Tuesday, May 8, 2018


துன்பியல் மகிழ்வு!


By ஆசிரியர் | Published on : 07th May 2018 02:27 AM

கடந்த ஆண்டு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான "நீட்' எனப்படும் தகுதிகாண் நுழைவுத் தேர்வு வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து மிகப்பெரிய சர்ச்சை தமிழகத்தில் எழுந்தது என்றால், இந்த ஆண்டு, "நீட்' தேர்வு நடத்தப்படும் விதம் கடுமையான விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்திலிருந்து "நீட்' தேர்வு எழுதும் மாணவர்களில் சிலர் பிற மாநிலங்களில் அலைக்கழிக்கப்பட்ட விதம், "நீட்' தேர்வுக்கு ஆதரவு அளித்தவர்களையேகூட கோபப்படவும், எரிச்சலடையவும் வைத்திருக்கிறது.

தமிழகத்தில் 170 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்த பல மாவட்டங்களிலும்கூட மாணவ, மாணவியர் வெளிமாநிலத் தேர்வு மையங்களில் தேர்வு எழுத பணிக்கப்பட்டது ஏன் என்பது புரியவில்லை. தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு தேர்வு எழுத விண்ணப்பித்த 1,07,288 மாணவர்களில் ஏறத்தாழ 5,500}க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய அண்டை மாநில தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், 1,000 கி.மீ.க்கு அப்பால் உள்ள ராஜஸ்தான், சிக்கிம் உள்ளிட்ட தொலைதூர மாநிலங்களில் சிலருக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது, மாணவர்களின் மீது கொஞ்சம்கூட கருணையே இல்லாத துன்பியல் உணர்வுள்ள மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் மனப்போக்கைத்தான் வெளிப்படுத்துகிறது. தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை எனத் தெரிகிறது.
தமிழகத்தில் தேர்வு மையங்களை ஒதுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, மாற்ற முடியாது என்று, அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம் அந்த மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. உச்சநீதிமன்றத்திற்கும் கூடவா "நீட்' தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் சிரமங்களும், மனஉளைச்சலும் தெரியவில்லை?
வெளிமாநிலங்களில் தேர்வு எழுதச் சென்றவர்கள் அங்கே அனுபவித்த பிரச்னைகளைச் சொல்லி மாளாது. போக்குவரத்துக் குறைபாடு, தங்கும் வசதி குறைபாடு, தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் செல்ல இயலாமை, மொழி தெரியாமல் பட்ட அவஸ்தை, முற்றிலும் புதிய இடம் என்பதால் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியில் காணப்பட்ட அச்சம், மன அழுத்தம், எல்லாவற்றிற்கும் மேலாக தொலைதூரப் பயணத்துக்கு பெற்றோருடன் சென்று வருவதற்கு நேர்ந்த செலவு என்று என்னென்னவோ பிரச்னைகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவந்தது. இதுகுறித்தெல்லாம் நீதித்துறையோ, இந்திய மருத்துவ கவுன்சிலோ, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமோ கொஞ்சம்கூட கவலைப்படாமல் நடந்துகொண்டதை என்னதான் காரணம் கூறினாலும், நியாயப்படுத்திவிட முடியாது.

திருத்துறைப்பூண்டி அருகே பெருகவாழ்ந்தான் கிராமத்தில் நூலகராகப் பணியாற்றி வந்த 47 வயது கிருஷ்ணசாமியின் கனவு, தனது மகன் மருத்துவராக வேண்டும் என்பது. "நீட்' தேர்வு எழுதுவதற்காக கேரள மாநிலம், எர்ணாகுளத்தில் உள்ள நாலந்தா பள்ளியில் அவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. மிகுந்த சிரமத்துடன் தேர்வு மையத்தைக் கண்டறிந்து, தேர்வு மையத்தில் மகனை விட்டுவிட்டு விடுதிக்குத் திரும்பிய கிருஷ்ணசாமி, அந்த மனஉளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டிருக்கிறார். தந்தை இறந்ததுகூட தெரியாமல் கஸ்தூரி மகாலிங்கம் "நீட்' தேர்வு எழுதியிருக்கிறார். இது எத்தனையோ நிகழ்வுகளில் ஒன்று மட்டுமே.

சில மையங்களில் முதலில் இந்தி, ஆங்கில மொழிகளில் வினாத்தாள்கள் தரப்பட்டு, பிறகு தாமதமாக தமிழில் வினாத்தாள் தரப்பட்டிருக்கிறது. தாங்கள் எந்தவிதமான மனஉளைச்சலுக்கும் ஆளாகவில்லை என்று அதிகாரிகள் அந்த மாணவர்களிடம் கடிதம் எழுதி வாங்கியிருக்கிறார்கள். இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து வருவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது உண்மை. ஆனால், அவர்கள் அணிந்திருந்த கம்மல், மூக்குத்தி, கைகளில் அணிந்திருந்த கயிறு ஆகியவற்றை அகற்றிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. மாணவிகளின் தலைமுடியை அவிழ்த்து அதிகாரிகள் சோதனைக்கு உள்படுத்தியதால், சில மாணவிகள் தலைவிரி கோலத்துடன் தேர்வு எழுதினர். அவர்களது மனஉளைச்சல் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்.
சில மையங்களில் பிராமண மாணவர்களின் பூணூல் அறுத்து எறியப்பட்டது.
தமிழகத்தில் எத்தனை எத்தனையோ பொறியியல் கல்லூரிகளில் தேர்வு மையம் அமைப்பதாகக் கூறினால் தங்களது கல்லூரியை இலவசமாகத் தரத் தயாராக இருக்கும் நிலையில், வேற்று மாநிலங்களுக்கு இங்கிருந்து மாணவர்களை அனுப்பித் தேர்வு எழுதச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன இருந்தது என்பது புரியவில்லை.

தகுதிகாண் தேர்வுக்காக இரவு பகலாக உழைத்துப் படித்த மாணவர்களை, தங்கள் திறமையைத் தேர்வில் வெளிப்படுத்த வசதி செய்து கொடுக்காமல் அச்சுறுத்தி, மனஉளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் அத்துமீறல்களை யாரும் தட்டிக்கேட்கக்கூட முடியாது. காரணம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலுடனும் உத்தரவின்படியும் அவர்கள் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிகாண் தேர்வை நடத்துகிறார்கள். இவர்கள் செய்த தவறுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் உருவ பொம்மையை சிலர் எரிக்க முற்பட்டிருக்கிறார்களே, அதற்குப் பெயர் மாணவர்கள் மீதான அக்கறையல்ல, அரசியல்! கடந்த ஆண்டும் அத்துமீறல்கள் நடந்தன. இந்த ஆண்டு அதிகரித்திருக்கிறது.

இதற்குப் பொறுப்பேற்க வேண்டியது யார்?


மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024