Wednesday, February 25, 2015

கிரிக்கெட் விநாயகர் கோவிலில் குவியும் கிரிக்கெட் ரசிகர்கள்...!




கிரிக்கெட் விநாயகர் அருளால்தான் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் தென்ஆப்ரிக்க அணியை அபாரமாக வீழ்த்தியதாம். இதுதான்... சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களின் இப்போதைய 'ஹாட் டாபிக்'.

அது என்ன கிரிக்கெட் விநாயகர்...? இந்து கடவுள்களிலேயே விநாயகரைதான் இஷ்டப்படி பெயர் வைத்து அழைக்க முடியும். சந்துக்கு சந்து இருக்கும் விநாயகர்களை அந்த அந்த பகுதி பெயருடன் கலந்த அடைமொழியுடன் அழைக்கப்படுவார்.

கடந்த 2001ம் ஆண்டு, அண்ணாநகர் பாளையத்தம்மன் கோவிலில் விநாயகர் சிலை ஒன்று பிரதிருஷ்டை செய்யப்பட இருந்த நிலையில், அன்றைய தினம் இந்தியா -ஆஸ்திரேலிய அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி நடைபெற்றுள்ளது. விநாயக பக்தரான கே.ஆர். ராமகிருஷ்ணன் என்ற அந்த கிரிக்கெட் ரசிகர், இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்று விட்டால், 'கிரிக்கெட் விநாயகர்' என்றே பெயர் வைத்து விடுவதாக வேண்டியுள்ளார்.

அந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற, உருவானார் 'கிரிக்கெட் விநாயகர்'. கிரிக்கெட் விளையாடுவது போன்றே விநாயகர் சிலை அமைக்கப்பட்டிருப்பதுதான் இந்த விநாயகரின் ஸ்பெஷல். இங்குள்ள குட்டி குட்டி விநாயகர்கள் பந்து வீசுவது போன்றும் பேட் பிடிப்பது போலவும் பீல்டிங் செய்வது போலவும் உருவாக்கப்பட்டு பிரதிருஷ்டை செய்யப்பட்டுள்ளன.

தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிநடந்து வருவதால் கிரிக்கெட் விநாயகருக்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்திய அணி விளையாடும் போட்டிகளின் போது, இந்திய அணியின் வெற்றிக்காக சிறப்பு பூஜைகள் சிறப்பாகவே நடைபெற்று வருகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணி மோதிய ஆட்டத்தின் போது, ஏராளமான ரசிகர்கள் கிரிக்கெட் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதனால்தான் இந்திய அணி பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தியது என்பது அண்ணாநகர் பகுதி கிரிக்கெட் ரசிகர்களின் நம்பிக்கை.

அதுபோல் தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தின் போதும் ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்து விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். அதன் காரணமாகத்தான் உலகக் கோப்பையில் முதல் முறையாக தென்ஆப்ரிக்க அணியை, இந்திய அணி அதிரடியாக வீழ்த்தியதாக கிரிக்கெட் விநாயகரின் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

கிரிக்கெட் விநாயகரின் புகழ் பரவ, பரவ சுற்று வட்டார கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது கிரிக்கெட் மேட்ச் இருந்தால் கிரிக்கெட் விநாயகரிடம் வந்து ஆஜராகி வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்துவிட்டுதான் போட்டிக்கே செல்கின்றனர்.

ஒரு வேளை, இந்தியா உலகக் கோப்பையை வென்று விட்டால் என்ன நடக்குமோ? தெரியவில்லை.



No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...