் தலைவர் பதவி நிரப்பப்படவில்லை. இத்தனைக்கும் தேர்தலில் தோற்ற நாளில் இருந்தே புதுக்கோட்டைக்குள் முடங்கிக் கிடந்தார் வைரமுத்து.
நேற்று கார்டனில் இருந்து அவருக்கு திடீர் அழைப்பு. கை, கால் உதறலோடுதான் கார்டனுக்குள் நுழைந்தார் வைரமுத்து. அதற்குள் புதுக்கோட்டை மாவட்டம் முழுக்கவே, ' மீண்டும் விஜயபாஸ்கருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்கப்போகிறது. வைரமுத்து பதவியைப் பிடுங்கி அனுப்பப் போகிறார் அம்மா' என்ற தகவல் தீயாய் பரவியது. சில மணி நேரங்களில், ‘ வீட்டு வசதி வாரியத் தலைவராக வைரமுத்து நியமனம் செய்யப்பட்டத் தகவல் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாக, அதிர்ந்து போய்விட்டார் விஜயபாஸ்கர்’ என்கின்றனர் புதுக்கோட்டை அ.தி.மு.கவினர். 

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி தொகுதிகளில் அ.தி.மு.க தோல்வி அடைந்தது. இதற்கு முழுக் காரணமே அமைச்சர் விஜயபாஸ்கர் மீது முத்தரையர் சமூகத்தினரின் கொந்தளிப்புதான்.  ‘ அமைச்சர் ஜாதியைச் சொல்லித் திட்டினார்’ எனப் புகார் கூறிய சொக்கலிங்கம், புதுக்கோட்டையில் சுயேச்சையாகப் போட்டியிட்டு 22,973 வாக்குகள் வாங்கினார். முத்தரையர் வாக்குகளை வெகுவாகப் பிரித்தார் சொக்கலிங்கம். இதற்கு முழுக் காரணமே விஜயபாஸ்கரின் செயல்பாடுகள்தான். இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.கவின் கார்த்திக் தொண்டைமான் தோல்வி அடைந்தார்.
இதை முன்கூட்டியே உணர்ந்துதான், முத்தரையர் சமூகம் அதிகளவில் இல்லாத விராலிமலையில் போட்டியிட்டு வென்றார் விஜயபாஸ்கர். தேர்தலில், திருமயம் தொகுதியில் போட்டியிட்ட வைரமுத்து, வெறும் 766 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.கவின் ரகுபதியிடம் வெற்றியைப் பறிகொடுத்தார். ‘ வெற்றி பெற்றால் கட்டாயம் அமைச்சர் பதவி வாங்கிவிடுவார்’ என்பதால், அவரைத் தோற்கடிக்க அனைத்து உள்ளடி வேலைகளையும் செய்தார் விஜயபாஸ்கர். இதைப் பற்றி கார்டனின் கவனத்திற்கு முழு விவரங்களுடன் அறிக்கை அனுப்பினார் வைரமுத்து. மேலிடமும் தீவிர விசாரணை நடத்தியது. மீண்டும் அமைச்சராக விஜயபாஸ்கர் வந்ததுமே, ‘ மா.செ பதவியை வாங்கிவிடுவேன்’ என சொல்லிக் கொண்டிருந்தார். அதற்குள், வைரமுத்துவுக்கு திடீர் பதவி கொடுத்து, விஜயபாஸ்கருக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது கார்டன்" என்றார் அவர். 
“ அது மட்டுமல்ல. புதுக்கோட்டை மாவட்டத்தில், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நேரடியாக மாவட்டச் செயலாளர் பதவிக்கு வந்தவர் வைரமுத்து. பல ஆண்டுகளாக கார்டனின் குட்புக்கில் இருப்பவர். கடந்த ஆட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்து கொண்டு விஜயபாஸ்கர் செய்த சில வேலைகளால் மிகுந்த அதிருப்தியில் இருந்தார் சின்னம்மா. மணல் விவகாரம் உள்பட குவாரி விஷயங்களில் விஜயபாஸ்கரின் அதீத வளர்ச்சி, கட்சிக்காரர்களை அதிர வைத்தது. எந்தக் கட்சிக்காரரையும் தன் பக்கத்தில் வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.
 முத்தரையர் சமூகத்தினரின் கடும் அதிருப்தியால்தான் கழக வேட்பாளர்கள் இங்கு தோல்வியைத் தழுவினர். இதையும் தாண்டி விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இப்போது புதுக்கோட்டை என்றாலே வைரமுத்து மட்டும்தான் என்று சொல்லும் அளவுக்கு மாவட்டச் செயலாளர் பதவியோடு வாரியத் தலைவர் பதவியையும் கொடுத்துவிட்டார் அம்மா. இனி படிப்படியாக விஜயபாஸ்கர் கட்டம் கட்டப்படுவார்” என்கிறார் புதுக்கோட்டை அ.தி.மு.க சீனியர் ஒருவர். 

மக்களுக்கு சிகிச்சையளிக்கும் நல்வாழ்வுத்துறையின் அமைச்சராக இருக்கும் விஜயபாஸ்கருக்கு, கார்டன் அளித்த இந்த ‘திடீர்’ சிகிச்சையை அதிசயத்தோடு கவனிக்கிறார்கள் புதுக்கோட்டை அ.தி.மு.கவினர். 

ஆ.விஜயானந்த்

 

பாரிவேந்தருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தலைமறைவு... மதன் தாயார் பரபரப்பு குற்றச்சாட்டு!

சென்னை: எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து பாரிவேந்தர், அவரது மகன் ரவி ஆகியோருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் தான் மதன் தலைமறைவாகி உள்ளார் என்று அவரது தாயார் தங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 'சீட்' வாங்கிக்கொடுக்கும் ஏஜென்ட் வேலையைச் செய்துவந்தவர் மதன். கடந்த 20 ஆண்டுகளாக இதே வேலையில் ஈடுபட்டதால் தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் நிறையத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

மேலும் திரைத்துறையிலும் கால்பதிக்க எண்ணி, கடந்த 2011 ம் ஆண்டு 'வேந்தர் மூவிஸ்' என்ற  சினிமா கம்பெனியைத் தொடங்கினார். அதிலும் கிடுகிடு வளர்ச்சியை எட்டி,  தமிழகத்தின் முன்னணி பட நிறுவன அதிபரானார். மதன் தனது நிறுவன பெயரில் வெளியான சில திரைப்பட விழாக்களுக்கு, எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் அதிபரும், ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் (எ) டி.ஆர்.பச்சமுத்துவை சிறப்பு விருந்தினராக பங்கேற்க வைத்துள்ளார். இதனால் வேந்தர் மூவிஸ் பாரிவேந்தருக்கு சொந்தமானது என்று  பேச்சு அடிபட்டது.

ஆனால், "வேந்தர் மூவிஸ் நிறுவனம் எனது சொந்த நிறுவனம் ஆகும். பாரிவேந்தர் மீது நான் கொண்டுள்ள பற்றும் பாசமும் மரியாதையின் காரணமாகவே எனது நிறுவனத்திற்கு  வேந்தர் மூவீஸ் என பெயர் வைத்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கும் பாரிவேந்தருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்" என்று மதன் விளக்கமளித்து அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி தனக்கு நிறைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவற்றை பாரிவேந்தர் தீர்த்து வைக்கவேண்டும் என்றும் கூறி, 'காசியில் கங்கையில் சமாதி அடையப் போகிறேன்' என்று வேந்தர் மூவிஸ் லெட்டர் பேடில் கடிதம் எழுதி, வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டுத் தலைமறைவானார் மதன். இதை தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், காணாமல் போன மதனைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு அவரின் இரண்டு மனைவிகளும், தாயாரும் புகார் மனு அளித்தனர். போலீசாரும் அவரைக் கண்டுபிடிக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். ஆனால், மதன் பற்றிய உறுதியான தகவல் இதுவரை கிடைக்கவில்லை. 

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மதனின் தாயார் தங்கம், ''வேந்தர் மூவிஸ் மதன் கடந்த பல ஆண்டுகளாக எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரிக்கான மாணவர் சேர்க்கையில் ஈடுபட்டிருந்தார். அதற்காக பெறப்படும் பணத்தை முறையாக பாரிவேந்தரிடம் அளித்தும் வந்துள்ளார். மதன் காணாமல் போனது குறித்த காரணம் எதுவும் எங்களுக்கு தெரியவில்லை. பச்சமுத்து பாரிவேந்தர், அவரது மகன் ரவி, மதன் ஆகிய மூன்று பேருக்கிடையே ஏற்பட்ட பனிபூசல் ஆகியோருடன் ஏற்பட்ட மனக்கசப்பால்தான் மதன் தலைமறைவாகி இருக்க வேண்டும்.

இந்தப் பிரச்னைக்கு குறித்து பாரிவேந்தரிடம் நாங்கள் பலமுறை பேச முயற்சி செய்தும், அதற்கு அவர்கள் அனுமதியளிக்கவில்லை. ரவி சாரை பார்க்க முயன்றபோதும் அவர்கள் எங்களை உள்ளே விடவில்லை. அவரின் குடும்பத்தினரை பலமுறை தொடர்புகொள்ள முயன்றும் முடியாமல் தோல்வியடைந்துள்ளோம். இதற்கு மேல் நாங்கள் என்ன செய்ய முடியும்.  பாரிவேந்தரை கடவுளாக நினைத்து பூஜித்து வந்த எனது மகன், எஸ்.ஆர்.எம். குழுமத்திலிருந்தும், ஐ.ஜே.கே. கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டது ஏன்? என்பது பற்றியும் எங்களுக்கு தெரியவில்லை" என்றார்.

இதனிடையே, காணாமல் போன மதனை தேடி கண்டுபிடிக்க 2 தனிப்படைகளை போலீசார் அமைத்துள்ளனர். அவர்கள், சென்னை மற்றும் வாரணாசியில் மதன் குறித்து விசாரணையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்
.

இந்த கேள்விக்கு மட்டும் பா.ஜ.க.வினர் பதில் சொன்னால் போதும்! -அப்படி என்ன கேள்வி கேட்கிறார் கருணாநிதி

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிரதமர் மோடிக்கு எப்படி முன்கூட்டியே தெரிந்தது என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் 93-வது பிறந்தநாளையொட்டி, சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று மாலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்தார். தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மை செயலாளர் துரைமுருகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்கள்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏற்புரை வழங்கி பேசும்போது, ''இந்த விழாவில் என்னை பாராட்டவும், நான் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தவும் நீங்கள் இங்கு கூடியதை பார்க்கும்போது, பிற்போக்கு தன்மையை வேடிக்கை பார்த்துக் கொண்டு இத்தனை ஆண்டுகள் இன்னும் வாழ வேண்டுமா என்ற கேள்வி என்னை துளைக்கிறது. நீங்கள் அனைவரும் அண்ணா சொன்னதை போல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் கழகத்தை நடத்த நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

கவிஞர் வைரமுத்து கூறியதைப்போல, தி.மு.க. ஆட்சியில் கை ரிக்‌ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷா வழங்கினோம். பிச்சைக்காரர்களுக்கு கூட மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை நிறைவேற்றினோம். குடிசைகளை எல்லாம் கோபுரங்களாக ஆக்கினோம். எந்த புது நோக்கமானாலும் அதை நிறைவேற்றும் சாத்தியமான ஆட்சியாக தி.மு.க. இருந்தது. அதை வீழ்த்த இன்று ஏதோதோ சூழ்ச்சிகள் செய்கிறார்கள். அது எந்த அளவுக்கு போய் இருக்கிறது.
நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், தேர்தல் முடிவு நாள் அன்று பிரதமர் நரேந்திர மோடியே காலை 10 மணிக்கு ஜெயலலிதாவுக்கு வாழ்த்து செல்கிறார் என்றால், தேர்தல் முடிவு எப்படி முன்கூட்டியே தெரிந்தது. இதை வெளிப்படையாக, பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன். இதற்கு, டெல்லியில் உள்ள மோடியின் கட்சிக்காரர்கள் விளக்க வேண்டும். அதற்கு முன்பே ஓட்டை எண்ணிப்பார்த்துவிட்டார்களா?. இந்த கேள்விக்கு மாத்திரம் அவர்கள் பதில் சொன்னால் போதும்.

ரூ.570 கோடி வங்கியில் இருந்து பணம் மாற்றப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பதில் என்ன?. மத்திய அரசுக்கு மக்கள் அளிக்கப்போகும் தீர்ப்பு என்ன?. ஒரு போராட்டத்தை நடத்த எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். மத்தியில் உள்ள மோடி அரசாங்கம் பதில் சொல்ல வேண்டும். பதில் சொல்லவில்லை என்றால், குற்றத்தை ஒப்புக்கொண்டதாகிவிடும். தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் ரத்து செய்யப்பட்டது.
ஒத்திவைப்பு என்றால் குறிப்பிட்ட தேதியில் அந்த தேர்தல் நடக்கும் என்று பொருள். அ.தி.மு.க. வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து தான் ரத்து செய்திருக்கிறார்கள். அதை எண்ணிப்பார்த்து உண்மையை உணர்த்த வேண்டும். இதை கட்டளையாக எடுத்துக்கொள்ளாமல், அறிவிப்பாக எடுத்துக்கொண்டு நாம் அத்தனை பேரும் ஒன்றுகூடி தேர்தலை ஏன் நடத்தவில்லை என்று கேட்க வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

நமக்கு நாமே என்ற உறுதியோடு அந்த தேர்தலை சந்திக்க வேண்டும். ஜனநாயகம் இப்படி சீரழிந்த நிலையில் உள்ளது. ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள சீரழிந்த நிலையை, மூடிமறைக்க நினைக்கும் இந்த செயலை, தி.மு.க.வை ஒழிக்க நடக்கும் இந்த திரைமறைவு வேலையை செய்யும் தேர்தல் ஆணையத்திற்கு பாடம் கற்பிக்க வேண்டும்.

NEWS TODAY 25.12.2024