Thursday, February 26, 2015

விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வோம்!



பொருளாதார வளர்ச்சி, அரசியல், பங்குச் சந்தை நிலவரம், கட்டமைப்பு வளர்ச்சி, தொழில்நுட்ப வளர்ச்சி என்றெல்லாம் ஒருபுறம் நாம் விவாதித்துக் கொண்டிருக்கும் வேளையில், கண்ணுக்குத் தெரியாத ஓர் எரிமலை மீது அமர்ந்திருக்கிறோம் என்பதை நாம் உணர்ந்ததாகத் தெரியவில்லை. பொருளாதார வளர்ச்சியும் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வதால் சமுதாயம் மேம்பட்டுவிட்டதாகக் கனவு கண்டுகொண்டிருக்கும் நாம், உணராமல் இருப்பது நமது உடல் ஆரோக்கியம் சீர்கெட்டு கொண்டிருக்கிறது என்கிற கசப்பான உண்மையை!

கடந்த மாதம் இந்தியாவுக்கு வந்திருந்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் வானொலி உரையில் அவர் கூறிய ஒரு கருத்து, தனது பதவிக்காலம் முடிந்த பிறகு இந்தியாவிற்கு வந்து மக்களின் உடல் நலன் தொடர்பான பிரச்னைகளில் சேவை செய்ய விரும்புவது. அவரது நியாயமான கவலையும் இந்தியாவுக்கு வந்து சேவை செய்ய வேண்டும் என்கிற அவரது ஆர்வமும் பாராட்டுக்குரியவை என்பதில் சந்தேகமே இல்லை.

அதிபர் ஒபாமா அடிக்கோடிட்டுக் கூறிய பிரச்னை உலகளாவிய அளவில் காணப்படும் உடல் எடை அதிகரிப்பு தொடர்பானது. இதுபற்றி நமக்கு அமெரிக்காவிலிருந்து வந்து பராக் ஒபாமா சொல்லித்தர வேண்டிய, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவல நிலையில் நாம் இருக்கிறோம் என்பதுதான் தலைகுனிவு. உடல் எடை அதிகரிப்பு, தேவைக்கதிகமான கொழுப்புச் சத்து உடலில் காணப்

படுவது என்பவை உலகளாவிய அளவில் கவலை அளிக்கும் பிரச்னைகள் என்பது மட்டுமல்ல, இதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்பது திடுக்கிட வைக்கும் செய்தியும்கூட.தொற்று நோய்களால் ஏற்படும் மரணங்களைவிட, அளவுக்கதிகமான கொழுப்புச் சத்து உடலில் சேர்வதால் ஏற்படும் மரணங்கள்தான் அதிகமாக இருக்கின்றன. உலகமயமாக்கல் என்னும் கோர முகத்தின் வெளிப்பாடு இது என்று சொன்னால் அதில் தவறு இல்லை. மாறிவிட்டிருக்கும் வாழ்க்கை முறைகள், உணவுப் பழக்கங்கள், நகர்மயமாதல் ஆகியவை தொற்று அல்லாத நோய்களை அதிகப்படுத்தி மரண விகிதத்தை அதிகரித்து விட்டிருக்கின்றன. இதன் விளைவாக, தனிநபர், குடும்பங்கள், சுகாதாரத் துறை, அரசு என்று எல்லா தரப்பினரும் பாதிப்புக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளாகி விட்டிருக்கின்றனர்.

இந்தியாவைப் பொருத்தவரை, தொற்று அல்லாத நோய்களான இருதய நோய்கள், புற்று நோய், நுரையீரல் தொடர்பான பிரச்னைகள், நீரிழிவு நோய் ஆகியவை கடந்த கால் நூற்றாண்டு காலத்தில் கணிசமாக அதிகரித்து மிகப்பெரிய சமுதாய அச்சுறுத்தலாக மாறி இருக்கின்றன. மேலே குறிப்பிட்ட நான்கு உடல் நலப் பிரச்னைகளால் ஆண்டுதோறும் இந்தியாவில் மரணமடைவோரின் எண்ணிக்கை 58 லட்சத்திற்கும் அதிகம். இந்தியாவில் நிகழும் மரணங்களில் 60 விழுக்காட்டுக்கும் அதிகம் மேலே குறிப்பிட்ட நோய்களால் நிகழ்வதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

மேலே குறிப்பிட்ட நான்கு பிரச்னைகளுக்கும் முக்கியமான காரணங்கள் புகையிலைப் பழக்கம், மது அருந்துதல், தேவையற்ற கொழுப்புச் சத்துள்ள உணவை உள்கொள்ளுதல், உடற்பயிற்சி அறவே இல்லாமல் இருப்பது ஆகியவைதான் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை.

புகையிலைப் பழக்கமும் மது அருந்தும் பழக்கமும் அளவுக்கு அதிகமாக அதிகரித்திருப்பது மிகவும் வேதனையளிக்கும் போக்கு. புகை பிடிப்பதும் மது அருந்துவதும் சமுதாயக் கண்டனமாக இருந்ததுபோய், இப்போது சமுதாயத் தகுதியாகக் கருதப்படுவது வருத்தமளிக்கிறது. அரசே மதுக் கடைகளை நடத்தும்போது, இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார், எப்படி, எப்போது என்பவை விடை தெரியாக் கேள்விகளாகத் தொடர்கின்றன.

நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து விட்டிருக்கும் புகைக்கும், மதுவுக்குமான நாட்டத்தில் அடுத்த கட்ட நாட்டமாக புலால் உண்பதும் மாறிவிட்டிருக்கிறது. அரை நூற்றாண்டுக்கு முன்னால், ஆண்டுக்கு ஐந்தாறு முறையோ அல்லது விருந்துகளில் மட்டுமோ இருந்த புலால் உண்ணும் வழக்கம், இப்போது அன்றாட அத்தியாவசியமாக மாறிவிட்டிருக்கிறது. பொருளாதார வளர்ச்சியில், சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறிவிட்டிருக்கிறது. தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே புலால் பழக்கத்தைப் பெற்றோர் ஏற்படுத்துவதுதான் மிகப்பெரிய ஆபத்தாக மாறி வருகிறது. இதனால், சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பது பரவலாகக் காணப்படும் பிரச்னை. அதுமட்டுமல்ல, மதிப்பெண்கள் பெறும் ஆர்வத்தில் குழந்தைகளுக்கு உடற்பயிற்சியோ விளையாட்டோ அறவே இல்லாத போக்கும் ஏற்பட்டிருக்கிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போன்ற குளிர்ப்பிரதேசங்களில் மட்டும்தான் மாமிசத்தை மட்டுமே சாப்பிட்டு வந்த நிலைமைபோய், உஷ்ணப் பிரதேசமான இந்தியாவிலும் கே.எப்.சி., மெக்டொனால்ட் போன்ற துரித உணவு நிறுவனங்களின் வரவுக்குப் பின்னால் வெறும் மாமிசமும், குளிர்பானமும் இளைஞர்களுக்கு மதிய உணவாகி விட்டிருக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. சாப்பாட்டின் ஒரு பகுதியாக மாமிசம் இருந்ததுபோய், மாமிசமே சாப்பாடு என்றாகிவிட்டதன் விளைவு, நாற்பது வயதானவர்கள்கூட இருதய அடைப்பு அறுவைச் சிகிச்சை செய்து கொள்வது வாடிக்கையாகிவிட்டிருக்கிறது.

உடற்பயிற்சியும் இல்லாமல், அளவுக்கதிகமான கொழுப்புச் சத்துள்ள மாமிச உணவையும் உள்கொள்வதுடன், புகை பிடிப்பதும், மது அருந்துவதும் சேர்ந்து கொள்ளும்போது, மரண தேவனுக்கு குதூகலம் ஏற்படுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

விழித்துக் கொண்டால் பிழைத்துக் கொள்வோம்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024