வாஷிங்டன் :சமூக வலைதளமான, 'பேஸ்புக்'கில், வாரிசுதாரர் நியமன வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.பல கோடி மக்களை உறுப்பினராக கொண்ட, மிகப்பெரிய சமூக வலைதளங்களில், பேஸ்புக் முதலிடத்தில் உள்ளது. இந்த வலைதள நிறுவனம், பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளோர் இறந்த பிறகும், அக்கணக்கை அவர்களின் வாரிசுகள், நியமனதாரர்கள் ஆகியோர் தொடர்ந்து கையாளும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கி கணக்கில், வாரிசுதாரரை குறிப்பிடுவது போல், பேஸ்புக்கில் இணைந்துள்ள ஒருவர், தமக்கு பின், தன் கணக்கை தொடரும் உரிமையை வாரிசுக்கோ, நண்பருக்கோ வழங்கலாம்.இதன் மூலம் ஒருவர் இறப்புக்குப் பின், அவரது பேஸ்புக் கணக்கு பயன்படுத்தப்படாமல் முடங்குவது தவிர்க்கப்படும். புதிய வசதி முலம் ஒருவரின் இறப்பை, அவரது பேஸ்புக் நண்பர்களுக்கு தெரிவிக்கவும், இரங்கல் செய்திகளை பகிரவும், இறுதிச் சடங்கு படங்களை வெளியிடவும், வாரிசுதாரருக்கு வாய்ப்பு கிடைக்கும். அத்துடன், நட்பு வட்டாரத்தையும் விரிவுபடுத்திக் கொள்ளலாம்.இறந்தோரின் பேஸ்புக் கணக்கை சுலபமாக அடையாளம் காண்பதற்காக, அவரது பெயர் முன், 'நினைவாக' என்ற சொல்லும் இடம் பெறும் என, பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment