Sunday, February 15, 2015

உலகக் கோப்பை: சென்னையில் 'கிரிக்கெட் காய்ச்சல்'


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் ரசிகர்களிடம் ஆர்வம் மேலோங்கியுள்ளது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று துவங்கிவிட்டாலும், இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை ஞாயிறன்றுதான் உண்மையிலேயே போட்டி துவங்குகிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஆடவிருக்கும் முதல் போட்டியே பாகிஸ்தானுடனான போட்டி என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஒளிபரப்பாகும் சில தனியார் தொலைக்காட்சிகள், இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு தமிழில் வர்ணனை அளிக்கும் ஏற்பாட்டையும் செய்துள்ளன.

காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களை விட்டுவிட்டால், ஒவ்வொரு அணியும் ஆறு ஆட்டங்களில் விளையாடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த முறை பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிகப் பலீவனமான அணியாகவே காட்சியளிக்கிறது.

ஏற்கனவே பலம்வாய்ந்த அணிகளாக இருக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளின் சொந்த மண்ணில் இந்தப் போட்டிகள் நடப்பதால், இந்திய அணியின் வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்கள் விமர்சகர்கள்.

சென்னையில் உள்ள மைதானங்களில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் கேட்டால், இந்த முறை இந்தியாதான் வெற்றிபெறும் என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள்.

ஆனால், கிரிக்கெட் விமர்சகரான சுமந்த் சி ராமன், இந்த முறை இந்திய அணிக்கு வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்.

இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் நடந்த எந்த இந்திய - பாகிஸ்தான் ஆட்டத்திலும் இந்தியா தோற்றதில்லை என்பதால், இந்திய ரசிகர்கள் இந்திய- பாகிஸ்தான் போட்டிக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் அணி மிகப் பலவீனமாக இருப்பதால், இந்த ஆட்டத்தில் இந்தியா ஜெயிப்பது உறுதி என்கிறார் சுமந்த்.

தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகளில் இந்தியா விளையாடும் கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பதற்காக விடுதிகளில் பெரிய திரைகளுடன் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024