Friday, February 13, 2015

சென்னையில் மேலும் 50 பஸ்களின் எண்கள் மாற்றம் மாநகர போக்குவரத்து கழகம் தகவல்



சென்னை மாநகரில் மேலும் 50 பஸ்களுக்கு வழித்தட எண்கள் மாற்றப்பட்டு இயக்கப்படுகின்றன.

புதிய வழித்தட எண்கள்

மாநகரில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் பயணம் செய்யும் போது பயணிகளுக்கு ஏற்படும் குழப்பத்தை போக்க மாநகர போக்குவரத்து கழகம் ஏற்கனவே 15 வழித்தட எண்களை மாற்றியது. இதனைத் தொடர்ந்து நேற்று 50 வழித்தட எண்கள் மாற்றப்பட்டுள்ளன.

இதில் பிராட்வேயில் இருந்து வடபழனி, அய்யப்பன்தாங்கல், சாலிகிராமம் மார்க்கமாக செல்லும் அனைத்து பஸ்களும் எண் 17–ல் இருந்து 26 ஆக மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் கோயம்பேடு, கிண்டி, அடையாறு உட்பட மாநகரில் உள்ள அனைத்து டிப்போக்களில் உள்ள பஸ் வழித்தட எண்களும் படிப்படியாக மாற்றப்பட இருக்கிறது என்று போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஸ்கள் புறப்படும் இடம், சேரும் இடம், பழைய எண் மற்றும் புதிய எண் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:–

--–

புறப்படும் இடம் சேரும் இடம் பழைய எண் புதிய எண்

--–

பிராட்வே அய்யப்பன்தாங்கல் 17எம் 26

பிராட்வே வடபழனி 17எம் கட் 26 கட்

பிராட்வே சாலிகிராமம் 17 எம் எக்ஸ்டன் 26 எக்ஸ்டன்

வேளச்சேரி தாம்பரம் மேற்கு எம்.21 51

வேளச்சேரி மேடவாக்கம் சந்திப்பு எம் 21 கட் 51 கட்

பிராட்வே திருமழிசை 153 53ஏ

பிராட்வே ஸ்ரீபெரும்புதூர் 553 53 பி

பிராட்வே கே.கண்ணதாசன் நகர் 7ஜி 64 கே

பிராட்வே கொடுங்கையூர் பார்வதிநகர் 7ஜி எக்ஸ்டன் 64 கே எக்ஸ்டன்

கோயம்பேடு மார்க்கெட்– தாம்பரம் எம் 70 சி 70 சி

அம்பத்தூர் ஐ.இ கிண்டி டி.வி.கே.ஐ.இ எம். 70 வி டி 70 கட்

ஆவடி சி.எம்.பி.டி. எம். 70 ஏ 77

சி.எம்.பி.டி, அய்யப்பாக்கம் 20 ஜெ 77 ஏ

வேங்கடாசலம் நகர் சி.எம்.பி.டி. எம் 70 ஏ கட் 77 கட்

கோயம்பேடு மார்க்கெட் புழல் 62 டி 77 டி

சி.எம்.பி.டி, கன்னியம்மன் நகர் 61 மே எக்ஸ்டன் 77 இ

ஜெ.ஜெ.நகர் மேற்கு கிண்டி டிவிகே ஐ.இ. ஜெ 70 77 ஜெ

சி.எம்.பி.டி. கருக்கு 20 எச் 77 கே

சி.எம்.பி.டி, கருக்கு எம் 70 எல் 77 கே

கோயம்பேடு மார்க்கெட் மதனகுப்பம் 62 இ 77 எம்

கோயம்பேடு மார்க்கெட் பூச்சி ஆத்திபேடு 61 பி கட் 77 பி

சி.எம்.பி.டி. வேப்பம்பட்டு இ.நகர் எம் 70 இ 77 வி

சி.எம்.பி.டி. கோயம்பாக்கம் 70 இ 77 வி எக்ஸ்டன்

திருவான்மியூர் தாம்பரம் ஏ 21 91

திருவான்மியூர் தாம்பரம் ஏ 21 ஏசி 91 ஏசி

திருவான்மியூர் கூடுவாஞ்சேரி வி 21 91 ஜி

திருவான்மியூர் வண்டலூர் மிருகக்காட்சிசாலை ஏ 21 வி 91 வி

திருவான்மியூர் தாம்பரம் கிழக்கு டி 51 95

சோழிங்கநல்லூர் தாம்பரம் சி 51 கட் 97 கட்

அடையார் பி.எஸ் தாம்பரம் மேற்கு சி 51 97

பிராட்வே கேளம்பாக்கம்/ சிறுசேரி 21 எச் 102/102 எஸ்

பிராட்வே செம்மாஞ்சேரி எஸ்சிபி எச் 21 102 சி

பிராட்வே கண்ணகிநகர் எஸ்சிபி டி 21 102 கே

பிராட்வே ஒட்டியம்பாக்கம் சி 21 102 எம்

பிராட்வே கோவளம் பிபி19 எக்ஸ்டன் 109

திருவான்மியூர் கோவளம் பிபி19 கட் 109 கட்

பிராட்வே ஈஞ்சம்பாக்கம் பிபி19 ஜி.எஸ். 109 சி

தாம்பரம் திருவேற்காடு 170 111

ரெட்ஹில்ஸ் கிண்டி டிவிகே ஐ.இ. சி70 113

கிண்டி டி.வி.கே. ஐ.இ பாடியநல்லூர் சி70 எக்ஸ்டன் 113 எக்ஸ்டன்

பிராட்வே ஆவடி/அரக்கம்பாக்கம் 61 பி 120 ஏ

பிராட்வே ஆவடி/கீழ்கொண்டையூர் 61 இ 120 இ

பிராட்வே கதவூர் 61 டி 120 கே

பிராட்வே ஆவடி/ கீழ்கொண்டையூர் 61 டி எக்ஸ்டன் 120 கே எக்ஸ்டன்

சி.எம்.பி.டி பட்டாபிராம் எம் 153 153

சி.எம்.பி.டி திருவள்ளூர் 596 153 ஏ

சி.எம்.பி.டி பாண்டூர் 596 ஏ 153 பி

சி.எம்.பி.டி மேப்பூர் 53 கே 153 கே

சி.எம்.பி.டி பேரம்பாக்கம் 591 ஏ 153 பி

சி.எம்.பி.டி திருவள்ளூர் 596 பி 153 டி

அனந்தபுரி, திருக்குறள் எக்ஸ்பிரஸ் உள்பட 8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு தெற்கு ரெயில்வே அறிவிப்பு



அனந்தபுரி, திருக்குறள் எக்ஸ்பிரஸ் உள்பட 8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.

இதுகுறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–

கூடுதல் ரெயில் பெட்டிகள்

சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இருமார்க்கமாகவும் இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16723/16724) மற்றும் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்(16713/16714) ஆகிய ரெயில்களில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இன்று முதல் கூடுதலாக இணைக்கப்படுகிறது. இதன்மூலம் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இதேபோல், சென்னை எழும்பூர் வழியாக கன்னியாகுமரி–நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் (வாரம் இருமுறை) திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12641) இன்று முதலும், மறுமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12642) வருகிற 16–ந்தேதியும் கூடுதலாக 1 முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது. இதன்மூலம் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

எர்ணாகுளம்–நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் மில்லெனியம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில்(12645) நாளை முதலும், மறுமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12646) 17–ந்தேதியும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது. இதன்மூலம் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இருமார்க்கமாகவும்...

சென்னை சென்டிரல்–பழனி இடையே இருமார்க்கமாவும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(22651/22652) இன்று முதல் ஜூன் 30–ந்தேதி வரை கூடுதலாக ஒரு 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர் கிளாஸ்) பெட்டி இணைக்கப்பட உள்ளது.

சென்னை சென்டிரல்–நாகர்கோவில் இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12689/12690) இன்று முதல் ஜூன் 28–ந்தேதி வரை கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர் கிளாஸ்) பெட்டி இணைக்கப்படவுள்ளது.

மங்களூர்–நாகர்கோவில் இடையே இயக்கப்படும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16649/16650) வருகிற 20–ந்தேதி முதல் ஜூன் 30–ந்தேதி வரை 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு ‘சேர் கார்’ பெட்டி இணைக்கப்பட இருக்கிறது.

சென்னை சென்டிரல்–மைசூர் இடையே இருமார்க்கமாகவும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12007/12008) வருகிற 20–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை கூடுதலாக ஒரு ஏ.சி ‘சேர் கார்’ பெட்டி இணைக்கப்படுகிறது.

சென்டிரல்–காமாக்யா

சென்னை சென்டிரலில் இருந்து காமாக்யா நோக்கி செல்லும் ஏ.சி. சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (12527) நாளை மற்றும் வருகிற 21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மாலை 5.20 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு காமாக்யா சென்றடையும்.

இவ்வாறு அதில் கூறப்படுகிறது.

Thursday, February 12, 2015

கார் பேனெட்டில் எலிகள்: எலிமினேட் செய்ய சில ஐடியாக்கள்!





கார் வைத்திருப்பவர்கள் சர்வீஸ் பிரச்னைகளைக்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், இந்த எலிகள் காருக்குள் குடும்பம் நடத்தி இன்ஜினுக்குள் கும்மியடிப்பது, சாதுவான கார் உரிமையாளர்களையே கோபம் கொள்ளவைத்துவிடும்.

எலிகளால் வெறும் சர்வீஸ் செலவு மட்டுமில்லை; வயர்களைக் குதறி, கனெக்ஷன்களை மாற்றி விடுவதால், சில நேரங்களில் கார்கள் தீப்பிடிக்கும் வாய்ப்புகூட இருக்கிறது.

பொதுவாக, வெளிநாட்டு கார் நிறுவனங்களுக்கு இந்தியாவில் பெரிய பிரச்னையாக இருப்பது எலிகள்தான். காரணம் - கார்களின் பாடி சீலிங்குக்காகத் தயாரிக்கப்படும் பசையில் உள்ள ஒருவித கெமிக்கல் வாசனைக்கு, எலிகள் அடிமை. அந்தப் பசையின் வாடைக்கு வந்துவிடும் எலிகளால் பெரிய தலைவலி.

என்னதான் கார் பார்க்கிங்கோடு புது வீடு வாங்கி சேஃப்டியாக காரை நிறுத்தினாலும், லூட்டியாக வந்து உட்காரும் எலிகளை எலிமினேட் செய்ய சில ஐடியாக்கள்...

1. எலிகளுக்குக் கடுப்பைக் கிளப்பக் கூடியவற்றில் முக்கியமான ஒரு அம்சம் - மிளகு. மிளகைப் பொடி செய்து பேனெட்டுக்குள் தூவி விடுங்கள். ‘மிளகு மிளகு... விலகு விலகு’ என்று எலிகள் அலர்ஜியாகப் பாடியபடியே ஓட்டம் எடுத்துவிடும். ஆனால், கார் ஓட்டி இன்ஜின் சூடாகும்போது, சமையல் அறைக்குள் புகுந்துவிட்டதுபோல் ஒரு வாடை வருவதைத் தடுக்க முடியாது.

2. நாட்டுப் புகையிலை என்றாலும் எலிகளுக்கு அலர்ஜியான விஷயம். புகையிலையை ஆங்காங்கே கட்டி அல்லது ஒட்டிவிடுங்கள். புகையிலை வாசனைக்கு எலி அண்டாது.

3. நாப்தலின் உருண்டைகளுக்கு, பூச்சிகள்கூட கிட்ட வராது. பீரோவில் கரப்பான் மற்றும் பூச்சிகளிடமிருந்து உடைகளைப் பாதுகாக்க நாப்தலின் உருண்டைகளை வைத்திருப்பீர்களே... அதில் நான்கைந்து உருண்டைகளை இன்ஜின் பகுதியில் வைத்து விடுங்கள். இதுவும் நல்ல ஐடியா.


5. கொசுக்களை டார்ச்சர் பண்ண அல்ட்ராசோனிக் சப்தம் கொண்ட சின்ன மிஷின் இருப்பதைப்போல், எலிகளுக்கும் எரிச்சல் தரக் கூடிய இசை உண்டு. அமெரிக்கத் தயாரிப்பான இந்த மெஷின் சென்னை ஜி.பி. ரோட்டில் கிடைக்க வாய்ப்பு உண்டு. இதை இன்ஜின் பக்கத்தில் வைத்து, இரவு முழுவதும் ஓட விட்டால், எலிகள் நிச்சயம் அண்டாது. ஆனால், இந்த இசை... நேரம் போகப் போக, மற்றவர்களுக்கும் எரிச்சல் தர வாய்ப்பு உண்டு.

6. கொஞ்சம் டீஸன்ட் ஆக எலிகளை எலிமினேட் செய்ய விரும்புபவர்கள், இதற்கென விற்கும் எலி வலைகளை வாங்கி பானெட் பகுதியைச் சுற்றிப் பொருத்திக் கொள்ளலாம். இவை சர்வீஸ் செய்யும்போது எளிதாகக் கழட்டி மாட்டும் வகையில் கிடைக்கிறது.

7. எலிகளை விரட்ட மூக்குப் பொடியும் பெஸ்ட் ஆப்ஷன். மூக்குப் பொடியையும் தூவி எலிகளை விரட்டலாம்.

- தமிழ்

கெளதம் மேனனை சிலிர்க்கவைத்த அஜித்தின் அணுகுமுறை

'என்னை அறிந்தால்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் கெளதம் மேனன் மற்றும் அஜித்

'என்னை அறிந்தால்' படம் வெளியான நாளில், தன்னிடம் நடிகர் அஜித் பேசிய விதத்தைக் கண்டு வியந்து போனாராம் இயக்குநர் கெளதம் மேனன்.

அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படம் தற்போது திரையரங்கில் ஒடிக் கொண்டிருக்கிறது.

'துருவ நட்சத்திரம்', 'யோஹன் அத்தியாயம் ஒன்று' உள்ளிட்ட படங்கள் கைவிடப்பட்டதால் கடும் மன வேதனையில் இருந்தாராம் கெளதம் மேனன். அதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி தயாரித்துக் கொண்டிருந்தார்.

அந்த வேளையில், அஜித் முன்வந்து கெளதம் மேனனுக்கு தேதிகள் ஒதுக்கி கொடுத்தார். அப்படி உருவானதுதான் 'என்னை அறிந்தால்'.

'என்னை அறிந்தால்' வெளியான நாளில், இயக்குநர் கெளதம் மேனன் காலையில் சென்னை காசி திரையரங்கம், அதனைத் தொடர்ந்து சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடம் படத்தை கண்டு ரசித்தார். அன்று கெளதம் மேனனுக்கு போன் செய்து அஜித் பேசியிருக்கிறார்.

அப்போது படத்தின் ரிசல்ட்டில் திருப்தியா? எனும் விதமாக அஜித்திடம் கெளதம் மேனன் கேட்டிருக்கிறார். அதற்கு, "அதை விடுங்கள்... உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதா? இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா?" என்று அஜித் கேட்டிருக்கிறார்.

மேலும் தொடர்ந்த அஜித், "படம் வெற்றி, தோல்வி என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சந்தோஷமாக குடும்பத்துடன் இருங்கள். எதற்கும் கவலை வேண்டாம்" என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாராம் அஜித்.

அஜித்தின் இந்த அணுகுமுறையை சற்றும் எதிர்பார்க்காத கெளதம் மேனன், 'இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்களா?' என்று நெருங்கியவர்களிடம் சிலிர்ப்புடன் கூறினாராம்.

தூக்கம் --- எவ்வளவு நேரம் கட்டாயம் தேவை ?

வயதும் , தூக்கமும்
'தூங்காதே தம்பி தூங்காதே' என்ற தமிழ் திரைப்பட பாட்டு, அளவுக்கு அதிகமாகத் தூங்கும் பழக்கத்தின் தீமையைப் பற்றியது. ஆனால் அளவான தூக்கம் உடல் நலத்துக்கு அவசியம். மனிதர்கள் தினமும் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும் என்பது பற்றி தூக்கம் குறித்த பரிந்துரைகள்.

சரியாகத் தூங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு “ சரி நாம் போதிய அளவு தூங்கவில்லை” என்று தெரியும்.

ஆனால் எது “போதிய அளவு தூக்கம்” ?

இதற்கு விடை, "உங்கள் வயது என்ன என்பதில் தான் இருக்கிறது", என்கிறது வாஷிங்டனில் இருந்து இயங்கும் தேசிய தூக்க நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஒரு ஆய்வு.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட வேலையைச் செய்யும் பழக்கமின்மை, மது மற்றும் காபி அல்லது பிற உடனடி சக்தி தரும் பானங்களை அருந்துவது போன்றவையும், அலாரம் கடிகாரங்கள் மற்றும், சூரிய வெளிச்சம் போன்றவை உடலில் தூக்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்கும் இயல்பான உணர்வுக்கு இடைஞ்சல் தரும் என்கிறது இந்த ஆய்வு.

தனிப்பட்ட மனிதர்களின் சொந்த வாழ்க்கை முறைதான் இந்த தூக்கத்துக்கான தேவைகளை புரிந்துகொள்ள உதவ முக்கியமான அம்சம் என்று கூறும் அமெரிக்க தேசிய தூக்க நிறுவனம் (The US National Sleep Foundation) ஆனால் ஒருவரது வயது என்ன என்பதைப் பொறுத்து பொதுவான பரிந்துரைகளைத் தரலாம் என்கிறது.

பிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை) : புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது .

குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை): தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்த்து 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

தளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1லிருந்து 2 வயது வரை): தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும் . ஆனால் 9லிருந்து 16 மணிநேரங்கள் வரை தூங்கலாம்.

பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3லிருந்து 5 வயது வரை) : தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை, ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.

பள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6லிருந்து 13 வயது வரை): ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டும் என்கிறது இந்த நிறுவனம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் அது கூறுகிறது.

பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை): பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு என்று எச்சரிக்கிறது இந்த நிறுவனம்.

வயது வந்த இளைஞர்கள் ( 18லிருந்து 25 வயது வரை): தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.

வயது வந்தவர்கள் ( 26லிருந்து 64 வயது வரை): மேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.

மற்ற வயது வந்தவர்கள் ( 65 வயது, அதற்கு மேல்): ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை, ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது.

தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பல்வேறு பரிந்துரைகளையும் இந்த தேசிய தூக்க நிறுவன வல்லுநர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

முதலில் , முக்கியமாக, தூக்கத்துக்கு முன்னுரிமை தரப்படவேண்டும் என்று கூறும் அவர்கள், ஆனால் இந்த ஆலோசனைகளையும் முக்கியமாகக் கருதுகிறார்கள்.

அவை:

1)தூங்கும் நேரம் ஒரு குறிப்பிட்ட, அட்டவணைப்படுத்தப்பட்ட நேரத்தில் அமையவேண்டும், வார இறுதி நாட்களில் கூட.

2)படுக்கும் நேரத்தில் மனத்தை அமைதிப்படுத்தும் சில நடைமுறைகள்.

3)தினசரி உடற்பயிற்சி

4)படுக்கையறையில், சரியான வெப்பநிலை, ஒலி மற்றும் ஒளி அளவு

5)சௌகரியமான படுக்கை மற்றும் தலையணைகள்.

6)மது மற்றும் காபி போன்ற தூக்கத்தை “ஒளிந்திருந்து திருடும்” பொருட்கள்.

7)மின்னணுவியல் கருவிகள் ( கைத்தொலைபேசி , ஐ.பாட் போன்றவை) படுக்கப்போகுமுன் அணைக்கப்படவேண்டும்

சலுகைக் கட்டணத்தில் 4 லட்சம் டிக்கெட்: ஸ்பைஸ்ஜெட் விற்பனை



ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சலுகை கட்டண பயண அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

ரூ. 599 முதல் ரூ. 3,499 என்கிற சலுகைக் கட்டணத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்படி நான்கு லட்சம் டிக்கெட்டுகள் இந்த சலுகை கட்டணத்தில் ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளது.

இந்த சலுகை கட்டண பயணத்தை ஜூலை 01 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 24 தேதி காலகட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த சலுகைக் கட்டண பயணத்தை பிப்ரவரி 13 வெள்ளிக்கிழமை வரை முன்பதிவு செய்யலாம்.

ரயில் கட்டணத்தை விட குறைவாக என்று சலுகை வெளியிட்டுள்ள ஸ்பைஸ்ஜெட் ரூ. 3,499 கட்டணத்தில் வெளி நாட்டு பயண சேவையை வழங்குகிறது.

ஓரியோ பிஸ்கெட்டின் வயது 103



நடிகர் கார்த்தி தோன்றும் ஓரியோ பிஸ்கெட் விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இரண்டு வட்ட வடிவச் சாக்லெட் பிஸ்கெட்கள், அவற்றுக்கு நடுவே கிரீம். கார்த்தியும் அவர் தங்கை(யாகத் தோன்றும் நடிகை)யும் வருவார்கள். கையில் ஓரியோ பிஸ்கெட்டை வைத்துக்கொண்டு கார்த்தி தங்கையைச் செல்லமாகச் சீண்டுவார். பிறகு பிஸ்கெட்டை இரண்டாக உடைப்பார். இருவரும் பாலில் முக்குவார்கள். சிரித்துக்கொண்டே சாப்பிடுவார்கள்.

அமெரிக்காவில் உருவானது

ஓரியோ பிஸ்கெட் இந்தியாவுக்கு வந்தது 2011- ம் ஆண்டு. ஆனால், ஓரியோ வயது என்ன தெரியுமா? 103! ஆமாம், 1912 இல் அமெரிக்காவில் நபிஸ்கோ (Nabisco) என்னும் நிறுவனம் ஓரியோவை அறிமுகம் செய்தார்கள். அன்றைய பெரும்பாலான கிரீம் பிஸ்கெட்கள் சதுர வடிவில் இருந்தன, சாதாரண பிஸ்கெட்டுகளுக்கு நடுவில் ஓரளவு கிரீம் இருந்தது.

ஓரியோவில், இரண்டு வட்ட வடிவ சாக்லெட் பிஸ்கெட்களுக்கு நடுவில் கணிசமான வனிலா கிரீம் இருந்தது. சாக்லெட் கசப்பும், வனிலா இனிப்பும் தனிச் சுவை தந்தன. வித்தியாசத் தோற்றம், சுவை ஆகியவற்றால், ஓரியோ விரைவில் பிரபலமானது.

அதிலும், ஓரியோவைப் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதில் ஏனோ குழந்தைகளுக்குத் தனி த்ரில். இதனால், நபிஸ்கோ கம்பெனியும் குழந்தைகள் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதுபோல் ஓரியோவை விளம்பரம் செய்தார்கள். ஓரியோ அமெரிக்காவின் நம்பர் 1 பிஸ்கெட் ஆனது.

பிற நாடுகளுக்கு 1990 களில் வியாபாரம் உலகமயமாகத் தொடங்கியது. சீனா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் கதவுகளைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறக்கத் தொடங்கின. மக்கள் தொகை, உயரும் பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணங்களால், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தப் புதிய சந்தைகளைத் தேடி வந்தார்கள்.

சீனாவில் படு தோல்வி

1996. சீனாவில் ஓரியோ விற்பனை தொடங்கியது. 14 பிஸ்கெட்கள் கொண்ட பாக்கெட் விலை 72 சென்ட்கள் (அன்றைய டாலர் மதிப்பில் இது சுமார் 25 ரூபாய்). அமெரிக்காவில் மாபெரும் வெற்றி கண்ட அதே வடிவம், அதே சுவை. நாளிதழ்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றில் ஏகப்பட்ட விளம்பரங்கள். அவை அனைத்திலும், குழந்தைகள் ஓரியோவைப் பாலில் தோய்த்துச் சாப்பிடும் காட்சி.

2005. ஒன்பது ஆண்டுகள் ஓடி விட்டன. ஏனோ, விற்பனை சூடு பிடிக்கவேயில்லை. ஏகப்பட்ட நஷ்டம். சீன நாட்டிலிருந்து வெளியேறிவிடலாம் என்னும் சோகமான முடிவை நபிஸ்கோ எடுத்தார்கள். ஒரே ஒரு விற்பனை மேனேஜருக்கு மனம் நிறையக் கேள்விகள்.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய ஓரியோ சீனாவில் மண்ணைக் கவ்வியது ஏன்? சீனாவை விட்டு வெளியேறும் முன், கருத்துக் கணிப்பு நடத்தித் தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க விரும்பினார். நபிஸ்கோவின் அமெரிக்கத் தலைமைச் செயலகம் பச்சை விளக்குக் காட்டியது.

கருத்துக் கணிப்பு முடிவால் பிரபலமானது

கருத்துக் கணிப்பு சொன்ன உண்மைகள் நபிஸ்கோவுக்கு ஞானோதயம் தந்தன. சாக்லெட் கசப்பும், கிரீம் இனிப்பும் கலந்த இரட்டைச் சுவைக் கலவை சீனர்களுக்கு மிகவும் பிடித்தது. ஆனால், ஒரு பிரச்சனை “இனிப்பு திகட்ட வைக்கிறது: கசப்பு வயிற்றைப் புரட்டுகிறது. இரண்டுமே அதிகமாக இருக்கின்றன. இனிப்பு, கசப்பு இரண்டையும் மிதமாக்கவேண்டும்.”

நபிஸ்கோ கம்பெனி கிரீம் இனிப்பையும், சாக்லெட் கசப்பையும் வெவ்வேறு அளவுகளில் குறைத்து, 20 வகையான சாம்பிள்கள் தயாரித்தார்கள். அவற்றை ஆயிரக் கணக்கான சீன ஆண், பெண்கள், பல்வேறு வயதுள்ள குழந்தைகள் ஆகியோரிடம் சாப்பிடச் சொல்லி, அவர் களுக்கு எந்த சாம்பிள் பிடிக்கிறது என்று அவர்கள் கருத்துகளைக் கேட்டார்கள். இந்த அடிப்படையில், 20 சாம்பிள் களிலிருந்து பெரும்பாலா னோருக்குப் பிடித்த ஒரு சாம் பிளைத் தேர்ந்தெடுத்தார்கள்.

புதிய சுவைகளில் இன்னும் சில தனிப்பட்ட சுவைகளும் வந்தன. வனிலா கிரீம் மட்டுமே முதலில் இருந்தது. பல குழந்தைகளுக்கு வனிலாவைவிடச் சாக்லெட் கிரீம் இன்னும் அதிகமாகப் பிடித்தது. ஆகவே, ஓரியோ, சாக்லெட் கிரீம் அறிமுகம் செய்தார்கள். சீனர்கள் கிரீன் டீ என்னும் கொழுந்து வகைத் தேநீருக்கு அடிமைகள். அது புத்துணர்ச்சி தருவது என்னும் உறுதியான நம்பிக்கை கொண்ட வர்கள்.

நாள் முழுக்க கிரீன் டீ குடிப்பார்கள். ஆகவே, அடுத்து வந்தது இன்னொரு ஓரியோ . அதன் நடுவே கிரீன் டீ கிரீம். இதைப்போல் உள்ளூர் டேஸ்ட்டுக்கு ஏற்றபடி ஆரஞ்சு, மாம்பழம் இரண்டின் சுவையும் கலந்த புளிப்பும் இனிப்புமான கிரீம் அறிமுகம் செய்யப்பட்டது. .

ஓரியோ ஏன் வட்டவடிவமாக மட்டுமே இருக்கவேண்டும்? பல சீனர்கள் கேட்டார்கள். மக்கள் குரல் மகேசன் குரல் என்று கம்பெனி நிர்வாகிகள் முடிவு செய்தார்கள். கை விரல்கள் போன்ற வடிவம் பலருக்கும் பிடித்தமானதாக இருந்தது. வந்தது குச்சிபோல் நீளமான ஓரியோ. 14 பிஸ்கெட்கள் கொண்ட பாக்கெட் விலை 72 சென்ட்.

இத்தனை விலை கொடுத்துப் பிஸ்கெட் வாங்க சாமானியச் சீனக் குடும்பம் தயாராக இல்லை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, நபிஸ்கோ 5 ஓரியோக்கள் கொண்ட சின்ன பாக்கெட் 29 சென்ட் விலையில் அறிமுகம் செய்தார்கள். பெரிய பாக்கெட்களும் தொடர்ந்தன.

உத்தியில் மாற்றம்

அமெரிக்க அனுபவத்தின்படி, ஓரியோ பாலில் தோய்த்துச் சாப்பிடும் பிஸ்கெட் என்னும் பொசிஷனிங்கை நபிஸ்கோ மக்கள் மனங் களில் உருவாக்கிக் கொண்டிருந்தது.

இந்தப் பொசிஷனிங்கைச் சீனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் பழக்கம் அமெரிக்கத் தனமானது, சீனப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றதல்ல என்று நினைத்தார்கள்.

ஓரியோ நிர்வாகிகளுக்கு ஒரே குழப்பம் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதுதான் ஓரியோவின் வித்தியாசமான தனித்துவம். இதை இழக்கக் கம்பெனி தயாராக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள்.

சீனாவிலும் முதலிடம்

பால் ஆரோக்கியம் மிகுந்த பானமாகச் சீனாவில் கருதப்படுகிறது தினமும் குழந் தைகளைப் பால் குடிக்க வேண்டுமென்று சீனப் பெற்றோர்கள் வற்புறுத்துவார்கள். எல்லா ஊர்களையும்போல், சீனாவிலும் குழந்தைகள் பால் குடிக்க அடம் பிடிக்கும்.

நபிஸ்கோ ஓரியோ விளம்பரங்களில் சிறு மாற்றம் கொண்டுவந்தார்கள். குழந்தைகள் பால் குடிக்க ஓரியோ உதவும் என்னும் கருத்தை மையப்படுத்தினார்கள். சீனப் பெற்றோர்கள் மனம் மாறியது. ஒவ்வொரு வருடமும் ஓரியோ விற்பனை இரண்டு மடங்கானது. இன்று சீனாவில் நம்பர் 1 பிஸ்கெட் ஓரியோதான்!

2009 இல் ஓரியோ பிஸ்கெட்டை நபிஸ்கோ கம்பெனியிடமிருந்து சாக்லெட் தயாரிக்கும் காட்பரீஸ் கம்பெனி வாங்கிவிட்டார்கள். 2010 இல் இந்தியாவில் ஓரியோவை அறிமுகம் செய்திருக்கும் காட்பரீஸ், சீனாவில் நபிஸ்கோ படித்த பாடத்தை இந்தியாவில் பின்பற்றி வருகிறார்கள்.

நம் நாட்டில் ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு ஆகிய சுவைகள் ஏராளமான குழந்தை களுக்குப் பிடித்தவை. ஆகவே ஓரியோ வனிலா, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு ஆகிய கிரீம்களோடு வருகிறது.

இந்தியாவில் இந்தியப் பாக்கெட்களும், விலைகளும் அமெரிக்க பாணியில் அல்ல, சீனப் பாணியில்தான். 3 ஓரியோக்கள் கொண்ட பாக்கெட் 3 ரூபாய்: 7 ஓரியோக்கள் பாக்கெட் 10 ரூபாய்: 14 ஓரியோக்கள் பாக்கெட் 20 ரூபாய்.

சீன முறைப் பொசிஷனிங் இந்தியாவிலும் வெற்றிகண்டு வருவதாக ஆரம்ப தகவல்கள் சொல்கின்றன. இந்த வெற்றி தொடருமா? வருகின்ற நாட்கள் பதில் சொல்லும்.

slvmoorthy@gmail.com

NEWS TODAY 20.08.2026