Saturday, February 28, 2015

தற்கொலை தீர்வல்ல...



பள்ளியில் பயிலும் மாணவ - மாணவியர் தற்கொலை செய்து கொண்டதாக அவ்வப்போது செய்திகள் வருகின்றன.

இவ்வாறு மாணவ - மாணவியர் தற்கொலை செய்து கொள்வதற்குப் பள்ளிகளில் தரப்படும் அழுத்தம் ஒரு காரணமென்றால், தங்கள் பிள்ளைகள் பொறியியல் படிப்புப் படித்து வெளிநாட்டுக்குப் போய் டாலர்களில் சம்பாதிக்க வேண்டுமென்ற பெற்றோரின் பேராசையும் ஒரு காரணம்.

தொடக்கப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்கும், உயர்நிலைப் பள்ளியில் இருந்து மேல்நிலைப் பள்ளிக்கும், மேல்நிலைப் பள்ளியில் இருந்து கல்லூரிக்கும், கல்லூரியில் இருந்து உயர் கல்வி கற்கச் செல்லும் மாணவர் எண்ணிக்கை ஒவ்வொரு நிலையிலும் கணிசமாகக் குறைகிறது. இதற்குப் பல்வேறு காரணங்கள்.

பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும் நம் கல்வி முறையில் மாணவர்களின் மனதில் புதைந்து கிடக்கும் ஆற்றலைக் கொண்டு வருவதற்கு எந்த முயற்சியாவது உண்டா என்றால் சுத்தமாக இல்லை.

இந்த மாணவருக்கு இந்தப் பருவத்தில் இதைத்தான் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று யாரோ ஒருவர் முடிவு செய்ததைத்தான் இப்போதும் கற்றுத் தருகிறோம்.

மாணவர்களின் புரிதல் தொடர்பாக யாருக்கும் கவலையில்லை. இப்போதைய தேர்வு முறையில் மனப்பாடம் செய்யும் திறன்தான் முக்கியம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பேசிய மாணவி ஒருவர், தான் படித்த பள்ளியின் கழிப்பறை, குளியலறை உள்ளிட்ட இடங்களிலும் கேள்விகளை ஒட்டிவிடுவார்கள் என்று கூறி வருத்தப்பட்டார்.

மதிப்பெண் பெறுவதுதான் வாழ்க்கை என்று நினைத்து, பல பள்ளிகள் பறக்கும் படை வந்தால் கூடக் கதவைத் திறக்கக் கால தாமதம் செய்கின்றன. உடனே யாராவது வந்துவிட்டால் உள்ளே நடப்பது தெரிந்து விடும் அல்லவா?

இப்படிப்பட்ட பள்ளியில் நம் பிள்ளைகள் படிக்க வேண்டுமா என்பதை பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும்.

பெற்றோரின் ஆசைதான் முதலில் பள்ளிகளில் சேர்ப்பதற்கும் பின் பணம் கொடுத்துக் கல்லூரிகளில் சேர்ப்பதற்கும் காரணமாகிறது.

வாழ்க்கை வாழ்வதற்கே என்று புரிந்தால் யாருக்கும் பிரச்னையில்லை. அதைவிடுத்துப் பெற்றோரின் ஆசைக்குப் பலியாகும் குழந்தைகள், மேல் வகுப்புக்குச் செல்லச் செல்ல ஆசிரியர்களின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை முடிவுக்கு வருகின்றனர்.

இதற்கு ஓர் உதாரணம், பத்தாம் வகுப்பில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற ஒரு மாணவியின் பரிதாபத் தற்கொலை. அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கே இந்த நிலையென்றால், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் நிலை எப்படியிருக்கும்?

சில ஆண்டுகளுக்கு முன்பு பள்ளித் தலைமை ஆசிரியரின் ஒரே மகன், மருத்துவத் துறையில் உயர் படிப்புப் படித்தபோது பேராசிரியர் திட்டினார் என்பதற்காகத் தற்கொலை செய்து கொண்டார்.

நாட்டிலுள்ள எத்தனையோ பேருக்குக் கிடைக்காத உயர் கல்வி வாய்ப்பு தனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை அந்த மாணவர் புரிந்து கொள்ளவில்லை. குடும்பத்தினரும் அந்த மாணவருக்கு உணர்த்தவில்லை.

இதற்குத்தானா 20 ஆண்டுகள் பாராட்டிச் சீராட்டிப் பெற்றோர் அவரை வளர்த்தனர்?

தனியார் பள்ளி நிர்வாகங்களின் பேராசைக்கு பல பிஞ்சுகள் உதிர்வதை நினைத்தால்தான் தாங்க முடியவில்லை. தங்கள் மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற வேண்டும் என்பதற்காக அவர்களுடைய மனநிலை சரிவரப் புரிந்து கொள்ளாமல் படிப்பொன்றே குறியாக இருக்குமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது.

பிளஸ் 2-வில் கணிதப் பாடத்தில் 200-க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த பலர் அண்ணா பல்கலைக்கழக கணிதத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி பெறக் கூட முடியவில்லை. இதற்கு யார் காரணம்?

தமிழகத்தின் சமச்சீர் கல்வி படித்த எத்தனை மாணவ, மாணவியர் ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயிலச் சென்றுள்ளனர்?

தமிழகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளிகள் எல்லாமே தங்கள் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்றவற்றுக்கான கட்-ஆப் மதிப்பெண்களை வெளியிடுகின்றனரே தவிர, பிரபல உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்தது தொடர்பாக எந்தத் தகவலையும் வெளியிடுவதில்லையே?

இந்த உலகில் பிறந்த மனிதர் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு திறமை புதைந்துள்ளது. ஆனால், அந்தத் திறமையைக் கண்டறிந்து, அதற்கேற்றவாறு அந்த மாணவரை உருவாக்குவதுதான் கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அதைவிடுத்து சாதாரணப் பிரச்னைகளை எதிர்கொள்ளக்கூடத் தைரியமில்லாமல் தற்கொலைதான் தீர்வென்றால், இந்த உலகில் யாரும் உயிருடன் இருக்க முடியாது.

ஏனென்றால், உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்னை உள்ளது. படிக்க வேண்டிய வயதில் தற்கொலை என்பதைவிடக் கொடிய விஷயம் வேறெதுவும் இல்லை.

மாணவப் பருவத்தில் தற்கொலைதான் தீர்வு என்பது கல்வி முறையில் கோளாறு இருப்பதையே காட்டுகிறது. அப்படியென்றால், அந்தக் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தேர்வு முடிவுகள் வரும்போதும் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதைத் தடுப்பதற்காக பல இடங்களில் மன நல மருத்துவர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

அதைப்போல, ஒவ்வொரு அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவ - மாணவியருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட வேண்டும்.

அப்போதுதான் தற்கொலைகள் நிரந்தரமாக முடிவுக்கு வரும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024