Sunday, February 15, 2015

உலகக் கோப்பை சென்டிமென்ட்ஸ்: நாட்-அவுட் 'பால்'ய நினைவுகள்!



'ஏன்டா பரீட்சையை வைச்சுக்கிட்டு அழுக்கு சட்டையோட ஸ்கூலுக்குப் போற?' 'இல்லம்மா, நேத்து இந்த ட்ரெஸ்ல போனதாலதான் எக்ஸாம் ஈஸியா இருந்தது.'

'என்னடி எலுமிச்சை சாதமே கேக்கறே?' 'நேத்து காலைல அதுதான்மா சாப்டேன். இண்டர்வியூல கிளியர் பண்ணிட்டேன். இன்னைக்கு ரெண்டாவது ரவுண்ட கிளியர் பண்ணனும்.!'

நம்மில் எத்தனை பேர் இந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம்? சென்டிமென்ட் என்பது விளையாட்டான விஷயம் சிலருக்கு; ஆனால் விளையாட்டிலேயே சென்டிமென்ட் பார்ப்பவர் பலர். முக்கியமாக கிரிக்கெட் ரசிகர்கள்.

விளையாடும் வீரர்களுக்கு அதுதான் தொழிலே. வாழ்க்கையும் கூட. அவர்களின் சென்டிமென்ட் வேறு. ஆனால் ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் புரியும் சென்டிமென்ட் அதகளத்திற்கு அளவே இல்லை. இதோ, உலகக் கோப்பைக்கான அறிவிப்பு வந்துவிட்டது. சூதாட்டம் ஒரு பக்கம்; பரபரப்பைக் கிளப்பும் சர்ச்சைகள் மற்றொரு பக்கம் என இந்த முறையும் ரணகளத்திற்குப் பஞ்சமே இருக்காது.

இதற்கிடையில் கொஞ்சம் ரிலாக்ஸாக, கிரிக்கெட் வீரர்களின் சென்டிமென்டையும், ரசிகர்களின் நம்பிக்கைகளையும் பார்க்கலாமா?

வலது காலை எடுத்து வெச்சு:

இந்தியக் கிரிக்கெட்டின் சுவரான ராகுல் திராவிட், நம் பாரம்பரியத்தை கடைபிடிக்கத் தவறியதில்லை. மைதானத்தினுள் நுழையும்போது தனது வலது காலைத்தான் முதலில் எடுத்து வைப்பாராம்.

முதலில் இடது:

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் முதலில் தன்னுடைய இடது பேடைத்தான் அணிவாராம். நம் சுனில் கவாஸ்கர் பேட் செய்வதற்குப் பொசிஷனுக்கு வருவதற்கு முன்னர் மட்டையைத் தரையில் வைத்துவிட்டுத்தான் இடது காலைச் சரியான நிலையில் வைப்பாராம்.

கைக்குட்டையும் புகைப்படமும்:

இறந்து போன தன்னுடைய தாத்தாவின் நினைவாக அவர் கொடுத்த சிவப்பு நிறக் கைக்குட்டையை ஸ்டீவ் வாஹ் எப்போதும் தனது இடது பாக்கெட்டில் வைத்திருப்பாராம். ஆஸ்திரேலியாக்காரர் ஏன் நம் சவுரவ் கங்குலி கூட விளையாடும்போது தன்னுடைய ஆசானின் நினைவாக அவரின் படத்தைப் பாக்கெட்டில் வைத்திருப்பாராம்.

அணிபவை அதிர்ஷ்டத்துக்கா?

எளிதில் உணர்ச்சிவசப்படும் யுவராஜ் சிங், தான் வைத்திருக்கும் பெரிய கைக்குட்டை, தனக்கு விளையாட்டில் அதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்புவாராம்.

மொஹமத் அசாருதீன் அரங்கில் இருக்கும்போது, கழுத்தில் ஒரு வகையான தாயத்தை அணிந்திருப்பாராம்.

முத்தத்துடன்:

மகிள ஜெயவர்த்தனே தன்னுடைய மட்டையை முத்தமிட்டுத் தன் ஆட்டத்தைத் தொடங்குவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். விக்கெட் எப்போதெல்லாம் விழ வேண்டுமென்று தென் ஆப்பிரிக்காவின் ஹியூஜ் டேஃபீல்ட் நினைக்கிறாரோ அப்போதெல்லாம் தனது தொப்பியில் இருக்கும் துள்ளியோடும் சிறு மானின் படத்தை முத்தமிடுவாராம்.

தனிமையும் இசையும்:

இங்கிலாந்து ஆட்டக்காரரான ஜெஃப்ரி பாய்காட் விளையாடுவதற்கு முன் தன்னுடைய அறையில் சிறிது நேரம் தனியாக இருக்க விரும்புவார். அன்றைய ஆட்டத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்த பின்னரே வெளியே வருவாராம். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் பேட் செய்வதற்கு முன் சத்தமான இசையைக் கேட்டுவிட்டுத்தான் ஆடத் தொடங்குவாராம்.

சனத் ஜெயசூர்யா என்ன செய்வார் தெரியுமா? பேட் செய்யும்போது அடிக்கடி தன் பாக்கெட்டுக்குள் கைவிட்டு எதையாவது துழாவுவாராம்.

பார்க்கவே சென்டிமென்ட் :

ஸ்டார் ரசிகரான அமிதாப் பச்சன், நேரடியாக ஒளிபரப்பாகும் ஆட்டங்களைப் பார்ப்பதே அறவே தவிர்த்துவிடுவார்.

உலகமே ஆவலுடன் பார்த்து ரசித்த சச்சினின் ஆட்டத்தை, தான் பார்த்தால் விரைவில் அவுட்டாகி விடுவார் என்ற எண்ணத்தில் அவரின் அம்மா கடைசி ஆட்டம் தவிர மற்ற ஆட்டங்களை மைதானத்திற்குச் சென்று பார்த்ததே இல்லை.

ரசிகர்களின் நம்பிக்கை

என்ன மாதிரியான விஷயங்களில் எல்லாம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கண்மூடித்தனமாக நம்பிக்கை இருந்தது தெரியுமா?

ஆட்டம் தொடங்கும் நாளன்று கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ சென்று பிரார்த்தனை செய்தவர்கள் அனேகம் பேர். முந்தைய தடவை இந்தியா ஜெயித்த போது அணிந்திருந்த உடையையே அணிந்தது, கடைசி ஓவரிலோ, முக்கியமான ஆட்ட நேரத்திலோ உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றாமல் அப்படியே இருந்தது.

நண்பர்களில் யாராவது நின்று கொண்டிருந்த போது எதிரணியில் யாராவது அவுட்டானால் ஆட்ட முடிவு வரை அப்படியே அவரை நிற்க வைப்பது, ஒரு தடவை எல்லாரும் பேசிக் கொண்டிருந்தபோது நம் அணி வீரர் விக்கெட் விழுந்ததால் கடைசி வரை மெளன விரதத்தையே அனுஷ்டித்தது.

இந்தியா ஜெயித்தால் இவ்வளவு தேங்காய் உடைக்கிறேன் என்று பிள்ளையாரை வேண்டிக் கொண்டது. குறிப்பிட்ட இடத்தில் டிவி இருந்தால்தான் அணி ஜெயிக்கும் என்று அதன் இடத்தை, திசையை மாற்றாமல் இருந்தது.

'ராசி'க்காக நாற்காலியில் உட்கார்ந்து மேட்ச் பார்க்கக்கூடாது; கீழேதான் உட்கார வேண்டும் என்ற விதிமுறைகளைக் கடைபிடித்தது. வீட்டில் இத்தனையாவது டைல்ஸில்தான் உட்கார்ந்துதான் ஆட்டத்தைக் காண வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்களை டார்ச்சர் செய்தது.

நண்பனொருவன் சிறுநீர் கழிக்கப் போனபோது நம் அணி சிக்ஸர் அடித்ததால், அவனைக் கடைசி வரை பாத்ரூமே கதியென்று அங்கேயே இருக்கச் சொன்னது. இந்தியா பாகிஸ்தான் விளையாடும்போது எதாவது மந்திரங்கள் சொல்லிக் கொண்டே இருப்பது.

சமையலறையில் இருக்கும் அம்மாவை வெளியே ஹாலுக்கு வந்துவிடக் கூடாது என்று சொன்னது. சாமி படங்களை அருகிலேயே வைத்து அடிக்கடி தொட்டுக் கும்பிட்டுக் கொள்வது. இறுதி ஆட்டம் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் என்றால் டிவிக்கு கற்பூரம் காட்டுவது. இதுபோன்ற இன்னும் பல சம்பவங்கள் நடந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஊருக்கு ஒன்றிரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே இருந்த காலகட்டத்தில் கூட்டமாய் அமர்ந்து கிரிக்கெட்டைக் கண்டுகளித்த காலச் சித்திரங்கள் அனேகமாய் எல்லோரின் நினைவடுக்குகளில் அமிழ்த்தப்பட்டிருக்கும்.

ஆர்வத்தோடு ஆட்டத்தைப் பார்க்கும் அப்பாவை, ஆத்திரத்தோடு பார்க்கும் அம்மா, அப்பாவை நேரடியாகத் திட்டாமல், நம்மை 'பயன்படுத்தி' அவரைத் தாளித்த தருணங்களுக்கு கொஞ்சம் போய் வரலாமா?

குண்டாய் இருப்பவர்களை ரணதுங்கா, இன்சமாம் என்றும், ஒல்லியாய் முடிவெட்டாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களை ஒலங்கா என்றும் கலாய்த்தோம். ஹிந்தி தெரிந்தது போல ஊருக்குள் பில்டப் கொடுத்து வர்ணனையாளர்களின் கமென்டுகளை குத்துமதிப்பாய் தமிழில் மொழிபெயர்த்தது இன்னொரு வரலாறு.

உள்ளூர் கிரிக்கெட் ஆட்டத்தில் தாண்டி தாண்டி கேட்ச் பிடிப்பவர்களை 'ஜான்டி ரோட்ஸ் மாதிரி வருவடா' என்று பாராட்டினோம். அண்ணனும் தம்பியும் ஒரே மேட்சில் ஆடினால், 'மனசுல பெரிய ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ்னு நினைப்பு' என்று எல்லையில்லாமல் 'வாஹ்'ரினோம்.

எப்பொழுதும் ஓப்பனிங் இறங்குபவரை 'சேவாக்கா நீ?' என்று கேட்டோம். சையது அன்வரின் ஒரு நாள் போட்டியில் 194 ரன்கள் சாதனையை சச்சின் ஒருநாள் ஆட்டத்தில் முறியடித்துவிடுவார் என்று பல நாள் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அஜய் ஜடேஜா விளையாட வரும்போது பெண்கள் ஆர்வமாய் எட்டிப் பார்த்தது, வீட்டுக்கு மேட்ச் பார்க்க வருபவர்களிடம் காசு வாங்கிக் கொண்டு பார்க்க விட்டது, எல்லா நாட்டு வீரர்களின் தகவல்கள் இருக்கும் சீட்டுக்கட்டுகளைப் பார்த்து மனப்பாடம் செய்து வெளியில் பெருமையாக சொல்லித் திரிந்தது, இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றுப்போன இரவுகளில் விடிய விடிய அழுது படுக்கையை நனைத்தது என இன்னும் எத்தனை எத்தனையோ அனுபவங்கள்.

பல்கிப் பெருகி விட்ட தொலைக்காட்சி சேனல்களும், மாறியவாழ்க்கை முறையும் எத்தனையோ விஷயங்களைத் தொலைத்துவிட்டாலும் இது போன்ற நினைவுக் கற்றைகள் தான் இன்னமும் நம்முள் ஒளிந்திருக்கும் கிரிக்கெட் 'பால்'யத்தை மீட்டெடுக்கும். எப்போதும் இத்தகைய நினைவுகள் - நாட் அவுட் தான்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024