பதின் பருவம் புதிர் பருவமா? - இணைய அடிமைத்தனம்: மீண்டு வர என்ன வழி?
வெறும் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் என்று அறிவிப்பு வந்த இரண்டு
நாளில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் நம் நாட்டில் பதிவு செய்ததால், அந்த
நிறுவனம் பதிவையே நிறுத்திக்கொண்டுவிட்டது. ஒரு பொருள் மீது நம் மக்கள்
கொள்ளும் மோகம் தொடர்பான வேகத்துக்கான ஒரே ஒரு சான்று இது. எல்லாம்
டிஜிட்டல் மயமாவது பல சௌகரியங்களைத் தந்தாலும், வழக்கம்போல அவற்றில் உள்ள
பிரச்சினைகளை நம் அதிகார வர்க்கம் உணர்ந்ததுபோலத் தெரியவில்லை.
உலகிலேயே வலைதள அடிமைத்தனத்தை முக்கிய சமூகநலப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு பல தடைச்சட்டங்கள், கட்டுப்பாடுகள் மூலம் மனநலப் பாதிப்பு ஏற்படாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னோடியாகச் சீனாவும் தென்கொரியாவும் செயல்பட்டுவருகின்றன. அதே மாதிரியைப் பின்பற்றிப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
உலகிலேயே வலைதள அடிமைத்தனத்தை முக்கிய சமூகநலப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டு பல தடைச்சட்டங்கள், கட்டுப்பாடுகள் மூலம் மனநலப் பாதிப்பு ஏற்படாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முன்னோடியாகச் சீனாவும் தென்கொரியாவும் செயல்பட்டுவருகின்றன. அதே மாதிரியைப் பின்பற்றிப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.
நம் நாட்டில் இணையதளம், சமூக வலைதளம் ஆகியவற்றுக்கு அடிமையாகும் வளர்இளம் பருவத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது கவலை தரும் விஷயம். இணைய அடிமைத்தனத்தால் படிப்பு, மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதே என்று பல பெற்றோர்கள் புலம்புவதை அடிக்கடி பார்க்கிறோம். ஒருவேளை நம்முடைய ரத்தஉறவுகளும் இப்படி அடிமையாகிவிட்டால் என்ன செய்வது?
இணைய அடிமைத்தனத்துக்கு என்றே மனநலச் சிகிச்சைகள், ஆலோசனைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள், மீண்டும் அவற்றைப் பயன்படுத்துவதைத் தடுப்பதையே முக்கிய நோக்கமாகக்கொண்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆனால் இணையதளம், வலைதளம், மொபைல்ஃபோன் பயன்பாட்டை அப்படி முற்றிலும் தடை செய்ய முடியாது. எனவே, இவற்றை மிதமாகவும் கட்டுப்பாட்டுடனும் பயன்படுத்த வழிசெய்வதே சிறந்தது.
இணைய டைரி
இணையப் பயன்பாட்டுக்கு அடிமையானவர்கள் எந்த மாதிரி மனநிலையில் இருக்கும்போது, கட்டுக்கடங்காமல் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைக் கண்காணிக்க டைரி முறை பயன்படும். இந்த டைரியில் ஒருவர் இணையத்தை ஒவ்வொருமுறை பயன்படுத்தும்போதும் எத்தனை மணி நேரம் பயன்படுத்துகிறார், எத்தகைய வலைதளங்களைப் பார்க்கிறார், அதைப் பயன்படுத்துவதற்கு முன்னும் பின்னும் உள்ள மனநிலை, ஒவ்வொரு முறை பயன்படுத்துவதால் தடைபடும் அன்றாட மற்றும் முக்கிய வேலைகள், ஏற்படும் பிரச்சினைகள் போன்றவற்றைக் குறித்துக்கொள்ள வேண்டும். இதைத் தொடர்ந்து செய்துவந்தால் அவர் எவ்வளவு நேரம் விரயம் செய்கிறார், எந்த மனநிலை அதிகம் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கிறது, எத்தனை வேலைகளை அது பாதிக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வு கிடைக்கும்.