Friday, February 20, 2015

அரசின் உடனடி கவனத்திற்கு...

Dinamani

சென்னையில் உள்ள தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழக மருத்துவமனை மருத்துவக் கல்லூரி உள்பட நாட்டில் உள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் வரும் கல்வியாண்டு முதல் மாணவர்கள் சேர்க்கை கிடையாது என்று மத்திய தொழிலாளர் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதாவது, தற்போது பயிலும் மாணவர்கள் படிப்பை முடித்து வெளியேறிய பிறகு இந்த மருத்துவக் கல்லூரிகள் மூடப்படும்.

இதைக் கண்டித்து மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தாலும், இந்த முடிவை அரசு மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. ஏனெனில், மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேய இதுபற்றி கருத்துத் தெரிவித்தபோது, இ.எஸ்.ஐ.யின் முன்னுரிமை, தொழிலாளர்களுக்கான மருத்துவக் காப்பீடுதான், மருத்துவக் கல்லூரிகள் அல்ல என்று கூறியிருக்கிறார்.

மருத்துவக் கல்லூரிகளை மூடிவிடுவது என்ற முடிவுக்கு வந்த பிறகு, இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளையும் படிப்படியாக மூடிவிடுவார்கள் அல்லது அரசு - தனியார் பங்கேற்பு மருத்துவமனைகளாக மாற்றப்படலாம்.

இ.எஸ்.ஐ. மருத்துவமனையிலிருந்து சிறப்பு மருத்துவத்துக்காக தனியார் பெருமருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்வது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. 2008-09 நிதியாண்டில் இத்தகைய சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பரிந்துரைக்கான செலவு ரூ.5.79 கோடியாக இருந்தது. 2012 - 13-ஆம் ஆண்டில் ரூ.334.57 கோடியாக (57 மடங்கு) உயர்ந்துவிட்டது. இதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று போதுமான மருத்துவர்கள் இல்லை அல்லது இந்த மருத்துவமனை மீது நம்பிக்கை இல்லை என்பதாக பொதுக் கணக்குக் குழு தனது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டது. இதற்கு இ.எஸ்.ஐ. அளித்துள்ள பதிலில், அரசு - தனியார் பங்கேற்பு மூலம் சேவைத் தரம் உயர்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே, தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம் தனது மருத்துவமனைகளையும் படிப்படியாக மூடிவிட்டு, தற்போது மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் சேவைக்கு இணையாக, உடல்நலம் குன்றியதற்காக மருத்துவ ஆலோசனை பெற்றால் அதற்கான கட்டணம், மருந்துச் செலவுகள் ஆகியவற்றை மட்டும் வழங்குவது என்கின்ற முடிவுக்கு வந்துவிட்டது என்பதை அமைச்சர் பதிலும், மருத்துவக் கல்லூரிகளை மூடும் முடிவும் வெளிப்படுத்துகின்றன.

இப்போதும்கூட, தொழிலாளர்கள் உடல் நலம் குன்றி வேலைக்குச் செல்ல முடியாத நாள்களுக்கான சம்பளம் ஈட்டுறுதி, தொழிற்கூட விபத்தில் நிரந்தர அல்லது தாற்காலிக ஊனம் அடைந்தால் அதற்கான மாதாந்திர இழப்பீட்டுத் தொகை ஆகியன, தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் போலவே வழங்கப்படுகின்றன. இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் தொழிலாளரின் குடும்பத்தினர் அனைவரும் சிகிச்சை பெற முடிவதைப்போல, குடும்பத்தில் மூன்று பேருக்கான மருத்துவக் காப்பீட்டை ஒரே சந்தாத் தொகையில் உள்ளடக்கும் திட்டங்களையும் தனியார் மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்கள் முன்வைக்கின்றன. ஆகவே, மருத்துவச் சேவையை தனியார் காப்பீட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு, தொழிற்கூடங்கள், தொழிலாளர்கள் வழங்கும் சந்தாத்தொகை மற்றும் அரசின் பங்களிப்பு ஆகியவற்றோடு, வெறுமனே நிர்வாகக் கண்காணிப்பை மட்டும் பார்த்துக்கொள்வது என்ற முடிவுக்கு தொழிலாளர் அமைச்சகம் வந்துவிட்டது என்பது தெளிவு.

தற்போது இ.எஸ்.ஐ. கழகத்தில் 1.96 கோடிப் பேர் உறுப்பினராக உள்ளனர். இ.எஸ்.ஐ. மருத்துவமனைகளில் 51,728 படுக்கைகள் பற்றாக்குறையாக உள்ளன. பல நூறு மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிறைவு செய்யும் நடவடிக்கைகளில் இ.எஸ்.ஐ.சி. ஈடுபடாது என்பதும் தெளிவு.

தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் முடிவு எதுவாக இருந்தபோதிலும், சென்னையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை தமிழக அரசு தன் பொறுப்பில் ஏற்றுக்கொள்வது சிறந்த முடிவாக இருக்கும். இதன் மூலம், தமிழ்நாட்டுக்கு கூடுதலாக சுமார் 150 மருத்துவர் படிப்புக்கான இடங்கள் கிடைக்கும். அதுமட்டுமல்ல, தொழிலாளர் துறை, தனியார் கல்லூரிகள் எவ்வாறு நிர்வாக ஒதுக்கீட்டில் 40 விழுக்காடு இடங்களை நிரப்புகின்றனவோ அதேபோன்று ஈட்டுறுதிக் கழகத்தில் உறுப்பினராக உள்ள தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு தனியாக கலந்தாய்வு நடத்தி, 40 விழுக்காடு இடங்களை நிரப்ப முடியும். (தற்போது இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் 20 விழுக்காடு இடங்கள் ஈட்டுறுதிக் கழக உறுப்பினர்களின் குழந்தைகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.) இந்த நடைமுறை தொழிலாளர்களின் குழந்தைகளின் மருத்துப் படிப்புக்கு தனிவாசலாக அமையும். ஏற்கெனவே தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஒரு மருத்துவக் கல்லூரி ஈரோட்டில் இயங்கி வருகிறது.

இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை ஏற்றுக் கொள்வதற்கான நடைமுறைகளை மத்திய அரசு தெளிவுபடுத்தும் வரை தமிழக அரசு அமைதி காக்க வேண்டியதில்லை. இப்போதே அதிகாரிகளை நேரில் அனுப்பி, பேசி, சாதகமான முடிவு காண்பது மிக எளிது. அ.தி.மு.க. எம்.பி.க்களின் ஆதரவு மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய அரசுக்கு தேவையாக இருக்கும் இன்றைய சூழலில், இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியை தமிழக அரசின் பொறுப்புக்கு மாற்றிவிடுவதில் மத்திய தொழிலாளர் துறைக்கு எந்தவித சங்கடமும் இருக்க முடியாது.

தமிழ்நாட்டுக்கு அதிக எண்ணிக்கையில் மருத்துவர்கள் தேவை. இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி அதற்கு துணையாக அமையும். பல தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மருத்துவராகும் வாய்ப்பும் தொடரும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024