'என்னை அறிந்தால்' படம் வெளியான நாளில், தன்னிடம் நடிகர் அஜித் பேசிய விதத்தைக் கண்டு வியந்து போனாராம் இயக்குநர் கெளதம் மேனன்.
அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியிருக்கும் 'என்னை அறிந்தால்' திரைப்படம் தற்போது திரையரங்கில் ஒடிக் கொண்டிருக்கிறது.
'துருவ நட்சத்திரம்', 'யோஹன் அத்தியாயம் ஒன்று' உள்ளிட்ட படங்கள் கைவிடப்பட்டதால் கடும் மன வேதனையில் இருந்தாராம் கெளதம் மேனன். அதனைத் தொடர்ந்து சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி தயாரித்துக் கொண்டிருந்தார்.
அந்த வேளையில், அஜித் முன்வந்து கெளதம் மேனனுக்கு தேதிகள் ஒதுக்கி கொடுத்தார். அப்படி உருவானதுதான் 'என்னை அறிந்தால்'.
'என்னை அறிந்தால்' வெளியான நாளில், இயக்குநர் கெளதம் மேனன் காலையில் சென்னை காசி திரையரங்கம், அதனைத் தொடர்ந்து சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடம் படத்தை கண்டு ரசித்தார். அன்று கெளதம் மேனனுக்கு போன் செய்து அஜித் பேசியிருக்கிறார்.
அப்போது படத்தின் ரிசல்ட்டில் திருப்தியா? எனும் விதமாக அஜித்திடம் கெளதம் மேனன் கேட்டிருக்கிறார். அதற்கு, "அதை விடுங்கள்... உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டதா? இப்போது சந்தோஷமாக இருக்கிறீர்களா?" என்று அஜித் கேட்டிருக்கிறார்.
மேலும் தொடர்ந்த அஜித், "படம் வெற்றி, தோல்வி என்பதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் சந்தோஷமாக குடும்பத்துடன் இருங்கள். எதற்கும் கவலை வேண்டாம்" என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாராம் அஜித்.
அஜித்தின் இந்த அணுகுமுறையை சற்றும் எதிர்பார்க்காத கெளதம் மேனன், 'இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்களா?' என்று நெருங்கியவர்களிடம் சிலிர்ப்புடன் கூறினாராம்.
No comments:
Post a Comment