Friday, February 27, 2015

பெண்கள் சிகரெட் பிடிக்கத் தடை: ரஷ்யாவில் அதிரடி!



ரஷ்யாவில் பிறக்கும் குழந்தைகள் உடல்நலக் கோளாறு காரணமாக எடை குறைவாகவும் நோய்வாய்ப்பட்டும் பிறப்பதைத் தடுக்க, அந்நாட்டு அரசு ஓர் அதிரடி முடிவை எடுக்கலாம் என்று தெரிகிறது. ரஷ்யாவில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் புகை பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர். எனவே, பெண்கள் சிகரெட் புகை பிடிப்பதைத் தடுத்து நிறுத்தினால், இதுபோன்ற சிக்கல்கள் வராது என்று முடிவெடுத்த ரஷ்ய அரசு, ‘இனிமேல் 40 வயதுக்குட்பட்ட பெண்கள் யாரும் புகை பிடிப்பதோ, புகையிலை சம்பந்தமான பொருட்கள் வாங்குவதோ கூடாது. மீறினால் 50 டாலர் அபராதமும் சிறைத் தண்டனை’ என்று ஓர் அறிவிப்பு விரைவில் ரஷ்ய நாடாளுமன்றத்தில் இருந்து வெளிவரும் என்கிறார்கள்.

இது மட்டுமில்லை, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் புகை பிடிக்க விரும்பினால், அவர்கள் வயதை நிரூபிக்க தங்கள் பாஸ்போர்ட்டைக் காண்பிக்க வேண்டும். மேலும், அதையும் மீறி பெண்களுக்குப் புகையிலை சம்பந்தமான பொருட்களை விற்கும் கடைகளுக்கு 5000 டாலர் வரை கடுமையான அபராதமும், தனி நபர் என்றால் 50 டாலர் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அறிக்கை சொல்கிறது.

‘‘பெண்களின் கருப்பை சிதைவதற்கும், குழந்தைகள் சத்து இன்றி ஊனமாகப் பிறப்பதற்கும் நிகோட்டின் நச்சுப்பொருள்தான் பெரும் காரணமாய் இருக்கிறது. புகை பிடிக்கும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் 15 வயதிலேயே சர்க்கரை, தைராய்டு போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே நிகோட்டின் நச்சுப் பொருள் கொண்ட புகையிலை மற்றும் சிகரெட்டுகளை பெண்களுக்கு விற்பதற்கு அரசு தடை செய்ய வேண்டும்’’ என்று ரஷ்ய மருத்துவ ஆய்விதழ் ஒன்று செய்தியை வெளியிட்டதன் தொடர்ச்சியாக, விளாடிமிர் புதின் அரசு மேற்படி அறிக்கையை வெளியிட இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

‘இதற்கு எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம்’ என்று எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யப் பெண்கள், இந்தத் தடை ஆண்களுக்குக் கிடையாது என்பதால் செம கடுப்புடனும் இருக்கின்றனராம்.

- தமிழ்

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024