Friday, February 20, 2015

ஆதார் அடையாள அட்டை நகலை டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வழங்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க உள்ளனர்.


சேலம்: ரயில்வே துறையில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் பயணம் செய்ய சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கட்டண சலுகையை பலர் முறைகேடாக பயன்படுத்தி வருவதாக ரயில்வே துறைக்கு தெரியவந்துள்ளது. சலுகையை பெறுவதற்காக வயதை கூடுதலாக சொல்லி, முன்பதிவு டிக்கெட் எடுத்து பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் முறைகேட்டை தடுக்க ரயில்வே நிர்வாகம் புதிய முடிவுக்கு வந்துள்ளது. அதாவது வயதை நிரூபிக்கும் வகையில், அடையாள அட்டையை பெறுவது என்று திட்டமிட்டுள்ளனர். அதிலும் சமீபத்தில் வழங்கப்பட்ட, வழங்கப்பட்டு வரும் ஆதார் அடையாள அட்டை நகலை டிக்கெட் முன்பதிவு செய்யும் போது வழங்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க உள்ளனர்.

இந்த ஆதார் அடையாள அட்டை கட்டாயம் இன்னும் ஒரு வாரத்திற்குள் அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது, ஆதார் கட்டாயம் என்ற நிலையும் அமலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், மூத்த குடிமக்கள் என 60 வயது நிரம்பிய ஆண்களையும், 58 வயது நிரம்பிய பெண்களையும் கணக்கில் கொண்டுள்ளோம். இவர்களுக்கு முறையே 40, 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

இந்த சலுகையை பெறுவதற்காக பலர் வயதை அதிகரித்து சொல்லி, டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். பின்னர் ரயிலில், அடையாள அட்டையை பரிசோதிக்கும் டிக்கெட் பரிசோதகர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். அதனால் வயது விவரத்தை சரியாக அறிவதற்காக ஆதார் அடையாள அட்டை வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது விரைவில் அமலுக்கு வரும் என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024