ஒரே தவணையில் கடன் தொகையை செலுத்தத் தயார்: வங்கிகளை சமரசத்துக்கு அழைக்கிறார் விஜய் மல்லையா
“ஒரே தவணையில் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான கொள்கை பொதுத்துறை வங்கிகளிடத்தில் உள்ளது. நூற்றுக்கணக்கான பேர் கடனை இவ்வாறு திருப்பிச் செலுத்தியுள்ளனர். எங்களுக்கு மட்டும் இது மறுக்கப்படுவது ஏன்? உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் இதற்கான கோரிக்கையை வைத்தப் போது வங்கிகள் பரிசீலிக்காமல் ஏற்க மறுத்து விட்டன. நியாயமான முறையில் கடனைத் திருப்பி செலுத்துவதற்கு நான் பேச்சு வார்த்தைக்குத் தயாராகவே இருக்கிறேன்.
எனவே உச்ச நீதிமன்றம் தலையிட்டு வங்கிகளுக்கு பேச்சுவார்த்தைக்கான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், நாங்கள் தயாராகவே இருக்கிறோம்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது நீதிமன்றத்தின் ஒவ்வொரு உத்தரவுக்கும் தான் பணிந்து நடந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் ‘நியாயமான விசாரணையின்றி அரசுதான் என்னைக் குற்றவாளியாக்க முயற்சிப்பது போல் தெரிகிறது.
அட்டர்னி ஜெனரல் எனக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கூறிய குற்றச்சாட்டுகள் எனக்கு எதிரான அரசின் அணுகுமுறையைக் காட்டுகிறது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வியாழனன்று மல்லையாவிடம் உச்ச நீதிமன்றம், அவர் சமர்ப்பித்த சொத்து விவரங்கள் உணமையானதுதானா என்று கேள்வி எழுப்பியிருந்தது.
பல்வேறு வங்கிகளுக்கு மல்லையா வைத்துள்ள கடன் தொகை ரூ.9,000 கோடி என்பது குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் அவர் மார்ச் 2-ம் தேதி இந்தியாவை விட்டு அயல்நாட்டுக்கு வெளியேறினார்.
No comments:
Post a Comment