Tuesday, February 17, 2015

உலகக் கோப்பையை வென்றா விட்டோம்...?'- இந்திய வீரர்கள் அலுப்பு!



பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றியை இந்திய ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில், உலகக் கோப்பையை வென்றா விட்டோம்? கொண்டாட்டத்தில் திளைக்க.. என்பதே இந்திய வீரர்களின் கருத்தாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 15 ஆம் தேதி நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து உலகம் முழுக்க உள்ள இந்திய ரசிகர்கள் இந்த வெற்றியை இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். பாகிஸ்தான் அணியை வீழ்த்தினாலே போதும்... இனிமேல் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லா விட்டால் கூட பரவாயில்லை என்பது பல ரசிகர்களின் கருத்து. ஆனால் கொண்டாட்டத்திற்கு காரணமாக இருந்த இந்திய வீரர்கள் தங்கள் வெற்றியை கொண்டாடவில்லை என்ற வியப்பு செய்தி வந்துள்ளது.

இந்திய அணி வெற்றி பெற்ற அந்த தருணம் குறித்து இந்திய அணியின் உதவியாளர் ஒருவர் பி.டி.ஐ நிறுவனத்திற்கு அளித்த தகவலில், ''இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுமே அடிலெய்ட் நகரில் திரண்டிருந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடத் தொடங்கி விட்டனர். நகரத்தில் உள்ள ஒவ்வொரு இரவு விடுதியும் நிரம்பி வழிந்தது. ஆனால் இந்த வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இந்திய வீரர்கள் இல்லை. வெற்றியை கொண்டாடும் அளவுக்கு தாங்கள் சாதிக்கவில்லை என்றும், உலகக் கோப்பையை வென்றா விட்டோம்? கொண்டாடி திளைக்க என்பதே பெரும்பாலான இந்திய வீரர்களின் கருத்தாக இருந்தது.

இந்த போட்டி முடிந்த பிறகு அனைத்து வீரர்களுமே மிகுந்த சோர்வாக இருந்தனர். அதனால் போட்டி முடிவடைந்ததுமே ஹோட்டல் அறைக்கு சென்று விட்டனர். கேப்டன் தோனியும், அணி மேலாளர் ரவி சாஸ்திரி மட்டும் சிறிது நேரம் ஓய்வாக அமர்ந்து ஏதோ பெரிய டென்ஷன் குறைந்தது போல நிம்மதியாக பேசிக் கொண்டிருந்தனர். அதிகாலையிலேயே அடிலெய்டில் இருந்து மெல்பர்ன் நகருக்கு புறப்படும் விமானத்தில் இந்திய வீரர்கள் கிளம்பிவிட்டனர். மெல்பர்ன் வந்த பின், இந்திய வீரர்கள் இரு நாட்கள் நன்றாக ஓய்வு எடுத்தனர். அதற்கு பின்தான் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டிக்காக தயாராகி வருகின்றனர்'' எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...