Tuesday, February 17, 2015

பரிதாபப்பட்ட குடும்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்!



சென்னை: சாலையில் அடிபட்டு கிடந்த ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட குட்டிநாயை எடுத்து வந்த இளம்பெண்ணின் தந்தை மற்றும் நண்பரையே அந்த நாய் கடித்ததோடு, இறந்தும் விட்டது. இதனால் அந்த பெண்ணின் குடும்பமே தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

நன்றியுள்ள விலங்கு நாய் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. ஆனால் இந்த சம்பவம் கொஞ்சம் வித்தியாசமானது. படித்து தான் பாருங்களேன்.

தாம்பரத்தை சேர்ந்தவர் வினோதா. என்ஜினீயரிங் மாணவியான இவர், கால்நடைகள் மீது அதிக பிரியம் உடையவர். ப்ளூ கிராஸ் அமைப்பில் உறுப்பினராக உள்ளார். இவரது தந்தை வேணுகோபால். ஓய்வு பெற்ற மாநகராட்சி அதிகாரி. இவரும் கால்நடைகள் மீது பிரியமானவர்.

இவர், கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற போது அவர் கண்ட காட்சி அவரை கண்கலங்கச் செய்தது. சாலையோரத்தில் ஒரு குட்டி நாயின் கால் உடைந்த நிலையில் பரிதாபமாக சுருண்டு படுத்துக் கிடந்தது. அதைப்பார்த்த வேணுகோபால், ஓடோடி சென்று அதற்கு முதலுதவிகளை செய்தார். அதோடு விடாமல் அந்த தெரு நாய் குட்டியை தனது வீட்டுக்கு கொண்டு சென்று மருத்துவ சிகிச்சை அளித்தார்.

அந்த நாய்க்கு ரியா என்றும் பெயரிட்டு பாசத்துடன் வினோதா குடும்பத்தினர் வளர்த்து வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வினோதா வீட்டில் இல்லாத போது அந்த குட்டி நாயை வேணுகோபால் கவனித்துக் கொண்டு இருந்தார். திடீரென அந்த நாய்க்குட்டி வேணுகோபாலை கடித்து விட்டது. இதனால் அவருக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் நாய்க்கடிக்கான தடுப்பு ஊசி போடப்பட்டது. இதன்பிறகு ரியாவுக்கு சிகிச்சை அளிக்கவும், ரேபீஸ் தடுப்பு ஊசி போடவும் வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வினோதா மற்றும் அவரது நண்பர் வினோத்தும் ஏற்பாடு செய்தனர். அப்போது யாருமே எதிர்பாராத சம்பவம் அரங்கேறியது.

குட்டி நாயை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒரு பாக்ஸில் வினோத், நாய்க்குட்டியை வைத்தப் போது அவரைக் அது கடித்தது. இதனால் அவருக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டது. சிறிது நேரத்தில் நாய் ரியா இறந்து போனது.

இதன்பிறகு ரியாவை பிரேத பரிசோதனை செய்தனர் டாக்டர்கள். அப்போது ரியாவுக்கு 'ரேபீஸ்' நோய் இருப்பது தெரிந்தது. இதனால் வினோதாவின் ஒட்டுமொத்தக் குடும்பமும் பதற்றத்துக்குள்ளானது. ரேபீஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய் கடித்து, அது இறந்து விட்டதால் கடிப்பட்டவர்களுக்கு உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் வினோதாவுக்கு தெரிவித்தன. இந்த ஆபத்திலிருந்து கடிப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் ரேபீஸ் நோய்க்கான தடுப்பு ஊசி போட வேண்டும் என்று வினோதாவுக்கு கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தடுப்பு ஊசி குறித்து விசாரித்த போது அதன் விலை 40 ஆயிரம் ரூபாய் என்று தெரிந்தது. அவ்வளவு பணம் கொடுத்து தடுப்பு ஊசி போடும் அளவுக்கு வினோதாவின் குடும்பம் இல்லை. இதனால் அரசின் இலவச மருத்துவம் சார்ந்த தகவலுக்கான எண் 104ஐ வினோதா தொடர்பு கொண்டார். அங்குள்ள மருத்துவ ஊழியர்கள், வினோதாவின் குடும்பத்தினருக்கு ஆறுதலும், அறிவுரைகளும் கொடுத்தனர். வினோதாவின் வீட்டின் அருகே உள்ள மூவரசன்பேட்டை என்ற இடத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபீஸ் நோய்க்கான தடுப்பு ஊசி இலவசமாக போடப்படுவதாக மருத்துவ ஊழியர்கள் தெரிவித்தனர். அதன்படி வினோதாயின் தந்தை மற்றும் நண்பருக்கு இலவசமாக ரேபீஸ் தடுப்பு ஊசி போடப்பட்டது.

இதுகுறித்து அரசின் 108, 104 என்ற சேவையின் விழிப்புணர்வு துறை மேலாளர் பிரபுதாஸ் கூறுகையில், "பொது மக்களுக்காக பல்வேறு மருத்துவ உதவிகளை அரசு செய்து வருகிறது. ஆபத்தான நேரங்களில் பொது மக்கள் பதற்றமடையாமல் 108, 104 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டால் உங்களுக்கு வழிகாட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம். மருத்துவ தேவைகளுக்கு மட்டுமல்லாதது அரசு மருத்துவமனைகளில் குறைகள் இருந்தாலும் 104ல் புகார் கொடுக்கலாம். புகார் அடிப்படையில் குறைகள் நிவர்த்தி செய்யப்படும்" என்றார்.

வினோதா கூறுகையில், "எங்கள் வீட்டில் 5 நாய்கள் உள்ளன. அதோடு சேர்த்து ரியா என்ற பெண் நாய் குட்டியையும் வளர்த்தோம். எங்களது கவனக்குறைவால் அது அப்பாவையும், நண்பரையும் கடித்து விட்டது. தினமும் 10 முதல் 15 தெரு நாய்களுக்கு உதவி செய்கிறோம். இந்த சேவை தொடரும். ரியாவை மிஸ் பண்ணிது கஷ்டமாக இருக்கிறது" என்றார் வருத்தத்துடன்.

உதவ சென்ற இடத்தில் உபத்திரமானாலும், கால்நடைகளுக்கு தொடர்ந்து உதவுவது என்று நினைப்பது வினோதாவின் குடும்பத்தினரின் மனித நேயத்தை இது காட்டுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024