Saturday, February 28, 2015

கணக்கு வாத்தியார் பளார்... செவிடான மாணவன்... ஒரு தாயின் சோகம்!


மாணவர்களை அடிக்கக் கூடாது என்று நீதிமன்றம், கல்வித்துறை, அரசு, சமூக ஆர்வலர்கள் என பலமுறை சொல்லியும் இன்னமும் சில ஆசிரியர்கள் திருந்தவில்லை. அடிக்காமல் எப்படி மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுக்க முடியும் என்பது ஒரு தரப்பு ஆசிரியர்களின் வாதமாக உள்ளது.

திருத்தணியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருகிறார் அபி ஆண்டனி. இவரை அந்தப்பள்ளியின் பத்தாம் வகுப்பு கணக்கு ஆசிரியர் சுரேஷ் அடித்ததில் மாணவனின் செவிப்பறை கிழிந்துள்ளது. காவல்துறையில் புகார் கொடுத்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது மாணவன் தரப்பு வாதம்.

சிகிச்சை பெற்று வரும் மாணவன் அபி ஆண்டனி கூறுகையில், "நான், இந்தப்பள்ளியில் 7ஆம் வகுப்பு முதல் படித்து வருகிறேன். கடந்த 19ஆம் தேதி நானும், என்னுடன் படிக்கும் மாணவர்கள் ஹாலில் உட்காந்து படித்துக் கொண்டு இருந்தோம். அப்போது அவ்வழியாக பத்தாம் வகுப்பு கணக்கு சார் சுரேஷ் சென்றார். அவருக்கு இரும்பு ஸ்கேல் சப்தம் பிடிக்காது. அதை தெரிந்த ஒரு மாணவன், இரும்பு ஸ்கேலை தூக்கி தரையில் போட்டான். அந்த ஸ்கேல் என்னுடைய கால் பக்கம் வந்து விழுந்தது. இந்த சப்தம் கேட்டு திரும்பிப்பார்த்த சுரேஷ் சார், என்னை நோக்கி வந்தார். வந்த வேகத்தில் செவிட்டில் ஓங்கி ஒரு அறைவிட்டார். இதை எதிர்பார்க்காத நான் நிலைகுலைந்து சுவரில் மோதினேன். அதன்பிறகு பிரின்ஸ்பால் ரூமிற்கு என்னுடைய சர்ட்டைப்பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார். அங்கு வைத்து இடது காதுப்பக்கத்தில் மீண்டும் ஒரு அறை விட்டார். அதன்பிறகு எனக்கு இடதுப்பக்கத்தில் யார் பேசினாலும் கேட்கவில்லை. சகமாணவர்கள் முன்னிலையில் தவறே செய்யாத என்னை சுரேஷ் சார் அடித்ததில் எனக்கு அவமானமாகி விட்டது" என்றார்.

அபி ஆண்டனியின் அம்மா ஜெஸிஜானிடம் பேசினோம். "சம்பவத்தன்று ஸ்கூலிருந்து அபி ஆண்டனி வர லேட் ஆனது. அவனை அழைத்துக் கொண்டு சில மாணவர்கள் வீட்டிற்கு வந்தனர். ஆண்டி 'இன்னைக்கு மதியம் சுரேஷ் சார் அடிச்சதிலிருந்து அவன் ஒரு மாதிரியா இருக்கான். வீட்டிற்கு வராமல் ஸ்கூலுக்கு வெளியே நின்னுட்டு இருந்தான். அவன் எந்த தப்பும் செய்யல' என்று கூறினார்கள். இதன்பிறகு அவனை எல்லோரும் சேர்ந்து சமாதானப்படுத்தினோம். நைட்ல வலி தாங்க முடியாமல் அழுதான். இதனால் அருகில் உள்ள தனியார் டாக்டர் கிட்ட காண்பித்தோம். சம்பவத்தை கேட்ட டாக்டர், அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறிவிட்டார். அடுத்தநாள் வழக்கம் போல ஸ்கூலுக்கு போனான். ஆனால் இடதுப்பக்கம் காது கேட்கவில்லை என்று கூறினான். சென்னை அரசு மருத்துவமனை இ.என்.டி. டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போனேன். அவனை பரிசோதித்த டாக்டர், செவிப்பறையில் உள்ள சவ்வு கிழிந்து விட்டது. இனி அது வளர்ந்தாதான் காது கேட்கும். இல்லன்னா ஆபரேசன்தான் பண்ணனும் என்று சொன்னார்கள். ஸ்கூலுக்குப் படிக்க அனுப்பினா இப்படியா சார் அடிப்பது. படிக்கலன்னு அடிச்சா கூட பரவாயில்லை. சம்பந்தமே இல்லாத ஒரு பத்தாம் கிளாஸ் வாத்தியாரு, பிளஸ் ஒன் பையன அடிச்சிருக்காரு.

இதுதொடர்பா ஸ்கூல்ல பிரின்பாஸ், கரன்ஸ்பான்டன்ட் கிட்ட சொன்னா, உங்க பையன் பிரச்னைய நீங்க தான் பாத்துக்கணும். இதையெல்லாம் வெளியில அந்த வார்த்தியார்கிட்ட பேசிகிடுங்க. எங்களுக்கு ஒன்னும் தெரியாது' என்கிறார்கள். அவர்களை நம்பி தான் ஒவ்வொரு பெற்றோர்களும் பிள்ளைகள அனுப்புறாங்க. அவர்கள் இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொன்னா எப்படி? 'போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தா பையன் லைப் ஸ்பாயிலாகிடும். கம்பளைன்ட்டை வாபஸ் வாங்கிடுங்க!' என்று மறைமுகமாக சொல்றாங்க. இதற்கிடையில அந்த வாத்தியார் சுரேஷ், இன்னும் சிலரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து, 'மன்னிச்சிடுங்க..!' ன்னு சொன்னாரு. ஒன்னுமே செய்யாத பையனை அடிச்சிட்டு மன்னிச்சிடுங்கன்னு சொன்னா போதுமா? ஸ்கூல்ல, போலீஸ் நிலையத்தில எல்லோரும் வாத்தியாருக்கு சப்போர்ட் பண்ணாறங்க. இந்த விசயத்தில நீதி கிடைக்கும் வரை போராடுவேன்" என்றார்.

திருத்தணி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை கூறுகையில், "சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு புகார் கொடுத்தனர். அதன்பேரில் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடமும் விசாரணை நடந்து வருகிறது" என்றார்.

பள்ளி தரப்பில் பேச முயன்றோம். ஆனால், அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்களது கருத்தையும் வெளியிட தயாராக இருக்கிறோம்.

- எஸ்.மகேஷ்

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024