'உங்கள் உடல் சுத்திகரிப்பு நிலையம் சுகமா?' - #WorldKidneyDayசிறுநீரகம்... இயற்கை நமக்கு அளித்த உடல் சுத்திகரிப்பு நிலையம். அதுவும் ஒன்றல்ல, இரண்டு! உள்ளங்கையில் அடங்கிவிடும் அளவுக்கு அளவில் சிறியதான சிறுநீரகத்தின் செயல்பாடு உடல் ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. சிறுநீரகத்தின் சிறப்புகளையும், அவற்றின் பாதிப்புகள் குறித்த விழிப்பு உணர்ச்சியையும் மக்களிடம் ஏற்படுத்துவதற்காக 2006-ம் ஆண்டில் 'உங்கள் சிறுநீரகங்கள் நலம்தானா?' என்ற கருப் பொருளுடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் `உலக சிறுநீரக தினம்'.
ஒவ்வோர் ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையில் அனுசரிக்கப்படும் இந்த தினத்தின் 2017-ம் ஆண்டுக்கான நோக்கம்... `உடல் எடை அதிகரிப்பும் - சிறுநீரக பாதிப்புகளும்'.
2006-ம் ஆண்டில் 66 நாடுகள் அனுசரிக்க ஆரம்பித்த இந்த நாளை இரண்டே வருடங்களில், 2008-ம் ஆண்டில் 88 நாடுகள் அனுசரித்ததிலிருந்தே இந்த தினத்தின் அவசியம் தெளிவாகியிருக்கிறது.
உலக சிறுநீரக தினம்-2017: உடல் எடை அதிகரிப்பும் - சிறுநீரக பாதிப்புகளும்...
`உடல் எடைக்கும் சிறுநீரகத்துக்கும் என்ன தொடர்பு?' என யோசிக்கலாம். உடல் எடை அதிகரிக்கும்போது, சாதாரணமாக இருப்பதைவிட சிறுநீரகம் அதிக ரத்தத்தை வடிக்கட்டி, அதிலிருந்து உடல் எடைக்குத் தேவையான அளவு வளர்சிதைப் பொருள்களைப் பிரித்தெடுக்க வேண்டியிருக்கும். அதிகமாக உழைக்கும் மெஷின் சீக்கிரமே தேய்ந்துவிடுவதைப்போல சிறுநீரகத்தின் செயல்பாடு அதிகரிக்கும்போது, நாள்பட்ட சிறுநீரக பாதிப்புகள் ஏற்படும். அதோடு, சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்டியோபோரசிஸ் (மூட்டுகள் தேய்ந்து போதல்) தொடங்கி இதய அடைப்பு வரை அனைத்து உடல் உபாதைகளின் முதல் மற்றும் முக்கியக் காரணியாக உடல் எடை அதிகரிப்பு பிரச்னை இருக்கிறது. எனவே, உடல் எடை அதிகரிப்பின் விளைவுகளை விளக்கி, அதற்கான தீர்வுகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் இந்தக் கருப்பொருளின் நோக்கம்.
சிறுநீரகத் துறை நிபுணர், டாக்டர்.வி.சந்திரசேகரன் சிறுநீரகம் தொடர்பான சில முக்கியக் கேள்விகளுக்கு இங்கே பதிலளிக்கிறார்...
``சிறுநீரக பாதிப்புகள் பெருகிவருவதற்குக் காரணம் என்ன?''
`` `உலகளவில் ஆண்டுதோறும் 50 கோடிப்பேர் ஏதாவது ஒரு வகையான சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் அளவுக்கு சிறுநீரகத்தின் செயல்பாடு முற்றிலுமே நின்றுவிடுகிறது' என்கின்றன புள்ளிவிவரங்கள். ஒரு சிறுநீரகம் முழுவதுமே பழுதடைந்து, மற்றொன்றும் 75 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருந்தாலும்கூட, 25 சதவிகிதம் சரியான நிலையில் இருக்கும் சிறுநீரகமே அனைத்து வேலைகளையும் செய்யக்கூடியதுதான். ஆனாலும், ஏன் இவ்வளவு பாதிப்புகள் என யோசித்தால் அதற்கு முதல் காரணம், `நாகரிகம்' என்ற பெயரில் மாறிவரும் வாழ்க்கை முறைகளும், நஞ்சாகிவரும் உணவுப் பொருள்களும்தான்.''
``பொதுவாக சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?''
``சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னைகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்னர் அதன் செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளவேண்டியது மிகவும் அவசியம். உடலில் உள்ள ரத்தத்தைச் சுத்திகரித்து, தேவையான அளவுக்கு தாதுக்களையும், புரோட்டீன்களையும் மட்டும் உடலில் தக்கவைத்து, தேவையில்லாதக் கழிவுகளை சிறுநீரில் கலந்து வெளியேற்றுவதோடு மட்டும் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் நின்றுவிடுவதில்லை. அத்தியாவசியமான சில ஹார்மோன்கள் உற்பத்தியிலும் இவை பங்கு பெறுகின்றன...
* உடலின் அமிலத்தன்மை மற்றும் நீர்மைத் தன்மையை சமநிலையில் வைத்திருத்தல்.
* 'ரெனின்' (Renin) புரோட்டீனின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தி, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துதல்.
* ரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கான 'எரித்ரோபாய்டின்' (Erythropoietin) என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்தல்.
* உணவிலுள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களை உறிஞ்சுவதற்குத் தேவையான செயல்நிலை வைட்டமின் டி-யைத் தயாரித்தல்.
சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு, அவற்றின் செயல் அலகுகளான நெஃப்ரான்கள் பாதிப்படையும்போது, இந்த அனைத்துச் செயல்பாடுகளுமே குறையத் தொடங்கும்போதுதான் `தீவிர சிறுநீரக நோய்', `நாள்பட்ட சிறுநீரக நோய்' ஆகியவை ஏற்படுகின்றன. இவற்றின் கடைசிக்கட்டம்தான் `ESRD' எனப்படும் இறுதிநிலை சிறுநீரக நோய். இந்த நோய்களுக்கு சிகிச்சை அளித்தாலும்கூட பழையநிலைக்கு சிறுநீரகத்தைக் கொண்டுவர முடியாது. சிறுநீரகக் கற்கள், சிறுநீரகத் தொற்று போன்ற சிகிச்சையால் குணமாகக்கூடிய சில பிரச்னைகளும் இன்று அதிகளவில் ஏற்படுகின்றன.
தீவிர சிறுநீரக நோய்
ஒரு சில நாள்களில், ஒரு சில மாதங்களில்... ஏன் ஒரு சில மணி நேரங்களிலேயே எந்த முன் அறிகுறிகளும் இன்றி ஏற்படுவதுதான் தீவிர சிறுநீரக நோய். ஒரு சில நோய்களின் பக்க விளைவுகள், டாக்ஸின்களின் செயல்பாடு, திடீரென ஏற்படும் அதிக நீரிழப்பு போன்றவை இதற்கான காரணங்கள். இவை தவிர, பிறப்பிலேயே குழந்தைகளின் சிறுநீரகத்தில் ஏற்படும் சில நோய்களும் தீவிர சிறுநீரக நோயை ஏற்படுத்தும். சில சமயங்களில் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையிலிருப்பவர்களுக்கேகூட
இந்தப் பாதிப்புகள் திடீரென ஏற்படும்.
நாள்பட்ட சிறுநீரக நோய்
கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரைநோய், அதிக உடல் எடை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களாலும், வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் சிறுநீரகத்தை பாதிக்கக்கூடிய சில ஆன்டிபயாடிக்ஸ் போன்றவற்றை நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்வதாலும் சிறிது சிறிதாக சிறுநீரகத்தின் செயல்பாடு குறைந்துகொண்டே வந்து 90% அளவுக்கு பாதிக்கப்பட்ட பின்னர்தான் அறிகுறிகளே வெளிப்படத் தொடங்கும்.
இறுதிநிலை சிறுநீரக நோய்
`ஈ.எஸ்.ஆர்.டி' (ESRD - End Stage Renal Disease) எனச் சொல்லப்படும் இந்த நிலையில், சிறுநீரகம் தனது செயல்பாட்டை முழுவதுமே நிறுத்திவிடும். டையாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே நோயாளியைக் காப்பாற்ற முடியும்.
சிறுநீரகக் கற்கள்
நாம் குடிக்கும் தண்ணீரிலும், சாப்பிடும் உணவிலும் உள்ள கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட் போன்ற பல தாது உப்புகள் உணவு செரித்த பிறகு சிறுநீர் வழியே வெளியேறிவிடும். ஆனால், இவற்றின் அளவு ரத்தத்தில் அதிகமாகும்போது, சிறுநீரில் வெளியேறுவதற்குச் சிரமப்படும். அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப் பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் படிகம்போல் படிந்து, கல் போலத் திரளும். சிறு கடுகு அளவில் ஆரம்பித்துப் பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். இது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். வழக்கமாக பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிக அளவில் தோன்றுகிறது. சிறுநீரகக் கற்களை அதன் தன்மையைப் பொறுத்து பல வகைகளாகப் பிரிக்கலாம். தக்காளியில் உள்ள ஆக்சாலிக் அமிலத்தால், ஆக்சலேட் கற்கள் உண்டாகின்றன. பால், தயிர் போன்ற கால்சியம் அதிகமான உணவுகள் மற்றும் கால்சியம் சத்து மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போதும் அளவுக்கதிகமான கால்சியம் சிறுநீரகத்தில் கற்களாக படிந்துவிடுகிறது. மேலும், அதிக மசாலா சேர்த்த உணவு, புளிப்பு சுவை, இறைச்சி, முட்டை போன்றவற்றை அதிகம் சாப்பிடுவது, குறைந்த அளவு தண்ணீர் குடிப்பது, உணவிலும் குடிநீரிலும் கால்சியம், குளோரைடு மிகுதியாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது ஆகியவை சிறுநீரகக் கல் தோன்றுவதற்கு முக்கியக் காரணங்கள்.''
``சிறுநீரக பாதிப்புகளை எப்படிக் கண்டறியலாம்?''
``சிறுநீரகத்தின் செயல்பாடு 90% குறைந்து போகும் வரையிலும்கூட பெரும்பாலானவர்களுக்கு பாதிப்புக்கான எந்த அறிகுறியும் தெரிவதில்லை. சில நோயாளிகளின் சிறுநீரின் அளவு எப்போதும்போல சரியாகவே இருக்கும். ஆனால், பரிசோதனையில் பார்த்தால் கிரியாட்டினைன், யூரிக் ஆசிட் அளவுகள் உயர்ந்திருக்கும். எனவே, மூன்று மாதத்துக்கு ஒரு முறை மருத்துவரின் பரிந்துரையின்
பேரில் சிறுநீரக செயல்பாட்டைக் கண்டறிய உதவும் பரிசோதனைகளையும், குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்டிப்பாகச் செய்துகொள்ள வேண்டும். கீழ்க்கண்ட அறிகுறிகள் தெரிந்தால், மருத்துவரிடம் உடனே சென்றுவிடவும்.
* அடிவயிற்றில் வலி, முதுகுவலி, வலி மற்றும் எரிச்சலுடன் சிறுநீர் வெளியேறுதல். சில நேரங்களில் ரத்தமும் வெளியேறுதல்.
* குறிப்பிட்ட அளவுக்கு நீரை வெளியேற்ற முடியாததால், மூட்டுகளில் நீர் தேங்கி வீக்கம் ஏற்படுதல்.
* யூரியா, யூரிக் ஆசிட் போன்ற நைட்ரஜன் கழிவுகள் உடலில் தங்குவதால் அடிக்கடி வாந்தி எடுத்தல்.
* பசியின்மை மற்றும் அசதி.
* கட்டுப்படுத்த முடியத அளவுக்கு ரத்த அழுத்தம் உயருதல்.
* மூச்சு வாங்குதல்.
* வைட்டமின் டி உற்பத்திக் குறைவதால், மூட்டுகளில் வலி ஏற்படுதல்.
* எரித்ரோபாய்டின் ஹார்மோனின் உற்பத்தி குறைந்து, அதனால் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி குறையும்போது கண்கள் வெளுத்துப் போய் ரத்தசோகை ஏற்படும்.''
``என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன?''
``வெளிப்பட்டு, மருத்துவரை நாடும்போது அந்த அறிகுறிகளுக்கு ஏற்ப முதலில் மருந்துகள் அளிக்கப்படுகின்றன. மருந்துகளால் குணப்படுத்த முடியாத நிலை வரும்போதுதான் டையாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. நோயின் தீவிரத்துக்கு ஏற்ப டையாலிசிஸ் செய்யக்கூடிய முறை, செய்துகொள்ளவேண்டிய கால அளவு அனைத்துமே மாறும். பொதுவாக ஒன்று விட்டு ஒரு நாள், அதாவது வாரத்துக்கு மூன்று முறை (மொத்தமாக 12 மணி நேரம்) பெரும்பாலானவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.''
``சிறுநீரகத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன?''
``வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற அளவில் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள, முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரத்த சர்க்கரையின் அளவு மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். சுய மருத்துவம் மற்றும் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் உட்கொள்ளுதல் கட்டாயம் கூடாது. புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் அருந்துதல் நோயின் வீரியத்தை இன்னும் அதிகமாக்கும். எனவே, கண்டிப்பாக இந்தப் பழக்கங்களைக் கைவிட வேண்டும். சிறுநீர் நோய்த்தொற்று அடிக்கடி ஏற்படும்போது, அதுவே . எனவே, சுய சுத்தம் மிக அவசியம்.''
``சிறுநீரகத்தைப் பாதுகாக்கும் உணவுகள் என்னென்ன?''
``அவரை விதை வடிவில் உள்ள சிறுநீரகத்துக்கு அவரைக்காய் ஆகாது. இதில் அதிக பொட்டாசியம் மற்றும் யூரிக் அமிலம் இருப்பதுதான் காரணம். சிறுநீரக பாதிப்புள்ளவர்கள் மற்றும் இதய பாதிப்புள்ளவர்கள் அவரைக்காயை நீரில் வேகவைத்து, அந்தத் தண்ணீரை நீக்கிவிட்டு, அவரைக்காயை எடுத்துக்கொள்ளலாம். `சிறுநீரக கற்களில் பாதிப்புள்ளவர்களுக்கு உணவில் தக்காளி விதைகளை மட்டும் நீக்கினால் போதும்' என்பது உண்மையல்ல. ஏனெனில், தக்காளியின் தோலிலுள்ள ஆக்சாலிக் அமிலம்தான் அதிகளவில் ஆக்சலேட் கற்களை உண்டாக்கும். எனவே, தக்காளி பயன்படுத்துவதையே குறைத்துக்கொள்ள வேண்டும். அதிக உப்பு, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உப்பின் உபயோகத்தைக் குறைத்துவிடுங்கள். அதிகமாக புரோட்டீன் உணவுகள் உண்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். சிறுநீரகத் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க, தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். சிட்ரஸ் பழ வகைகளான எலுமிச்சை, ஆரஞ்சுப்பழச் சாறு போன்றவை தொற்றைக் குறைக்கும்.''
``தண்ணீர் குடிப்பதில் கவனம் தேவையா?''
``நிச்சயமாக. அதிகமான வெப்பத்தின் தாக்குதலில் வசிக்கும் நாம் தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதுதான் சரியான அளவு. ஆனாலும், சிறுநீரகத்தின் செயல்பாடு குறையும்போது சிறுநீரை உற்பத்தி செய்யும் திறன் குறைந்துவிடும். எனவே, அதற்கேற்ப தண்ணீர் குடிப்பதையும் குறைத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்கு மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும். இந்த நேரங்களில் அதிகமான தண்ணீர் குடிக்கும்போது அது, மூட்டுகளில் மட்டும் தங்காமல் நுரையீரலுக்குள் சென்று நீர்கோத்து பாதிப்புகள் ஏற்படுத்தும் அபாயம் உணடு.''
குறிப்பிட்ட உணவு வகைகள், முறையான உடற்பயிற்சி, தகுந்த மருத்துவப் பரிசோதனை... இவற்றைக் கடைப்பிடித்தாலே போதும்... நீங்கள்தான் ஆரோக்கியத்தின் அதிபதி!
- க.தனலட்சுமி