அனந்தபுரி, திருக்குறள் எக்ஸ்பிரஸ் உள்பட 8 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:–
கூடுதல் ரெயில் பெட்டிகள்
சென்னை எழும்பூரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இருமார்க்கமாகவும் இயக்கப்படும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:16723/16724) மற்றும் ராமேஸ்வரத்துக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்(16713/16714) ஆகிய ரெயில்களில் ஒரு முன்பதிவில்லாத பெட்டி இன்று முதல் கூடுதலாக இணைக்கப்படுகிறது. இதன்மூலம் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல், சென்னை எழும்பூர் வழியாக கன்னியாகுமரி–நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் (வாரம் இருமுறை) திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12641) இன்று முதலும், மறுமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12642) வருகிற 16–ந்தேதியும் கூடுதலாக 1 முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது. இதன்மூலம் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 5 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
எர்ணாகுளம்–நிஜாமுதீன் இடையே இயக்கப்படும் மில்லெனியம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில்(12645) நாளை முதலும், மறுமார்க்கமாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12646) 17–ந்தேதியும் கூடுதலாக ஒரு முன்பதிவில்லா பெட்டி இணைக்கப்படுகிறது. இதன்மூலம் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகளின் எண்ணிக்கை 3 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இருமார்க்கமாகவும்...
சென்னை சென்டிரல்–பழனி இடையே இருமார்க்கமாவும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயிலில்(22651/22652) இன்று முதல் ஜூன் 30–ந்தேதி வரை கூடுதலாக ஒரு 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர் கிளாஸ்) பெட்டி இணைக்கப்பட உள்ளது.
சென்னை சென்டிரல்–நாகர்கோவில் இடையே இருமார்க்கமாகவும் இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12689/12690) இன்று முதல் ஜூன் 28–ந்தேதி வரை கூடுதலாக 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட (ஸ்லீப்பர் கிளாஸ்) பெட்டி இணைக்கப்படவுள்ளது.
மங்களூர்–நாகர்கோவில் இடையே இயக்கப்படும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் (16649/16650) வருகிற 20–ந்தேதி முதல் ஜூன் 30–ந்தேதி வரை 2–ம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு ‘சேர் கார்’ பெட்டி இணைக்கப்பட இருக்கிறது.
சென்னை சென்டிரல்–மைசூர் இடையே இருமார்க்கமாகவும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் (12007/12008) வருகிற 20–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை கூடுதலாக ஒரு ஏ.சி ‘சேர் கார்’ பெட்டி இணைக்கப்படுகிறது.
சென்டிரல்–காமாக்யா
சென்னை சென்டிரலில் இருந்து காமாக்யா நோக்கி செல்லும் ஏ.சி. சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (12527) நாளை மற்றும் வருகிற 21, 28 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமைகளில்) மாலை 5.20 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் காலை 11.25 மணிக்கு காமாக்யா சென்றடையும்.
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment