உலகக் கோப்பைத் தொடரில் கபில்தேவ் அடித்த 175 ரன்கள்தான் முதன் முதலாக கிரிக்கெட் உலகை அதிர வைத்தது.
கடந்த 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 17 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.
இத்தகைய இக்கட்டான சூழலில் களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் கபில்தேவ், 175 ரன்களை அதிரடியாக குவித்தார். 'ஜிம்பாப்வேயை வேட்டையாடிய கபில்தேவ்' என்றே தலைப்பிட்டு இங்கிலாந்து பத்திரிகைகள் அந்த ஆட்டத்தை வர்ணித்திருந்தன.
கபிலின் இந்த சாதனையை அடுத்த உலகக் கோப்பை போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் முறியடித்தார். 1987ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில், இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் விவியன் ரிச்சர்ட்ஸ் 181 ரன்கள் குவித்து கபிலின் சாதனையை தகர்த்தார். மிகச்சிறந்த கிரிக்கெட்டர் ஒருவர்தான் தனது சாதனையை முறியடித்துள்ளதாக கபில் அப்போது பெருமிதம் கொண்டார்.
பின்னர் 1996 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில், தென்ஆப்ரிக்க அணி வீரர் கேரி கிறிஸ்டன், யு.ஏ.இ அணிக்கு எதிராக 159 பந்துகளில் 188 ரன்களை குவித்திருந்தார். இதுதான் நேற்று வரை உலகக் கோப்பை போட்டியில் தனிப்பட்ட வீரர் எடுத்த அதிகபட்ச ரன்னாக இருந்தது.
தற்போது கிறிஸ்டனிடம் இருந்து, உலகக் கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர் என்ற சாதனையை கிறிஸ் கெயில் பறித்துள்ளார்.
அதேபோல் கடந்த 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இலங்கைக்கு எதிராக 183 ரன்கள் குவித்ததும், கடந்த 2011ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் மற்றொரு வீரரான வீரேந்திர சேவாக் 175 ரன்கள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment