நடிகர் திலகத்தின் திரைப் பயணத்தின் மைல்கல்லாக அமைந்த படங்கள் பல. அவற்றில் நவராத்திரி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் மூன்றையும் அவரது ரசிகமணிகள் தலையில் தூக்கி வைத்துச் சீராட்டியிருக்கிறார்கள். இந்தப் படங்களின் கர்த்தா ஏ. பி. நாகராஜன். தமிழ் நாடகம் தந்த நல்முத்து இவர். புராணத்தை மட்டுமே வைத்துக் காலம் தள்ளிக்கொண்டிருந்த தமிழ் நாடகத்துக்குள் சீர்திருத்தக் கருத்துகளைப் புகுத்திப் புது ரத்தம் பாய்ச்சியவர்கள் டி.கே.எஸ் சகோதரர்கள்.
இவர்களது மதுரை பால சண்முகானந்த சபா நாடகக் குழுவில் பயிற்சி பெற்று உருவானவர்தான் ஏ.பி. என். அன்று இளம் சிறுவர்களுக்கு நாடகப் பயிற்சி அளித்து அவர்களைப் பெண் வேடங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வார்கள். இதுபோன்ற நாடக சபாக்களில் சுட்டுப்போட்டாலும் பெண் பிள்ளைகளைச் சேர்க்க மாட்டார்கள். மதுரை பால சண்முகானந்த சபா பின்னாளில் டி. கே. எஸ் நாடக சபா என்று பெயர் மாறியபோது அதில் பத்து வயதுச் சிறுவனாகச் சேர்த்துவிடப்பட்டார் ஏ. பி. நாகராஜன். அவரைச் சேர்த்துவிட்டவர் அவருடைய பாட்டி மாணிக்கத்தம்மாள்.
கொங்குச் சீமையின் தமிழ் விளக்கு
ஈரோடு மாவட்டத்தில் அக்கம்மாபேட்டை என்ற சிற்றூரில் பிறந்தவர். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த அவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்த்தார். பாட்டி சிறந்த கதைசொல்லியாக இருந்தார். கதையின் இடையிடையே பாடியும் காட்டுவார். இப்படிப் பாட்டி சொன்ன இதிகாசக் கதைகளைக் கேட்டு வளர்ந்த நாகராஜன் பாட்டி பாடிக்காட்டிய பாடல்களைக் கிளிப்பிள்ளை போலத் திரும்பிப் பாடலானார்.
அவரது திறனறிந்தே டி.கே.எஸ். நாடகக்குழுவில் சேர்த்துவிட்டார் பாட்டி. தனது பதினைந்தாவது வயது முதல் ஸ்திரி பார்ட்டுகளில் நடிக்க ஆரம்பித்தார். டி.கே.எஸ். சகோதரர்களின் புகழ்பெற்ற சமூக நாடகமாக விளங்கியது ‘குமாஸ்தாவின் பெண். அதில் கதாநாயகியாக நடித்த நாகராஜனுக்கு மற்ற சபாக்களில் ஸ்திரி பார்ட் போட அழைப்பு கொடுக்கப்பட்டது.
ஆனால் தனது இருபதாவது வயதில் பெண் வேடங்களில் நடிக்க விருப்பமின்றிச் சக்தி நாடக சபாவில் சேர்ந்தார். அங்கே நாகராஜனுக்கு நண்பர்களாகக் கிடைத்தவர்கள் சிவாஜி கணேசனும், காக்கா ராதாகிருஷ்ணனும். ஏற்று நடிக்கும் தனது கதாபாத்திரங்களுக்கான வசனத்தைக் கதைக்குத் தக்க, தாமே திருத்தி மாற்றி எழுதிக்கொண்டார். இதனால் நாடகாசிரியர்களுடன் நாகராஜனுக்குக் கடும் கருத்துப் பிணக்கு ஏற்பட்டது. சில வருடங்களுக்குப் பின்னர் சக்தி நாடக சபாவிலிருந்தும் வெளியேறித் தனது 25வது வயதில் பழனி கதிரவன் நாடக சபா என்ற தனி சபாவைத் தொடங்கினார்.
ஏ.பி. என்னின் ‘நால்வர்’ நாடகம் புகழ்பெறத் தொடங்கியது. இந்த நாடகத்தை சங்கீத பிக்சர்ஸ் நிறுவனம் திரைப்படமாகத் தயாரிக்க முன்வந்தது. இதற்காக நாடகக் கதையில் சிறுசிறு மாற்றங்கள் செய்து திரைக்கதை வசனம் எழுதினார் நாகராஜன். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் கே.வி. மகாதேவன் இசையில் தஞ்சை ராமைய்யா தாஸ் பாடல்கள் எழுதிய இந்தப் படத்தில், கதாநாயகனாகவும் அறிமுகமானார்.
படம் வெற்றிபெற்றது. கதாநாயகனாகச் சிறந்த நடிப்பைக் கொடுத்தது மட்டுமல்ல, நல்ல வசனமும் எழுதியதற்காகப் பாராட்டப்பட்டார். அடுத்து வந்த ஆண்டுகளில் பெண்ணரசி (1955), நல்லதங்காள் (1955) ஆகிய படங்களில் கதாநாயகனாகத் தொடர்ந்ததோடு தான் நடிக்கும் படங்களுக்குத் தொடர்ந்து அழுத்தமாகவும் ஈர்க்கும் விதமாகவும் வசனம் எழுத ஆரம்பித்தார் ஏ.பி. நாகராஜன். இதனால் அவருக்குத் திரைக்கதை வசனம் எழுத வாய்ப்புகள் குவிந்தன. இயக்குநர் கே. சோமுவின் படக்குழுவில் எழுத்தாளராக நிரந்தரமாக இடம் பிடித்தார். நடிப்பைத் துறந்து படைப்பை கைகொண்டார்.
வார்த்தை வேந்தர்
நாடக வசனங்களின் சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் ஆக்கிரமித்திருந்த காலகட்டம் அது. நாடக வசனங்களின் சாயலே திரைப்பட வசனங்களிலும் தாக்கம் செலுத்தியபோது கொங்கு வட்டார வழக்கில் ‘மக்களைப் பெற்ற மகராசி’(1957) படத்துக்கு வசனம் எழுதி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் ஏ.பி.என். ‘டவுன்பஸ்’, ‘நான் பெற்ற செல்வம்’ஆகிய படங்களின் வெற்றியில் அவரது வசனங்கள் முக்கிய இடத்தை எடுத்துக் கொண்டன. அடுத்த ஆண்டே கே.சோமு இயக்கத்தில் ராமராவ் ராமனாகவும் சிவாஜி பரதனாகவும் நடித்த ‘சம்பூர்ண ராமாயணம்’(1958) படத்துக்கும் வசனம் எழுதினார் நாகராஜன்.
இந்தப் படத்தைப் பார்த்த மூதறிஞர் ராஜாஜி பரதன் பேசும் வசனங்களைக் கவனித்து “பரதனின் பாசத்தை மிகவும் ரசித்தேன்” என்று பாராட்டினார். இதனால் ஏ.பி. நாகராஜனின் புகழ் பரவியது. ராஜாஜி பரதனைப் பாராட்டினார் என்றால் அந்தப் படத்தில் ராவணனை இசைக்கலைஞனாகப் பெருமைப்படுத்தி எழுதியதை ம.பொ.சி பாராட்டினார். மா.பொ.சியின் வழிகாட்டலில் அவரது தமிழரசுக் கழகத்தில் இணைந்து அரசியலிலும் ஈடுபாடு காட்டினார்.
புதுமைகளின் காதலர்
சம்பூர்ண ராமாயணம் படத்தில் ராவணன் வேடத்தைப் பத்து தலையுடன் அரக்கன்போலச் சித்தரிக்க வேண்டாம் என்று இயக்குநர் சோமுவுக்கு எடுத்துக் கூறிய ஏ.பி. நாகராஜன், புராணக் கதைகளைப் படமாக்கினாலும், வரலாற்று, சமூகக் கதைகளைப் படமாக்கினாலும் அவற்றில் தொழில்நுட்பப் புதுமைகளையும் நிகழ்காலத்தின் நடப்புகளை வசனத்திலும் புகுத்தத் தவறவில்லை. சிவாஜி – சாவித்திரி நடிப்பில் உருவான ‘ வடிவுக்கு வளைகாப்பு’(1962) படத்தின் மூலம் இயக்கத்தில் கால் பதித்தார் ஏ.பி. என். அதன்பிறகு சிவாஜியுடன் அவர் இணைந்து பணிபுரிந்த பல படங்கள் தமிழ்சினிமாவுக்கு முக்கியப் படங்களாக அமைந்தன.
சிவாஜியின் 100-வது படமாகிய ‘நவராத்திரி’யில் (1964) அவருக்கு ஒன்பது மாறுபட்ட வேடங்களை உருவாக்கினார். அந்தக் காவியத்தைக் கண்டு தமிழ்த் திரையுலகமும் தமிழ்மக்கள் மட்டும் வியக்கவில்லை. அப்படத்தைக் கண்ட ஐரோப்பிய நடிகர்கள் நடிகர் திலகத்தை அமெரிக்காவுக்கு அழைத்தனர். அடுத்த ஆண்டே அவரது இயக்கத்தில் 1965-ல் ‘திருவிளையாடல்’ வெளியானது. சிவன், பார்வதி, முருகன், விநாயகர், நாரதர், அவ்வையார், நக்கீரர் என அனைத்துக் கதாபாத்திரங்களும் பேசிய சுத்தமான எளிய செந்தமிழ், தமிழ் மக்களின் நாவில் அரைநூற்றாண்டு காலம் நடனமாடியது. சிவபெருமானுடன் வறிய புலவன் தருமியின் வாக்குவாதம் தமிழகமெங்கும் நகைச்சுவை ரசவாதம் செய்தது.
திருவிளையாடலைத் தொடர்ந்து, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமலை தென்குமரி, அகத்தியர், காரைக்கால் அம்மையார் உள்படப் பல புராணப் படங்களை மிக உயர்ந்த உரையாடல் தமிழில் எடுத்தார் ஏ.பி.நாகராஜன். இவரது சாதனை மகுடத்தில் ‘தில்லானா மோகனாம்பாள், தமிழின் முதல் சினிமாஸ்கோப் படமான ‘ராஜராஜசோழன்’ஆகியவை உண்டு . இந்தியாவுக்கு வெளியே விருதுபெற்ற முதல் தமிழ்த் திரைப்படத்தை எடுத்தவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.
நடிகர் திலகம் சிவாஜியை வைத்துப் பல படங்களை இயக்கிய இவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரே படம், ‘நவரத்தினம்’. அதுவே அவரது கடைசிப் படம். 1977-ல் நாகராஜன் மறைந்து விட்டாலும் அவரது திரைத் தமிழ், தமிழ்த் திரை இருக்கும் வரை மறையப்போவதில்லை.
No comments:
Post a Comment