Wednesday, February 18, 2015

கேஜரிவாலின் தர்மசங்கடம்!

Dinamani

சென்ற ஆண்டில் தான் பதவி விலகிய அதே நாளில் பதவி ஏற்றிருக்கும் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், தன்னிடம் எந்தத் துறையையும் வைத்துக் கொள்ளாமல், அத்தனை துறைகளையும் அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு, அவர்களது செயல்பாடுகளைக் கண்காணித்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பது வித்தியாசமான அணுகுமுறை. கடந்த முறை செய்த தவறை தான் மீண்டும் செய்வதில்லை என்றும் இந்தத் தடவை முழுமையாக ஐந்தாண்டுகள் பதவி வகிப்பது என்று அவர் உறுதி எடுத்துக் கொண்டிருப்பதும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை.

முதல்வராகப் பதவி ஏற்பதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் நேரில் சந்தித்துத் தனது அரசுக்கு அவர்களது ஒத்துழைப்பை கோரியிருக்கிறார் அரவிந்த் கேஜரிவால். தனது அமைச்சரவையின் முக்கியமான கோரிக்கைகளை அவர்களிடம் தெரிவித்திருப்பது, அவருக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறது.

முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வைத்திருக்கும் முக்கியமான கோரிக்கை, நிலம், காவல் துறை இரண்டும் தில்லி மாநில அரசின் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்பது. தில்லி, தேசத்தின் தலைநகரமாக இருப்பதாலும், பல முக்கியமான அரசு அலுவலகங்களும், அன்னிய நாட்டுத் தூதரகங்களும், மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள் இருப்பதாலும், தில்லியின் பாதுகாப்பும், நிலம் தொடர்பான உரிமையும் நடுவண் அரசிடம் இருக்கிறது. இதை தில்லி மாநில அரசின்வசம் விட்டுக் கொடுக்க மத்திய அரசு தயாராக இல்லை.

தில்லிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது முதல் தொடரும் பிரச்னை.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, அந்தக் கட்சியைச் சேர்ந்த ஷீலா தீட்சித் 2004 முதல் 2013 வரை தில்லி முதல்வராக இருந்தும்கூட, அப்போதைய மத்திய அரசு, நிலம், காவல் துறை இரண்டையும் மாநில அரசின் அதிகாரத்திற்கு மாற்றித் தரவில்லை. ஷீலா தீட்சித்தின் கோரிக்கைகளை மன்மோகன் சிங் அரசு ஏற்கவில்லை என்பது மட்டுமல்ல, பல சந்தர்ப்பங்களில் மாநில அரசின் முடிவுகளை மாற்றியும் இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சிக்கு சாதகமாக, மத்திய பா.ஜ.க. அரசு செயல்படும் என்றோ, நிலம், காவல் துறை ஆகியவற்றை மாநில அரசின் அதிகாரத்திற்கு மாற்றிக் கொடுக்கும் என்றோ எதிர்பார்ப்பதில் அர்த்தமில்லை.

முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் கோரிக்கையில் நியாயம் இல்லை என்று சொல்லிவிட முடியாது. தில்லி என்பது மத்திய அரசு அலுவலகங்களும், தேசப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்ததுமான பகுதிகள் மட்டுமல்ல. 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நான்கைந்து தொகுதிகளைத் தவிர ஏனைய தொகுதிகள் பொதுமக்களின் குடியிருப்புப் பகுதிகளும், விவசாயப் பகுதிகளும் அடங்கியவை. குறிப்பாக, கிழக்கு தில்லி, மேற்கு தில்லி போன்றவை மத்திய அரசுடன் தொடர்பே இல்லாத குடியிருப்புப் பகுதிகள்.

இந்தப் பகுதிகளில் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும், பள்ளிக்கூடம் கட்ட வேண்டும், மாநில அரசு அலுவலகம் நிறுவ வேண்டும் என்றால்கூட தில்லி அரசு நிலம் கையகப்படுத்திவிட முடியாது. மத்திய அரசின் அனுமதி பெற்றாக வேண்டும். அதேபோல, தலைநகர் தொடர்பான இடங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கவோ, சாமானிய மக்களின் பாதுகாப்புக் கருதி காவல் துறைக்கு உத்தரவிடவோ மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது. காவல் துறை துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டிலும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது.

தில்லி முதல்வர்களின் கோரிக்கையில் நியாயம் இருந்தாலும், மத்திய அரசில் இருப்பவர்கள் தங்களிடம் உள்ள அதிகாரத்தை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை எனும்போது, மாநில அரசால் என்ன செய்துவிட முடியும்? சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி சமாதானப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

முதல்வர் அரவிந்த் கேஜரிவாலால் உடனடியாகச் செய்ய கூடியது, கடந்த முறை தான் பதவி விலகக் காரணமாக இருந்த லோக்பால் சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவது. அதிலும்கூட, சட்டப்பேரவையின் தீர்மானத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அங்கீகரித்தாக வேண்டும். தண்ணீர், மின்சாரக் கட்டணங்களைக் குறைப்பது என்பது அரவிந்த் கேஜரிவால் அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆனால், அண்டை மாநிலங்களின் ஒத்துழைப்பும் மத்திய அரசின் ஆதரவும் இல்லாமல் அதுவும் சாத்தியப்படுமா என்பது சந்தேகமே.

அரவிந்த் கேஜரிவால் அரசால், அன்றாட நிர்வாகத்தில் லஞ்ச ஊழலைக் குறைக்க முடியும். அதிகாரிகளை நிர்வாகச் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கச் செய்ய முடியும். ஆம் ஆத்மியின் கொள்கைக்கேற்ப மக்களின் பங்களிப்புடன் நிச்சயமாக நிர்வாகத்தை சீர்திருத்த முடியும். தொண்டுள்ளமும் அர்ப்பணிப்புணர்வும் உள்ள தலைவன் இருந்தால், அடிமட்டம் வரை மாற்றம் ஏற்படும் என்பது உண்மை. மத்தியில் நரேந்திர மோடியும், தில்லியில் அரவிந்த் கேஜரிவாலும் இந்த விஷயத்தில் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள்தான்.

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு ஒரு தர்மசங்கடம் உண்டு. நல்ல நிர்வாகத்தை வழங்க வேண்டுமானால் அவர் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தாக வேண்டும். அதே நேரத்தில், அரசியல் சக்தியாக ஆம் ஆத்மி கட்சி தொடர வேண்டுமானால், அவர் மத்திய அரசை எதிர்த்துப் போராடிய வண்ணம் இருந்தாக வேண்டும்.

கேஜரிவால் என்ன செய்யப் போகிறார், பார்ப்போம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024