Friday, February 20, 2015

உலகக்கோப்பை: வில்லனை வீழ்த்தினால் இந்திய வெற்றி நிச்சயம்...!



இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுமே...உலகக் கோப்பைத் தொடரில் நமது அணி மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் வரும் 22ஆம் தேதி இந்தியா - தென்ஆப்ரிக்க அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள மோதலும் பலத்த எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

உலகக் கோப்பையை பொறுத்த வரை, தென்ஆப்ரிக்க அணிக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலுமே இந்திய அணி தோல்வியைதான் சந்தித்துள்ளது. இதனால் இந்த போட்டியில் தென்ஆப்ரிக்க அணியை இந்திய அணி எப்படியாவது வீழ்த்த வேண்டுமென்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஆனால் இந்த போட்டியை பொறுத்த வரை இந்தியாவின் வெற்றிக்கு உலை வைப்பராக இருப்பவர் ஹாசீம் ஆம்லாதான் என்பது கிரிக்கெட் நிபுணர்களின் கணிப்பு. அதற்கேற்றார் போல்தான் இந்திய அணிக்கு எதிராக அவரது பேட்டிங் ரிக்கார்டும் உள்ளது. இந்திய அணிக்கு எதிரான 12 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆம்லா, இரண்டு சதமும் 5 அரைசமும் அடித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான அவரது சராசரி ரன் விகிதம் 57.45 ஆகும். எனவே இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆம்லாவின் விக்கெட்டை மிக விரைவில் வீழ்த்துவதில்தான் இந்திய அணியின் வெற்றி அடங்கியுள்ளது.

உலக பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள ஆம்லா உள்ளிட்ட 10 வீரர்கள், நடப்பு ஐ.பி.எல். சீசனுக்கான ஏலத்தில் பங்கு பெற்றனர். மற்ற அனைவரும் ஏலம் எடுக்கப்பட இவர் ஒருவர்தான் இன்னும் ஏலம் எடுக்கப்படாமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024