முன்பதிவு செய்யப்பட்ட விரைவு ரயில் பெட்டிகளில் முன்பதிவு இல்லாத பயணச் சீட்டு பெற்றவர்கள் பயணம் செய்வது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பல மாதங்களுக்கு முன்பாக ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகள் பெறும் இடையூறுகளை அனுபவித்து வருகின்றனர்.
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் சாதாரண பயணச் சீட்டு எடுத்து அத்துமீறி பயணிப்பது வட மாநில ரயில்களில் அதிகம் காணலாம். மேலும், அவர்கள் முன்பதிவு செய்த பயணிகளிடத்தில் தகராறு செய்வதும் உண்டு.
தமிழத்திலும் விரைவு ரயில்களில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடந்து வருகின்றன. அவ்வப்போது ரயில் டிக்கெட் பரிசோதகர்களும், ரயில்வே பாதுôப்பு படையினரும் நடவடிக்கை எடுத்தாலும், இதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படாமல் உள்ளது.
மேலும் இவர்களால் பயணிகளின் உடைமைகளுக்குப் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது.
காற்றில் பறந்த உத்தரவு: ரயிலில் முன்பதிவு செய்யாத பயணிகள் முன்பதிவுப் பெட்டிகளில் பயணிப்பதற்கு 2014- ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, ரயில்வே துறை இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
ஒரு பெட்டியில் பொருள்களை வைத்துக் கொண்டு மற்றொரு பெட்டியில் பயணம் செய்யக் கூடாது என்றும், இருக்கைக்கு அடியில் வைக்கப்படும் பெட்டிகள், பொருள்கள், பைகள் பற்றி ஒவ்வொரு பயணியும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் ரயில்வே நிர்வாகம் எச்சரித்து வருகிறது.
இதுதவிர முன்பதிவு செய்த பெட்டிகளில், சாதாரண டிக்கெட் எடுத்தவர்கள், காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை அனுமதிக்கக் கூடாது என டிக்கெட் பரிசோதகர்களுக்கு கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்பதிவு பெட்டிகளில் படுக்கை உறுதி செய்யப்பட்டவர்கள். ஆர்.ஏ.சி. பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். ரயில்வே ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் போன்றவர்கள் யாராக இருந்தாலும் அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இந்த விதிகள் தொடர்ந்து மீறப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து சென்னை எழும்பூர் ரயில்வே காவல் ஆய்வாளர் சேகர் கூறியதாவது:
முன்பதிவுப் பெட்டியில் அத்துமீறிப் பயணிப்பவர்கள் குறித்து முதலில் டிக்கெட் பரிசோதகரிடம் பயணிகள் புகார் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், டிக்கெட் பரிசோதகரால் மட்டுமே அத்துமீறிப் பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க முடியும்.
டிக்கெட் பரிசோதர் இல்லையென்றால், பயணிகள் 9962500500 என்ற ரயில்வே காவல் உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். உடனடியாக, ரயில்வே போலீஸார் உதவி செய்து, அத்துமீறிப் பயணம் செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றார்.
No comments:
Post a Comment