Tuesday, May 8, 2018

ஜூலை 15 முதல் புதுச்சேரியில் இருந்து சென்னை, சேலத்துக்கு விமான சேவை

By DIN | Published on : 08th May 2018 01:19 AM |

புதுச்சேரியில் இருந்து சென்னை, சேலத்துக்கு ஜூலை 15 -ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான கட்டணம் அறிவிக்கப்பட்டு, தற்போது முன்பதிவு தொடங்கியுள்ளது.
நாட்டில் விமான சேவையை அதிகரிக்கும் நோக்கில் புதிய விமான கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, சிறிய நகரங்களை வான் வழியாக இணைக்கும் உதான் திட்டத்தில் சேர்ந்து, புதுச்சேரியில் இருந்து தடைபட்டிருந்த விமான சேவையை மீண்டும் தொடங்க மாநில அரசு நடவடிக்கை எடுத்தது.

இதையடுத்து, கடந்த 2017 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஹைதராபாத்துக்கு விமான சேவையை தொடங்கியது. இதற்கு பயணிகளிடம் வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து, மீண்டும் பெங்களூருக்கு விமான சேவையைத் தொடங்க அந்த நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி, கடந்த பிப்ரவரி 15 -ஆம் தேதி முதல் விமான சேவை தொடங்கியது.
இந்த நிலையில், ஏர் ஒடிஸா என்ற நிறுவனம் ஜூலை 15 -ஆம் தேதி முதல் புதுச்சேரியிலிருந்து சென்னை, சேலத்துக்கு புதிய விமான சேவையை தொடங்க உள்ளது. பயணத்துக்கான முன்பதிவு இணையதளத்தில் தொடங்கியுள்ளது.

சென்னையில் இருந்து காலை 8.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.55 மணிக்கு புதுச்சேரி வந்தடையும். மீண்டும் பிற்பகல் 1.15 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் பிற்பகல் 2 மணிக்கு சென்னையை சென்றடையும்.

அதேபோல, காலை 9.10 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் விமானம் 10 மணிக்கு சேலம் சென்றடையும். மீண்டும் மதியம் 12.15 மணிக்கு சேலத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் ஒரு மணிக்கு புதுச்சேரி வந்தடையும். பயண நேரம் 45 நிமிடங்கள்.

கட்டண விவரம்: சென்னை - புதுச்சேரி ரூ.1,940, புதுச்சேரி - சென்னை ரூ.1,470, புதுச்சேரி - சேலம் ரூ.1,550, சேலம் - புதுச்சேரி ரூ. 1,550.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024