சம்மருக்கு தண்ணீரைவிட இளநீர்தான் பெஸ்ட்... ஏன்? #SummerTips
அழகான பச்சை நிறத் தோற்றம்; உள்ளே ஜில்லென்ற தண்ணீர்; அதையும் தாண்டி லேசான இனிப்புச் சுவையில் நாவைச் சுண்டி இழுக்கும் `வழுவழு’ வழுக்கை! இளநீர்... இளைய தலைமுறை முதல் முதியோர் வரை அத்தனைபேரையும் ஈர்க்கும் ஒப்பற்ற பானம். இயற்கை கொடுத்த அற்புதக் கொடை. வெயிலுக்கு இதமானது. உடனடியாக எனர்ஜியைக் கொடுக்கும் பானங்களில் முதலிடம் இளநீருக்கே! இது, நோயாளிகளின் உடல்நிலையை மேம்படுத்தும் பானமும்கூட. `இரண்டாம் உலகப் போரின்போது, பிளாஸ்மாவுக்குப் பதிலாக இளநீரைத்தான் காயமடைந்தவர்களுக்கு ரத்தத்தில் ஏற்றினார்கள்’ என வரலாற்றில் குறிப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு மருத்துவக் குணங்கள்கொண்டது. லிக்விட் டயட்களில் மிகச் சிறந்த எனர்ஜி டிரிங்க். ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு தென்னை மரம் இருந்தால் போதும்... ஆயுள் முழுக்க ஆரோக்கியம் இலவசம்!
இளநீர் தரும் இதமான பலன்கள்...
தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் இளநீரிலும் இருக்கு!
தாய்ப்பாலில் உள்ள லாரிக் ஆசிட் இளநீரிலும் இருப்பதால் பூஞ்சை, பாக்டீரியா, வைரஸ் ஆகியவற்றை அழிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. இந்த லாரிக் அமிலத்தை உடலானது, மோனோலாரினாக (Monolaurin) மாற்றி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். குடலில் உள்ள புழுக்கள், கிருமிகள் ஆகியவற்றை வெளியேற்ற உதவும்.
வயிற்றைச் சுத்தப்படுத்தும் க்ளென்ஸர்!
வயிறு மற்றும் குடல் தொடர்பான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வயிற்றுப் பொருமல், உப்புசம், குமட்டல், பசியின்மை ஆகியவற்றைச் சரிப்படுத்தும். இந்தப் பிரச்னைகள் இருந்தால், வயிறு சற்று வீங்கிக் காணப்படும். எரிச்சல் உணர்வு ஏற்படும்; இவற்றைச் சரிசெய்யும் மருந்துதான் இந்த இயற்கைப் பானம். இளநீரில் உள்ள டானின் (Tannin) எனும் ஆன்டிபாக்டீரியல் பொருள்கள், எரிச்சல் உணர்வைப் போக்கும். வயிற்றில் உள்ள வீரியம் குறைந்த தொற்றைக்கூடச் சரிசெய்யும்.
எலெக்ட்ரோலைட் பொக்கிஷம்
ஒரு கப் இளநீரில், 600 மி.கி பொட்டாசியம், 250 மி.கி சோடியம், 60 மி.கி மக்னீசியம், 58 மி.கி கால்சியம், 48 மி.கி பாஸ்பரஸ் ஆகியவை உள்ளன. தசைநார்கள், செல்கள், நரம்புச் செல்கள் (Nerve cells) ஆகியவை சரியாக இயங்குவதற்கு சோடியம், பொட்டாசியம், மக்னீஷியம் ஆகிய மூன்றும் தேவை. உடலுக்கான எலெக்டிரிக்கல் செயல்பாட்டுக்கு இவை அத்தியாவசியமும்கூட. இவற்றை அள்ளித்தருவதில் இளநீருக்கே முதலிடம். இதைக் குடிப்பதால், அதீத டென்ஷன் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை கட்டுக்குள் வரும்.
கிட்னி ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்!
நாம் அன்றாடம் உண்ணும் உணவில் சோடியம் அதிக அளவில் இருந்தால், சிறுநீரகம் பாதிக்கும். சிறுநீரகத்தின் பணி என்பது உடல் கழிவை, சிறுநீராக வெளியேற்றுவது. இதைச் சரியாகச் செய்யவிடாமல் தடுப்பது உடலில் உள்ள அதிகச் சோடியம்தான். இளநீரில் உள்ள பொட்டாசியம், சிறுநீரைப் பெருக்கி சோடியத்தை வெளியேற்றும். மேலும், சிறுநீரகக் கற்கள் உருவாகாமலும் தடுக்கும். மலச்சிக்கலும் சீராகும். நச்சுக்களும் வெளியேறும்.
தண்ணீரைவிடச் சிறந்தது!
தண்ணீரைவிட இளநீரை, உடல் வெகு சுலபமாகக் கிரகித்துகொள்ளும். நீர்ச்சத்துகளைக் கொடுத்து, உடலைத் தேற்றும். இதில் உள்ள தாதுஉப்புக்கள் வயிற்றுக்கு நன்மை செய்கின்றன. அடிக்கடி வாந்தி, பேதியால் பாதிக்கப்படும் நபர்கள், இளநீரைச் சாப்பிட்டால் இழந்த நீர்ச்சத்துகளை உடனே பெறலாம். இதன் சுவையும், குமட்டலைக் கட்டுப்படுத்தும். மேலும், அதிக ரத்தபோக்கு இருக்கும்போது, இதைச் சாப்பிட்டால் உடலுக்கு எனர்ஜி கிடைக்கும். முதல் மூன்று மாத (Trimester) கர்ப்பிணிகளால் உணவைச் சரியாகச் சாப்பிட முடியாது. இதனால் அவர்கள் சோர்வடைவார்கள். அதற்குச் சிறந்த மாற்றாக இளநீர் அமையும். சோர்வைப் போக்கி புத்துணர்வு தரும்.
பளபளப்பான சருமம் பெறலாம்!
சருமத்தின் ஈரப்பதத்தை நீண்ட நேரத்துக்குத் தக்கவைத்து, சருமத்தைப் பாதுகாக்கும். கடைகளில் மாய்ஸ்சரைசர் வாங்கிப் பயன்படுத்தினால், சருமம் மிருதுவாக இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால், தொடர்ந்து இளநீர் குடித்தால், மாய்ஸ்சரைசரை பயன்படுத்தாமலேயே சருமம் அழகாக, பளபளப்பாக மாறும். சருமம் ஜொலிப்பது இதிலுள்ள போனஸ் பலன்.
சீக்கிரமே ஸ்லிம்மாகலாம்!
உடல்பருமனைக் குறைக்க நேரடியாக வேலைசெய்யும் உணவுகளில் இதுவும் ஒன்று. உடல் எடையைக் குறைக்கும் நல்ல பழக்கங்களான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி ஆகிய பயிற்சிகளில் இளநீரைக் குடிப்பது என்ற பயிற்சியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். வெயிட் லாஸ் நிச்சயம். ஏனெனில், இது கிரேவிங் உணர்வைக் கட்டுப்படுத்தும். உணவு சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு கிளாஸ் இளநீரைக் குடித்தால், உணவு உண்ணும் அளவும் குறையும். இயற்கையாகவே நாம் குறைவாகச் சாப்பிடும்படி மாற்றும். வொர்க்அவுட் செய்த பிறகு, சர்க்கரை சேர்த்த செயற்கை எனர்ஜி பானத்தைக் குடிப்பதைவிட நேச்சர் கிஃப்ட் இளநீரை குடிப்பது நல்லது; ஹெல்த்தியும்கூட.
- ப்ரீத்தி
No comments:
Post a Comment