Thursday, February 26, 2015

இஎஸ்ஐ மருத்துவ மாணவர்கள் போராட்டம் வாபஸ்: தமிழக அரசே கல்லூரியை ஏற்கக் கோரிக்கை



எட்டு நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

இதையடுத்து, அவர்கள் வியாழக்கிழமை முதல் வகுப்புக்குத் திரும்ப உள்ளதாகத் தெரிவித்தனர்.

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டதால் இஎஸ்ஐ நிர்வாகத்துக்கு அதிக நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே மருத்துவக் கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் வழங்காமல், மருத்துவ சேவைக்கு முன்னுரிமை அளிக்கப் போவதாக மத்திய தொழிலாளர் நலத்துறை தெரிவித்தது.

மேலும் அந்தந்த மாநிலங்கள் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை ஏற்று நடத்தவும் பரிந்துரைகள் அனுப்பப்பட்டன. மாநில அரசுகள் எந்தப் பதிலையும் அளிக்காததையடுத்து,நாடு முழுவதும் உள்ள 11 இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கை எதுவும் நடைபெறாது என்றும் இப்போது படித்து வரும் மாணவர்கள் படிப்பை முடித்ததும் கல்லூரிகள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பிப்ரவரி 18-ஆம் தேதி முதல் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இஎஸ்ஐ நிர்வாகத்தின் இயக்குநர் ஜெனரல், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து இஎஸ்ஐ நிர்வாகத்தின் இயக்குநர் ஜெனரல் மாணவர்களின் பிரதிநிதிகள் நான்கு பேருடன் பிப்ரவரி 24-ஆம் தேதி விடியோ கான்பரன்சிங் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து மாணவர்கள் சிலர் கூறியது:

பேச்சு வார்த்தையின்போது புதிய மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட மாட்டாது என்று இயக்குநர் ஜெனரல் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும் இப்போது படித்து வரும் மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை கல்லூரி தொடர்ந்து செயல்படும் என்று தெரிவித்தார்.

இஎஸ்ஐ நிர்வாகத்தின் திட்டவட்ட முடிவையடுத்து, இனி போராட்டம் மேற்கொள்வதில் பயன் இல்லை என்று தெரியவந்தது. எனவே போராட்டத்தை கைவிட்டு வகுப்புக்குத் திரும்ப முடிவு செய்துள்ளோம்.

இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும். இதற்காக மாணவர்கள் சார்பாக தமிழக அரசிடம் முறையிட உள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024