நம் கல்வியின் தரத்தை மாற்ற வேண்டும், ஏற்றி உயர்த்த வேண்டும் என்று சொன்னால், தற்போது உள்ள யு.ஜி.சி. என்ற அமைப்பு உடனே ஒரு கமிட்டியைப் போடுகிறது. கமிட்டியிடம் இருந்து பரிந்துரையைப் பெறுகிறது. அப்பரிந்துரைகளைப் பல்கலைக்கழகம் அனைத்திற்கும் அனுப்பி வைக்கிறது. பல்கலைக்கழகம் தன் கீழ் உள்ள பாடக்குழுவுக்கு அனுப்பி வைக்கிறது.
பாடக் குழுவில் மாற்றம் செய்துவிட்டால் போதுமா? வேறு சில மாற்றங்களையும் மிகக் கட்டாயம் செய்யவேண்டும். பழைய பல்கலைக்கழக நல்கைக் குழு (யு.ஜி.சி.) கலைத்துவிட்டு புதிய கல்விக்குழு ஒன்று அமைக்கவேண்டும் என்ற முயற்சியில் இந்திய மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக செய்தி வெளிவருகிறது. இது மிக நல்ல செய்தி. தற்போதுள்ள யு.ஜி.சி. இங்கிலாந்தில் உள்ள யு.ஜி.சியைப் பார்த்து அப்பட்டமாகச் செய்த காப்பி.
நம் தேவை என்ன என்பதை அறிந்து நமக்கு நாமே கல்விக்குழு ஒன்றை அமைத்தாக வேண்டும். இந்திய சுதேசியத் தேவையைப் படித்தறிய வேண்டும். இதற்குச் சரியான பாடப்புத்தகம் காந்தி அடிகள் ஒருவரே. நமக்கு ஐரோப்பிய - அமெரிக்கக் கல்வி முறை வேண்டாம். நமக்குத் தேவையான இந்தியக் கல்வி முறை ஒன்று தேவை.
கி.பி. 15, 16-ஆம் நூற்றாண்டுகளில் ரோமானியர்களை எதிர்த்து ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கிளர்ச்சி வெடித்தது. அப்போது கல்வி மொழியாக இருந்த இலத்தீன் மொழி அந்தந்த பகுதிகளில் இருந்து வெளியேற நேர்ந்தது. அடுத்த கணமே அந்தந்த வட்டாரத்தில் இருந்து வந்த மண்ணின் மொழிகள் அனைத்து இடங்களிலும் இடம்பிடித்தன. குறிப்பாக, கல்விக்கூடங்களில் இடம்பிடித்தன.
ஒவ்வொரு நாட்டிலும் பள்ளிக்கல்வி தொடங்கி பல்கலைக்கழகக் கல்வி வரை அவரவர் தாய் மொழிகளிலேயே பயிற்றுவிக்கப்பட்டது. தாய்மொழி வழிக் கற்ற அம்மக்கள் இடையே சிந்தனையும் புதிய போக்கில் செயலாற்றும் திறமும் வந்து சேர்ந்தன.
தமிழரைப் பொறுத்த அளவிற்கு இத்தகு கருத்துப் புரட்சி அவர்கள் வரலாற்றில் நிகழவே இல்லை. பரிணமிக்கவும் இல்லை. பழைய பாதைகளிலேயே அவர்கள் தொடர்ந்தார்கள். தொடர்ந்து தமிழர்களை 15, 16-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு ஐரோப்பியர் ஆட்சி பற்றிக் கொண்டது. விளைவாக, ஐரோப்பியர்கள் வழி கல்வி, கலாசாரம் ஆகியன இந்தியர்களைப் பற்றத் தொடங்கின.
ஒரு கல்லூரி தொடங்க என்ன பாடுபட வேண்டியிருக்கிறது என்பதைக் கல்லூரி தொடங்கும் வள்ளல்களைக் கேட்டால்தான் தெரியும். விண்ணப்பம் போடுவது தொடங்கி, நேரில் வந்து இடம் பார்த்து தடம் பார்த்து அதிகாரிகள் ஒப்புதல் வாங்கும் வரை அலைச்சல்.
அனுமதிக்காக அங்கங்கே அன்பளிப்பும் இன்னபிறவும் கொடுத்தாகவேண்டிய கட்டாயம். கல்லூரியில் பணி செய்வதற்காக நல்லாசிரியர்களைக் கண்டுபிடிப்பது மிகமிகக் கடினம்.
பல்கலைக்கழக நல்கைக்குழு அறிவித்துள்ள ஊதியத்தைத் தொடக்கத்திலேயே கொடுப்பது என்றால், இன்றைய நிலையில் எவரும் கல்லூரி தொடங்கவே முடியாது. நாம் கொடுக்கும் ஊதியத்தை ஏற்றுக்கொள்ளும் ஆட்களைத் தேடவேண்டி இருக்கிறது. வருகின்ற ஆசிரியர் தகுதிக் குறைவு உள்ளவராக இருந்தாலும், தாங்கிக்கொள்ள வேண்டும்.
ஜூன் ஜூலையில் தொடங்கி, மார்ச் - ஏப்ரல் வரை கல்வியாண்டை முடிப்பதற்குள் நிர்வாகத்தாரின் பாடு சொல்லும் தரமல்ல. எனவே, மொத்தத்தில் நம் கல்விதரம் தாழ்ந்து கிடக்கிறது.
இன்று இந்தியாவில் ஏறக்குறைய 213 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அண்மையில் இரண்டு புள்ளிவிவரங்கள் எடுக்கப்பட்டன. ஒன்று உலகில் உள்ள பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்துவது. இன்னொன்று ஆசியப் பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்துவது.
உலகத் தரவரிசையில் இருநூறு பல்கலைக்கழகங்களின் பெயர்களையும் அதன் தரவரிசையையும் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார்கள். அவற்றுள் ஒரு பல்கலைக்கழகம் கூட இந்தியப் பல்கலைக்கழகமோ, தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகமோ இடம்பெறவில்லை.
ஆசியாவில் மிகச்சிறந்த நூறு பல்கலைக்கழகங்கள் தரவரிசைப்படுத்தப் பெற்றுள்ளன. இவற்றுள் ஒன்றுகூட இந்தியாவைச் சேர்ந்த பல்கலைக்கழகம் இல்லை. சிங்கப்பூர் நன்யாங் பல்கலைக்கழகம், இலங்கைப் பல்கலைக்கழகம் முதலாயின இடம்பெற்றுள்ளன. அப்பட்டியலை அண்மையில் புதுப்பித்து, வேறு ஒன்று வெளியிட்டபோது கான்பூரில் உள்ள ஐ.ஐ.டி. மட்டும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள 32 மாநிலங்களில் தமிழ்நாட்டில்தான் கல்லூரிகள் மிகுதியாக உள்ளன. பொறியியல் கல்லூரிகள் 574. கலை அறிவியல் கல்லூரிகள் 807. கல்வியியல் கல்லூரிகள் 531. பாலிடெக்னிக் கல்லூரிகள் 501. ஆக, 2,413 கல்லூரிகள். 1,55,914 ஆடவர்களும் 1,66,671 பெண்டிரும் ஆக மொத்தம் 3,22,585 மாணவ}மாணவியர் பயில்கின்றனர். 19,639 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றார்கள்.
தமிழ்நாடு அரசு 1999இல் வெளியிட்டுள்ள புள்ளிவிவர அடிப்படைப்படி ஏறத்தாழ 20 ஆயிரம் கல்லூரி ஆசிரியர்கள் ஒவ்வோர் ஆண்டும் என்ன செய்கிறார்கள்? எத்தனை ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிடுகிறார்கள்? அவற்றுள் எத்தனை கட்டுரைகள் இந்தியாவிற்கு வெளியே உள்ள ஆராய்ச்சி இதழ்களில் வெளியாகி உள்ளன? அவை அறிஞர்களால் மேற்கோள் காட்டப்படுகின்றனவா?
வியன்னாவில் 1,365 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 68,000 மாணவர்கள் பயில்கிறார்கள். அவர்களின் கண்டுபிடிப்புகளைத் தாங்கிய கட்டுரைகள் ஆயிரக்கணக்கில் வெளிவந்துள்ளன.
இந்தியப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் படிக்கிறார்களா, எழுதுகிறார்களா ஆகியன அர்த்தமுள்ள கேள்விகளாகும். நம் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இருந்து படித்து வரும் மாணவர்களைப் பற்றி ஒரு செய்தி அதிர்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது.
நம் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளிவரும் எம்.பி.ஏ. பட்ட மாணவர்களில் 10 சதவீதம் பேரே வேலைக்குத் தகுதி உள்ளவர்களாகவும், உலகத் தரத்துக்குச் சமமானவர்களாகவும் உள்ளனராம். மற்றவர்களையெல்லாம் என்ன சொல்வது?
உயர்கல்வியின் தரம் உயர சில ஆலோசனைகள்:
1. கல்வி முறையை உயர்த்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட உடனே பெரும்பாலும் மாற்றப்படுவது இருக்கின்ற பாடத்திட்டம்தான். இதுமட்டும் போதவே போதாது.
2. நம் கல்வி முயற்சிகள் பாழாவதற்கு முதல் பெரும் காரணம் நாம் தற்போது கடைப்பிடிக்கும் ஆசிரியர் நியமன முறையும் ஆசிரியர் பதவி உயர்வு முறையும். இவற்றில் பிறந்த ஜாதி, அதன் வழி கடைப்பிடிக்கப்படும் ஒதுக்கீட்டு முறை ஆகியவற்றை மட்டும் பின்பற்றுகிறோம். இதில் மாற்றம் தேவை.
3. ஆசிரியரின் பதவி உயர்வு முறையில் விரிவுரையாளர் பதவியில் இருந்து ரீடர், ரீடரிலிருந்து பேராசிரியர் என்பதை முற்றுமாக மாற்றி, பணியாற்றும் காலத்தில் அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் அவற்றிற்காக அவர் பெற்ற பரிசுகள், பாராட்டுகள் முதலாயின முன்னுரிமை பெற வேண்டும்.
4. பிரான்ஸ் முதலான நாடுகளில் இருப்பது போல அரசு அளிக்கும் விடுமுறையைத் தவிர, வேறு எந்த விடுமுறையும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பெறுதல் கூடாது. விடுமுறை எடுத்தால் ஊதியத்தை வெட்டும் முறை கடைப்பிடிக்கப்பட வேண்டும்.
5. பல்கலைக்கழகங்கள் பல்குவதாலேயே தரம் உயர்ந்துவிடப் போவதில்லை. சென்னைப் பல்கலைக்கழகம் ஒன்றே பரந்து விரிந்த சென்னை மாகாணம் முழுதுக்கும் (தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா) இருந்தபோது அப்பல்கலைக்கழகத்தில் இருந்து படித்து வெளிவந்த பட்டதாரிகள் மிகத் தகுதி உடையவர்களாக இருந்தார்கள். அமெரிக்க மாடலைப் பின்பற்றிக் கல்வி ஆண்டை இரண்டு பருவங்களாகப் பிரித்தோம். வினாத்தாள், விடைத்தாள் முறையையும் மாற்றினோம் மைய மதிப்பீடும் கொண்டு வந்தோம். கொண்டு வந்த பிறகு, கல்வித் தரம் தாழ்ந்துவிட்டது என்பதே உண்மை.
6. பிஎச்.டி. பட்டத்திற்குப் பதிவு பண்ணும் வழிமுறைகளை நம் பல்கலைக்கழகங்கள் தளர்த்திவிட்டன. ஏ.எல். முதலியார் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, பிஎச்.டி. விதிகளும் பிஎச்.டி. ஆய்வேட்டைத் திருத்தும் விதிகளும் மிகத் தரமாக இருந்தன.
வட இந்தியப் பல்கலைக்கழகளைப் பார்த்து தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களும் விதிகளைத் தளர்த்தின. பிஎச்.டி. எண்ணிக்கை மிகுந்ததே தவிர தரம்
உயர்ந்ததா?
அக்காலங்களில் ஆய்வேடு அனைத்தும் ஆங்கிலத்தில்தான் வழங்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தது. அதனை மாற்றித் தமிழிலும் வழங்க அனுமதித்தோம். அதற்குத் தக, ஆய்வேட்டின் தரத்தில்
மாற்றம் ஏற்பட்டதா, ஆழம் வந்துற்றதா என்றால் இல்லை.
அக்காலங்களில் பிஎச்.டி. பட்டம் பெற்ற மு.வ., மா. இராசமாணிக்கனார், துரை. அரங்கனார் முதலானோரோடு இக்கால பிஎச்.டி.க்களை ஒப்பிட முடியுமா? முடியவே முடியாது. பிஎச்.டி. ஆய்வேட்டைத் திருத்துவோரில் ஒருவர் வெளிநாட்டாராகவே இருத்தல் வேண்டும் என்பது பழைய நடைமுறை. அந்த முறையையும் எடுத்துவிட்டோம். நாம் செய்த மாற்றங்கள் ஏற்றங்களைத் தரவில்லை.
கட்டுரையாளர்: முன்னாள் துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
No comments:
Post a Comment