Wednesday, February 25, 2015

எல்கேஜி அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும் by !இந்துஜா ரகுநாதன்

Return to frontpage...by

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரும் பொழுதெல்லாம் கூடவே வரத்தொடங்குவது இரண்டரை, மூன்றரை வயதுள்ள குழந்தைகளின் பெற்றோரின் மனதில் ஒரு விதக் குழப்பம், பயம் மற்றும் கவலை. இவை எல்லாம் தம் குழந்தைக்கு ஒரு நல்ல பள்ளியில் ப்ரி.கே.ஜி, எல்.கி.ஜி,யில் அட்மிஷன் கிடைக்க போராட வேண்டியதை நினைத்து ஏற்படும் பதற்றம்தான்.

ஒரு குழந்தையைப் பெற்று எடுப்பதைவிட அக்குழந்தையை ஒரு பள்ளியில் சேர்த்துவிட பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது... 2 வயது தொடங்கியதுமே அந்த குழந்தையின் பள்ளி அட்மிஷன் பேச்சு ஒவ்வொரு வீட்டிலும் எழத் தொடங்குவது இயல்பு. பெற்றோர் தவிர, உறவினர்கள், நண்பர்கள் என்று ஆளாளுக்கு கேட்கும் ஒரே கேள்வி, குழந்தையை எந்தப் பள்ளியில் சேர்க்கப்போறீங்க? அங்கு சேர ஆள் பேசி, பணத்தை ரெடி பண்ணிட்டீங்களா? என்றுதான். ஆனால் ஒரு பள்ளியில் அட்மிஷன் கிடைக்க உண்மையில் என்ன தேவை என்பதை பற்றி அறிவது இன்றும் ஒரு புரியாத புதிராகவே உள்ளது.

விண்ணப்ப தேதிக்குக் காத்திருக்கும் பெற்றோர்

ப்ரி.கே.ஜி., எல்.கே.ஜி வகுப்பில் சேர முதல் அடி, அதற்கான விண்ணப்பப் படிவத்தை அந்தந்த பள்ளியில் வாங்கி பூர்த்தி செய்வதுதான். சொல்வதைப் போல் இது சுலபம் இல்லை. தமிழக அரசு பலமுறை குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பப் படிவம் அளிக்கவேண்டும் என்று பள்ளிகளுக்கு ஆணையிட்டாலும் ஒவ்வொரு பள்ளியும் ஒவ்வொரு நேரத்தில் வெளியிடுவதுதான் வழக்கம். பள்ளியில் விண்ணப்ப தேதியைக் கண்டறிய பெற்றோர்கள் இங்கும் அங்கும் ஓடி தினம் தினம் அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டியுள்ளது.

சில பள்ளிகள் நேரடியாக விண்ணப்பப் படிவம் கொடுப்பதும், சிலர் ஆன்லைனில் மட்டுமே வெளியிடுவதும் என்றும் வெவ்வேறு முறையைக் கையாளுவதால் பெற்றொர்களின் நிலை திண்டாட்டமே. நேரில் விண்ணப்பங்களை அளிக்கும் பள்ளிகளின் வாசலில் முதல் நாள் இரவிலிருந்து க்யூ கட்டி நிற்கத் தொடங்கும் பெற்றோர்களுக்கு முதல் 100 நபருக்குள் விண்ணப்பப் படிவத்தை வாங்கிவிட்டால் சீட் நிச்சயம் என்ற ஆதங்கமே காரணம். அது மட்டுமின்றி ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று கட்டுபாடு விதிக்கும சில பள்ளிகளில், கணினி தொடர்பில்லாத பெற்றோர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.

குழப்பும் பள்ளிகளின் விதிமுறைகள்

முன்பெல்லாம் குழந்தை 4 அல்லது 5 வயது வரும் போது பெற்றோர்கள் வீட்டு அருகில் உள்ள ஒரு பள்ளியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை கட்டி எல்.கே.ஜியில் சேர்த்துவிடுவது வழக்கம். வயது வரம்பு கூட அந்த அளவுக்கு கண்டுகொள்ளப்படாத காலம் அது. ஆனால் இன்றோ ப்ரி.கே.ஜி என்றால் இரண்டரை-யிலிருந்து மூன்றரை வயதுக்குள் இருக்க வேண்டும், எல்.கே.ஜி என்றால் மார்ச் 31-க்குள் 3 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று பலப்பல கட்டுபாடுகளை பள்ளிகள் வரையறுத்துள்ளன.

சரி, இது சமவயதுப் பிள்ளைகள் படிக்க நல்ல வழி என்று நினைத்தாலும் அப்படி இல்லை. ஒவ்வொரு பள்ளிக்கும் இப்படி வெவ்வெறு கட்டுப்பாடுகள் வெவ்வேறு வயது வரம்பு நிலவரம். வீட்டு அருகே உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் தனித்தனியே விசாரித்து அதற்கேற்ப வயது வரம்பில் நம் குழந்தை வந்தால் மட்டுமே அந்த ஆண்டில் பள்ளியில் சேர்க்கமுடியும்.

இதையெல்லாம் அலசி, ஆராய்ந்து, மெட்ரிக் பள்ளியா? அல்லது சி.பீ.எஸ்.ஈ, ஐ.சி.எஸ்.ஈ பள்ளியா? என்று ஒரு முடிவு எடுப்பது இன்றைய காலத்தில் அதைவிட கடினமானது. மெட்ரிக் பள்ளி என்றால் சமச்சீர் கல்வி என்று சில பெற்றோர்களுக்கு அதன் தரத்தில் சந்தேகம் ஏற்படுவதால் சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளை அதிகம் நாடுகின்றனர். அதனால் அங்கு அட்மிஷனுக்கு கடும் போட்டியே நிலவுகிறது. ஏற்கனவே பள்ளியில் சேர்த்த பெற்றோர்களும் வெளிப்படையாக சீட்டு கிடைத்தன் வழியை சொல்ல தயங்குவதால் அட்மிஷனுக்கு அலையும் ஒவ்வொரு பெற்றோரின் தவிப்பும் அலைச்சலும் அளவுக்கற்றது. ஒரு பள்ளியில் அப்ளிகேஷன் போடுவதற்கு முன்பாகவே நம் சீட்டை உறுதி படுத்திக் கொள்ள முயற்சி எடுத்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் என்ற நிலைமையே இன்று உள்ளது.

சிபாரிசைத் தேடி அலையும் பெற்றோர்கள்

பள்ளியைத் தேர்ந்தெடுத்த அடுத்த நொடி தேடவேண்டியது ஒரு சிபாரிஸை. பள்ளிக்கேற்ப இந்த சிபாரிசு மாறுபடுகிறது. அரசியல்வாதிகள் முதல் தொழிலதிபர்கள், பிரபல பிரமுகர்கள், அரசு உயர் அதிகாரிகள் என்று சிபாரிசு செய்வோரின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அதிலும் ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு முறை. பிரபலங்கள் சிபாரிஸை எடுத்து கொள்ளும் சில பள்ளிகள் அரசியல்வாதியின் ரெக்கம்மண்டேஷனை மதிப்பதில்லை.

அதேபோல் சி.பி.எஸ்.இ பள்ளி என்றால் மாநில அரசின் உயர் அதிகாரி சிபாரிசு என்றாலும் மறுத்துவிடுவர். இப்படி வெவ்வேறாக இருக்கும் நிலையில் பெற்றோர் ஒவ்வொருவரும் ஒரு புலனாய்வு அதிகாரியை போலை இங்கும் அங்கும் தேடி, பலரிடம் விசாரித்து, அவமானப்பட்டு சிபாரிசு கடிதத்தை வாங்கி பள்ளியில் கொடுத்து அட்மிஷன் வாங்குகின்றனர் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

டொனேஷன் இருந்தால் அட்மிஷன் நிச்சயம்

விரல்விட்டு எண்ணக்கூடிய பள்ளிகளை தவிர பெரும்பாலான பள்ளிகள் டொனேஷன் இல்லாமல் எந்த குழந்தையும் சேர்த்துகொள்வதாக தெரியவில்ல. 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை நீடிக்கும் டொனேஷன் நடுத்தர வர்கக பெற்றோர்களுக்கு பெருத்த சுமையை ஏற்படுத்தி கடன் வாங்கும் அளவிற்கு தள்ளிவிடுவது கொடுமை. தன் குழந்தையும் நல்ல ஒரு பள்ளியில் படிக்க வைக்க நினைக்கும் பெற்றோர் அனைவரின் நிலையுமே இதுதான்.

சுமாரான பள்ளியாக இருந்தாலும் சேர்த்துவிட வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் டொனேஷன் தருவதை விட வேறு வழி இல்லை. நேரடியாக டொனேஷனை வாங்க மறுக்கும் பள்ளிகள் இடை தரகர்கள் மூலமே பணத்தை பெற்று அட்மிஷன் தருவது இயல்பாகிவிட்டது. டொனேஷனை தர மறுத்து நியாயம் பேசி காத்திருந்தால் மிஞ்சுவது குழந்தைக்கு பள்ளி இல்லாத நிலை மட்டுமே. பள்ளியில் குலுக்கல் முறையில் அல்லது கணினி மூலம் ராண்டம் செலக்‌ஷன் முறையில் அட்மிஷன் நடப்பதாக கூறுவது பெற்றோரின் கண்துடைப்புக்காகவே சொல்லபடுவது என்பது அனுபவத்தில் நன்கு தெரிந்துவிடும்.

ஆர்.டி.இ. இடங்கள் குளறுபடி

பாரபட்சமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கிடைக்கும் உயரிய நோக்கத்தோடு 2009 ஆண்டு கொண்டுவரப்பட்ட ஆர்.டி.இ அதாவது 'கல்வி உரிமைச் சட்டம்' இன்று அதன் உண்மை பயனை அடைந்ததா? என்றால் அதுவும் கேள்விகுறிதான். ஒவ்வொரு பள்ளியிலும் 25% ஆர்.டி.இ. சீட்டுகளுக்கான இடங்களுக்கு மே மாதம் வரை விண்ணப்பிக்க அவகாசம் தர வேண்டும் என்று பலமுறை அரசு ஆணையிட்டும் பல பள்ளிகள் அதற்கும் முன்பே எல்.கே.ஜி அட்மிஷனை முடித்துவிடுகின்றனர்.

சில பள்ளிகள் தங்கள் இணையதளத்தில் ஆர்.டி.ஈ சீட்டுகான விண்ணப்ப நாட்களை அறிவிக்கின்றனர். இந்த இலவச சட்டத்தை பற்றியே சரவர தெரியாத ஏழை எளிய மக்கள் இணையத்தில் வெளியிடும் தேதிகளை அறிந்து விண்ணபிப்பது என்பது அரிது. கணக்கு காட்டுவதற்கான அறிவிப்பாகவே இதை பலரும் கருதுகின்றனர். சில பள்ளிகளிலோ ஆர்.டி.இ அடிப்படையில் ஏழை குழந்தைகளுக்கு இலவசமாக அனுமதி அளித்துவிட்டு, அந்த இழப்பை சரி செய்ய, மீதி உள்ள இடங்களில் சேர்க்கும் குழந்தைகளின் பெற்றோர்களிடம் 1 முதல் ஒன்றரை லட்சம் வரை நன்கொடை கேட்டு பெற்றுக்கொள்கின்றனர். இது மற்ற பெற்றோர்களின் சுமையை பெருக்கிவிடுவதால் இலவச கல்வி சட்டத்தின் சிறப்பே சிதைந்து விடுகிறது.

மாநில அரசிடம் ஈடு செய்ய வேண்டிய ஆர்.டி.இ-யின் கணக்கை பெற்றோர்களிடம் பறிப்பது நியாயமற்ற செயலாகி விடுகிறது. மொத்ததில் பிள்ளைகளை என்ஜினியரிங், மருத்துவ படிப்பில் சேர்ப்பதை காட்டிலும் எல்,கே.ஜி சீட் வாங்குவது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய சவால். குழந்தை பிறந்த உடனே பள்ளி அட்மிஷனுக்கு பணம் சேர்க்க தொடங்கினால் மட்டுமே ஒரு நல்ல கல்வியை அவர்களுக்கு அளிக்கமுடியாத நிலை உருவாகிவிட்டது.

அரசு பாடத்திட்டதை ஒரே சீராக மாற்றியதைப் போல அட்மிஷன் முறையையும் சீர்படுத்தி குறிப்பிட்ட விண்ணப்ப தேதிகளில் எல்லாப் பள்ளிகளும் ஒரே விதிமுறைகளை பின்பற்றும்படி வரையறுத்தால் மட்டுமே பிள்ளைகளின் அட்மிஷன் கவலை பெற்றோர்களுக்கு நீங்கும்.

இந்துஜா ரகுநாதன் - தொடர்புக்கு induja.v@gmail.com

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...