ஒவ்வொரு ஆண்டும் வருகிறது இந்த காதலர் தினம். அந்த நாள் வருவதற்கு முன்னரே 'நாங்கள் எதிர்க்கிறோம்', 'நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்', 'நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்' என மிரட்டல், கண்டன அறிக்கைகள் வந்துவிடுகின்றன.
சிலர் (கலாச்சாரக் காவலர்கள் என சொல்லிக் கொள்பவர்கள்) அறிக்கைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், களத்திலும் இறங்குகின்றனர்.
அன்றைய தினம் இவர்கள் கையில் கொடி, தடியுடன் புறப்பட்டுவிடுகிறார்கள். இவர்களது மெயின் டார்கெட் பஸ் ஸ்டாண்ட், பீச், பார்க், மல்டி பிளக்சுகள் இத்யாதி இத்யாதி இடங்கள். கண்ணில் ஏதேனும் ஜோடி சிக்கினால் போதும் நீங்கள் கணவன், மனைவியா என்ற கேள்வி தொடங்கி அறிவுரை என்ற பெயரில் நாராசமான வார்த்தைகளும் சொல்லப்படுகின்றன. இந்தக் கலாச்சாரக் காவலர்கள் காதலர்களை கையாளும் விதத்தை விட்டுவிடுவோம். அது இங்கு விவாதப் பொருளல்ல.
இந்த ஒட்டுமொத்த காதலர் தின எதிர்ப்பு நிகழ்ச்சியிலும் வேதனை அளிக்கும் விஷயம் என்னவென்றால், நாய்களுக்கு நடத்தப்படும் திருமணம். நாய்களுக்கு ஏன் திருமணம் நடத்த வேண்டும். காதலர் தினத்துக்கும் நாய்களுக்கும் என்ன சம்பந்தம். காதலர்களை இழிவுபடுத்த நாய்களுக்கு திருமணம் செய்வது காதலர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக பிராணிகள் ஆர்வலர்களுக்கு வேதனை அளிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
நாய்கள், நாம் பழக்கப்படுத்தும் வகையில் வாழும் ஜீவன்கள். உயிருள்ளவரை எஜமானனுக்கு விசுவாசமாகவே இருக்கின்றன. தனிமையில் வாழும் எத்தனை, எத்தனையோ முதியவர்களுக்கு உற்ற தோழமையாக இருக்கின்றன. உள்ளூர் உதாரணம் ஒன்று சொல்ல வேண்டுமானால், சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த விபத்தின் போது ஆட்கள் புக முடியாத இடங்களுக்குள் எல்லாம் நுழைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்புக் குழுவினருக்கு அடையாளம் காட்டி உதவின சில நாய்கள்.
இறைவன் படைப்பில் எந்த ஒரு ஜீவராசியையும் தாழ்வாக நினைக்க யாருக்கும் உரிமை இல்லை. அப்படி இருக்கும்போது கலாச்சாரத்தை காக்க நாய்களுக்கு திருமணம் செய்வது மிகவும் அபத்தமானது. அலங்காரம் செய்து, சீர்வரிசை வைத்து, முடிந்தால் தாலி கட்டக்கூட வைத்து நீங்கள் செய்யும் அத்தனை அக்கிரமங்களுக்கும் எதுவும் அறியாமல் துணை போகின்றன என்பதற்காகவே அத்துமீறலாமா?
கலாச்சாரக் காவலர்களே, காதலர் தினத்தை எதிர்க்கும் உங்கள் கருத்துகளுக்கு பின்னணியில் நியாயமான காரணங்களே இருக்கலாம். ஆனால், அதற்காக நாய்களுக்கு திருமணம் செய்வதற்குப் பின்னணியில் எந்த நியாயமும் இருக்க முடியாது.
அடுத்த ஆண்டும் காதலர் தினம் வரும். அப்போது நாய்களை விட்டுவிடுங்கள். ஏனெனில், பூமாலை, அலங்காரத்துடன் காட்சியளிக்கும் நாய்களின் கண்கள் 'எங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் என்ன பாவம் செய்தோம்?' என்று கேட்பது போலவே உள்ளன.
குறிப்பு: எதற்கும், நாய்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.
No comments:
Post a Comment