Friday, March 10, 2017


ரயில் இன்ஜின் காதலிக்கு குடியரசுத் தலைவர் விருது!

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன், ரயில் ஓட்டுநர் பணிக்கு வீட்டுக்குத் தெரியாமல் விண்ணப்பித்தார் அந்தப் பெண். அவர் கட்டுப்பாடுமிக்க இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர். பொதுவாக, நம் சமூகத்தில் ஆபத்து நிறைந்த பணிகளில் பெண்களை அனுமதிப்பதுமில்லை... விரும்புவதுமில்லை. இருந்தும், கட்டுப்பாடு நிறைந்த ஒரு குடும்பத்தில் இருந்துதான் இந்தியாவுக்கு முதல் பெண் ரயில் ஓட்டுநர் கிடைத்தார். மும்பையை சேர்ந்த அவர் பெயர் மும்தாஜ்.



தந்தை ஒரு ரயில்வே ஊழியர். ரயில்வே குடியிருப்பு வாழ்க்கை. கோழி விழிக்கும் முன்பே ரயில் விழிக்கும் நகரம் மும்பை. ரயில் சத்தம் கேட்டுதான் மும்தாஜ் விழிப்பார். மும்தாஜ் மட்டுமல்ல... மும்பை மக்கள் வாழ்க்கையுடன் இணைந்தது புறநகர் ரயில். தினமும் 75 லட்சம் மக்களை புறநகர் ரயில்கள் சுமந்து செல்லும். இது தவிர தினமும் குறைந்தது 500 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நகருக்குள் வந்து செல்லும்.

வித விதமான இன்ஜின்களைக் கொண்ட ரயில்கள் அவை. அந்த இன்ஜின்களை எல்லாம் பார்த்துப்பார்த்து மும்தாஜுக்கும் அவற்றின் மீது பெருங்காதல். 1989-ல் பள்ளிப்படிப்பை முடித்த அவர், சத்தமில்லாமல் ரயில் டிரைவர் பணிக்கு விண்ணப்பித்தார். விஷயம் தெரியவர, வீட்டில் பூகம்பம் வெடித்தது. தந்தை அல்லார்க்கு இஸ்மாயில் கொந்தளித்தார். 'கல்யாணம் கட்டிக் கொடுக்கப் போகிறேன்... பிள்ளைய பெத்துட்டு வீட்டுல கிட...' என அதட்டினார். தந்தைக்கும் மகளுக்கும் தினமும் சண்டை. மும்தாஜ் அசைந்து கொடுக்கவில்லை. தன் முடிவில் உறுதியாக, தெளிவாக இருந்தார்.

‘வேலை என்று பார்த்தால், அது ரயில் டிரைவர் வேலைதான்’ என மும்தாஜ் உறுதிபட தந்தையிடம் கூறினார். இந்தப் பிடிவாதத்தைப் பார்த்து உறவினர்களும் நண்பர்களும் இஸ்மாயிலை சமாதானப்படுத்தினார். முடிவில் தந்தையும் பிடிவாதத்தை கைவிட்டு, இறங்கி வந்தார். இரு ஆண்டுகள் தீவிர பயிற்சிக்குப் பின், 1991-ம் ஆண்டு துணை ரயில் ஓட்டுநர் ஆனார் மும்தாஜ்.

அந்தச் சமயத்தில் ரயிலுக்கு பிரசித்திபெற்ற ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கூட பெண் ரயில் ஓட்டுநர்கள் கிடையாது. அதனால், இந்தியா மட்டுமல்ல ஆசியாவிலேயே ரயிலை ஓட்டிய முதல் பெண் மும்தாஜ்தான். இப்போது டீசல் முதல் மின்சார ரயில் வரை அனைத்தும் மும்தாஜுக்கு அத்துப்படி. ஆயிரம் டன் எடை கொண்ட, இன்ஜின்களைக் குழந்தை போல கையாள்கிறார் மும்தாஜ்.

கடந்த 1995ம் ஆண்டு ‘லிம்கா’ புத்தகத்தில் மும்தாஜ் இடம் பிடித்தார். ஒரு கட்டத்தில் புறநகர் ரயில்களை ஓட்டுவதில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். மும்பை நகரில் பெண்கள் ஸ்பெஷல் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதன் மோட்டார்வுமன் பணி தேடி வந்தது. தற்போது, மும்பை மத்திய புறநகர் ரயில்வேயில் மோட்டார்வுமனாக பணியாற்றி வருகிறார். இந்தியாவிலேயே பெரியதும், அதிக ரயில் போக்குவரத்து நெரிசலும் கொண்ட பாதை அது. தினமும் அந்த பாதையில் 650 மோட்டார்மேன்கள் ரயில்களை இயக்குகின்றனர். அதில் 8 பேர் பெண் ஓட்டுநர்கள். அவர்களுக்கு மும்தாஜ்தான் 'இன்ஸ்பிரேஷன்'.

உலகிலேயே ஆண்கள் மட்டுமே நிறைந்த உலகம் என்று பார்த்தால் அது ரயில் டிரைவர் பணியாகத்தான் இருக்க முடியும். இரவுபகல் பாராமல் எங்கு வேண்டுமானாலும் தங்க வேண்டியது இருக்கும். சவால் நிறைந்த பணியும் கூட. அத்தகையத் துறையில் சாதித்ததற்காக மும்தாஜுக்கு 'மகளிர் சக்தி விருது' அளிக்கப்பட்டது. நடப்பாண்டில் இந்த விருதுக்கு 7 பெண்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதில் மும்தாஜும் ஒருவர்.

மகளிர் தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், மும்தாஜுக்கு இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். தற்போது 43 வயதான மும்தாஜை அவரது குடும்பமே கொண்டாடுகிறது. ‘‘நான் வேலைக்கு சேரும்போது, இரண்டே இரண்டு பெண்கள்தான் இருந்தோம். இப்போது காலம் மாறி விட்டது. ஏராளமான பெண்கள் ரயில் ஓட்ட முன்வருகின்றனர். அதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்’’ என பெருமிதம் கொள்கிறார். இந்த ரயில் இன்ஜின்களின் காதலி!

-எம்.குமரேசன்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024