அமைச்சர்கள் கையில் அங்குசம்... அரண்டு கிடக்கும் முதல்வர் பழனிசாமி...!
“அமைச்சராக இருந்தபோது கிடைத்த சுதந்திரம்கூட முதல்வரான பிறகு இல்லையே. என்னுடைய அமைச்சர்களே, எனக்கு இப்போது சோதனையாக இருக்கிறார்கள்” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய இலாக்காவைக் கையில் வைத்திருந்தவர் எடப்பாடி பழனிசாமி. அப்போதே சசிகலா தரப்புடன் நெருக்கமாக இருந்தார். ஆனால், ஒ.பன்னீர்செல்வத்தைத் தாண்டி இவரால் எதுவும் செய்யமுடியாத நிலைதான் இருந்துவந்தது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அடுத்த முதல்வர் தேர்வுகுறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போதே சசிகலா தரப்பில் முன்னிலைப்படுத்தப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அப்போது இருந்த அரசியல் சூழ்நிலையின் காரணமாக முதல்வர் பதவி அவருக்கு தள்ளிப்போனது. எந்தப் பன்னீர்செல்வத்தினால் முதலில் முதல்வர் பதவி தள்ளிப்போனதோ, அதே பன்னீர்செல்வத்தின் போர்க்கொடியால் முதல்வர் பதவி எடப்பாடி வசமாகியுள்ளது.
சசிகலா முதல்வர் ஆவதற்கு பன்னீர்செல்வம் எதிர்ப்பு காட்டியதும், தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. போதாக் குறையாக எட்டு மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் தூங்கிக்கொண்டிருந்த சொத்துக் குவிப்பு வழக்குக்கு உயிரூட்டப்பட்டது. உச்ச நீதிமன்றம் சசிகலாவின் முதல்வர் கனவுக்கு முடிவுரை எழுதியதும், அடுத்த சாய்ஸ் குறித்து சசிகலா ஆலோசனை நடத்தியபோது, டி.டி.வி.தினகரனை முன்மொழிந்தார்கள், அந்தக் கட்சியின் பெரும்பாலானவர்கள். ஆனால், “இப்போதுள்ள சூழ்நிலையில் நமது குடும்பத்தில் இருந்து யாரும் இந்தப் பதவிக்கு வேண்டாம்” என்று முடிவு செய்த சசிகலா, அடுத்த சாய்ஸாகத் தேர்வு செய்தது எடப்பாடி பழனிசாமியை. முதல்வர் பதவியின் மீது ஏக்கத்தில் இருந்த பழனிசாமிக்கு வழியவே வாய்ப்பு வந்ததும், அதைவிடாமல் பிடித்துவிட வேண்டும் என்று முதல்வர் பதவிக்கு ஓ.கே சொன்னார். ஆனால், அடுத்தகணமே சசிகலா தரப்பில் இருந்து சில டிமாண்ட்கள் வைக்கப்பட்டன. கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏ-க்களை நீங்கள்தான் கவனிக்க வேண்டும் என்று சொன்னதும், அதற்கும் ஓ.கே சொன்னார்.
தங்கள் அணிக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ-க்களைக் கவனிக்க அப்போது பழனிசாமிக்கு கைகொடுத்தனர், முக்கிய அமைச்சர்கள் சிலர். எல்லாம் முடிந்த பிறகு அமைச்சர்கள் தங்கள் டிமாண்டை பழனிசாமியிடம் சொன்னதும், சற்று அதிர்ச்சி ஆனவர்... பிறகு அதற்கு ஓ.கே சொல்லியுள்ளார். அதாவது, “ 'நீங்கள் முதல்வராக இருந்துகொள்ளுங்கள். ஆனால், எங்கள் துறைக்கு நாங்கள்தான் முதல்வர். டெண்டர் முதல் போஸ்ட்டிங்வரை எதிலும் நீங்கள் தலையிடக் கூடாது' என்ற ரீதியில் அவர்கள் சொன்ன டிமாண்டை வழியில்லாமல், அப்போது ஏற்றுக்கொண்டுள்ளார் பழனிசாமி்.
இப்படி அன்று அமைச்சர்களிடம் ஒப்புக்கொண்ட டிமாண்டுக்காக இப்போது புலம்ப ஆரம்பித்துள்ளார். 'ஆட்சியைக் கைப்பற்றியதும் சிறப்பான முறையில் நமது பணியிருக்க வேண்டும்' என்று முதல்வர் திட்டமிட்டார். அமைச்சர்களிடமும் இதைத் தெரிவித்தார். முதலில் அனுசரித்துப்போவோம் என்று சொன்னவர்கள், இப்போது ஒத்துழைக்க மறுத்துவருகிறார்கள். குறிப்பாக மூத்த அமைச்சர்கள் மூன்று பேர், 'எங்கள் கைவசம் கணிசமான எம்.எல்.ஏ-க்கள் உள்ளார்கள்' என்று நேரடியாகச் சொல்லி முதல்வருக்குக் கிலியை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆறு எம்.எல்.ஏ-க்கள் பறிபோனால் ஆட்சி பறிபோய்விடும் என்ற நிலையில், அமைச்சர்களே இப்படிச் சொன்னதும் செய்வதறியாது திகைத்துவிட்டார் முதல்வர்.
'எங்கள் துறைக்குள் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்வோம் நீங்கள் கேட்கக் கூடாது' என்று சொன்ன கொங்கு மண்டல மூத்த அமைச்சர் ஒருவர், அவர் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு திட்டத்தை மாற்றி அமைத்துள்ளார். முதல்வரின் ஒப்புதல் இல்லாமலே இந்த மாற்றம் நடைபெற்றுள்ளது. தென் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், 'நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தத்தில் நான் சொல்லும் நபர்களுக்கு ஏன் நீங்கள் ஒப்பந்தம் வழங்கவில்லை' என்று எகிறி, அந்த ஒப்பந்தத்தையே ரத்துசெய்ய வைத்துவிட்டார். இவர்கள், துறைரீதியாகத் தங்கள் பவரை காமிக்கிறார்கள். மத்திய மண்டலத்தைச் சேர்ந்த முக்கிய அமைச்சர் ஒருவர், 'முதல்வர் கைவசம் உள்ள ஒரு துறை தனக்கு வேண்டும்' என்று நெருக்கடி கொடுக்க... என்ன செய்வது என்று புரியாமல் முழித்து வருகிறாராம் முதல்வர். அதற்கு அந்த அமைச்சர் சொல்லும் காரணம், 'கூவத்துாரில் நான் எம்.எல்.ஏ-க்களைச் சரிசெய்யாமல் போயிருந்தால்... நீங்கள் ஆட்சியில் இருந்திருக்க முடியுமா' என்று சென்டிமென்டாகச் சொல்லியுள்ளார். நிர்வாகரீதியாக இருக்கும் பிரச்னைகளைவிட அமைச்சர்கள் தரும் நெருக்கடிகள்தான் முதல்வருக்கு இப்போது சிக்கலாகிவிட்டன. அமைச்சர்கள் அனைவரும் ஆளுக்கு ஐந்து எம்.எல்.ஏ-க்களைக் கையில் வைத்துக்கொண்டு முதல்வருக்கு நெருக்கடி கொடுத்துவருவதால், முதல்வர் பதவி மீது எடப்பாடிக்கு வெறுப்பே வந்துவிட்டது” என்கிறார்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்கள்.
'ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்பார்கள், இங்கு கட்சி ரெண்டுபட்டது அமைச்சர்களுக்குக் கொண்டாட்டமாகிவிட்டது.
- அ.சையது அபுதாஹிர்
No comments:
Post a Comment