Tuesday, February 17, 2015

வெட்டிவேரு வாசம் 23 - புழுதியில் எறியப்பட்ட வீணை!

சுபா
Return to frontpage
கும்பகோணம் பஜாரில் ‘மங்களாம் பிகை விலாஸ்’ இருந்தது. காலை 9 மணிக்கே சாப்பாடு போட ஆரம்பித்துவிடுவார்கள். இரவு 10 வரைக்கும் சுடச் சுட சாப்பாடு. அரைத்து விட்ட சாம்பார், வத்தல் குழம்பு, தக்காளி ரசம், கூட்டு, பொரியல், அப்பளம், ஊறுகாய் என்று முழு சாப்பாடு.

முதலாளி கிருஷ்ணமூர்த்தி ஐயர் வெள்ளைக் கதர்ச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். தலையில் குடுமி. கண்களில் கருணை கசியும். என்னுடைய ஐந்தாவது வயதில் அம்மாவும், அப்பாவும் அவ்வப்போது அந்த ஹோட்டலுக்குச் சாப்பிடக் கூட்டுச் சென்றது, இன்றைக்கும் நினைவு இருப்பதற் குக் காரணம், கிருஷ்ணமூர்த்தி ஐயர்தான்.

ஐயருக்கு என் மேல் ஏதோ பாசம். என்னை மேஜையிலேயே உட்கார வைத்து சிறு இலை போடுவார். சாப்பாடு பரிமாறச் சொல்வார். எனக்கென்று ஸ்பெஷலாகப் பருப்பு, நெய், தக்காளி ரசம். அம்மா பிசைந்து சிறு சிறு உருண்டைகளாகப் பண்ணி வைப்பாள். ஒவ்வொன்றாகச் சாப்பிடுவேன். என் சாப்பாட்டுக்கு ஐயர் எப்போதுமே காசு வாங்கியது இல்லை.

காலை 8 மணிக்கு ஐயர் இரட்டை மாட்டுக் கூண்டு வண்டியில் ஹோட்ட லுக்கு வருவார். காசு இல்லாமல் வந்து பசி என்று சொல்லிவிட்டால் வயிறு நிறைய சாப்பாடு போடுவார். பெரிய மனசு. ஒவ்வொரு மகாமகத்துக்கும் 1,000 பேர் வரைக்கும் அன்னதானம் செய்வார். ஐயருக்கு ஆவூரில் வீடு. புடைவை வியாபாரத்துக்காக அப்பா அங்கே போனபோது, என்னையும் கூட்டிச் சென்றிருக்கிறார்.

பிரம்மாண்டமான தோட்ட வீடு. வாசலில் தெருவை அடைத்துப் பந்தல். மதில் சுவரையொட்டி மோர்ப் பந்தல். பானைகளில் வெண்ணெய் மிதக்கும் மோர். யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். உள்ளே தோட்டத்தில் கீற்றுப் பந்தலுக்குக் கீழே பசு மாடுகள், கன்றுகள். இன்னொருபுறம் கூண்டு வண்டி, அவிழ்த்து விடப்பட்ட இரட்டைக் காளைகள். வீட்டுக்கு முன்னால் திறந்தவெளியில் புல்லாங்குழல் வாசிக்கும் கிருஷ்ணர் பொம்மை. அதைச் சுற்றியிருக்கும் வட்டமான அகழி நீரில் மீன்கள் நீந்தும்.

பிரதான கதவு கடந்தால் வரவேற்பறை. சுவரில் கருங்காலி மரத்தாலான பெண்டுலம் கடிகாரம். கால் மணி நேரத்துக்கு ஒரு முறை இனிமையாக ஒலிக்கும். ஒரு தேக்கு மர ஸ்டாண்டில் காந்தியின் மூன்று குரங்கு பொம்மைகள். பிற்பாடு, அப்பா தொழிலை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். கும்பகோணம் போகும்போது எல்லாம் மங்களாம்பிகை விலாஸுக்குப் போய்ச் சாப்பிடுவேன். ஹோட்டலில் ஐயர் இல்லாவிட்டால் ஆவூருக்குச் சென்று பார்த்துவிட்டு வருவேன். வீட்டில் உண்மையான டிகிரி காபி கிடைக்கும்.

ஒருமுறை 7 வருட இடைவெளிக்குப் பிறகு கும்பகோணம் போனேன். மங்க ளாம்பிகை விலாஸ் இருந்த இடத்தில் ஒரு ஜவுளிக்கடை முளைத்திருந்தது. திக்கென்று இருந்தது. என்ன ஆயிற்று என்று விசாரித்தேன். ஐயரின் வாழ்க்கையில் விதி விளையாடி இருந்தது. வேலைக்காரர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள். ஆற்று வெள்ளம் அவரது விளை நிலங்களைக் கொள்ளை கொண்டது. ஹோட்டலை நடத்த கடன் வாங்கியிருக்கிறார். திருப்பித் தர இயல வில்லை. ஹோட்டல் ஏலத்துக்கு வந்து விட்டது.

பதைப்புடன் ஆவூருக்குப் போனேன். தெருவை அடைத்துப் போடப்பட்டிருந்த பந்தலில் கீற்றுகள் இற்று விழுந்திருந்தன. மோர்ப் பந்தல் சரிந்திருந்தது. கூண்டு வண்டியின் சக்கரங்களை கரையான் புற்றுகள் மறைத்திருந்தன. கிருஷ்ண னின் கை, கால்கள் உடைந்து துருவே றிய இரும்புக் கம்பிகள் தெரிந்தன. அகழியில் தண்ணீர் இல்லை. அங்கு சருகு இலைகள் நிறைத்திருந்தன. பசுக்கள் இல்லை. தளைகள் மட்டும் இருந்தன.

சாய்வு நாற்காலியில் ஐயர் சிறுத்துக் கிடந்தார். என்னைக் கண்டதும் கண்களில் ஒளி. முக்காலியில் உட்காரச் சொல்லி கையைப் பற்றி அழுத்தினார். கருங்காலி கடிகாரத்தின் பெண்டுலம் இயக்கத்தை நிறுத்தியிருந்தது.

“போச்சு… எல்லாம் போச்சு. இந்த மாமாங்கத்துக்குக் கதை முடிஞ்சிரும்...” என்றார். ஆறுதலாக ஏதோ சொன்னேன். புறப்படும்போது வரவேற்பறை ஸ்டாண்டில் இருந்த குரங்கு பொம்மையைக் கொடுத்தார். “நல்லா இரு. ஞாபகம் வெச்சிக்கோ...” என்று ஆசிர்வதித்தார். நெஞ்சில் பாறையைச் சுமந்து திரும்பினேன்.

மாமாங்கம் அன்றைக்கு கும்ப கோணம் வரைக்கும் நடந்து வந்திருக் கிறார். யாரோ அளித்த அன்னதான வரிசையில் நின்று கையேந்தி சாப்பிட்டிருக்கிறார். நேராகக் காவேரிக் குச் சென்று குதித்து ஜலசமாதி ஆகிவிட்டார் என்று நண்பன் ஒருவன் போனில் கூறினான். கண் கலங்கியது. கயாவுக்குச் சென்றபோது அவருக்கும் சேர்த்துப் பிண்டம் கொடுத்தேன். அவ்வளவுதான் என்னால் முடிந்தது!

‘கனாக் கண்டேன்' திரைப்படத்தில், கடன் வாங்கித் திருப்பித் தராத தயாரிப்பாளர் வீட்டுக்கு வில்லன் போய் மிரட்டுவது போல் ஒரு காட்சி. இயக்குநர் கே.வி.ஆனந்த் எங்களிடம், “வீட்டைப் பார்த்தாலே ஒரு பணக்காரர் வாழ்ந்து கெட்ட வீடு மாதிரி தெரியணும். எழுதிக் கொடுங்க...” என்றார்.

வீட்டை நோக்கிச் செல்லும் பாதையின் இரு மருங்கிலும் புதராக மண்டியிருக்கும் தாவரங்கள், தோட்டம் எங்கும் சருகுகள். ஒரு காலத்தில் கையில் குடமேந்தி நீர் வார்த்துக் கொண்டிருந்த பெண்ணின் சிதிலமடைந்த பொம்மை. காற்று இறங்கி வீணாகிப் போன சக்கரங்களுடன், சீட் கிழிந்த, பெயின்ட் உதிர்ந்த, விண்ட் ஷீல்ட் இல்லாத கார். பாசியும் மழை நீரின் அழுக்குத் தடமும் பதிந்த சுவர்கள். அங்கு வந்து நிற்கும் வில்லனின் புதிய கார் என்று எழுதிக் கொடுத்தோம்.

வர்ணனையில் ஓர் அம்சத்தைக் கூட மாற்றாமல் ஒரு வீட்டை இயக்குநர் தயார் பண்ண வைத்தார். வீட்டில் கைக்குழந்தையுடன் இருக்கும் பெண்ணிடம் கடனைத் திருப்பிக் கேட்டு வில்லன் மிரட்டும் இடைவேளைக் காட்சியாக அது அழுத்தமாக விரிந்தது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024