Monday, February 23, 2015

கடனிலே பிறந்து கடனிலே வளர்ந்து.

Dinamani

By ஆர்.எஸ். நாராயணன்

First Published : 23 February 2015 01:30 AM IST

"கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்...' என்பது பழம் பாடல். இன்று சூடு சுரணை உள்ளவர்கள் மட்டுமே அவ்வாறு கலங்குவதுண்டு. ராமாயணக் கதையில் ராவணன் வில்லன். கெட்ட நடத்தை இருப்பினும் ராவணன் பக்திமான் என்பதால் வாங்கிய கடனைத் திருப்பித் தர வேண்டும் என்று எண்ணக் கூடியவன் போலும்!

இன்று வங்கிகளில் வாராக் கடன் கோடி கோடியாக "லபக்' செய்தவர்கள் பெரிய பெரிய தொழில் முதலைகள். அவர்கள் வட்டியும் செலுத்துவதில்லை. அசலோடு வட்டியையும் "லபக்' செய்த இவர்களன்றோ வில்லாதி வில்லர்கள்!

அதேசமயம், பெரும்பாலான விவசாயிகள் வாங்கிய கடனை மறுப்பதில்லை. வங்கியிலிருந்து ஒரு கடிதம் வந்தாலே போதும், நகையையோ சொத்தையோ விற்றுக் கடனைக் கட்டிவிடும் பண்புள்ள ஏழை மக்கள் நமது கதாநாயகர்கள்.

அரசியல் தொடர்புள்ள பணக்கார விவசாயிகள், ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் போன்றவர்களுக்கு விவசாயம் பொழுதுபோக்கு. விவசாயத்தில் முதலீடு செய்யும் வசதியும் உண்டு. விவசாய முகமூடி அணிந்துள்ள இவர்களின் நிஜ வருமானம் லேவாதேவியிலிருந்து வருகிறது.

இப்போது "லேவாதேவி' என்ற இந்திய மொழிச் சொல் வழக்கொழிந்து "பைனான்சியர்' என்ற ஆங்கிலச் சொல் ஆதிக்கம் பெற்றுள்ளது. இத்தொழிலில் சாதி, மத, இன, பேதம் இல்லை.

நாட்டுக்கோட்டைச் செட்டியார்களும் சேட்டுகளும் லேவாதேவி செய்தது அந்தக் காலம். வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்ட பிறகு தமிழ்நாட்டில் செழித்தோங்கி வரும் தொழில் "பைனான்ஸ்'.

ஏதோ ஒரு தொழிலைக் காட்டி வங்கியிலிருந்து கடன் வாங்கி அதிக வட்டிக்கு விடும் புதிய போக்கு பலர் கவனத்திற்கு வரவில்லை. பழைய போக்கு பற்றிச் சொல்வதானால் பழைய சினிமாவில் வரும் காட்சிகளை நினைவு கூரலாம்.

அன்று ஏழைகளுக்கு லேவாதேவி செய்தவர்கள் சேட்டுகள். மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்களுக்குப் பட்டாணியர்கள் உதவுவதுண்டு. பட்டாணியர்கள் பஞ்சாபி உடையில் தலையில் ஒரு டர்பனுடன் "காபூலிவாலா' போல் இருப்பார்கள்.

முதல் தேதி வந்ததும் இந்தப் பட்டாணியர்கள் வீட்டுக்கே வந்துவிடுவார்கள். கடன் வாங்கிய கதாநாயகர்கள் ஓடி ஒளியும் காட்சிகளை பழைய சினிமாவில் நகைச்சுவைக்காக சேர்த்திருப்பார்கள். இப்போது அவர்கள் காணாமல் போய்விட்டார்கள்.

தமிழர்கள் இப்போது இந்தத் தொழிலில் வல்லவர்கள் ஆகிவிட்டார்கள். ஓர் ஏழைக்குக் கடன் தரும்போது மிக மிக அன்புடன் பேசுவார்கள். "அவசரமே இல்லை. மெல்லத் தரலாம்' என்று கனிவுடன் பேசுவார்கள்.

"இவர் ரொம்ப நல்லவர்' என்று தவறாகப் புரிந்து கொண்டு அந்த ஏமாளி வட்டி கூட கட்ட மாட்டார். இரண்டு வட்டி, மூணு வட்டி, நாலு வட்டி என்றெல்லாம் கூறி பணம் வழங்கப்படுகிறது.

இரண்டு வட்டி என்றால் ரூ.100க்கு ரூ.24 வட்டி. மூணு வட்டி என்றால் ரூ.100க்கு ரூ.36. நாலு வட்டி என்றால் ரூ.48. ஆண்டுகள் உருண்டோடும். முன்பு அன்பாகப் பேசியவர் அடியாட்களுடன் வருவார். ஒரு நாள் அவகாசம் தருவார். வட்டிக்கு வட்டி போட்டுக் குட்டி போட்ட பணம் அசலை விட மூன்று பங்கு உயர்ந்து இருக்கும். அந்தப் பணத்தைத் திருப்பி அடைப்பது கற்பனைக்கு எட்டாத விஷயம்.

கடன் வாங்கிய ஏழைப் பிணையம் வைத்த பத்திர அடிப்படையில் சொத்தை அவர் பெயருக்கு மாற்றிக் கொடுத்துவிட்டு நடையைக் கட்ட வேண்டியதுதான்.

நாலு வட்டிக்கு மேல், குறுகிய காலத்திற்குள் வாங்கிய கடனைத் திருப்ப ஐந்து வட்டி, பத்து வட்டி, மீட்டர் வட்டி என்றெல்லாம் உண்டு. இது பெரும்பாலும் பெரிய வியாபார உடன்பாடு. 24 மணி நேரத்தில் செட்டில் ஆகிவிடும்.

கப்பல், விமானம், ரயில், லாரியில் சரக்கு வந்திருக்கும். வங்கியில் பணம் கட்டி டெலிவரி எடுக்க வேண்டியிருக்கும். வந்த சரக்கை வினியோகித்தால், லட்சக்கணக்கில் பண வரவு சில மணி நேரத்தில் கிடைக்கும் சூழ்நிலையில் மீட்டர் வட்டிக்குப் பணம் வாங்கத் தயங்க மாட்டார்கள்.

சில ஆயிரங்கள், லட்சங்கள் வட்டி கட்டினாலும் பல லட்சம், கோடி வருமானம். வெறுங்கையை முழம் போட்டு சம்பாதிக்கும் சாமர்த்தியசாலிகள் நாட்டில் உண்டு.

எனினும் கடனை முதலாக மாற்ற இயலாத பல கோடி சராசரி விவசாயிகளே நமது கதாநாயகர்கள். ஒரு சராசரி விவசாயி கடனிலே பிறந்து, கடனிலே வாழ்ந்து, கடனிலே மடியும் அவன் வாரிசுக்கு வழங்கும் சொத்தும் கடன்தான். பிறவிக் கடன் மறுபிறவியிலும் உண்டு.

இதை நிரூபிக்கும் வகையில் பிரதமரின் கட்டுப்பாட்டில் உள்ள விவசாயக் கடன் பற்றிய புள்ளிவிவரங்களை தேசிய மாதிரி ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.

பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்த வெளியீடு வரும். 2002-03-க்குப் பின் இப்போது 2013-14-இல் வெளிவந்துள்ளது.

விவசாயத்தில் வளர்ச்சி உண்டு என்றால் கடன் சுமையிலும் வளர்ச்சி. ஒப்பிட்டால் பத்தாண்டுக்கு முன்பு 48.6 சதவீதம் விவசாயிகள் கடன் சுமையில் இருந்த நிலை

இப்போது 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. விவசாயம் வளர்ந்த அளவில் விவசாயிகளின் பொருளாதாரம் வளரவில்லை என்பதை மேற்படி புள்ளிவிவரம் காட்டுகிறது.

மாநில வாரியாகக் கணக்கெடுத்தபோது, தெற்கு மாநிலங்கள் கடன் சுமையில் உயர்ந்தும், பழங்குடி - மலைப் பகுதி மாநிலங்கள் கடன் சுமையில் குறைந்தும், இதர வட மாநிலங்களில் கடன் சுமை சராசரி 50 சதவீதத்தை ஒட்டியும் உள்ளது.

கடன் சுமையில் முதலிடம் வகிப்பது ஆந்திரம் 92.9%, தெலங்கானா 89.1%, தமிழ்நாடு 82.5%, கேரளம் 77.7%, கர்நாடகம் 77.3%, அஸ்ஸாம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மாநிலங்களில் கடன் சுமை மிகக் குறைவு. அகில இந்திய விவசாயக் கடன் சராசரியாக ரூ.12,585. விவசாய வருமானம் ரூ.11,628.

இந்த தேசிய மாதிரி அறிக்கையில் கடன் சுமை பற்றிய புள்ளிவிவரம் குறைந்த மதிப்பீடு என்று கூறும் உணவுப் பொருளாதார நிபுணர் தேவீந்தர் சர்மா, இந்திய விவசாயிகளில் 80 சதவீதம் பேர் கடன் சுமையில் தத்தளிப்பதாகக் கூறுகிறார்.

நடுத்தரம் மற்றும் மேல்தட்டு விவசாயிகளின் வரவு-செலவு மேற்படி ஆய்வு அறிக்கையில் இடம் பெறவில்லை என்று கூறும் தேவீந்தர் சர்மா, 5 ஏக்கரிலிருந்து 25 ஏக்கர்

வரை நிலம் வைத்துள்ளோரையும் மாதிரி ஆய்வில் சேர்த்திருந்தால் தேசிய சராசரி 80 சதவீதம் விவசாயிகள் கடன் சுமையில் உள்ளது வெளிச்சமாகும் என்கிறார்.

அதிக நிலம் உள்ளவர்கள் சொத்தைப் பிணையம் வைக்கும்போது, அதிக அளவில் கடன் பெற்று, பின் கடனை அடைக்க முடியாமல் திணறுகின்றனர். சிறு - குறு விவசாயிகளைவிட நடுத்தர விவசாயிகள்தாம் அதிக அளவில் சொத்தையும் இழந்து தற்கொலை செய்து கொள்கின்றனர்.

சரி, கடன் பற்றிய புள்ளிவிவரத்திற்கு ஆதாரம் எது? முதலில் தேசிய வங்கிகளில் வாராக் கடன் பட்டியலில் இடம்பெற்றுள்ள விவசாயிகள் 43 சதவீதம். கூட்டுறவு வங்கி 15 சதவீதம். அரசு 2 சதவீதம். இவை அமைப்பு ரீதியானவை. மீதி 40 சதவீதம் அமைப்பு ரீதியற்ற தனிப்பட்ட பைனான்சியர்களிடம் பெற்றுள்ள கடன்.

விவசாய வருமானம் பற்றிய புள்ளிவிவரமும் ஒப்புக்கொள்ளக் கூடியதல்ல. ஆண்டுக்கு 7 சதவீதம் பணவீக்கம் நிலவுவதைக் கருத்தில் கொண்டால் விவசாயிகளின் நிஜ வருமானம் ரூ.11,628 அல்ல. ரூ.7,000 அல்லது ரூ.8,000.

குறைவான கொள்முதல் விலையும், கூடுதலான நுகர்வோர் விலையும், தாறுமாறான மருத்துவச் செலவு ஏற்றமும் விவசாயிகளைத் தத்தளிக்க வைத்துள்ளன.

விவசாயக் கடன் விஷயத்தில் அமைப்பு ரீதியாக வட்டிக்கு கடன் வசதி மட்டும் ஏற்றம் தராது. ஒட்டுமொத்த விவசாய மதிப்பு உயர வேண்டும். விவசாய முதலீட்டுச்

செலவில் வட்டியும் இடம்பெற்றுக் கூடுதல் கொள்முதல் விலை கொண்டு விவசாயி லாபம் பெற வழி காண வேண்டும். விவசாய மானியங்களின் மதிப்பைக் கொள்முதல் விலையுடன் இணைக்க வேண்டும்.

அதாவது, உர முதலாளிக்கும், குழாய் முதலாளிக்கும், டிராக்டர் முதலாளிக்கும் வழங்கும் மானியங்கள் நிறுத்தப்பட்டு, அவற்றைக் கொள்முதல் விலையுடன் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

கடந்த ஏழு ஆண்டுகளாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு வழங்கப்பட்ட பணத்தைவிட விவசாயத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் குறைவாயுள்ளது.

கடந்த பட்ஜெட்டில் மகாத்மா காந்தி குளத்து வேலைத் திட்டத்திற்கு 34,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. விவசாயத்திற்கு 31,000 கோடி ரூபாய்தான் ஒதுக்கப்பட்டது.

இன்றளவும் விவசாயமே 56 சதவீத மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது.

தேசத்தின் மொத்த வருமான மதிப்பில் விவசாயத்தின் பங்கு 18 சதவீதம் என்பது, விவசாயத்தில் உள்ள முதலீட்டுப் பற்றாக்குறையையும் அரசின் பங்கு எவ்வளவு குறைவு என்பதையும் உணரலாம். சரியானபடி விவசாய மூலதனம் உயரவில்லை. விவசாயிகளின் லாபம் பன்னாட்டு விதை நிறுவனங்களால் கொள்ளையடிக்கப்படுகிறது. நல்ல தரமான விதை உற்பத்தியில் அரசின் பங்கு அற்றுவிட்டது.

கோடி கோடியாக ஊரக வேலைவாய்ப்புக்கு வழங்கிய பின்னரும் விவசாயிகளின் கடன் சுமை குறையவில்லையே! யாருக்கு வழங்க வேண்டும் என்று திட்டமிட்ட பணம் யார் யாருக்கோ போய்விட்டது.

இதனால் ஏழை விவசாயிகள், "என்று தணியும் எங்கள் துயர், என்று மடியும் எங்கள் கடன்' என்று கதறுவது கேட்க வேண்டியவர்களின் காதுகளில் கேட்கட்டும்!

கட்டுரையாளர்: இயற்கை விஞ்ஞானி.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024